‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே…’
என்ற வரிகளைத் திரைப் பாடலில் கேட்டு நெகிழ்ந்திருக்கிறோம். திரைப்படங்களில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் பொருளாதாரம், படிப்பு, நிறம், அழகு என எந்த விதத்திலும் பொருத்தமில்லாத நபர்களைப் பார்த்ததும் காதலில் விழுவதும், அது காமத்தில் முடிவடைவதையும் பார்த்திருக்கிறோம். பல சமயங்களில் அவர்கள் தங்கள் வாழ்நாள் முடியும்வரை திருமண பந்தத்தில் இணைந்திருப்பதையும் பார்த்து ‘இது எப்படி இவர்களுக்கு சாத்தியமானது?’ என்று யோசித்திருப்போம்.

மிக அழகான மனைவி அல்லது கணவனிடம் கலவியில் உச்சக்கட்டம் அடைய முடியாத தாங்கள் மிகச் சாதாரணத் தோற்றமுடைய
ஒருவரிடம் திருப்தி அடைந்ததாகவும் பலர் சொல்லிக் கேட்டிருப்போம்.
காரணம் – புறத் தோற்றத்தையும், அழகையும், வலிமையையும் தாண்டி உணர்வு ரீதியில் இருவருக்குமிடையே ஏற்படும் நெருக்கமும் புரிதலும், ஒருவரையொருவர் அங்கீகரித்துப் பாராட்டி அனுசரித்துக் கொள்வதும்தான் இந்தக் கலவியல் திருப்தி நிலைக்குக் காரணமாகிறது.

தங்கள் துணைவரிடமிருந்து இவையெதுவுமே கிடைக்காத ஆண்களும் பெண்களும் இன்னொருவரிடமிருந்து இவற்றையெல்லாம் பெறும்போது அங்கு உணர்வு ரீதியாக அந்த நபரிடம் சரணடைந்து விடுகிறார்கள். இந்த சரணாகதி, கூடல் பொழுதில் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி உடலளவில்
ஒருவரிடமொருவர் சரணடைகிறார்களோ, அதற்கிணையானது.

‘கிளி போல் மனைவியிருந்தாலும் குரங்கு போல் வைப்பாட்டி வைத்திருக்கிறான்’ என்று அந்தக்காலப் பாட்டிகள்
சொல்வார்கள் இல்லையா? (இது இருபாலருக்கும் பொருந்தும்) அப்படி ஒருவர் காலடியில் விழுந்து கிடப்பதற்குக் காரணம் உணர்வளவில் அவர்கள் அந்த நபரிடம் உச்சக்கட்டம் அடைந்திருப்பதால்தான். உணர்வு நிலையில் இது சாத்தியமாகாமல், கண்டிப்பாக உடல் ரீதியில் இது சாத்தியமாகாது…

சில வருடங்களுக்கு முன்னால், என்னைப் பார்க்க ஒரு தம்பதி வந்திருந்தனர். அந்த மனைவிக்கு அப்போது ஐம்பது வயதிருக்கும். கணவர் அந்தப் பெண்மணியைவிட ஒரு சில வருடங்கள் மூத்தவர். அந்தப் பெண் நல்ல நிறமாகவும் ஆரோக்கியமான சருமம் மற்றும் கொழுக் மொழுக் தேகத்துடன் அழகாயிருந்தார். நேர்த்தியான ஆடை, தேவையான அளவு நகை, கொஞ்சம் மெலிதான ஒப்பனை என எந்த ஆணுக்கும் பார்த்தவுடன் பிடிக்கும் வகையில் தானிருந்தது அவரது தோற்றமும், நடை, உடை, பாவனைகளெல்லாம். அந்தக் கணவர் கொஞ்சம் மாநிறம், ஒல்லியான வெட வெடவென்ற தேகம். “மத்திய அரசு வேலை , கை நிறைய சம்பளம், வீடு, கார். திருமண வயதில் இரு பெண் குழந்தைகள்… என எல்லாமிருந்தாலும் இந்தப் பாவி மனுஷனால் எனக்கு நிம்மதியே போச்சு மேடம் …” என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

“நான் வசதியான குடும்பத்துல இருந்து வந்தவ… என்கூடப் பிறந்தவங்கள்லாம் வெளிநாட்டுல செட்டிலாகி நிம்மதியாயிருக்காங்க.
ஒரு ஊரைக் குறிப்பிட்டு, நாங்க அந்த ஊர்ல தான் இருந்தோம். இவருக்கு வேலை இன்னொரு ஊருக்கு மாற்றலானதும் பிள்ளைங்க படிப்பு கெட்டுடக் கூடாதேன்னு, நான் தான் புத்தி கெட்டுப் போய் இந்தாளை நம்பி தனியா அனுப்பி வெச்சேன். ஆனா இப்படி பண்ணுவாருன்னு நான் நெனைக்கவேயில்லை… என் அழகென்ன, தராதரம் என்ன… போயும் போயும் இந்தாளுக்கு சாப்பாடு ஆக்கிப் போடற ஒரு சமையல்காரிக்கிட்ட உறவு வெச்சிருக்கார் மேடம்…” என்று சொல்லி விட்டு ‘ஓ’ வென அழத் தொடங்கினார்.

“இல்ல மேடம், அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல… இவ வீணா சந்தேகப்படறா… அவ வீட்டுல இருக்கறவங்கக்கிட்ட இப்படியெல்லாம் சொல்லி, அவங்க பதிலுக்கு என்னென்னமோ அறிவுரை கொடுத்து இவ மனசைக் குழப்பி விடறாங்க…” என்று மறுத்துப் பேசினார். “இல்ல மேடம், நான் ஒண்ணு ரெண்டு தடைவை அங்க போயிருக்கேன். அப்பவே அந்தப் பொம்பளை நடவடிக்கை சரியில்ல. இவர் மேல ரொம்ப உரிமையெடுத்துட்டு ஈஷிட்டிருப்பா… ‘சாம்பார் வேணுமா… ரசம் வேணுமான்னு…’ இவர் பொண்டாட்டி நான் பக்கத்துல இருக்கறப்பவே இப்படி நடந்துக்கிட்டாள்னா … நான் அங்கே இல்லாத சமயத்துல எப்படியெல்லாம் நடந்திருப்பா… கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… பக்கத்துல எங்களுக்கு வேண்டியவங்க இருக்காங்க. அவங்க உண்மையை சொல்லிட்டாங்க… அவங்க எதுக்காக மேம் பொய் சொல்லணும்?”

“இவரு நடவடிக்கையும் இப்ப சுத்தமா மாறிடுச்சு… ஊருக்கு வந்தாலும் எங்கிட்ட முகம் கொடுத்துப் பேசறதில்ல. ஏதோ வேண்டா வெறுப்பாயிருக்கார். என்னமோ யார் வீட்டிலேயோ இருக்கற மாதிரி… எப்படா கிளம்பிப் போவோம், அவளைப் பார்ப்போம்ங்கற மாதிரிதான் இருக்கும் இவரோட நடவடிக்கையெல்லாம். வேற ஊருக்கு வேலை மாறுதல் கேளுங்கன்னா அதையும் கேட்க மாட்டேங்கறார்… என்னை விட அவகிட்ட என்ன இருக்குன்னே தெரியலை மேடம்..? நிறமுமில்லை, அழகுமில்லை… ஒல்லியா, உயரமா கரண்ட் கம்பியாட்டம் இருக்கறா… அவ ஆளும் முகரைக்கட்டையும்… சாப்பாட்டுல ஏதோ வசிய மருந்து வெச்சு என் புருஷனை மயக்கிட்டா மேடம்…”

Representative Image

இப்படி அந்தப் பெண்ணை அவர் மனைவி சரமாரியாக மட்டம் தட்டிப் பேசிய போது, அவரது கணவரின் முகம் கறுத்துச் சுருங்கியது. இனம் புரியாத வலியின் ரேகைகள் அவரது முகமெங்கும் படர்வதை என்னால் பார்க்க முடிந்தது. அவரது கண்ணோரத்தில் கண்ணீர்த் திவலைகள் துளிர்ப்பதைக் கவனித்தேன். அவர் பேச்சை மாற்றினார்… “மேடம், தினமும் செக்ஸ் வெச்சுக்கிட்டாத்தான் மனைவி மேல புருஷனுக்குப் பாசம் இருக்குன்னு அர்த்தம் அப்படின்னு இவங்க வீட்டுல இருக்கறவங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க… ஒரு வாரம் லீவு எடுத்துட்டு வந்தா, ‘தினமும் பண்ணு’ன்னு என்னை டார்ச்சர் பண்றா மேடம்…’ என்றார்.

“ஓஹோ…என் கூடப் படுக்கறது உனக்கு டார்ச்சராயிருக்கோ..? ஏன், பண்ணவேண்டியதுதான? வேறெதுக்கு புருஷன்னு இருக்கறீங்க… என்கிட்ட எப்படி பண்ணமுடியும்..? அதான் அங்கேயே வேலையை முடிச்சுட்டு வந்திடறீங்களே… அப்புறம் எப்படி இங்க பண்ண முடியும்.ரெஸ்ட் எடுக்கத்தானே இங்கே வர்றீங்க…?” வாய்க்கு வாய் பதில் பேசியபடியே இருந்தார் அந்தப் பெண். இயல்பாகவே தன் குடும்பப் பின்புலம், தோற்றம் இவற்றில் கர்வம் உடையவராயிருந்தார். தன் கணவன் மீது அன்பு, உரிமை, பொசசிவ்னெஸ் என்பதையெல்லாம்விட, தன்னைவிட அழகிலும் வசதியிலும் குறைந்த ஒரு பெண்ணை விட்டுக்கொடுக்காமல், அவளிடம் அவர் மயங்கிக் கிடப்பது தன் கர்வத்திற்கேற்பட்ட இழுக்கு என்பதுபோல்தான் நடந்து கொண்டார். அப்படித்தானிருந்தது அவரது மனநிலை.

“பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கோம் மேடம்… எவ்வளவு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கு தெரியுமா? எவ்வளவு சந்தோஷத்தோட பண்ண வேண்டிய விஷயம்… இப்படி புலம்பிட்டு சுத்திட்டிருக்கேன்…
மாப்பிள்ளைக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்? ” எனப் புலம்புகையில், அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் வசதி வாய்ப்புகளைப் பறைசாற்றிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். அவரைக் கொஞ்சம் வெளியே அனுப்பி விட்டு அந்தக் கணவரிடம் பேசத் தொடங்கினேன். அன்று முழுவதுமே அவர் தன் மனைவியைப் பற்றிக் குறை மட்டும்தான் சொல்லிக்கொண்டிருந்தாரே ஒழிய, தனக்கும் அந்த இன்னொரு பெண்ணுக்குமான உறவைப் பற்றிப் பேசவேயில்லை. அவர் தன் மனைவியுடன் சேர்ந்து நடந்து செல்கையில், இவர் கொஞ்சம் தயங்கியும் பின்தங்கியும் செல்ல அவரது மனைவியோ கார் ஓட்டுநருக்கு முன்னே செல்லும் வாகன உரிமையாளரைப் போல மிடுக்காக நடந்து சென்றார். இருவருக்குமிடையே கொஞ்சமும் இணக்கம் இல்லையென்பது அப்பட்டமாகப் புலப்பட்டது. சரிதான். அந்தக் கணவர் சொன்னது போல, நடந்து செல்லும்போதே இப்படி என்றால், பிறகு எப்படி இருவரும் ஒத்திசைந்து உடலுறவில் ஈடுபட முடியும்? ஒருவர்மீது பிடிப்பில்லாமல், இருவருக்கும் கொஞ்சம்கூட மனப் பொருத்தமில்லாமல் நிகழும் காமத்தைவிட, ஒன்றுமில்லாமலிருப்பதே சிறந்தது.

அடுத்தடுத்த சில நாட்களும் அந்தக் கணவரது வார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை… அதன்பின் வந்த நாளில் தெளிவாய் நான் சொன்னேன். “உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்குமிடையேயுள்ள உறவு எத்தகையது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அதை நீங்களாகவே ஒப்புக் கொள்ளாதவரை என்னால் உங்களுக்கு உதவவும் உங்கள் பிரச்சினையிலிருந்து வெளியே வரவைக்கவும் முடியாது. கண்டிப்பாக நான் உங்கள் மனைவியிடம் சொல்ல மாட்டேன்.
சொல்லுங்கள் என்னதான் நடந்தது…?” என்று கேட்டேன்.

அத்தனை நாட்களாக ஒரு வித மனத் திரையைப் போர்த்திக்கொண்டு இறுக்கமாக இருந்த அவர் அன்று குமுறி குமுறி அழத் தொடங்கினார். அந்த இன்னொரு பெண்ணிடம் தான் உடலுறவு வைத்துக் கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டார். உடலையும் தாண்டி, மனதளவில் தான் அவளுடன் மிக நெருக்கமாக உணர்வதாகவும் அவளைப் பிரியும் சூழல் ஏற்பட்டு விடுமோ எனத் தான் பயப்படுவதாகவும் கதறியழுதார். அந்த நாள்வரை தெம்பாகயிருந்த அவர் அன்று உடைந்து அழுவதைப் பார்க்க கஷ்டமாயிருந்தது. அன்று அவரது குரலில் மிகுந்த கலக்கமும் நடுக்கமும் மண்டியிருந்ததது. அந்தப் பெண்ணை அவர் எந்தளவிற்கு சார்ந்திருக்கிறாரென்பதை அவரது குரலின் நடுக்கம் எனக்குணர்த்தியது.
திருமணமான நாளிலிருந்தே தான் தன் மனைவியைவிட, அவர்கள் குடும்பத்தைவிட தாழ்வாய் தன்னை உணர்வதாகவும் தான் என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் அவளது பிறந்த வீட்டினர் முன்னிலையில் தன் மனைவி தன்னை மட்டம் தட்டுவதாகவும் கூறினார். இவளிடமிருந்து கிடைக்காத மரியாதையும் அன்பும் அந்தப் பெண்ணிடமிருந்து கிடைத்ததாகவும் சொன்னார்.

அவள் தனக்குப் பிடித்ததைக் கேட்டு, கேட்டுப் பரிமாறும் விதம், தன்னுடன் சேர்ந்து உணவு சமைப்பது, பேசுவது, சமையலறையிலேயே நடக்கும் காதல் விளயாட்டுகளைக் குறிப்பிட்டு இவை எதுவும் தன் திருமண உறவில் இல்லை என்றார். இந்த காதல் மிகுந்த செயல்பாடுகளுக்குமுன், அவளது புறத்தோற்றம் தனக்கு முக்கியமாகப் படவில்லையென்றார். அவளது நிறமோ, உருவ அமைப்போ ஒரு குறையாகவே தனக்குத்
தோன்றவில்லை என்றும், யாராவது அவளது தோற்றத்தைக் குறை சொன்னால், கேலி செய்தால் தனக்குக் கட்டுக்கடங்காமல் கோபம் வருகிறது என்றும் பற்களைக் கடித்தார். தன் மனைவி அந்தப் பெண்ணை மட்டம் தட்டும் போதெல்லாம் அதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அவளைத் தன் மனைவியின் வசவுகளிருந்து பாதுகாக்கவேண்டியது தன் கடமை என்பதாகவும் அழுதபடியே சொன்னார். ஆனால், தனது மனைவியிடம் இவர் காதல் தளும்ப பேசிருக்கிறாரா என்றால் இல்லை… தங்களுக்குள்ளே பொருளாதார ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும் அதைத் தன் காதலால் நிரப்பி ஈடு செய்தாரா என்றால் அதுவுமில்லை…

“தன் கணவரால் அழுத்தமாக ஆக்கிரமிக்கப்படும் ஒரு உடல் உறவைத் தான் விரும்புவதாகவும், அது தனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை…” என்றும் கூறி அழுதார் அந்த மனைவி. தனது உடலையோ, அலங்காரத்தையோ தன் கணவர் ரசித்ததேயில்லை என்றும் அங்கலாய்த்தார்.

ஆக, இருவருமே ஒருவரையொருவர் உணர்வு ரீதியில் திருப்தியடையச் செய்யவில்லை எனும் போது, தங்கள் துணைவர்களிடமிருந்து மட்டும் எப்படி குறைகளில்லாத காமத்தையும், முழுமையான பாசத்தையும் எதிர்பார்க்க முடியும்?பரஸ்பர அடங்குதலும் அடக்குதலும்தானே அழகான கூடலாகும்?

சொல்லப்போனால், தன் மனைவியிடம் செய்யத் தவறிய விஷயங்களை எல்லாம் இவர் அந்த இன்னொரு பெண்ணிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், தன் மனைவியிடம் அவ்வாறு மாறுவதற்கு அவரது ‘ஈகோ’ இடம் கொடுக்கவேயில்லை. அதே போல்தான் அந்த மனைவிக்கும்… தான் எந்த விதங்களிலெல்லாம் தன் கணவரை உணர்வு ரீதியாகக் காயப்படுத்தியிருக்கிறோம் என்று தெரிந்திருந்தாலும், ‘சட்டென’ அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ள அவரது மனம் தயாராகவில்லை. இந்த இடைவெளிக்குள், அவரது கணவருக்கு ஒரு பெண் கிடைத்ததுபோல, ஒரு வேளை இந்தப் பெண்ணிற்கும் வேறொரு ஆண் துணை கிடைத்திருந்தால், அவரும் நிச்சயமாய் தன்னை மாற்றிக் கொண்டிருந்திருப்பார். அந்தப் புதிய உறவில் உணர்வளவில் இணக்கமாயிருந்து உடலளவிலும் உச்சக்கட்டம் கண்டிருப்பார். ஆனால், அப்படி தங்கள் துணைகளை மாற்றிக்கொண்டேயிருப்பது ஒருபோதும் நிரந்தரத் தீர்வாகாதல்லவா?

அதனால், ‘தினமும் காமம்’ என்பதை மாற்றி, ‘தினமும் காதல்’ என்று மாறுங்கள். அப்போது, காமத்தில் கண்டிப்பாக நிறைவு கிடைக்கும் என்று கற்றுத் தந்தேன்.
கற்றுக் கொண்டார்கள்…

உடலுறவு இல்லாமலேயே ஒரு ஆணோ, பெண்ணோ உச்சக்கட்டமடைய முடியுமா என்றால், பெண்களுக்கு இது முற்றிலும் சாத்தியம். எந்தவிதக் கற்பனைக் கூடல்களுமின்றி, மனமும், உடலும் ஒருங்கே சேரும் ஒரு புள்ளியில் உச்சக்கட்டம் அடைந்த உணர்வு ஏற்படும். பல நேரங்களில், தூக்கத்தில் இவ்வாறு நிகழும். அதைப் பெண்கள் தாங்கள் ஏதோ கனவு கண்டதாக, கனவில் அவ்வாறு நிகழ்ந்ததாக நினைத்துக் கொள்வார்கள்.
ஆண்களுக்கும் இவ்வாறு இந்த ‘உடல்- மன ஒருங்கிணைப்பு நிலை’ எவ்விதப் புறத் தூண்டுதல்களோ அல்லது சுய இன்பம் செய்யாத போதோ கூட நிகழும். அது விழிப்பு நிலையிலும் ஏற்படலாம் அல்லது தூக்கத்திலும் நிகழலாம். விழிப்பு நிலையில் இவ்வாறு நிகழ்ந்தாலும் அல்லது தூக்கத்திலேயே ஏற்பட்டாலும் அவர்களுக்கு இயல்பாகவே அப்போது விந்து வெளியேறிவிடும். குறிப்பாக அதிகாலையில் ஹார்மோன்களின் சுரப்பு மிக அதிகமாக இருப்பதால், எல்லா ஆண்களுக்கும் இப்படித் தூக்கத்தில் தானாக உச்சக்கட்டம் அடைவது நிகழும். ஒவ்வொரு ஆணுமே ஆண்குறியின் விறைப்போடுதான் எழுந்திருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டிருப்போம். இதை NPT (Nocturnal penile tumescence) என்போம். அப்போது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரோனின் (Testosterone) அளவு அதிகரிக்கும்.

அதனால்தான் ஆண்கள் அதிகாலை நேரக் கலவிக்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால், இது இயல்பான ஒரு விஷயம்தான் என்று புரியாமல், பல ஆண்கள் இது ஏதோ தங்களுக்கிருக்கும் மிகப்பெரிய உடல் கோளாறு என்று நினைத்துக் கோண்டு லாட்ஜ் லாட்ஜாக வைத்தியர்களைத் தேடி அலைய ஆரம்பிக்கிறார்கள். அதிலும் டீன் ஏஜ் சிறுவர்கள் மிகவும் பயந்து போய் தவறான நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதும், உணர்ச்சிகளைத் திசை திருப்பும் மோசமான வழிகாட்டிகள் பின்செல்வதுமாய் தடம் மாறிப் போகிறார்கள்.

தயவு செய்து புத்தகத்தின் இந்தப் பகுதியை மட்டுமாவது பதின் வயது சிறுவர்களும் அல்லது உங்கள் ஆண் நண்பர்களும் குடும்பத்திலும் உறவு வட்டத்திலுமுள்ள ஆண்களும் பார்க்கும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். மனதுக்குப் பிடித்த பெண்ணைப் பார்க்கும் போதும் ஆண்களுக்கு உறவிற்கான கிளர்ச்சியும் உச்சக்கட்டம் அடைந்து விட்டதைப் போன்ற உணர்வும் ஏற்படும். பொது இடங்களாயிருந்தால் அப்படியே தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். தனிமை கிடைத்தால், கட்டாயம் விந்து வெளியேற்றினால் மட்டுமே அவர்களால் அந்த உணர்விலிருந்து விடுபட்டு உடலளவிலும் மனதளவிலும் இயல்பாக உணர முடியும். இயல்பு நிலைக்கு வர முடியும். என்னதான் ஒரு பெண்ணிடம் உணர்வு ரீதியாக ஈர்க்கப்பட்டாலும், ஆண்களைப் பொறுத்தவரை இப்படி உடல் ரீதியிலான விந்து வெளியேற்றச் செயல்பாட்டில்தான் அவர்களது ‘அந்த உணர்வுகளின் உச்சக்கட்டம்’ சென்று முடியும்.

ஆனால், பெண்களுக்கு உணர்வு நிலையிலேயே உச்சம் ஏற்பட்டு, உணர்வு நிலையிலேயே அது முடிந்தும் விடும். கண்டிப்பாக அப்போது பெண்ணுறுப்பின் சுவர்களிருந்து (Vaginal walls) வெஜைனல் லூரப்ரிகன்ட்ஸ் திரவமும் (Vaginal lubrication) கருமுட்டை உருவாகும் காலமாயிருந்தால்,
செர்விகல் ம்யூகஸ் (Cervical mucus) சுரப்பும் பெருமளவில் நிகழும்.
சில பெண்கள், “நான் எந்தக் கற்பனையும் செய்யத் தேவையில்லை, எந்தவிதமான உடல் தூண்டுதல்களோ, அகத் தூண்டுதல்களோ, புறத் தூண்டுதல்களோ கூடத் தேவைப்படாது. ‘இப்போது எனக்கு உச்சக்கட்டம் நிகழ வேண்டும்’ என்று நினைத்தாலே எனக்கு அது நிகழ்ந்து விடும்”, என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது தங்கள் உடல் முழுவதும் அந்த உணர்வலைகள் பாய்ந்து கிளர்ச்சியடைய வைப்பதாகவும் ஆனால், கிளிட்டரஸ் தூண்டுதலின் போது ஏற்படும் உச்சக்கட்டத்திலிருந்து இது சிறிது வேறுபட்டிருப்பதாகவும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த ‘தன்னிச்சையான உச்சக்கட்டம்’ தங்களை செக்ஸ் வாழ்க்கையில் மேம்பட்டவர்களாக உணர வைக்கிறதென்றும் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாததால் தங்களை சுதந்திரமாக உணர வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

1992 ல் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், இவ்வாறு ‘தன்னிச்சையான உச்சக்கட்டம்’ அடையும் பெண்களுக்கு உண்மையிலேயே உடலுறவில் உச்சக்கட்டம் அடையும்போது என்னென்ன அறிகுறிகள், உடல் மாற்றங்கள் மற்றும் எதிர் வினைகள் தோன்றுமோ அவையெல்லாமே தென்பட்டன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இரத்த ஓட்டம் அதிகரித்தல், இதயத் துடிப்பு அதிகமாதல், கண்களும், கண்ணின் கருவிழி மணிகளும் விரிதல் என உடலுறவின் உச்சக்கட்டத்தில் நிகழும் அனைத்து உடல் ரீதியிலான எதிர்வினைகளும் இந்த ‘தன்னிச்சையான உச்சக்கட்டத்திலும்’ பெண்களுக்குத் தோன்றின. ஆக, ‘பெண்கள் உச்சக்கட்டம் அடைய உடல் தூண்டுதல்களும், தொடுதல்களும் அவசியமில்லை…’ என இந்த ஆராய்ச்சியின் முடிவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கலவியில் உச்சக்கட்டம் என்பது உடலில் தொடங்கி, உடலில் முடிவதில்லை. அது கண்களில் தொடங்கி, மனதில் முடிவது. உடல் உறுப்புக்கள் கலப்பதென்பது இந்தக் கலவியல் உச்சக்கட்டப் பயணத்தின் ஒரு பாகம்தானேயொழிய, அதுமட்டுமே ஒரு காரணமாகாது.

காதலும் அன்பும் உங்கள் துணைவரின்மேல் பொங்கி வழியும்போது அங்கு உடலளவில் உச்சக்கட்டம் நிகழ்ந்ததா, இல்லையா என்ற விஷயத்துக்கே இடமில்லாமல் போய்விடும். தங்கள் மனதுக்குப் பிடித்த நபர் தங்களைக் கடந்து செல்லும் போதும், அவரது பிரத்யேக வாசனையை நுகரும் போதும்கூட தாங்கள் உச்சக்கட்டம் அடைந்து விடுவதாகப் பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். இதில் அடிக்கோடிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ‘தங்களுக்குப் பிடித்த’ என்ற வார்த்தைகளைத்தான். ‘எந்த ஆண்’ கடந்துபோனாலும் அல்ல… ‘தங்களைப் புரிந்து கொண்ட ஒரு துணை’ என்பதுதான் இங்கு முதற்படி. இந்தப் புரிந்து கொள்ளல் என்பது படுக்கையறைக்குள் மட்டுமல்ல… அதையும் தாண்டி, தினசரி வாழ்க்கையிலும் இதன் ஆழமிருக்க வேண்டும். தாங்கள் எதிர்கொள்ளும், கடந்து செல்லும் அனைத்து அன்றாட நிகழ்வுகளிலுமே ஒரு அடிப்படைப் புரிதல் இருவருக்கும் இருக்கும்போது மட்டுமே இந்த ‘முழுமையான கூடலும், உண்மையான உச்சக்கட்டமடைவதும்’ சாத்தியமாகிறது. அந்தப் புரிதல் , கூடத்தைத் தாண்டி… சமையலறையைத் தாண்டி… படுக்கையறை வரைக்கும் நீள்கிறது.

ஒரு நாளின் இருபத்து மூன்று மணி நேரங்கள் நாற்பத்தைந்து நிமிடங்கள் எலியும், பூனையும் போல, ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டு, ஒரு சின்ன விஷயத்தில் கூட புரிதலும் இணக்கமான மனநிலையுமில்லாமல் வெறுப்புடன் வாழ்ந்துகொண்டு பதினைந்து நிமிடக் கூடலில் மட்டும் திருப்தி வேண்டுமென்றால் அது எப்படி முடியும்?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இப்படி எதிர்பார்ப்பது உங்களுக்கே வேடிக்கையாக, அசாத்தியமானதொரு விஷயமாகத் தோன்றவில்லை..?
அந்தப் பதினைந்து நிமிடக் கூடல் பொழுதிலும்கூட உங்கள் மனம் பகலில் முற்றுப்பெறாத அந்த சண்டைகளைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கும். ‘இவ்வளவு நேரம் சண்டை போட்டுட்டு இப்ப மட்டும் படுக்கறதுக்கு பிச்சையெடுக்க வந்திரு…’ என்று மனதுக்குள் கருவிக் கொண்டிருக்கும் மனைவிக்கும், ‘எல்லாம் என் தலையெழுத்து…இதுக்கு நீ
தேவைப்படறியே, என்ன பண்றது …வேற வழியில்ல…’ என்று வேறு வழியில்லாமல் தன் மனைவியுடன் கூடும் ஒரு கணவனுக்கும் எப்படி கலவியல் இன்பம் சாத்தியமாகும்..?

கலவியில் உச்சக்கட்டம் என்பது இரவின் இருட்டில் நிகழ்வதல்ல… அது பகல் பொழுதுப் புரிதல்களின் நீட்சிதான்… ஒரு நாள் முழுவதும் நடக்கும் எந்த விஷயத்திலுமே இருவருக்கும் புரிதலோ அல்லது ஒத்திசைவுத் தன்மையோ இல்லாத போது, இரவில் நடக்கும் உடல் சேர்க்கைகளின் போது மட்டும் எப்படி அந்த ஒத்திசைவு ஏற்படும்? காமம் என்பது இரு தனிப்பட்ட நபர்களின் ஒத்திசைந்த செயல்பாடுதான். பிறப்புறுப்புக்களின் கூடலல்ல… இரு மனங்களின் கூடல்தான் காமம். பகலில் கை கோத்து கதை பேசத் தெரியாத அல்லது அவ்வாறு செய்யாத, அப்படி செய்ய முடியாத அளவுக்கு மனத் தடைகளுடன் வாழும் தம்பதிகளுக்கு இரவு நேரக் கூடலில் உச்சக்கட்டம் என்பது சாத்தியமாகாது. தான் உச்சக்கட்டம் அடையவேண்டுமென்பதை விட, தனது அன்பை, அக்கறையைத் தன் துணையிடம் வெளிப்படுத்தி அவரை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் கலவியின் நோக்கமாயிருக்க வேண்டும்.

சோர்ந்திருக்கும் அவளது அல்லது அவனது உடலுக்கும் மனதிற்கும் தன்னால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு அதில் பொதிந்திருக்க வேண்டும். கதை பேசி,மௌனம் உணர்ந்து, மெதுவாய் வருடி, கண்மூடி கிறங்கிக் கிடக்கும் கலவியை உங்கள் துணைக்குக் கணக்கின்றிப்
பொழிய வேண்டும் என்ற குறிக்கோளிருக்க வேண்டும்.

இவையத்தனையும் உங்கள் கூடலுக்கான காரணங்களாயிருக்கும் போது, நிச்சயமாய் அங்கு பரஸ்பர உச்சக்கட்டம் எந்த விதத் தங்குதடைகளுமின்றி, பிரயத்தனங்களுமின்றி அழகாய் அரங்கேறும். ஏனெனில், இப்படியெல்லாம் நினைக்கும் போதே உங்கள் மனதால் நீங்கள் உச்சக்கட்டத்தை அடைந்து விடுவீர்கள். அந்த அதிர்வலைகள் உங்கள் தொடுகையின் போது உங்கள் துணைவருக்கும் கடத்தப்படும்.

அன்பு, காதல், காமம் எல்லாமே ஒரு வித சக்திப் பரிமாற்றம்தான் (Energy transformation). இந்த ‘சக்தி’ என்பது யார் உடலளவில் வலுவானவர்களாய் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைவதல்ல. அவ்வாறு நிர்ணயிக்கப்படுவதோ, தீர்மானிக்கப் படுவதோ அல்ல.
யார் மனோசக்தி நிலையில் உயர்ந்த ஆற்றலுடன் எப்போதுமிருக்கிறார்களோ அல்லது அவ்விருவரில்அன்று யார் அதீத
ஆற்றல் அதிர்வலைகளுடன் இருக்கிறார்களோ, அவர்களிடமிருந்து அந்த உணர்வு நிலை, சக்தி குறைவாயிருப்பவர்களுக்கு கலவி மூலம் கடத்தப்படுகிறது. இந்த ஆற்றல் அதிர்வலைகளின்
பரிமாற்றம் உடல் சார்ந்த செயல்களில் தொடங்குவதற்கு முன்பே, உணர்வளவில் பரிமாறப்பட்டு விடுகிறது. இதைத்தான் “உணர்வியல் உச்சக்கட்டம் “ என்கிறோம் (Emotional orgasm). சரி, கலவிக்கு முன்பே உங்கள் துணையை எப்படி உணர்வளவில் உச்சக்கட்டமடைய வைக்கலாம்..?

 1. உங்கள் இருவருக்குமிடையே நிகழ்ந்த, உங்கள் இருவருக்குமே மனதுக்கு நெருக்கமான காதல் மற்றும் கலவி அனுபவங்களைப் பற்றிப் பேசுங்கள்.
 2. வீட்டுக்கு வரும் முன்பே உங்கள் துணையுடன் அலைபேசியில் காதலுடன் பேசுங்கள். இதை மன ரீதியிலான தூண்டுதல் ( Mental arousal) அல்லது மனதளவிலான முன் தயாரிப்பு (Mental conditioning) என்போம்.
 3. உங்கள் மூச்சு விடும் வேகத்தை மெதுவாக, மிக மெதுவாக மற்றும் ஆழமாக என மாற்றி மாற்றிச் செய்து, உங்கள் துணையையும் அவ்வாறே மூச்சு விடுமாறு சொல்லுங்கள். இம்முறை, ஆழமான மற்றும்
  நிறைவான கலவியல் உறவிற்கும், நீண்ட நேரம் கூடலில் ஈடுபடுவதற்கும் எளிதாக உச்சக்கட்டமடைவதற்கும் வழி
  வகுக்கிறதாம்.
 4. உங்கள் துணையின் உடல் வாகைப் புகழுங்கள்.
 5. மேற்கத்திய நாடுகளில் Sex toys என்றழைக்கப்படும் கலவியல்
  விளையாட்டு பொம்மைகளைப் பயன்படுத்தி உணர்வியல்
  உச்சக்கட்டத்தை அடைகிறார்கள்.

உணர்வளவில் உச்சக்கட்டமடைய வேண்டுமானால், அதற்கு முதலில்
ஒருவரின் பால் ஒருவர் ஈர்க்கப்பட வேண்டும் இல்லையா…? பொதுவாக, ஒரு பெண்ணும் ஆணும் எந்தெந்த விஷயங்களின் அடிப்படையில் தங்கள் துணைவரால் வசீகரிக்கப்படுகிறார்கள்? புறத்தோற்றம் தவிர வேறு என்னென்ன விஷயங்கள் கலவியல் ஆர்வத்தைத் தூண்டும் காரணிகளாக அமைகின்றன என்பதைப் பற்றியெல்லாம் தொடர்ந்து பேசுவோம்…

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.