ன்றைய அவசர உலகில் பசி, ஏழ்மை, வேலையின்மை, பல வகை பிரிவினையால் ஏற்படும் வன்முறையைவிட அதிகமாக நாம் எதிர்நோக்கும் சவால் மனநலம்.

எதிர்மறை உணர்வுகளும் மன அழுத்தமும் இல்லாத மனிதரே இல்லை எனும் அளவுக்கு நம் வாழ்வோடு அது பின்னிப் பிணைந்துள்ளது.

எதிர்மறை உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வதும் கையாளுவதும் நாம் முழுக் கவனத்துடனும் வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டியதாகும்.

தன்னை அறிதல், பிறர் மேல் பரிவு, கூர் நோக்குத் திறன்கள் இதற்கு அவசியம்.

நின்று பார்க்க நேரமில்லாத, மன அழுத்தத்தோடு வாழும், அதை மற்றவருக்கும் மடை மாற்றும் மனிதர்கள் நிறைந்த உலகில், அமைதியான மனநிலையோடு மகிழ்ச்சியாக வாழ்வது எளிதானதல்ல.

தொலைக்காட்சி, தொலைபேசி, பத்திரிகை அனைத்தும் தூரத்தே உள்ளதோடு நம்மைப் பிணைத்து நம்மிடமிருந்து நம்மை தூரமாக்கிவிட்டன.

அப்படியும் அதில் நல்ல செய்திகள் தெரிந்துகொள்கிறோமா என்றால் அதுவும் இல்லை. கொலை, கொள்ளை, திருட்டு, துரோகம், வன்முறை இதையே மறுபடியும் மறுபடியும் மனதிற்குள் ஏற்றிக்கொள்வதால் வரும் மனச் சோர்வு, மனிதர்கள் மேல் நம்பிக்கை அற்றுப் போவது போன்றவை ஏற்படுகிறது.

இந்த நிலையில் நமக்கு வரும் சிறுசிறு மனப் பிரச்னைகூடச் சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிதாகத் தோன்றுவது இயற்கையே. ஆயினும் சமாளிக்க முடியாததல்ல.

முதலில் மன அழுத்தம் என்றால் என்னவென்று பார்ப்போம், கடந்த காலத்தைப் பற்றிய கசப்பான உணர்வுகளோ, ஆறாத மனக் காயமோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ, நிகழ்காலத்து சிக்கல்களைத் தீர்க்க முடியாத இயலாமையோ இதில் எல்லாமோ அல்லது ஏதோ ஒன்றோ மன அழுத்தத்திற்குக் காரணமாகிறது.

எதிர்மறை உணர்வென்றால் ஏதோ ஒரு நிகழ்ச்சி, பொருள், மற்றவரின் நடத்தையை ஒட்டி நம் மனம், உடல் மற்றும் நடத்தையில் வரும் வலி மிகுந்த மாற்றம், எண்ண சுழற்சிகளில் வரும் தவறான நம்பிக்கை ஆகியவையே எதிர்மறை உணர்வாகிறது.

இதெல்லாம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். வாழ்வு முறை, வேலை அழுத்தம், சக மனிதர்களின் அழுத்தம், பொருளாதாரப் பிரச்னை, உறவுச் சிக்கல்கள் எனப் பல காரணிகள். இது எதுவுமே இல்லாவிடினும் இன்றைய இயந்திர உலகின் வெறுமைகூட காரணமாகலாம்.

இதன் காரணமாக நமக்குள் ஏற்படும் மாற்றங்கள், உணர்வு கொந்தளிப்புகள், உடலிலும் மனதிலும் உள்ள ஆற்றல் முறையாக உபயோகப் படுத்தபடாமல் இது போன்ற எதிர்மறை செயல்களில் வெளிவரும்போது, அதன் விளைவு மோசமாகவே இருக்கும். இதற்கு குழந்தைகளோ பெரியவர்களோ விதிவிலக்கில்லை. கொரனா நேரத்தில் தனிமைப்படுத்ததுதல், சமூக இடை வெளியின் காரணமாக இன்னும் அதிகமானதை நாம் கண்டோம். மனிதன் ஒரு சமூக விலங்கு. எப்போதெல்லாம் சமூகத்தைவிட்டு விலகுகிறானோ அப்போதெல்லாம் மனநலம் சார்ந்த சவால்களைச் சந்திக்கிறான்.

இந்த நிலையைச் சில அறிகுறிகள் மூலமாக அறியலாம்.

மனம்சார்ந்தஅறிகுறிகள்

  • எதிலும் நம்பிக்கை அற்ற நிலை. சில நேரம் தன் மேலும் நம்பிக்கையின்மை.
  • எப்போதுமே பயம், அதிர்ச்சி, கோபம், அழுகை, தேவையற்ற கவலைகள், சலிப்பு என ஏதோ ஓர் எதிர்மறை உணர்ச்சியின் பிடியில் இருத்தல்.

இவை அத்தனையும் இயற்கையான உணர்வுகள் என்றாலும் மனநலத்துடன் இருப்பவர்கள் எப்போதும் இந்த உணர்வுகளோடு வாழ்வதில்லை. உங்களின் நாளில் எவ்வளவு நேரம் என்ன உணர்வுகளில் இருக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்.

  • கவனச் சிதறல், முடிவெடுக்க முடியாத தயக்கம்.
  • எப்போதும் பொழுது போக்கிலேயே ஈடுபடுதல்.
  • புகை பழக்கம், மது போன்ற தற்காலிக சந்தோஷங்களில் மனம் மூழ்குதல்.

உடல்சார்ந்தஅறிகுறிகள்

  • பசியின்மை
  • தூக்கமின்மை
  • பிடித்த சுவை மேல் வெறுப்பு
  • ஆற்றல் குறைவாக உணர்தல்
  • தலைவலி, காரணம் தெரியாத உடல்வலி, வயறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், தோலில் பிரச்னைகள் ஏற்கெனவே உள்ள உடல் சார்ந்த பிரச்னைகள் தீவிரமாவது.

இதில் ஏதாவது ஒன்றோ இரண்டோ இருந்தால் உடனே நீங்கள் மன நோயாளி எனத் தீர்மானித்துவிட வேண்டாம். உடல் சார்ந்த அறிகுறிகளுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள்கூடக் காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்குத் தேவையான மருத்துவம் பார்த்துக் கொண்ட பின்பும் பிரச்னை தீரவில்லை என்றால் அது மனம் சம்பந்தபட்டதே !

உங்கள் மனநலனில் பிரச்னை இருக்கலாம் என்று ஓரளவு தெரிந்தவுடன், அதற்காகப் பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம். உடனடியாகச் செய்ய வேண்டியது உங்களால் முடிந்த உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும்தான். இரண்டும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் தொடர் பயிற்சி கைகொடுக்கும்.

எப்போதும் தவறாக ஏதாவது நடந்து மனம் சோர்வுரும்போது, அதிலிருந்து மனதைத் திசை திருப்ப சில பொழுதுபோக்கு தேவைதான். ஆனால், அதிகமானால் அதுவே உங்களை மனநோயாளி ஆக்கும் சாத்தியமும் உண்டு. உதாரணத்திற்கு வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக் போன்றவை. எதற்காக அதைத் திறந்தோம் என்பதே மறந்து இலக்கில்லாமல் அதில் நேரம் கடத்தியது நம்மில் பல பேருக்கு நடந்திருக்கும்.

ஆகவே எந்தப் பொழுதுபோக்கிற்கும் அடிமையாகாமல் முதலில் உடற்பயிற்சி மற்றும் தியானப் பயிற்சியும் மேற்கொள்வது நலம். உடல் ஆற்றல் நல்ல முறையில் செலவாகவும், மனதின் ஆற்றலை வழிநடத்தவும் இயலும்.

இதைச் சிறிது பழகிய பின் மற்ற வழிகளை மேற்கொள்ளலாம். அவை அடுத்த வாரம்.

வாங்க நம்மை ஜெயிக்கலாம், கூடவே உலகையும் ஜெயிக்கலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.