சமூகத்தில் பெண்கள் சமத்துவத்துடனும்,  சகோதரத்துவத்துடனும் சுயமரியாதையோடும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக சமூக நீதி, இடதுசாரி, பெண்ணுரிமை இயக்கங்களால் பலகட்டப் போராட்டங்களின் வாயிலாகப் பல சமூக சீர்திருத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் பலனால் விளைந்ததே பல சட்ட உரிமைகள். இத்தகைய மாற்றங்களே சமூகத்தில் பெண்கள் கொஞ்சமேனும் சரிநிகராக முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இன்று சமூகத்தில்,  அரசியலில், கல்வியில், அறிவியலில் பெண்களின் பங்கேற்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது.பல துறைகளிலும் பெண்கள் முகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழல் ஏனோ பழமைவாதிகளைப் பதற்றமடையச்  செய்கிறது. மேலும் இது ‘கலிகாலமப்பா’ என மனம் நொந்துகொள்கிறார்கள் அடிப்படைவாதிகள்.

சந்திரயான் நிலவில் கால் பதித்துவிட்டது என்று பெருமையோடு மார்தட்டிக்கொண்ட  தேசபக்தர்கள், சக உயிராக இருக்கக் கூடிய பெண்ணை நிர்வாணத்தோடு  இழுத்துச்செல்லும்போது எங்கே போய் ஒளிந்துகொண்டார்கள்? பெண்கள் எத்துறையில் வளர்ச்சி பெற்று வந்தாலும் பெண் குறித்தும், பெண்ணுரிமை குறித்தான பார்வை இன்னும் மலினப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

பெண் பத்திரிக்கையாளர்  கேள்வியெழுப்பியதற்கு அவரது கண்ணத்தைத் தட்டிய ஆளுநர். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாகப் பதிவைப் பகிர்ந்த எஸ்.வி.சேகர். அரசியலில் இருப்பதாலே பாலியல் ரீதியான விமர்சனங்களைச் சமூக வலைத்தளங்களில் சந்தித்துவரும் கனிமொழி, ஜோதிமனி, குஷ்பு போன்ற அரசியல் பிரதிநிதிகள். பெண்களைத் தரக்குறைவாகப் பொதுமேடைகளில் பேசிவரும் ஆண் அரசியல் கட்சித் தலைவர்கள் என அதன் பட்டியல் நீள்கிறது. அரசியல் கட்சிப் பொறுப்பாளர்கள்,   அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள்  என மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடியவர்களே அப்படியாகப் பேசுவதுதான் இங்கு மிகப்பெரும் ஆபத்தாக இருக்கிறது. ‘சினிமா வாய்ப்புக்காக நீங்க சமரசம் (Adjestment) செய்திருக்கிறீர்களா? செய்யச் சொல்லிருக்கிறார்களா?’ என நடிகைகளிடம் கேள்வி எழுப்பும் ஊடகவியலாளர்கள், அதே துறையில் இருக்கும் ஆண் நடிகர்களிடம் அதே கேள்வியை ஏன் எழுப்புவதில்லை?

இத்தகைய மனநிலையில் வளர்பவர்கள், சமரசம் இல்லாமல் பெண்களால் சினிமாவில் மட்டுமல்ல எந்தத் துறையிலும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியாது என்கிற பொது உளவியலை நம்பவும் செய்கின்றன. இவ்வாறு சமூகத்தில் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் என்கிற பெயரில் பெண்களுக்கு எதிராக மிகவும் கெட்டித்தட்டிப்போன பல பொது உளவியல் கருத்துகளை நாம் பார்க்க முடியும்.

நாட்டின் நான்காவது மிகப்பெரிய தூணாகக் கருதப்படும் ஊடகத்தின் வளர்ச்சி என்பது அபரிமிதமானது.ஊடகம் மனித வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறியிருக்கிறது. அதிலும் காட்சி ஊடகம் அசைக்க முடியாத ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. இது சமூகத்திற்கு எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பதே இங்கு ஆராயப்பட வேண்டியிருக்கிறது.காட்சி ஊடகத்தின் பொழுது போக்கு அம்சத்தை  எடுத்துக்கொண்டால் அது மேலும் மேலும் பெண்களை இழிவுபடுத்தக்கூடிய,  சிறுமைப்படத்தக்கூடிய ஒன்றாகவே தகவமைக்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி தொடர்களும், விவாத நிகழ்ச்சிகளுமே அதற்கான அளப்பறிய வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன ஊடக நிறுவனங்கள் எல்லா வணிக சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகளில் முதலீடு செய்வதன் மூலம் தனது வியாபாரச் சந்தையை விரிவுபடுத்திக் கொள்கின்றன.தொலைக்காட்சித் தொடர்களின் கதைக்கருவும், பெண்களின் கதாபாத்திரச் சித்தரிப்புகளும் மீண்டும் மீண்டும் பெண்களை மலினப்படுத்தும் செயலையே வரிந்துகட்டிக்கொண்டு செய்து வருகின்றன. பெண்களே வில்லியாகவும் கதாநாயகிகளாகவும் பிரதான பாத்திரம் வகிக்கின்றனர். தொடர்கதைகளே பெண்களின் உலகம் எனலாம். இங்கு ஆண்கள் துணைக் கதாபாத்திரங்களே. அப்படி இருக்கையில் இது எப்படி பெண்ணைச் சிறுமைப்படுத்தும் விதமாக இருக்கும் எனக் கேள்வி எழலாம். இதுவே ஆணாதிக்கத்தின் நுட்பமான அரசியல் என்பதை அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. தொடர்கதைகளை உருவாக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே.

பெண்களால் மட்டுமே குடும்ப அமைப்பை,  கெளரவத்தை, சமய மூடநம்பிக்கைகளின் சங்கிலிகளை அறுபடாமல் பேணிகாக்க முடியும் என்கிற கருத்துருவாக்கத்தை உருவாக்கி, அவற்றின் பாதுகாவலர்களாகப் பெண்களையே முன்னிறுத்துவதன் மூலம் அதன் புனிதம் உடைபடாமல் இருப்பதைத் தந்தை வழி சமூகம் கூர்மையாகப் பார்த்துக்கொள்கிறது. தாலி, குங்குமம், தெய்வ நம்பிக்கை, குடும்பம், கணவன், குழந்தைப்பேறு மற்றும் கற்பு ஆகியவையே பெண்ணுக்கான புனிதம் என்கிற பிம்பத்தை மாய்ந்து மாய்ந்து மக்கள் மனதில் பதிய வைப்பதில் இன்றைய காட்சி ஊடகங்கள் மிகவும் அக்கறை காட்டுகின்றன.

தமிழ்த் தொடர்கள் காதலையும், காதல் திருமணங்களையும் பாதகமாகக்  காட்டுவதிலே முனைப்பு காட்டிவருகின்றன.  இதனால் 2010களுக்குப் பின்பு டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இந்தித் தொடர்களே அன்றைய இளம் வாடிக்கையாளர்களின் தேர்வாக மாறியிருந்தது. இதைக் கவனித்த தமிழ்த் தொடர்களும் இன்று காதல் காட்சிகள், காதல் பாடல்களை ஆங்காங்கே தெறித்து விடும் வித்தைகளைக் கையாள்கின்றனர்.

தொடர்களை மிஞ்சும் அளவிற்கு ரியாலிட்டி ஷோக்கள், காமெடி ஷோக்களும் பெண்களைக் கேளிக்குரிய பொருளாகவே  சித்தரிக்கின்றன. பெண்களுக்கான நிகழ்ச்சி என்கிற பெயரில் ஆண்மையைச்  சிந்தனைகளைக் கொண்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்வதில் அவர்களுக்கு எந்தச் சலனமும் இருப்பதில்லை. இவர்களின் அறிவார்ந்த சிந்தனை, ‘தமிழ்ப் பெண்கள் அழகா, கேரளப் பெண்கள் அழகா’ என்று தலைப்பு வைக்கும் அளவிற்கு நீண்டிருக்கிறது. பெண்ணுரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக எண்ணம் கொண்டோர்களின் வலுவான  எதிர்ப்பால் அந்த ஒளிபரப்புத் தடை செய்யப்பட்டது. மேலும் ‘தனது  பெற்றோரிடம் வரதட்சணை கேட்டுப் பெறும் பெண்கள்-கேட்டுப் பெறக் கூடாது எனச் சொல்லும் பெற்றோர்’, ‘திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள், திருமணம் செய்ய விரும்பாத பெண்கள்’, ‘ஒரு குழந்தை போதும் என்பவர்கள்- இரு குழந்தை போக்கு சரியில்லை’ என்பவர்கள் போன்ற தலைப்புகளில் ஆண்மேலாதிக்கச் சிந்தனை பண்பாட்டு ரீதியாக எவ்வாறு ஊடுருவி இருக்கிறது, அதைக் கலைய என்ன செய்ய வேண்டும் என்கிற விவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல் எப்போதும்போல கட்டப்பஞ்சாயத்து அணுகுமுறையிலேயே விவாத நிகழ்ச்சி முடிவுபெறும்.

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்சிகளின் கருபெரும்பாலும் பாலியல் (sexist), பெண் வெறுப்பு (misogynist), பாலினம் குறித்த பொத்தம் பொதுவான (Gender Stereotype) கருத்துகளை மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் பதிய வைப்பதையும் அக்கருத்துகளை (Normalized) இயல்பாக்குவதை காமெடி என்கிற பெயரில் தொடர்ந்து செய்துவருகின்றன.  பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் ‘டைமிங் கமெண்ட்’ செய்து அசத்தும் ஒழுக்கசீலரான காமெடி நிகழ்ச்சியின் நடுவர் தனது மனைவியை அடித்து, துன்புறுத்தி,  கொலைமிரட்டல் விடுத்தது ஊர் அறிந்ததே. ஆனால், இங்கு ஆண்களின் ஒழுக்கம் குறித்து யாரும் கேள்வியெழுப்பவில்லை.

இதற்குப் போட்டியாகச் பெண்ணுக்குப் பெண் எதிரியா, தோழியா எனச் சிந்தனை செறிவூட்டும் கேள்வியை எழுப்புகிறது மற்றொரு விவாத நிகழ்ச்சி. சமூகம் சார்ந்து பேச வேண்டிய, பேசப்படாத விஷயங்கள் பல உள்ளன. அதை ஏன் விவாதப் பொருளாக்கத் தயங்குகின்றன. பெண்கள், பெண் குழந்தைகள், சிறுபான்மையினர்,  விளிம்புநிலை மக்கள் மீதும் அரங்கேறும் வன்முறைகளைக் கேள்வி கேட்கவும், பொது வெளிக்குக் கொண்டுவந்து மக்களிடையே விவாதிப்பதற்கும் சிந்திப்பதற்கான சூழலை உருவாக்கத் தயங்குவதேன்? மக்களை எளிதாக அணுகும் இடத்தில் உள்ள ஊடகங்கள் எந்தவொரு சபலமுமின்றி ஒவ்வாத கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணிகளை அயராது செய்து வருகின்றன. இதன் விளைவாகப் பொதுவெளியில் பெண்கள் சிலாகிக்கப்படுவது அன்றாட நிகழ்வுகளாகின்றன.

ஊடகங்கள் அறத்தை இழக்காமல் அதன் கடமை உணர்ந்து நடக்க வேண்டும். சமஅளவு எண்ணிக்கையிலுள்ள சக உயிரான பெண்கள் மீது வன்மத்தை கட்டவிழ்த்துவிடுவது ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகோலாது. வியாபாரம் மட்டும் ஊடகத்தின் அறமாகாது. பொதுச் சமூகத்தின் கொண்டாட்டத்தை, சிந்தனையை மாற்றுவதில் ஊடகத்தின் பங்கு  அலப்பறியது. பண்பாட்டு ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பதில் பண்பாட்டின் முக்கியக் கூறாக இருக்கக்கூடிய ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அரசியல் சீர்திருத்தத்தைக் காட்டிலும் முக்கியமானது சமூக சீர்திருத்தம் என்பதை வலியுறுத்தவே  அம்பேத்கர் அரசியல் சீர்திருத்தவாதியைக் காட்டிலும் வலிமையானவர் சமூக சீர்திருத்தவாதி என்கிறார்.

படைப்பாளர்:

மை. மாபூபீ

சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.