இன்றைக்கு மிக முக்கியமான பேசுபொருள் ஆகியிருக்கிறது சனாதனம். சனாதனம் என்பதற்கு புராதனம் அல்லது காலத்தால் அழியாதது என்றும், தர்மம் என்பதற்கு வழிகள் என்றும் பொருள் சொல்கிறார்கள். அதாவது ஒருவர் தனது வாழ்வை ஒழுக்கமாகவும், நிறைவாகவும் வாழ உதவும் வழிமுறைகள் அல்லது கோட்பாடுகள் சனாதன தர்மம் என்று சொல்லப்படுகிறது. இந்து மதத் தத்துவத்தின்படி வாய்மையே வெல்லும், பெரியோரை மதித்தல், சுத்தம், உணவுமுறை, அஹிம்சை போன்றவற்றைப் பின்பற்றுவது சனாதனமாகும். வேதங்கள் நான்கு, உபநிடதங்கள் பத்து, புராணங்கள் பதினெட்டு இவற்றின் காலம் இதுதான் என்று அறுதியிட்டுக் கூற முடியாததால் அதைப் பொதுவாக சனாதன தர்மம் என்று கூறுகிறார்கள். உயிருள்ள ஜீவன்களிடம் கருணை கொள்வது, இயற்கையை நேசிப்பது, சுய தூய்மை, சுய ஒழுக்கம், ஞானம் பெறுவது, குருவை மதிப்பது, தன்னை உணர்வது ஆகியவை சனாதன கோட்பாடுகள் என்று சொல்லப்படுகின்றன. ஆனால், காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சுவாமி வாக்கோ வேறுபடுகிறது. அதாவது பிராமணர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் அடங்கிய நான்கு வர்ண தர்ம அடிப்படைதான் ஸநாதனத்தின் மிக முக்கிய அம்சம் என்கிறார். அதாவது ஆரியர்களால் பிரிக்கப்பட்ட இந்த வர்ணத்தார் அவரவர்க்கு விதிக்கப்பட்ட சாதிக் கட்டுப்பாடு, தீண்டாமை போன்றவற்றை மதித்து பார்ப்பனர்களுக்கு ‘அடங்கி’ வாழ்வதைத்தான் சனாதனமோ, மனு தர்மமோ, வருணாசிரமமோ எல்லாமே வலியுறுத்துகின்றன.

ஆதி மனிதன் இயற்கையை, சூரியனை, ஒளியை, நெருப்பை, நீரை, காற்றை, ஆகாயத்தை, பூமியை மாத்திரமே வணங்கினான். அவனுடன் வாழ்ந்து மடிந்த பெண்ணையோ, ஆணையோ வணங்கி சிறுதெய்வ வழிபாட்டை ஏற்படுத்தினான். யார் வேண்டுமானாலும் பூசைகள் செய்யலாம் என்றிருந்தான். ஆரியர்கள் வருகைக்குப் பிறகு இந்தச் சனாதனம் உள் நுழைந்து இன்னார்தான் கருவறைக்குள் நுழைய வேண்டும் என்றும், யார் யார் எங்கே நின்று வணங்க வேண்டும் என்றும் விதிகள் பிறப்பித்தது. ஆதியில் இருந்து பேசிய மொழியைத் தடை செய்தது. தங்களது மொழிதான் உயர்ந்தது என்று மூளைச் சலவை பண்ணியது. பிறப்பில் உயர்வு, தாழ்வு பார்த்தது.

ஒவ்வொரு சாதியினருக்கும் ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்து முடித்துக் கொண்டு, பவ்யமாக எதிர் கேள்வி கேட்காமல் பார்ப்பனர்கள் சொன்னதற்கு தலையாட்டிவிட்டு வாழ்வதுதான் சனாதன தர்மம் (?) என்றால், அத்தகைய தர்மம் பார்ப்பனர்களின் சுயநலத்துக்கு அல்லாது வேறு எதற்காக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?. ஒரு குறிப்பிட்ட இனத்தை உயர்த்தி, சில குறிப்பிட்ட இனங்களைத் தாழ்த்தி வைப்பதுதான் சனாதனம் என்றால் அத்தகைய ஒன்று நமக்குத் தேவைதானா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அக்காலத்தில் அரசர்களைக்கூடத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தட்சிணைகளைத் தாராளமாகப் பெற்றுக் கொண்டவர்கள், இக்காலத்திலும் பூஜை, புனஸ்காரம், பரிகாரம் என்று இல்லாதவற்றைச் சொல்லி சாமானியர்களிடமிருந்து பணம் பறிப்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவ்வளவு ஏன் நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் நடத்தப்படும் விதம்தான் சனாதன தர்மமா? பெரிய பதவியில் இருப்பவர்களைக்கூடப் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கி வைப்பதுதான் சனாதனம். இதை ஒழிக்கத்தான் வேண்டும்.

பார்ப்பனீயத்தை எதிர்க்க முக்கியக் காரணம் அவர்கள் ஆண்டவனின் அருகில் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு சக மனிதர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதுதான். கண்ணுக்குத் தெரியாத ஒன்றை பூஜித்து வருபவர்கள் கண்ணுக்குத் தெரியும் மனிதரை சாதி ரீதியாகப் பிரிததாள்வதுதான் சனாதனம் என்றால் அதை நான் வெறுக்கிறேன். என் தோழியின் தந்தை அவர்கள் குடியிருக்கும் வீட்டை வாங்க அதன் உரிமையாளரிடம் சென்றிருந்தார். அவர் ஒரு பார்ப்பனர். திண்ணையில் அமர வைத்து தோழியின் தந்தையிடம் நன்றாகவே உரையாடி வீட்டை விற்கச் சம்மதித்துப் பணத்தைப் பெற்றுக் கொண்டார். அதை உறுதிப்படுத்திப் பத்திரமும் எழுதிக் கொடுத்தார். எல்லாம் முடிந்ததும் கிளம்பியவரிடம் சாப்பிட்டுப் போகச் சொல்லியிருக்கிறார். அவர் எவ்வளவோ மறுத்தும் விடாமல் வற்புறுத்தியிருக்கிறார். வேறுவழியின்றி சாப்பிடுவதற்கு கை கழுவிவிட்டு மீண்டும் திண்ணைக்கு வந்தவருக்குக் கீழே வாசலில் அமர வைத்து இலை போட்டிருக்கிறார்கள். அவருக்கு மனசுக்குள் வலித்திருக்கிறது. சாப்பிடுவதாகப் பெயர் பண்ணிவிட்டு அரைகுறையாக இலையை மூடி விட்டார். இதைக் கேட்டதில் இருந்து எந்தவிதத்தில் அந்தப் பார்ப்பனர் உயர்ந்தவர், தோழியின் தந்தை தாழ்ந்தவர் என்கிற கேள்வி என் மனதில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.

என் தாத்தா அவரது சிறுவயதில் அக்ரஹாரத்து வழியே வரும்போது எதிரே வரும் பார்ப்பனப் பெண்கள், “சூத்திரவா வர்றா..” என்று தலையை முக்காடிட்டுக் கொள்வார்களாம். “தூரப் போங்கோ.. தொட்றாதேள்..” என்று பதறுவார்களாம். அந்தச் செய்கையில் சூத்திரர்களைப் பார்ப்பதும், மேலே படுவதும் தீட்டு என்ற துவேஷம்தான் இருந்தது. இவையெல்லாம் சிறு வயதிலேயே எனக்குள் பல கேள்விகளை எழுப்பின.

சில நாட்களுக்கு முன்பு சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது இதில் பேசிய அமைச்சர் உதயநிதி, “இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்கவில்லை. சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள். சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதுதான் சிறந்தது. சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இவற்றை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனமும்” என்று பேசினார். அதற்கு நாடெங்கும் அவருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பரம்ஹம்ஸ் ஆச்சார்யா உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்க்கு பத்துக் கோடி ரூபாய் பரிசை பகிரங்கமாக அறிவித்தார். முற்றும் துறந்த ஒரு சன்னியாசி பத்துக் கோடி ரூபாய் பரிசு தரும்போது அவரது செல்வத்தின் அளவு என்ன?. அது எவ்வாறு அவரிடம் வந்து சேர்ந்தது?. இவ்வாறு பேசியது சட்டவிரோதமானது என்கிற ஆட்சேபனைகள் எதுவுமே ஒன்றிய அரசுக்கு ஏற்படாதது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவை முற்றிலுமாக காவி சாயம் பூசி இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று குறிக்கோளில் இருப்பவர்கள் அவர்கள். மதவெறியைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளுக்கு எதிராக ஒன்றிய அரசு குரல் கொடுக்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

அமைச்சர் உதயநிதியின் பேச்சை பாஜகவினர் நாடு முழுவதும் சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80% இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று அவர் பேசியதாகத் திரித்து விமர்சித்து வருகின்றனர். இது எப்படி இருக்கிறதென்றால் மதுரையில் கூன் பாண்டியன் ஆட்சிக் காலத்தில், எண்ணாயிரம் என்கிற ஊரில் உள்ள சமணர்கள் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாற மறுத்ததால் கழுவில் ஏற்றப்பட்டனர். இது எண்ணாயிரம் சமணர் கழுவேற்றிய நிகழ்வு என்று கூறுவர். இதை எட்டாயிரம் சமணர்களைக் கூன் பாண்டியன் கொன்று குவித்தான் என்று பரவியது. அதேபோல்தான் உதயநிதி ஸ்டாலின் கருத்தும் திரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விளக்கி அதை எல்லாரும் பின்பற்ற வலியுறுத்தி வருகிறார். அதனால் சனாதனம் குறித்த கேள்விகளை அவரை நோக்கி எழுப்புகிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர். துரைசாமி. சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?, சனாதன கொள்கைகளுக்கான உரைகள் ஏதும் உள்ளதா அல்லது செவிவழி தகவல் மட்டும்தானா? சனாதன தர்மத்தை உருவாக்கியவர் அல்லது எழுதியவர் யார்? தமிழ் இலக்கியம் அல்லது திராவிட கலாச்சாரத்தில் சனாதன தர்மம் குறித்து எழுதப்பட்டுள்ளதா அல்லது பேசப்பட்டுள்ளதா? சனாதன தர்மத்தை கிறிஸ்தவர்களோ இஸ்லாமியர்களோ பின்பற்றுகிறார்களா? இந்து என்பது யார்? ஏதேனும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்கிற சொல் இடம் பெற்றுள்ளதா?

1964இல் லக்னோவில் வெளியிடப்பட்ட பெர்சிய மொழி அகராதியில் இந்து என்றால் திருடன், அடிமை, வழிப்பறியாளர் என பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தம் சரியா? ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு இந்துயிசம் பற்றி எதுவும் தெரியாது என்பது உண்மையா? இந்து என்கிற வார்த்தையை உருவாக்கியது யார்? அந்த வார்த்தைக்கான அர்த்தம் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா? உள்ளிட்ட கேள்விகளை முன் வைக்கிறார். இந்தக் கேள்விகள் எல்லாமே அர்த்தபூர்வமாகவும், தர்க்கபூர்வமாகவும் அமைந்திருக்கின்றன. சனாதனத்தைப் பின்பற்றும் எவர் வேண்டுமானாலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கலாம்.

இதில் எத்தனை கேள்விகளுக்கு சனாதனிகள் பதில் சொல்லப் போகிறார்கள்?

பெண்ணுரிமை, எதையும் கேள்வி கேட்கும் உரிமை எதுவுமே இல்லாத சனாதனம் மக்களுக்குத் தேவைதானா என்று யோசியுங்கள். அடிப்படை மனித உரிமைகளுக்குக்கூட அங்கே இடமில்லை. கர்நாடகாவில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையின் மீது தலித்துகளை உருள வைத்து வேண்டுதல் நடத்தும் பழக்கம் காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது. அதை ஆளும் கர்நாடகா அரசு தடை விதித்ததை இந்த ஒன்றிய அரசு எதிர்த்து இருக்கிறது.

எத்தகைய கோட்பாடுகள் இருந்தாலும் அது மக்களின் வாழ்க்கை முறையை முன்னேற்ற உதவ வேண்டுமேயல்லாமல், பல நூறு வருடங்கள் பின்னோக்கி இழுத்து, இருண்ட காலத்தில் தள்ளக் கூடாது. மதவெறுப்பு என்னும் ரத்த வெறி கொண்ட பசித்த புலி சனாதனம் என்கிற பசுவின் முகமூடியை அணிந்துகொண்டு வலம் வருகிறது. நமக்கு சமத்துவமும் சகோதரத்துவமும்தான் மிக முக்கியத் தேவை. சனாதனம் அல்ல.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.