ஓவியம்: சித்ரா ரங்கராஜன்

ஆகா பழங்குடியில் பெண்கள் வருமானம் ஈட்ட வேட்டைக்குச் செல்கிறார்கள். ஆண்கள் குழந்தைகளை பராமரித்துக் கொண்டும் சமைத்துக்கொண்டும் வீட்டில் இருக்கிறார்கள்.  

மத்திய ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள காடுகளை ஆக்கிரமித்துள்ள குழுக்களில் ஆகா பழங்குடியும் ஒன்று. இவர்கள் பல நூறு ஆண்டுகளாக அங்கேயே வாழ்கின்றனர்.  மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் காங்கோவின் ‘முதல் குடிமக்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது. இவர்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 20 ஆயிரம். 

ஒன்பது மாத கர்ப்பிணியான ஆகா பெண்கள் மரம் ஏறி வேட்டையாடுகிறார்கள். குழந்தை பிறந்த  ஒரு மாதத்திற்குள்ளேயே வேட்டையாட ஆயத்தமாகிறார்கள். சில தாய்மார்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பக்கவாட்டில் கட்டிக்கொண்டு விலங்குகளைத் துரத்திக் கொண்டு ஓடுகின்றனர். ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக வேட்டையாடுகிறார்கள். பெண்கள் வேட்டையாடலி நுட்பத்தை எளிதில் புரிந்துகொள்கிறார்கள். பரிணாம, கலாச்சாரக் கோட்பாட்டு நோக்குநிலைகளால் கணிக்கப்படும் பெண் வேட்டைக்கான சூழல்களில் பெரும்பாலானவை ஆகாவின் இந்தக் குழுவில் நிகழ்ந்தன. 

பெண்களின் மீதான ஆண் கருத்தியல், அரசியல் கட்டுப்பாடு குறைவாக இருந்தது. கலாச்சார முன்னுதாரணங்கள் பெண்களுக்கு வேட்டையாடுதல் பற்றிய அறிவையும் அனுபவத்தையும் பெற உதவியது. ஆண்  பெண்ணின்  பாலின பணி ஒதுக்கீட்டைக் கையாளும் பரிணாமம் மற்றும் கலாச்சாரக் கோட்பாடுகள் இரண்டிலும் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு,  ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாள முடிகிறது. 

வலை வேட்டை மிகவும் தனித்துவமான முக்கியமான வேட்டை நுட்பம். வேட்டை இரவில் நடைபெறுகிறது. அவர்கள் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பாதி அளவிலான பகுதியைச் சுற்றி அரை வட்டம் அல்லது வட்டத்தை உருவாக்குகிறார்கள். ஆண்கள் வலையின் மையத்திற்குச் செல்கிறார்கள், பெண்கள் வலையின் பக்கத்திலேயே தங்குகிறார்கள், குழந்தைகள் அவர்கள் விரும்பும் இடத்திற்குச் செல்கிறார்கள். வேட்டையைத் தொடங்குவதற்கு ஓர் ஓசை கொடுக்கப்பட்டவுடன், விலங்குகளைப் பயமுறுத்தும் வகையில் எல்லாரும் ஒன்றாக உரத்த குரலில் கத்திக்கொண்டே அதிக சத்தம் எழுப்புவதற்காகத் தரையில் குத்துவார்கள். ஒரு விலங்கு வலையில் மாட்டிக்கொண்டால், அருகிலுள்ள பெண் அதைச் சமாளித்து, அதன் பின்னங்கால்களுக்குப் பின்னால் பிடித்து, அருகிலுள்ள மரத்தில் அதன் தலையை அடித்து நொறுக்கிறார். பெரிய விலங்காக இருந்தால், மற்ற பெண்கள் அதைச் சமாளிப்பதற்கும் கொல்வதற்கும் உதவுவார்கள். வேட்டையில் சேரும் ஆகா பெண் குழந்தைகளுக்குப் பற்கள் கூர்மைப்படுத்தப்படுகிறது.

ஆகாவைப் பற்றிய தனித்துவமான விஷயம் என்னவென்றால், ஆண் மற்றும் பெண் பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒன்றுக்கொன்று மாறக்கூடியவை. பெண்கள் வேட்டையாடும்போது, ஆண்கள் குழந்தைகளைப் பேணுகிறார்கள்; ஆண்கள் சமைக்கும் போது, அடுத்த முகாமை எங்கு அமைப்பது என்று பெண்கள் முடிவு செய்கிறார்கள். ஆகா சமூகத்தில் பாலினம் உழைப்புப் பிரிவு உள்ளது. உதாரணமாக, பெண்கள் முதன்மை பராமரிப்பாளர்களாக இருக்கின்றனர். இது மிகவும் முக்கியமான, நம் சமூகத்தில் கிட்டத்தட்ட அறியப்படாத தன்மையாகவே உள்ளது.

காடுகளின் மக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஆகா தந்தைகள், 12 மணி நேரம் தங்கள் குழந்தைகளுக்கு எட்டக்கூடிய தூரத்தில் உள்ளனர். அதனால் ஆகா ஆண்கள் ‘உலகின் சிறந்த அப்பாக்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். சுமார் மூன்று மாதங்கள் வரை தந்தையின் உடல்சூட்டிலிலேயே குழந்தைகள் வளர்கின்றனர். ஆச்சர்யமூட்டும் வகையில் தாய் அருகில் இல்லாத நேரத்தில் தந்தைகளின் மார்பில் குழந்தைகள் தங்கள் வாயை வைத்து உறிஞ்சுகின்றன. தந்தைகளும் தங்கள் முலைக்காம்புகளை தங்கள் அழும் குழந்தைகளுக்கு உறிஞ்சுவதற்கும், ஆற்றுவதற்கும் பாசத்துடன் வழங்குகிறார்கள். தங்கள் கைக்குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஆண்கள் குழுவாக உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள்.

தந்தைகள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு தொடுதல் மற்றும் அரவணைப்பு போன்ற நிறைய நேர்மறையான பங்களிப்புகளை வழங்குகின்றனர். ஆகாவைப் பொறுத்தவரை, அவர்களின் குழந்தைகள் வாழ்க்கையின் மதிப்பு மிக்கவர்கள். குழந்தையை ஒரு சுமை என்று பார்க்காத ஓர் இனம். குழந்தைகள் சமூகத்தின் ஆற்றலாகவும் உயிர் சக்தியாகவும் பார்க்கும் ஒரு சமூகம்.

ஓர் ஆண் பெண்கள் மீது வன்முறையை அரிதாகவே பயன்படுத்தும் சில சமூகங்களில் இதுவும் ஒன்று. பெண்ணிய சொர்க்கமாகத் தோன்றினாலும் வழக்கம் போல் பழங்குடியினரின் முக்கியப் பதவிகள் ஆண்களுக்குதான் செல்கின்றன.

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.