பிறப்பால் எல்லா ஜீவராசியும் ஒன்றே. இந்த பூமி தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பது போல இயற்கையின் போக்கில் நடக்கும் மிக மிக எதார்த்தச் செயல்தானே உயிர்களின் பிறப்பும்.

நம் ஒவ்வொருவருடைய இந்தப் பிறப்பும், நாம் விரும்பி தேர்ந்தெடுப்பது இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு மட்டும் நமக்குக் கிட்டியிருந்தால் நம் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் என்பதே இல்லாமல் போயிருக்குமோ என்னவோ…

எனது இந்தக் கூற்றும்கூட ஒரு விதத்தில் பொருளற்றதுதான். ஏனென்றால், பிறப்பு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி நிகழ்வதுதான். இங்கே ஜாதி, மத, இன, நிற, உயிர் பேதங்கள் எல்லாமே மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட கற்பிதங்கள்தான்.

எனவே, உயர்ந்த குலப் பிறப்பு என்பதை எண்ணி இங்கே பெருமை பீற்றிக்கொள்ள எதுவுமே இல்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் சுய சாதிப் பெருமையை மூளை முழுவதும் தூக்கிச் சுமப்பதைப் பார்க்கும்போது அது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. எல்லாத் தளைகளையும் உடைத்து, கல்வி பெற்று பெண்கள் மேலே வந்தது இதற்குத்தானா?

ஜாதி மத பேதங்கள் எல்லாமே ஓர் ஆணாதிக்க மனநிலை எனும்போது, பெண்களும்கூட தங்கள் ஜாதியை தங்களுடைய பெயருக்குப் பின் ஒட்டவைத்துக் கொள்வதைப் பார்க்கும்போது முன்பெல்லாம் நகைப்பாக இருக்கும். இப்பொழுது சற்றே பயமாக இருக்கிறது. நாம் எந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

மழலையாகப் பிறப்பெடுத்து வளர வளர, சுயமாகச் சிந்திக்கத் தொடங்கியதுமே ஒவ்வொரு மனிதப் பிறவியும் கேள்வி கேட்டுத்தான் தங்களை அறிவை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

மனிதரால் தோற்றுவிக்கப்பட்ட, அறிவியலுக்குப் புறம்பான பலவிதக் கற்பிதங்களுக்கு எதிராகக் கேள்வி கேட்கும் பொழுது, முளைத்து வரும் செடியை முளையிலேயே கிள்ளுவது போல, இப்படி ஆராய்ந்து கேள்வி கேட்கும் அறிவுத் திறனை ஆன்மிகம், பாவ புண்ணியம் என்கிற பெயரால் முளையிலேயே களைந்து எறிவதுதான் ஆகச்சிறந்த உளவியல் தந்திரம் என்று சொல்லுவேன்.

அதனாலேயே நாம் எதையும் கேள்வி கேட்கத் துணிவதே இல்லை. ‘முன்னோர் ஒன்றும் முட்டாள் இல்லை’ எனும் கூற்றை நம்பி, முன்பு எப்பொழுதோ அவரவர் வாழ்ந்த காலகட்டத்துக்கு, நன்மை தீமை என அவரவர் நம்பி பின்பற்றிய கற்பிதங்களை, சமகாலத்திலும் கேள்வி கேட்காமல் நாம் தொடர முயல்கிறோம். ஆனால், பின்பற்றவே சாத்தியமில்லாமல் போய், விட்டு ஒழித்த பல விஷயங்களைச் சாமர்த்தியமாக மறந்து போனது போல நடித்துக்கொண்டிருக்கிறோம்.

நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வரும் பல விஷயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் கேள்வி கேட்கத் தொடங்கினால்தான், நமக்குத் தெளிவு கிடைக்கும். அதன் பிறகு எதை எல்லாம் தொடர வேண்டும் எதை எதையெல்லாம் கைவிட வேண்டும் என்று நமக்கு விளங்கிவிடும்!

இப்படியான சில பழக்க வழக்க சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றி பார்க்கலாம்.

சென்ற தலைமுறை வரை மண் இட்டுக் கொள்ளுதல் என்றொரு பழக்கம் பார்ப்பனர்களிடம் இருந்தது. இது பற்றி என் குடும்பப் பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைக் கேட்கவே ஒரு மாதிரியாகத்தான் இருக்கும், இருந்தாலும் சொல்கிறேன்.

ஒவ்வொரு முறை இயற்கை உபாதைகளைக் கழித்த பிறகும் ஒரு குழி தோண்டி அதில் நீர் நிரப்பி அந்த நீரில் சுத்தம் செய்து கொண்டுதான் வீட்டிற்குள் வரவேண்டும்.

கிராமங்களில் இருந்தவரை இதைப் பின்பற்றுவதில் எந்த பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால் நகரத்திற்குப் புலம்பெயர்ந்து நவீனக் கழிவறைகளை உபயோகிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட பிறகு, இந்த வழக்கத்தைப் பின்பற்றுவதில் சிக்கல் உண்டான பொழுது, அதை விடாப்பிடியாக நடைமுறை படுத்த ஒரு புது யுக்தியை நம் முன்னோர் கண்டுபிடித்தனர்.

கழிவறையில் உபயோகிக்கும் வாளியில் மணலைப் போட்டு வைப்பது, அவ்வளவுதான் பிரச்சினை தீர்ந்தது!

அதன் பிறகு காலப்போக்கில் நடைமுறைச் சிக்கல்களால் அதுவும் வழக்கொழிந்து போய்விட்டது.

“இந்த வழக்கம் எதற்காக?” எனப் பலரிடம் கேட்டிருக்கிறேன்.

எந்த ஒரு கூட்டல் குறைதலும் இல்லாமல், தட்டையாக, “இது சரீரச் சுத்தி” என்கிற ஒரே பதில் மட்டுமே எனக்குக் கிடைத்தது. அதற்குமேல் யாரிடமும் எனக்கு பதில் கிடைக்கவில்லை, ஒன்று இதை பற்றி விளக்க யாரும் விரும்பவில்லை, அல்லது சொல்ல இயலவில்லை, அல்லது அவர்களுக்கே காரணம் தெரிந்திருக்கவில்லை.

“இப்படி மண்ணைக் கொண்டு நம் அந்தரங்க உறுப்புகளைச் சுத்தம் செய்யும்போது அது எப்படி ஒரு ஆரோக்கியமான விஷயமாக எடுத்துகொள்ள முடியும்? இதுவே ஒரு சுகாதாரமற்ற நடைமுறை இல்லையா?” எனக் கேட்டால், “நம் முன்னோர்கள் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும், இதற்குமேல் கேள்வி கேட்காதே” எனும் வழக்கமான பூசி மெழுகல்தான் விடையாகக் கிடைத்தது.

இது எதற்காக எனப் பலநாள் யோசித்திருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரை எழுத மீண்டும் மீண்டும் மநுஸ்மிருதியைப் படிக்க நேர்ந்த போது இதற்கான விடையும் அதிலேயே கிடைத்தது.

மநுதர்ம சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் பொருள்களின் சுத்தி என்கிற வகையில் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

தொப்புளுக்கு மேலுள்ள உறுப்புகள் சுத்தமானவை. தொப்புளுக்குக் கீழுள்ள உறுப்புகள் சுத்தமற்றவை. இந்திரிய துவாரங்களிலிருந்து வெளியேறும் அழுக்குகள் அசுத்தமானவை. (5/132)

வியர்வை, வீரியம், இரத்தம்,கொழுப்பு, மூத்திரம், மலம், காதிலுள்ள அழுக்கு, கபம், கண்ணீர், கண்களில் தோன்றும் அழுக்கு, உடலிலிருந்து வெளிப்படும் கெட்ட நீர் முதலான பன்னிரண்டும் மனிதனுடைய உடல் மலங்களாகும்.(5/135)

மல மூத்திரங்கள் சேருமிடத்தை மண்ணாலும் நீராலும் சுத்தப்படுத்த வேண்டும். மேலும் உடலிலிருந்து வெளிப்படும் பன்னிரண்டு மலங்களையும் அவற்றின் வாடை போகுமளவும் மண்ணாலும் தண்ணீராலும் சுத்தம் செய்ய வேண்டும். (5/134)

மலஜலம் கழித்த பின்னர் பால் குறியில் நெல்லிக்காயளவு சிறிது மண்ணும், கழிவாயில் அதைப்போல மூன்று மடங்கு மண்ணும், இடது கைக்குப் பன்மடங்கு மண்ணும், இரண்டு கைகளுக்கும் ஏழு மடங்கு மண்ணும் போட்டுத் தேய்த்து நீரால் அலம்புக. (5/136)

இந்தச் சுத்தி முறைகள் கிருஹஸ்தனுக்குச் சொல்லப்பட்டவை. பிரம்மச்சாரிகள் இதையே இரண்டு மடங்காகவும், வானப்பிரஸ்தர்கள் மூன்று மடங்காகவும், சன்னியாசிகள் நான்கு மடங்காகவும் செய்ய வேண்டும்.(5/137)

இதெல்லாம் ஆண்களுக்குச் சொல்லப்பட்டிருந்தாலும், பெண்களும் இந்த மண் இட்டுக்கொள்ளும் பழக்கத்தை கடைப்பிடித்தனர். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு, இதைப் பெண்கள் மட்டுமே தொடர்ந்தனர் என்றும் கூடச் சொல்லலாம். ஆக, காரணம் தெரிந்தோ தெரியாமலோ கண்களை மூடிக்கொண்டு மநுதர்மம் சொன்னதை எல்லோரும் கடைப்பிடித்தனர், கடைப்பிடிக்கின்றனர்.

இதுபோன்ற பல பழக்கவழக்கங்களையும் எல்லா நேரமும் எல்லாக் காலத்திலும் சொன்னது சொன்னபடி தொடருவது சாத்தியமில்லை அல்லவா? அதனாலேயே காலத்துக்குத் தகுந்தபடி இதையெல்லாம் மாற்றி அமைத்துக் கொள்ளவும் இங்கே யாரும் தயங்கியதில்லை.

இன்றளவும் இதைத் தொடர்ந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறையினர் ஒருவருக்கு கூட, சிறுகச் சிறுக நடந்த இந்த மாற்றங்களைப் பற்றி தெளிவான புரிதல் இல்லவே இல்லை என்பது எனது கருத்து.

உதாரணமாக, சித்தியின் பிள்ளைகளும், பெரியம்மாவின் பிள்ளைகளும் சகோதர உறவுக்குள் வந்துவிடுவார்கள் என்பது நாம் அறிந்ததே! அதே போல அத்தை பிள்ளைகள், தாய்மாமன் பிள்ளைகள் திருமண உறவுமுறைக்குள் வருகிறார்கள் என்பதையும், இதில் அதிகளவில் திருமணங்கள் நடப்பதையும் நாம் மறுக்க இயலாது.

ஆக மநுதர்ம சாஸ்திரத்தின்படி, அத்தை மகள், பெரியம்மா மகள், சிறிய தாயின் மகள், கூடப் பிறந்த சகோதரியின் மகள், தாய்மாமன் மகள் முதலானோரை அறிவாளியானவன் மணம் செய்துகொள்ளக் கூடாது. அவ்வாறு செய்துகொள்பவன் நரகத்தில் வீழ்வான். (11/172)

அதாவது மநு சொல்வது போலப் பார்த்தால் தாய்மாமன் மக்களும், அத்தை பெற்ற மக்களும் கூட பங்காளி உறவில், அதாவது சகோதர உறவுக்குள்தான் வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், நெருங்கிய உறவுமுறைக்குள் திருமணம் செய்வது தவறு எனத் திரும்பத் திரும்ப அறிவியல் விளக்கங்கள் கொடுத்தாலும், இதைக் கேட்கத் தயாராக இல்லாமல், இன்றுவரை கூட இந்த உறவுமுறை திருமணங்கள் நடந்துகொண்டே இருக்கின்றனவே! ஏன்?

சில சடங்குகள் இரண்டு முறை செய்யப்படுகின்றன, அது ஏன் என்கிற கேள்வியும் எனக்குள் இருந்தது. எடுத்துக்காட்டாக நிச்சயதார்த்தம் மற்றும் திரண்டகுளி போன்ற சடங்குகளை எடுத்துக் கொள்ளலாம்.

முன்பெல்லாம், பெண்கள் பூப்படைவதற்கு முன்பாகவே திருமணம் செய்துவிடுவார்கள், பெண் பூப்பெய்தும் காலம் வரை பிறந்த வீட்டில்தான் இருப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. அந்தக் காலத்தில், திரண்டகுளி எனும் சடங்கு ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்பட்டிருக்கும். பெண்வீட்டார் இந்தச் சடங்கைச் செய்து, சீருடன் பெண்களைப் புகுந்தவீட்டுக்கு அழைத்துப் போவார்கள்.

இந்த நடைமுறை மாறியபிறகு, இப்படி ஒரு சடங்கை எப்பொழுது செய்வது என ஒரு பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். இறுதியில், இதை இரண்டுமுறை செய்துவிடலாம் என்ற ஒரு தீர்மானத்துக்கு மக்கள் வந்திருக்கக் கூடும்.

அதாவது, பெண்கள் பூப்படையும்போது முதலில் ஒரு முறை இந்தச் சடங்கைச் செய்கிறார்கள். திருமணம் முடிந்து ஒரு பெண் புகுந்தவீடு சென்றபிறகு முதல்முறை மாதவிடாய் ஏற்படும்போது, மீண்டும் அவளைப் பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு இரண்டாவது முறையாக இந்தச் சடங்கைச் செய்து, அவளைப் புகுந்தவீட்டில் அழைத்துவந்து விடுகிறார்கள். இங்கே எனது கேள்வி என்னவென்றால், இந்த அதிகப்படியான சடங்குகள், சுமைகள் எல்லாம் தேவைதானா?

அடுத்ததாக நிச்சயதார்த்தத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

Representation Image only, https://neelajothidam.blogspot.com/2013/03/blog-post_6297.html

ஜாதகங்கள் பொருந்திவந்து, பெண் பார்த்து, ஆண் பெண் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் பிடித்துப்போய், குடும்பங்கள் மனமொத்து திருமணம் முடிவு செய்தவுடன், முதலில் ஒரு நிச்சயதார்த்தம் செய்கிறார்கள். முக்கியமாகப் பெண் மற்றும் பிள்ளையின் சார்பில் அவரவர் தகப்பனாரோ, அல்லது குடும்பத்து மூத்த ஆணோ லக்கினப் பத்திரிகை எழுதிக் கையொப்பமிட்டு, தாம்பூலம் மாற்றி இந்தச் சடங்கு/விழா செய்யப்படுகிறது.

நிறைய செலவு செய்து, உறவினர்களை அழைத்து, மண்டபம் வைத்து விமரிசையாக நிச்சயதார்த்தம் செய்வதும் உண்டு. இரு வீட்டார்கள் மட்டும் சேர்ந்து எளிமையான முறையில் லக்கினப் பத்திரிகை எழுதி முடித்துக் கொள்வதும் உண்டு.

திருமணத்துக்கு முந்தைய தினத்தில் இரண்டாவதாக ஒரு நிச்சயதார்த்தமும் செய்யப்படுகிறது.

இந்த விழா, ஏன் இரண்டுமுறை செய்யப்படுகிறது?

இதற்கான என் அனுமானத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

வேறு யாருக்காவது இதற்கான பதில் தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள், அனைவரும் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்!

தொடர்ந்து எழுதுவேன்.

  • உள்ளிருந்து ஒரு குரல்