1950களில் மும்பையில் இருக்கும் ஆய்வுக் கூடத்திற்குள் ஒரு ராணுவ அதிகாரி வந்து, “எனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது” என்று கேட்ட கேள்விக்கு, “சார்‌ இந்த முறை கண்டிப்பா உங்களுக்குப் பையன்தான்” என்று பதில் அந்த ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுபவர்களிடம் இருந்து வருகிறது. அவர் யார்? அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் பிறகு பார்ப்போம். இப்போது 2024இல் இதே கேள்வியை இந்தியாவிலிருக்கும் ஒரு மருத்துவரிடம் கேட்டால், இவ்வளவு சர்வசாதாரணமாக அவரால் பதில் சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடாது. இதைத்தான் கருத்தரிப்பு மற்றும் முன் பிறப்பு நோயறிதல் நுட்பங்கள் சட்டம் (PCPNDT – Pre conception and Pre natal diagnosis technique act) கூறுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள முயற்சிப்பதும், மருத்துவராக இருப்பின் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைப் பெற்றவர்களுக்கோ மற்றவர்களுக்கோ தெரிவிப்பதும் தண்டனைக்குரிய குற்றம். சமீபத்தில்கூட‌ இந்த சர்ச்சையில் யூடியூப் பிரபலம் ஒருவர் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.‌ இந்தச் சட்டம் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான். வெளிநாடுகளில் இது போன்று எந்தச் சட்டமும் நடைமுறையில் இல்லை.

அதென்ன பாரபட்சம் என்று கேட்பவர்களுக்கு, முதலில் இந்தச் சட்டம் எதற்காக இயற்றப்பட்டது, எப்போது இயற்றப்பட்டது, இதன் நோக்கம் என்ன போன்றவற்றைப் பற்றித் தெரிந்து‌ கொள்வது அவசியம். இந்தச் சட்டம் 1994இல் இயற்றப்பட்டு, 2003இல் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு வந்தது.‌ இந்தச் சட்டம் கருவில் இருக்கும் குழந்தைகளைப் பரிசோதிக்கும் மருத்துவர்களுக்கும் மரபணு ஆலோசகர்களுக்குமான நெறிமுறைகளை விளக்குகிறது.‌ இதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றுதான் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை யாருக்கும் தெரியப்படுத்தக் கூடாது என்பது. பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.

என்னதான் பெண் சிசுக் கொலைகள் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் இந்தச் சட்டம் ஏன் 1994இல் இயற்றப்பட்டது என்பது ஒரு மாபெரும் வரலாற்று கண்டுபிடிப்பின் விளைவு என்றே சொல்ல வேண்டும். 1956இல் இயன் டொனால்ட் (Ian Donald) முதன்முதலில் ஊடுகதிர் (ultrasound scan) மூலம் கருவிலிருக்கும் குழந்தையைப் பரிசோதிக்கும் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்தச் சிகிச்சை முறைதான் இன்றளவும் கருவில் இருக்கும் குழந்தையைப் பரிசோதிக்கும் பிரதான சிகிச்சை முறையாக இருக்கிறது. ஆனால் இது‌ கண்டுபிடிக்கப்பட்டு கிட்டதட்ட இருபது ஆண்டுகள் கழித்தே அதாவது எண்பதுகளில்தான் இந்த ஊடுகதிர் சிகிச்சை முறை இந்தியாவிற்கு அறிமுகமானது.

குழந்தையின் ஆரோக்கியத்தைக் கவனிப்பதற்காக உருவாக்கப்பட்ட கருவி என்றாலும் இது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்து கொள்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அதுவும் குறிப்பாக இந்தக் கருவி இந்தியாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ஆண், பெண் விகிதத்தில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டது. பெண்களின் சராசரி எண்ணிக்கை ஆண்களின் சராசரி எண்ணிக்கையைவிடக் குறைவாக இருந்தது‌. இதற்குக் காரணம் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை ஊடுகதிர் கருவி உதவியோடு முன்கூட்டியே தெரிந்து கொண்டு, பெண் குழந்தையாக இருப்பின் கருக்கலைப்பு செய்யும் வழக்கம் நாடு முழுவதும் பரவலாக‌ இருந்ததுதான் என்பது கண்டறியப்பட்டது.

பெண் சிசுக் கொலைகளைச் சமூகரீதியாக அணுக வேண்டியது மிக முக்கியமான ஒன்று. பெண் குழந்தை பிறந்ததிலிருந்து அவள் பராமரிப்பிற்கும் திருமணத்திற்கும் ஆகும் செலவே அப்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளைச் சமூகம் ஒரு சுமையாகக் கருதியதற்குக் காரணம். பெண் குழந்தை பூப்படைந்ததும் நிகழக் கூடிய சடங்குகளுக்கும் அவள் திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்க வேண்டிய வரதட்சணைக்கும் தேவைப்படும் பொருளாதார வசதி போதிய அளவு இல்லாததுதான் பெண் குழந்தைகளைச் சமூகம் நிராகரித்ததற்கான முக்கியக் காரணம்.

இதனைத் தடுப்பதற்காக 1961இல் இயற்றப்பட்டது வரதட்சணை தடைச் சட்டம் (Dowry prohibition act). இந்தச் சட்டத்தின் கீழ் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். ஆனால், வரதட்சணை வாங்கும் வழக்கம் விட்டொழிந்ததா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான். இன்றும் பல விதத்தில் வரதட்சணை வழக்கம் நம்மிடையே நாசுக்காக வேறோர் உருவம் கொண்டு வலம் வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். “நாங்க எதும் எதிர்ப்பார்க்கல. உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ செய்ங்க” என்பதும்கூட வரதட்சணைக்கான மறைமுக உரையாடல்தான். இதில் மிக கவலைக்கிடமானது என்னவென்றால் வரதட்சணை இப்போது ஒரு கெளரவமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வளவு நகைப்போட்டு பெண்ணைக் கட்டிக் கொடுத்துள்ளேன் என்பது பெருமையாகக் கருதப்படுகிறது. வரதட்சணைத் தடைச் சட்டம் வரதட்சணை வாங்குவதைக் குறைத்ததே தவிர, அதை முழுமையாக அழிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நடந்த பெண் சிசுக் கொலைகளும், கருக்கலைப்புகளும் நாட்டின் பல்வேறு வளர்ச்சியை மறைமுகமாகவும் நேரடியாகவும் பாதித்தது. அதுவும் மகப்பேறு சிகிச்சை முறைகளின் வரப்பிரசாதமாகக் கருதப்படும் ஊடுகதிர் கருவியே இதற்குக் காரணமாக இருந்ததுதான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவற்றைத் தடுக்க கொண்டு வரப்பட்டதுதான் கருத்தரிப்பு மற்றும் முன் பிறப்பு நோயறிதல் நுட்பங்கள் சட்டம். ஊடுகதிர் கருவி வைத்திருக்கும் மருத்துவமனைகளோ, சுகாதார நிலையங்களோ, மரபணு ஆலோசனை மையங்களோ இந்தச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்திருக்க வேண்டும். இதன்படி பதிவு செய்யாத நபருக்கோ, மருத்துவமனைகளுக்கோ ஊடுகதிர் கருவியை விற்பது தண்டனைக்குரிய குற்றம்.

இது தவிர மரபணு ஆலோசனை மையங்களுக்கென்றே தனி நெறிமுறைகளும் உண்டு. கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் மரபணுக் குறைபாடு இருப்பது தெரியவந்தாலோ அல்லது சந்தேகத்தின் பெயரிலோ மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகளும் சிகிச்சைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க‌ வேண்டும். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்பவர்கள் எக்காரணம் கொண்டும் இந்தக் குழந்தைதான் வேண்டும் என்று பாலினத்தின் அடிப்படையில் எந்தத் தனிப்பட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளக் கூடாது.

மரபணு ஆலோசனைக்காக வருபவர்களிடம் அந்தச் சிகிச்சை முறை மற்றும் விளைவுகளைப் பற்றிய அனைத்தையும், மரபணு ஆலோசகர் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். குழந்தையின் பாலினத்தை அறியக்கூடிய சிகிச்சை முறைகளை எந்த ஒரு மரபணு ஆலோசனை மையமும் செய்யக் கூடாது. இதற்கெல்லாம் மேலாக மரபணு ஆலோசகராக இருப்பவர் தகுந்த தகுதியும் அரசு அங்கீகாரம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இத்தனை கட்டுப்பாடுகளைக் கொண்டதுதான் கருத்தரிப்பு மற்றும் முன் பிறப்பு நோயறிதல் நுட்பங்கள் சட்டம். இதனால் ஊடுகதிர் கருவியின் அநாவசிய விற்பனை குறைந்தது. ஊடுகதிர் சிகிச்சை மூலம் குழந்தையின் பாலினம் அறிவதும் கணிசமாகக் குறைந்தது. அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே ஊடுகதிர் கருவியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் சட்டவிரோதமாக நடைபெற்ற கருக்கலைப்புகள் தடுக்கப்பட்டன. இந்தச் சட்டம் 2011இல் ஒருமுறை திருத்தப்பட்டு மேலும் கண்டிப்பான விதிகளை நடைமுறைப்படுத்தியது.

Congenital adrenal hyperplasia போன்ற நோய்களுக்கான சிகிச்சை பாலினம் சார்ந்து மாறுபடும் என்பதால் மருத்துவர்களே கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைப் பரிசோதிப்பதைப் பரிந்துரைப்பார்கள்.‌ இது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறையும்கூட.

சரி, இந்தச் சட்டத்தின் நோக்கமும் வரலாறும் தெரிந்த பிறகு, இப்போது குழந்தையின் பாலினத்தை ஆர்வத்தின் காரணமாக தெரிந்து கொள்வது சரியா, தவறா என்னும் விவாதத்திற்கு வருவோம். இந்தியாவில்தான் இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கிறதே தவிர மேலை நாடுகளில் இது போன்ற சட்டங்கள் வழக்கத்தில் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வெளிநாடுகளில் பரிசோதனை செய்து கொண்டு ஆர்வத்தின் பால் அல்லது ஆசையின் பால் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்து கொண்டு அந்தக் குழந்தையை ஆரோக்கியமாகப் பெற்றுக் கொள்வது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் இந்தியாவில் இப்படி ஒரு சட்டம் அமலில் இருக்கையில் இது போன்ற செயல்கள் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்படாது‌. எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதன் நோக்கம் மிக அவசியம். நோக்கம் சரியாக இருப்பின் சில செயல்களை மனதளவில் ஏற்றுக் கொள்ளலாம். ஆணோ பெண்ணோ வளர்ப்பில்தான் இருக்கிறது‌.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.