“இஞ்ஜின்ல கரண்டு இல்லையாம். அதான் வண்டி நிக்குது” என்று சொல்ல வேண்டிய கடனுக்கு ஒவ்வொரு பெட்டியாகச் சொல்லிவிட்டு‌ச் சென்ற இளைஞனின் வார்த்தைகள் பயணிகளுக்குக் கொஞ்சம் ஆறுதலைத் தந்தன.

“இஞ்ஜின்ல பிரச்னைன்னு தெரியாமலா வண்டிய எடுத்தாங்க? நல்லா இருக்குதே கத! ரயில்வேயோட அஜாக்கிரதையால நம்மெல்லாம் இப்படி நடுவழியில நிக்கணும் என்ன தலையெழுத்தா?”

“எங்களுக்கு எதுவும் இன்ஃபர்மேசன் வரல சார். வந்ததும் முத வேலையா கண்டிப்பா சொல்றோம். ப்ளீஸ் எல்லாரும் கொஞ்சம் அவங்கவங்க கம்பார்ட்மெண்ட்ல போய் உக்காருங்க.”

“நான் யார் தெரியுமா? எங்க மாப்ளதான் கோட்டைல எல்லாம். ஒரு போன் அடிச்சா , நீங்க எல்லாம் அவ்வளவுதான்” என்று ஒருவர் பதவியில் இருக்கும் தன் உறவினர் பெயரை வைத்து மிரட்டியதும் நடுங்குவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக எந்தச் சலனமுமின்றி, “சார், நீங்க யாரா இருந்தாலும் இதுதான் சார் பதில்” என்றார் அந்த இளைஞர்.

”ஆமா சார், ஒரு அக்கௌண்டபிலிட்டியே இல்ல இந்த ரயில்வேல வேல பாக்குறவங்களுக்கு. டீட்டியார கெஞ்சிக் கூத்தாடி ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டா அவர் பின்னாடி நாயா பேயா அலஞ்சு காசு கீச கொடுத்து சீட்டு மாத்தி அப்பதான் அக்கடான்னு படுத்தா, அதுக்குள்ள மதுரைல ஏறுறவன் இது என் சீட்டு, எந்திரிங்கன்னு நடு சாமத்துல எழுப்புறான். அப்ப வர்ர டீட்டிக்கு அதுக்கு முன்னாடி வந்தவர் சீட்டு மாத்தித் தந்தது எதுவும் தெரிய மாட்டேங்குது. அப்புறம் எதுக்கு இடத்த மாத்தி குடுக்குறாங்க?” என்று கொதித்தார் ஆர்.ஏ.சி சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி.

“அத விடுங்க சார். இப்படி ஒரு பிரச்னைன்னு முதல்லயே சொல்லியிருந்தா அடிச்சிப் பிடிச்சு இந்த மழைல டிரைன புடிக்க ஸ்டேஷனுக்கு வந்துருக்க மாட்டோம்ல” என்றார் ஒரு பெண்மணி.

“திருநெல்வேலில இருந்து வேற இஞ்சின் வருதாம். அது வந்ததும் வண்டிய எடுத்துருவாங்களாம்.”

“ஏண்டாப்பா, ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்றேளே? ஒரு மணிக்கு முன்ன  ஒரு பையன், டிரெயினுக்கு அடியில தண்ணி கிடக்குது அதான் வண்டி போகலைன்னு கதிகலங்க வச்சான். நீங்க என்னடான்னா இப்படிச் சொல்றேள். நாங்க எதைத்தான் நம்புறது? எதுதான் உண்மை?” என்று கோபத்தில் ஒரு குரல் கேட்டது.

“எங்களுக்குத் தெரிஞ்சது சொல்றோம் சாமி அவ்வளவுதான். எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருந்தா நல்லா இருக்கும்.”

“எப்படிப்பா அமைதியா இருக்குறது? திருநெல்வேலில போய்ச் சாப்பிட்டுக்கலாம்னு இருந்தோம். போற போக்கப் பாத்தா இங்கயே எப்ப வண்டி எடுப்பாங்கன்னு தெரியலயே… பிள்ள குட்டியெல்லாம் பசில வாடுதேப்பா. எப்ப வண்டி கிளம்பும்னு மட்டும் கொஞ்சம் கேட்டுச் சொல்லுப்பா உனக்குப் புண்ணியமாப் போகும்!”

இளைஞன் சூர்யா தர்மசங்கடமான நிலையில் நெளிந்தான். அதுவரை வண்டியைப் பற்றிக் கவலைப்பட்டவர்கள் கவனம் இப்போது உணவின் மீது திரும்பியது.

அந்த நல்ல மனசுக்காரனுக்கு உதவி அபிநயாவின் உருவில் கிடைத்தது. தன் கம்பெனியில் மேனேஜர் பதவியில் இருந்து பலரைச் சமாளித்துப் பழகியவள் தைரியமாகத் தன்னுடைய விடை காணும் மனப்பான்மையை அந்தச் சூழலில் அவிழ்த்து விட்டாள்.

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா ப்ளீஸ். நீங்க எல்லாரும் ஒரு விஷயத்த மறந்துட்டுப் பேசுறீங்க. அவரும் நம்மள மாதிரி நம்மகூட வண்டில மாட்டிக்கிட்டு இருக்கிறவருதான். அவரால முடிஞ்ச உதவிய செய்யணும்னு பாக்குறாரு. அவர் கிட்ட ஏன் உங்க கோவத்த கொட்டுறீங்க?”

அவளுக்கு ஆதரவாகச் சில குரல்கள் எழுந்தன.

“பாவம் அந்தப் பையனும் இன்னா பண்ணும். டேசனுலயும் ஒண்ணும் சொல்ல மாட்டேனுங்கிறாங்க. ஏதோ அதுக்குத் தெரிஞ்சத சொல்லிட்டுப் போவுது. அது கைல நம்ப கோவத்த காட்டினாக்கா சரிப்படுமா? ஆனா சோத்துக்கு இன்னா பண்றது? நாங்களும் அந்தம்மா கணக்காதான் துண்ணாம காத்துக் கிடக்கோம்” என்று ஒரு நடுத்தர வயது பெண்மணி சொல்லவும்,  சற்றுத் தணிந்த குரல்களில் மீண்டும் பரபரப்பு.

“என் கிட்ட கொஞ்சம் இட்லி, சாம்பார் இருக்கு, சப்பாத்தி குருமா இருக்கு, குழந்தை வச்சிருக்கிறவங்க, வயசானவங்க வந்து வாங்கிக்கோங்க” என்றாள் அபிநயா.

சூர்யா அவளை நன்றியுடன் பார்த்தான். அவள் செய்யும் இந்தச் சிறு செயல் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்று அப்போது அவளுக்குத் தெரியாது.

“அது உனக்குன்னு கொண்டு வந்திருப்பியேம்மா” என்று அவர் சற்றுத் தயங்கினார்.

டிபன் பாக்ஸை அவர் கையில் கொடுத்தாள். அதைக் கவனித்த அவள் இருக்கைக்கு அருகில் இருந்த ஈவ்லின், “அக்கா, என்கிட்ட இட்லி இருக்கு. அதையும் குடுங்க” என்றாள்.

குழந்தைகளும் வயதானவர்களும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார்கள்.

தன் மகளுக்கு ஊட்டியது போக தனக்காகக் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸில் இருந்த தோசையை மற்றவர்ளுக்குக் கொடுக்க எழுந்த இசக்கியைத் தடுத்து, “ம்ஹும். அத நீங்க சாப்பிடுங்க இசக்கி, அப்புறம் நாளைக்கு எங்க அண்ணனுக்கு யார் பதில் சொல்றது?”

என்று மறுத்து அவள் வயிற்றை ஒரு பார்வை பார்த்து அதற்குள் இருக்கும் குழந்தைக்கும் உணவளிக்க அவள் மறக்கக் கூடாது என்று நினைவுப்படுத்தி, அவளைச் சாப்பிட வைத்தாள்.

ஒரு மணிநேரத்தில் அவர்கள் எல்லாரும் நட்பாகியிருந்தார்கள்.

தான் கொண்டு வந்திருந்த கறிச்சோறு பொட்டலத்தை வைத்துவிட்டுப் போய், தன் இடத்தில் அமர்ந்த ஆயிஷாவிடமும், சற்றுக் களைப்பாக அமர்ந்திருந்த உமா அக்காவிடமும்  வாழைப் பழங்களை நீட்டினாள். அவர்கள் மறுத்தும் வற்புறுத்திச் சாப்பிடக் கொடுத்தாள்.

தன் பெரியம்மா வீட்டுக்கு என்று அம்மா கொடுத்துவிட்ட வாழைப்பழங்களைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு பட்டினி கிடக்க  எத்தணித்தவர்களுக்குக் கொடுத்தாள். பெரியவர்களும் முடிந்த வரை பிறரிடம் பகிர்ந்து சாப்பிட்டார்கள், ஒருவரைத் தவிர!

அவளும் இரண்டைச் சாப்பிட்டுவிட்டு, அவர்கள் பெட்டியில் ஓரளவுக்குச் சமாளித்து விட்டதை உணர்ந்து, “சூர்யா, வாங்க மத்த பெட்டில இருக்கிறவங்களுக்குத் தேவைப்படும். பசில தான் பிரச்னை பண்ணுவாங்க. முடிஞ்ச வரை சமாளிக்கலாம்” என்றாள் அபிநயா.

அவன் நெடுநேரமாகியும் வராததால் தேடி வந்த அவன் நண்பன், இங்கு நடந்தவற்றைக் கவனித்துவிட்டு சில இளைஞர்களையும் பெண்களையும் ஒரு குழுவாக அமைத்து,  உணவுப் பிரச்னையைத் தற்காலிகமாகத் தீர்த்தார்கள் என்பதை அறிந்து கொண்டாள்.

அவள் அறியாமலே அந்த ரயிலில் பலருக்கு உதவி கிடைக்கக் காரணமாக இருந்த அபிநயா எல்லோருக்கும் ‘ஒரு ஊதா டாப்ஸ் போட்ட அக்கா’ என்கிற பெயரில் அறிமுகமாயிருந்தாள்.

அந்தப் பழங்களை சூர்யா வாங்கிக் கொண்டு, “நீங்க குடுங்க யாருக்காவது தேவப்பட்டா பசங்களோட சேர்ந்து நான் குடுத்துக்குறேன்” என்றான்.

“பசி பிரச்னைய ஓரளவுக்குத் தீத்தாச்சு. இனி அடுத்து எவனாவது பிரச்னைய தொடங்குவான். இங்க நீங்க சமாளிச்சுக்கோங்க. எதுவும் தேவைனா பசங்க யாராவது ஒருத்தர் நடமாடிட்டுதான் இருப்போம்.”

பசி அடங்கியதும் சிலர் உறங்க ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த அமைதி நெடுநேரம் நீடிக்கவில்லை.

அந்த இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு பீதி நிறைந்த குரல், “பாம்பு… பாம்பு…” எனக் கத்திவிட்டு, “கீழ தண்டவாளத்துல தண்ணி… யாரும் கீழ இறங்காதீங்க” என்று எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.