வகுப்பில் அட்டென்டென்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார் ரோசி டீச்சர்.

“அன்பரசி…”

“எஸ் டீச்சர்”

“கருப்பையா… “

“எஸ் டீச்சர்”

“முகேஷ்…”

“எஸ் டீச்சர்”

“போதும்பொண்ணு…”

எழுந்து “எஸ் டீச்சர்” சொல்வதற்கு முன்பே வகுப்பில் வழக்கம்போல அலையலையாய் சிரிப்பு பரவியது. ரோசி டீச்சர் நிமிர்ந்து பார்த்தார். டீச்சர் பார்ப்பது கண்டு கைகளால் வாய் பொத்திக் கொண்டாலும் ‘க்ளுக் க்ளுக்’ என சிரிப்பு அவர்களை மீறி வெளிப்பட்டது. போதும் பொண்ணுவைப் பார்க்கிறார். ‘எஸ் டீச்சர்’ கூட சொல்ல முடியாமல் கண்களில் நீர் நிறைந்திருக்க, இவள் பார்த்ததும் அவள் தலைகுனிந்து கொண்டாள்.

போதும்பொண்ணுவுக்கு அழுகையுடன் கூடவே பெயர் வைத்த அம்மா மீது கோபம் கோபமாக வந்தது.  அதற்கு வழிசொன்ன அம்மாச்சி கையில் கிடைத்தால், கழுத்தை நெரிக்கவேண்டும்போல இருந்தது. ‘பெயர் வைச்சிருக்கிறதைப் பாரு பெயரு… வரிசையாக நாலும் பெண்ணாய் பிறந்ததால் ‘பொண்ணு போதும் ஆண் வேணும்’ னு பெயர் வைச்சாங்களாம். அப்படி பெயர் வைச்சா அடுத்து ஆம்பளப்புள்ள பொறக்கும்னு அம்மாச்சி கெழவி சொல்லுச்சாம்,’ மனதுக்குள் எரிச்சல் மண்ட, அழுகையை அடக்கிக்கொண்டு ‘எஸ் டீச்சர்’ சொல்லி உட்கார்ந்தாள்.

‘தம்பிக்கு மட்டும் ராகேஷ்னு ஸ்டைலா பேரு வைச்ச அம்மாவை… ம்ம்ம்ம்ம்…’ மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.

“அடுத்தவங்களை எந்த விஷயத்துக்கும் கேலி பண்ணக்கூடாதுனு எத்தனை முறை சொல்றது?” மாணவர்களை நானூற்றி அறுபத்தெட்டாவது முறையாகக் கண்டித்துக் கொண்டிருந்தார் டீச்சர். ஆனாலும் அவர்கள் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளப் போவதில்லை, வயது அப்படி.

பள்ளியில் சேர்த்துவிட வரும்போதே அட்மிஷன் டேபிளில் உட்கார்ந்திருந்த ரோசி டீச்சர் போதும் பொண்ணுவின் அம்மா மயிலுவிடம் கேட்டார்.

“அதென்ன பெயரு… போதும் பொண்ணுனு?”

“அது டீச்சர்… வரிசையா மூணு பொட்டப்புள்ளைங்க பொறந்துச்சுங்க, இவ வயத்துல இருக்கும்போது ஆம்பளப்புள்ளனு தான் கோட்டூர் ஜோசியர் சொன்னாரு… ஆனா, நாலாவது இவளும் பொண்ணாப் பொறந்துட்டா… அவுக அப்பனும் என் மாமியார் கெழவியும்  பிள்ளையைப் பார்க்கக்கூட ஆஸ்பத்திரிக்கு வரல… எங்க அம்மாதான்  ‘பொண்ணு போதும், இனிமேலாச்சும் ஆணாக் கொடு’னு அந்த இருக்கங்குடி மாரியாத்தாளை வேண்டிக்கிட்டு பெயர் வைக்கச் சொல்லுச்சு, ஆனா பாருங்க, கரெக்டா இவ பொறந்த பத்தாம் மாசமே என் மவன் சிங்கக் குட்டியாட்டம்  பொறந்துட்டான்.”

“ஆம்பளப் புள்ள வேணும்னு நாலு கொழந்தை பெத்துக்கிட்டீங்களா?”

“அப்பறம்..? மொதப் பிள்ளையில இருந்தே… ஒவ்வொரு முறையும் ஆம்பளப்புள்ள தான்னு ஆசையா இருப்போம், ஆனா பொம்பளப்புள்ள பொறக்கும்போது ரொம்ப ஏமாத்தமா  இருக்கும். நாலு நாளைக்கு அழுதுட்டு கெடப்பேன்.”

“ஆம்பளப்புள்ள மேல அவ்வளவு ஆசையா?”

“பின்ன…? கொள்ளி போட புள்ளயில்லாம அநாதைப் பொணமால்ல போகனும். அதுவுமில்லாம, பொம்பளப் புள்ளையா பெத்துப் போடறேன்னு எத்தன பேர்ட்ட எத்தினி வசவு வாங்கியிருப்பேன் தெரியுமா? அந்தக் கஷ்டமெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தாதான் டீச்சர் தெரியும். ஆம்பளப் புள்ள பெறந்தவுடன தான் மனசு நெறைஞ்சு போச்சு…” பையன் பிறந்ததை யாரிடம் எத்தனைமுறை சொன்னாலும் மயிலு முகத்தில் கர்வம் கொப்பளிக்கும். ஏதோ சாதித்து விட்டதுபோல பேசுவாள்.

சின்ன வயதில் போதும் பொண்ணுவுக்கு தன்னுடைய பெயரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. பெரிய வகுப்பு போகப்போக உடன் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் அவள் பெயரை வைத்து “போதும்… போதும்… போதும் பொண்ணு” என்று ராகம் இழுத்து பாட்டுப்பாடி கேலி செய்யும்போது சாகலாம் போல இருக்கும். யாரும் கேட்டால்கூட பெயரைச் சொல்ல வெட்கமாக இருக்கும். ‘அடுத்த வருசம் ஒம்பதாப்பு பெரிய்ய ஸ்கூலுக்குப் போகனும், அங்க போயி எப்படி இந்தப் பெயரைச் சொல்றது?’ என்பதுதான் அவளுக்கு இப்போது இருக்கும் பெரிய பிரச்னை.

 ‘நாலு பொம்பளப்புள்ளைகளை பெத்துட்டோமே’ என்று மயிலுக்குக் தாங்க முடியாத கவலை. அது கோபமாக மாறி எரிச்சலாக உருவெடுக்கும். அந்த எரிச்சலையெல்லாம் பெண் பிள்ளைகள் மேல்தான் காட்டுவாள். பையனை மட்டும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாள்… அவன் எப்பவும் ஸ்பெஷல்தான். போதும்பொண்ணு பொறுக்க முடியாமல் கேட்டுவிடுவாள். “ஏம்மா, எங்களை மட்டும் எப்பவும் திட்டிக்கிட்டே இருக்க, தம்பியை மட்டும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கற?”

“ம்ம்ம்ம்… நல்லா சொல்லுவடி… நீங்கல்லாம் நாளைக்கு கல்யாணம் முடிச்சிட்டு வேற வீட்டுக்குப் போயிடுவீங்க… அவன் தான வயசான காலத்துல எங்களுக்கு கஞ்சி ஊத்துவான். நீங்களா வரப்போறீங்க? அது மட்டுமில்ல, நீங்க நாலு பேரும் பொறந்தப்ப நான் வாங்காத வசவு இல்ல… ஒரு கூட்டம் கும்பல்ல கூட என்னைச் சேர்க்காம பொட்டப்புள்ளையா பெத்துப் போடறேனு என்னை ஒதுக்கியே வச்சாங்க… அவன் பொறந்தப்புறம் தான் எனக்கு  மரியாதையே கெடைச்சுது…” தனக்குத் தெரிந்த நியாயத்தை சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பாள்.

ஆனால் மயிலு நல்ல உழைப்பாளி.  கிடைத்த வேலைக்குப்  போய்விடுவாள். வழக்கமான ஆண்கள்போல சதா குடித்துவிட்டு இவளிடம் சண்டை போடும் புருசனை எதற்கும் எதிர்ப்பார்ப்பதில்லை. மூத்த பிள்ளைகள் இரண்டு பேரையும் எட்டாம் வகுப்பு முடித்ததும் திருப்பூர் கார்மென்ட் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பிவிட்டாள். மாதச் சம்பளம் கிடையாது, மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தால், கம்பெனியிலிருந்து ‘திருமணச் சீர்’ என்ற பெயரில் மொத்தப்பணமாக் கொடுத்துவிடுவார்கள். அதை வைத்து சிக்கனமாக கல்யாணத்தையும் நடத்தி முடித்துவிட்டாள். மூன்றாவது பெண்ணை எட்டாம் வகுப்பு முடித்தவுடனே, தீப்பெட்டி ஆபிசுக்கு வேலைக்கு அனுப்பிவிட்டாள். ‘அவளுக்கு அடிக்கடி மேலுக்கு சொகமில்லாமப் போயிடுது’ என்று திருப்பூர் அனுப்பவில்லை. இரண்டு ஆண்டுகளில் அவளையும் உள்ளூரிலேயே ‘ரெண்டாந்தாரமா ஒத்த பைசா செலவில்லாம’ கல்யாணம் பண்ணிக்கொடுத்துவிட்டாள்.  

மகனை மட்டும் பக்கத்து ஊர் இங்கிலீஷ் மீடிய பள்ளியில் தன்னுடைய சக்திக்கு மீறி, படிக்க வைக்கிறாள். “என்ன இருந்தாலும் ஆம்பளப் புள்ள இல்ல… நாலு எழுத்து படிச்சு இங்கிலீஷ்ல பேசினா எவ்வளவு பெருமையா இருக்கும்?” என நினைத்துக்கொள்வாள். அதற்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருந்தாள். போதும் பொண்ணுவையும் இந்த ஆண்டு எட்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு, திருப்பூர் வேலைக்கு அனுப்பவேண்டும் என்பதுதான்  மயிலுவோட திட்டம்.

ஆனால் ஆறாம் வகுப்பு படிக்கையில் பார்த்த ஒரு சம்பவம், போதும்பொண்ணுவை மிகவும் பாதித்துவிட்டது.   தினமும் குடித்துவிட்டு வந்து தன்னைப் போட்டு அடிக்கும் புருசனைப் பற்றி பக்கத்து தெரு மரகதம் அக்கா டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். ஒரு பெண் போலீஸ் ‘டுபு டுபு’ என ஆண்கள் ஓட்டும் புல்லட்டில் வந்து மரகதம் புருசனை விசாரிக்க, அவன், “எம் பொண்டாட்டி, நான் அடிப்பேன், நீ யாரு என்னைக் கேட்க?” என்று  போலீசை எதிர்த்துப் பேச, அந்தப் பெண் போலீஸ் ‘பொளேர்’ என கன்னத்தில் ஒன்று விட்டதில் கலங்கிப்போனான்.

“ஏண்டா, குடிகாரப்பயலே, பொண்டாட்டின்னா அவ்வளவு இளக்காரமா போச்சா உனக்கு?  இனி ஏதாவது அந்தப் பிள்ளையை அடிச்ச… ஸ்டேசனுக்குக் கூட்டிப்போய் முதுகுல டின்னு கட்டிடுவேன் பார்த்துக்க” என்று சொல்லிவிட்டு கம்பீரமாக புல்லட்டில் ஏறி, கூலிங்கிளாசை மாட்டிக்கொண்டு சென்றவரைப் பார்த்த நிமிஷத்தில், போதும் பொண்ணுவுக்குத் தானும் போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அவளும் ‘டுபுடுபு’ வண்டியில் வந்து தப்பு செய்யும் ஆண்களை அடிப்பதுபோல அவ்வப்போது கற்பனை செய்து கொள்வாள்.

பள்ளியில் ரோசி டீச்சர், அடிக்கடி பெண்களைப் பற்றி உயர்வாகப் பேசுவார். ‘பெண்கள் நிறைய்ய படிக்கனும், நிறைய சாதிக்கனும்… ஆண்களும் பெண்களும் சமம், ஆண்களுக்கு இருக்கும் எல்லா உரிமையும் பெண்களுக்கும் இருக்கும்’ என்று அவர் சொல்லும் போது, போதும்பொண்ணுவுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவளுக்குத் தெரிந்த வரையில் ரொம்ப யோசிப்பாள்.

‘ஆணும் பொண்ணும் எப்படி சமம்? வீட்ல எப்பயும் தம்பிக்குத்தான செல்லம் கொடுக்கறாங்க. அவன் மட்டும் வேன் ஏறிப்போய் இங்கிலீஷ் மீடியம் படிக்கிறான். மாசத்துக்கு ஒருக்கா ஆட்டுக்கறியோ, கோழிக்கறியோ எடுத்தாக்கூட, மசால் அரைக்கறது, தேங்காய் அரைக்கறது எல்லாம் போதும் பொண்ணுவும் அவள் அக்காவும் தான். ஆனால் சோறு ஆக்கி முடிச்சதும், கொதிக்க கொதிக்க தட்டுல போட்டு அது நெறைய கறிக் குழம்பு ஊத்தி தம்பிக்கு சாப்பிடக் கொடுத்த பிறகுதான் போதும் பொண்ணுக்கு சாப்பாடு கெடைக்கும். ஆம்பளப் பையன் வீட்டு வேலை செய்யக்கூடாதாம், ஆனா ஆம்பளப் புள்ள தான் முதல்ல சாப்பிடனுமாம். எனக்கும் தாம்மா பசிக்குதுனு கேட்டால், ஆம்பளங்க  அடிச்சோறு சாப்பிடக்கூடாதாம், அதனால  தம்பியும் அப்பாவும் சாப்பிட்ட பிறகுதான் இவளும் அம்மாவும் அக்காவும் சாப்பிடுவார்கள்…’

‘இதுல, ஊர்ப் பொங்கலுக்கு கல்யாணமாகிப்போன அக்காக்கள் மாமாவோடு வந்துவிட்டால் அவ்வளவுதான்… பொம்பளங்க அஞ்சு பேரும் காலையில இருந்து மாங்கு மாங்குனு வேலை பார்ப்பாங்க, ஆம்பளங்க மூனு பேரும் சும்மா ஊர் சுத்திட்டு, சேர்ந்து உட்கார்ந்து பிராந்தி குடிச்சுட்டு, கெட்ட வார்த்தை பேசிட்டு இருப்பாங்க. ஆனா சமைச்சு முடிச்சதும் ஆம்பளங்களை முதல்ல உட்கார வைச்சு அம்மா சோறு போடும். அவங்க சாப்பிட்டு வெளியே போன பிறகு பொம்பளங்க ஆறிப்போன சாப்பாட்டை வச்சு சாப்பிடுவோம். இவ்வளவு ஏன்,  அப்பா ஒழுங்கா வேலைக்கே போகமாட்டார். ஆனா, அம்மாதான வேலைக்கும் போயிட்டு வந்து வீட்டு வேலையும் பார்க்குது, அப்புறம் எப்படி ஆம்பளயும் பொம்பளயும் சமம்?’ இப்படி ரொம்ப குழப்பமா இருக்கும் அவளுக்கு.    இதையெல்லாம் டீச்சரிடம் சொல்வதற்கு வெட்கமாக இருந்ததால், அப்படியே விட்டுவிட்டாள்.

போதும் பொண்ணுவுக்கு எட்டாம் வகுப்பு தேர்வு முடிந்துவிட்டது. படிப்பை நிறுத்திவிட்டு அவளை வேலைக்கு அனுப்ப  மயிலு முடிவு செய்து, வேலைக்கு ஆள் சேர்க்கும் புரோக்கரை பார்த்து சொல்லிவிட்டாள். போதும்பொண்ணுவோ, ‘என்னை படிக்க வைக்காட்டி செத்துப் போயிடுவேன்’ என்று அடம் பிடித்தாள். இருந்தும் மயிலு கேட்பதாக இல்லை. விஷயம் கேள்விப்பட்டு ரோசி டீச்சர் மயிலுவிடம் பேசினார்.

“படிக்கிற வயசுல பொண்ணை வேலைக்கு அனுப்பப்போறீங்களா? போதும்பொண்ணு படிச்சு போலீஸ் ஆகனும்னு ஆசைப்படறாளே?”

“ஆம்பளப்புள்ளய படிக்க வைச்சா  நாளைக்கு நமக்கு கஞ்சி ஊத்துவான். பொட்டக்கழுத வேற வீட்டுக்குப்போற புள்ள… நமக்கா வேலை பார்த்து காசு கொடுக்கப்போகுது? மூனு வருசம் வேலைபார்த்தா கல்யாணத்தை முடிச்சிடலாம்…” திரும்பத் திரும்ப கல்யாணப் பேச்சிலேயே வந்து நின்றாள். ரோசி டீச்சர் போதும் பொண்ணுவிடம், “ஹை ஸ்கூல்ல சேர இன்னும் ரெண்டு மாசம் இருக்கு, நீ கவலைப்படாதே, உங்க அம்மா மனசை மாத்திடலாம்” என்று ஆறுதல் சொன்னார்.

ஆனால், மறுநாள் காலை ‘போதும் பொண்ணு மருந்தைக் குடிச்சிட்டா, டவுன் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க’ என்று தகவல் வர, ஆசிரியர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். போதும் பொண்ணு கண்மூடி படுத்திருந்தாள். குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது.

“வேலைக்கு அனுப்பப்போறேனு சொன்னதுக்கு கோவிச்சிட்டு எறும்புப் பொடியை தண்ணில கரைச்சு குடிச்சிட்டா டீச்சர்… இந்தக் கழுதையை என்ன செய்ய?” மயிலு கோபத்துடன் கேட்டாள்.

“ஸ்கூல்ல நல்லா ஏத்தி ஏத்தி விட்டுடறீங்க… இதைப்படி, அதைப்படினு…வீட்டுக்கஷ்டம் தெரிஞ்சா இப்படிச் செய்வாளா?” இப்போது மயிலுவின் கோபம் ஆசிரியர்களின்மீதும் பாய்ந்தது. இது சகஜம்தான் என்பதால் யாரும் ஒன்றும் பேசவில்லை. “இருங்க டீச்சர், காபி வாங்கியாறேன்” என தூக்குச்சட்டியைத் தூக்கிக்கொண்டு பதிலை எதிர்பாராமல் மயில் வெளியேற…

“ஏம்மா இப்படிச் செஞ்ச?” போதும் பொண்ணுவிடம் கோபத்துடன் ரோசி டீச்சர் கேட்டார்.

“சும்மாதான் டீச்சர், படிக்கனும்னு கெஞ்சிப் பார்த்தேன். மாட்டேனுட்டாங்க. அதான்… எறும்புப்பொடியைக் குடிச்சா சாக மாட்டாங்கனு தெரியும் டீச்சர், இப்போ பாருங்க ஒம்பதாப்பு சேர்த்து விடறேனு அம்மா சொல்லிட்டாங்க” எனக்கூறி சிரித்தாள். ‘தான் நினைச்சதை சாதிக்கறதுக்கு என்னவெல்லாம் இந்தக் காலத்து பிள்ளைகள் யோசிக்கிதுங்க?’ என ரோசி டீச்சருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் ‘இனி இப்படியெல்லாம் செய்யக்கூடாது’ என போதும் பொண்ணுவை கண்டித்துவிட்டு வந்தார்.

நினைத்தது போலவே பக்கத்து ஊர்ல அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்துவிட்டாள் போதும் பொண்ணு. மிகவும் சந்தோஷமாகப் போய் வருகிறாள். இப்போதெல்லாம் யாராவது பேரைச் சொல்லி  கிண்டல் செய்தால் அழுவதில்லை. “பெயர் முக்கியமில்லை, திறமைதான் முக்கியம். உன் திறமையை வளர்த்துக்கொண்டால், இந்த உலகமே உன்னைக் கொண்டாடும்” என ரோசி டீச்சர் ஒன்பதாம் வகுப்பு சேரும்போது அறிவுரை சொல்லித்தான் அனுப்பியிருந்தாள். அதனால் படிப்பில் கவனம் அதிகமாகிவிட்டது.  ‘எப்படியாவது படிச்சு, போலீஸ் ஆயிடனும், ஆம்பள மாதிரி  பேன்ட் போட்டுகிட்டு பைக்ல போகனும்’ என்று வைராக்கியம் வந்துவிட்டது. பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கி, மறுபடியும் அம்மாவிடம் அடம் பிடித்து பதினொன்றாவது வகுப்பும் சேர்ந்துவிட்டாள்.

ஆனால் பதினொன்றாவது முழுப்பரிட்சை விடுமுறையில்  பக்கத்துத் தெரு பால்பாண்டி ரூபத்தில் இவள் படிப்புக்கு ஆபத்து வந்தது. “பட்டாளத்துல வேலை பார்க்கிறான், லீவுக்கு வந்தவன் இவளத்தான் கட்டுவேங்கறான். அதனால பெத்தவுக பொண்ணு கேட்கறாக. சென்ட்ரல் கவர்மென்ட் வேலை பாக்குற மாப்பிள்ளை யாருக்குக் கிடைக்கும்? நீ படிச்சு கிழிச்சது போதும், இனியும் உன் இஷ்டத்துக்கு விட முடியாது”, அம்மாவுடன் கல்யாணமான அக்காக்களும் சேர்ந்து கொண்டார்கள். புத்தகப்பையை தூக்கிக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பியவளை ஒரு அறையில் அடைத்து வைத்தார்கள்.

 அறைக்குள் அடைபட்டு அழுது அழுது முகம் வீங்கிவிட்டது. “கால்லகூட விழுகறேம்மா, ப்ளீஸ் என்னை படிக்க விடுங்க” என்று அழுது, கெஞ்சி, ஆர்ப்பாட்டம் செய்து, ‘செத்துடுவேன்’ என்று மிரட்டி… ம்ஹூம்… மயிலு எதற்கும் அசரவில்லை. எந்நேரமும் தண்ணியிலேயே மிதக்கும் அப்பனிடம் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை.  அக்காக்களிடம் முறையிட்டாள். அவர்களும், “நாங்க என்னா செய்ய முடியும், நீயாவது பதினொன்னு படிச்சுட்ட… எங்களை எட்டாம் வகுப்பு தாண்ட விடல… நீ ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்காட்டியும் கல்யாணம் நடக்கத்தான் போகுது. நாங்க என்ன செய்ய முடியும்…?” என ஒதுங்கிக் கொண்டார்கள்.

மறுபடியும் அம்மாவிடமே போய்  நின்றாள். “போடி போக்கத்தவளே… இன்னும் எத்தனை நாளைக்கு உன்னைக் காவல் காத்துக்கிட்டு இருக்குறது? ஒரு கல்யாணத்த முடிச்சுப் போட்டா எங்கடமை முடிஞ்சுடும். நிம்மதியா இருப்பேன், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாம, மருந்தைக் குடிக்கறேனு சீன் போடாம… குளிச்சு ரெடியாகு, சாயந்தரம் உன்னை பொண்ணு பார்க்க மொறைப்படி வர்றாக…” சொல்லிவிட்டு ‘பொண்ணு பார்க்கும்’ சடங்குக்கு ஏற்பாடு செய்ய மயிலு வெளியே போய்விட்டாள்.  

‘அவ்வளவு தானா… என்னோட போலீஸ் கனவு முடிஞ்சு போச்சா…?’ பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் தம்பியைப் பார்க்கிறாள். அயர்ன் பண்ணிய யூனிஃபார்ம்,  ஷூ, டை என பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அம்மா அவனுக்கு மட்டும் சுடச்சுட நாலு இட்லி கடையில் வாங்கி வைத்ததை சாப்பிட ஆரம்பித்தான். அப்பா நேற்று இரவு போட்ட போதை தீராமல் புரண்டு கொண்டிருந்தார்.

போதும்பொண்ணுவின் மனதுக்குள் தோன்றியது. “டீச்சர் சொன்னது பொய், ஒரு நாளும் ஆம்பளயும் பொம்பளயும் சமமே கிடையாது, சமமாகவே முடியாது.”

போதும் பொண்ணு வீட்டை ஒட்டியிருந்த பாத்ரூமுக்குள் போனாள். கையில் அம்மா ரேசன் கடையில் வாங்கி வைத்திருந்த சீமையெண்ணெய் கேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டாள். கேன் மூடியைத்திறந்து, தலையில் நிதானமாக ஐந்து லிட்டர் எண்ணெய்யை ஊற்றினாள். எடுத்து வந்திருந்த தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசியவள் ஒரு கணம் உற்றுப்பார்த்தாள். அந்த பெண் போலீஸ் தடதடக்கும் வண்டியில் வந்து இறங்கியது மனதில் காட்சியாக ஓடியது. கண்களை இறுக மூடிக்கொண்டு எரிந்து கொண்டிருந்த தீக்குச்சியை உடலில் ஏந்திக்கொண்டாள். சுவரோரமாக ஒண்டிக்கொண்டு ஒரு துளி சத்தம் வெளியே வராமல் வாயை இறுகக் கைகளால் மூடிக்கொண்டாள்.

பத்து நிமிடத்தில் புகை அலை அலையாய் பரவி வெளியே வந்தது கண்டு ஓடியது கூட்டம். அதற்குள் உருவம் தெரியாத அளவுக்கு கரிக்கட்டை ஆகியிருந்தாள் ‘போதும் பொண்ணு.’

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.