ஆல்ஃபிரட் நோபல் நினைவாக 1901ஆம் ஆண்டு முதல் பல துறைகளில் உள்ள சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களில் ஏறக்குறைய அறுபத்து ஐந்து பேர் பெண்கள். அதே நேரம், நோபல் பரிசு பெற்ற ஆண்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்? இரண்டு அல்லது மூன்று மடங்கு இருக்கலாம் என்று நினைத்தால் தவறு. அதற்கும் மேலே. 905 பேர் இருக்கிறார்கள். 65க்கும் 905க்கும் உள்ள இடைவெளி ஏன்? இதற்குத் தகுதியான பெண்கள் அந்தத் துறையில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்கும் போது சில உண்மைகளை அறியலாம். இதோ இந்த அணுப்பிளவு பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானியின் கதையைப் பார்ப்போம்.
லீஸ் மைட்னர். இவர் இயற்பியல் துறையில் (நியூக்ளியர் பிசிக்ஸ்) மிகப்பெரிய ஆராய்ச்சியாளர். ஆராய்ச்சிப்பணி இவரது வாழ்நாள் முழுவதுமே முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. .
லீஸ் பிறந்தது ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா. அவரது தந்தை பிலிப் மைட்னர் ஒரு வழக்கறிஞர். அவர்கள் வீட்டில் மொத்தம் எட்டுப் பிள்ளைகள். லீஸ் மூன்றாவதாகப் பிறந்தார். அவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் தந்தையின் உந்துதலால் பல துறைகளில் கற்றுத் தேர்ந்தனர். சிறுமி லீஸின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு தனியாக இயற்பியல் கற்பதற்கு ஏற்பாடு செய்தார் அவரது தந்தை. காரணம், அப்பொழுது இருந்த அரசுப் பள்ளிகளில் பெண்கள் அறிவியல் படிக்க அனுமதி இல்லை.
கிரேக்கம், பிரெஞ்சு மொழிப் பாடங்களைப் படித்தாலும் லீஸுக்குக் கணிதத்திலும் இயற்பியலிலும் ஆர்வம் அதிகம். அதனால் அவர் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் படிக்க ஆரம்பித்தார். அப்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதல் மாணவியாக அவர் இருந்தார். 1906ஆம் ஆண்டு அவர் முனைவர் பட்டம் பெற்றபோது, வியன்னாவில் பிஎச்டி பெற்ற இரண்டாவது பெண்மணியாக விளங்கினார். வியன்னாவில் வேலை செய்வதற்கு ஒரு பள்ளியிலோ அல்லது கண்ணாடிக் கடையிலோதான் வேலை கிடைக்கும் என்கிற நிலையில், அவர் பெர்லினுக்குச் சென்றார்.
பெர்லினில் 1912ஆம் ஆண்டு கேசர் வில்ஹம் இன்ஸ்டிட்யூட் வேதியியல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வம் காட்ட்டினார். அங்கே போல்ஸ்மேன் (Boltzman) என்பவர் அவருக்கு உதவிகள் புரிந்தார். போல்ஸ்மேன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த மேக்ஸ் பிளான்க் (Max Planck) அறிமுகம் கிடைத்தது. மேக்ஸுக்குப் பெண்கள் இந்தத் துறையில் ஈடுபடுவதும் தனது வகுப்பறையில் பயில்வதும் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் அதற்கு ஒரு விதிவிலக்காக லிசாவைத் தன் வகுப்பில் சேர்த்துக்கொண்டார். ஆனாலும் ஆய்வுகளில் பங்குகொள்ள அனுமதிக்கவில்லை. அவர் அங்கேயும் குறைவான சம்பளம் தரக்கூடிய உதவியாளராகப் பணி செய்து காலத்தைக் கழித்தார்.
அருகிலேயே ஒரு வேதியியல் ஆராய்ச்சிக் கூடம் இருக்கிறது. அங்கே ஓட்டோ ஹான் (Otto Hahn) என்கிற வேதியியலாளர் வேலை செய்து வருகிறார். அங்கு சென்று தனக்கு விருப்பமான சில ஆய்வுகளை மேற்கொள்ள லீஸ் முயன்றார். 1917ஆம் ஆண்டு ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்தார். அதன் பெயர் புரோடாக்டினியம். (proactinium). அவர் யூதர் என்பதால் அதிலும் ஒரு சிக்கல் வந்தது. 1933ஆம் ஆண்டு அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலரானார். அவர் ஆட்சி வலுப்பெற்றதும் யூதர்களைப் பணிகளில் இருந்து நீக்கினார். எப்படியோ 1938 வரை ஜெர்மனியில் தாக்குப்பிடித்தார் லீஸ்.
அதன் பின்னர் வேறு வழியில்லாமல் பெர்லினை விட்டு அவர் வெளியேற நேர்ந்தது. அப்பொழுது ஓட்டோ ஹான் அவருடன் வீட்டிற்கு வந்து உதவி செய்தார். 30 ஆண்டுகள் பெர்லினில் வாழ்ந்தாலும் இரண்டு பெட்டிகளுடன் கிளம்பினார் லீஸ். அப்பொழுது தனது தாயின் வைர மோதிரத்தை வைத்துக்கொள்ளுமாறு ஆட்டோ ஹான் அவருக்குத் தந்தார்.
யூதர்கள் பெர்லினை விட்டுப் பத்திரமாக வெளியே செல்வது சாதாரண காரியம் அல்ல. அதற்கு ஓர் ஒற்றர் பால் ரோஸ்பாட் உதவி செய்தார். ரகசிய ஒற்றர் பல யூதர்களைப் பத்திரமாக பெர்லினில் இருந்து வெளியேற உதவி செய்தார். அவர் லீஸை ரயில் ஏற்றினார். அந்த ரயிலிலிருந்து கிரிக் கோஸ்டர் லீஸை அழைத்துச் சென்றார். அவர் ஸ்டாக் ஹோம்க்குச் சென்று அங்கே ஓர் இடத்தில் வேலை செய்தார். ஆனால் அங்கே ஆய்வுக்கான வழி இல்லை. தொடர்ந்து ஓட்டோஹானிடம் தொடர்பில் இருந்தார் லீஸ். இருவரும் ஆராய்ச்சிகளைப் பற்றி தொலைபேசியில் பேசி வந்தனர். தனக்குச் சவாலான கடினமான விஷயங்களை லீஸிடம் கேட்டுத் தெளிந்தார் ஓட்டோஹான்.
1938ஆம் ஆண்டு யுரேனியம் நியூட்ரான்களால் மோதும்போது அதைவிட எடை அதிகமான தனிமங்களே உருவாகும் என்று பல ஆராய்ச்சியாளர்களும் வாதிட்டு வந்தனர். அந்த வருடம் டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது ஓட்டோ ஃபிரிஷ் என்கிற லீஸின் உறவினர் அவரைச் சந்தித்தார். அவரும் ஓர் இயற்பியலாளர். அவர் நீல்ஸ் போருடன் பணி செய்து வந்தார்.
இது பற்றி விவாதித்தபடியே அவர்கள் பனிச்சறுக்கு விளையாட்டுப் பகுதியில் ஒரு மரத்தருகே கணக்குகளைப் போட்டார்கள். அப்பொழுது லீஸ் யுரேனியத்தின் நியூக்கிளியசை ஒரு நீர்த்துளி என்று எடுத்துக் கொண்டால் அதில் நியூட்ரான் மோதும்போது செகண்டரி நியூட்ரான்ஸ் உருவாகி இது ஒரு தொடர் பிளவாக அமையும். இது பேரியம் (barium) போன்ற பல வகை தனிமங்கள் உருவாகக் காரணமாக இருக்கும் என்பதை முதன் முதலில் கூறினார். அதன் பிறகு ஊருக்குத் திரும்பிய ஓட்டோ ஃபிரிஷ் இதைப் பற்றி நீல்ஸ் போரிடமும் மற்ற அறிவியலாளர்களிடமும் ஆலோசித்தார். இது ஒரு சிறப்பான கண்டுபிடிப்பு என்று பலரும் வியந்தனர். இதுவே பின்னாளில் நியூக்ளியர் பாம் செயல்பாட்டிற்கு உதவுக்கூடிய கருத்தாக்கமாக இருந்தது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஓட்டோ ஹானுடன் சேர்ந்து பல நாள் வேலை செய்து அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அந்த வேதியியல் மாற்றத்துக்கு அணுக்கரு பிளவு (nuclear fission) என்று பெயர் சூட்டினார்கள். அந்த ஆய்வுக் கட்டுரை வெளியான போது லீஸின் பெயர் அதிலிருந்து விடுபட்டிருந்தது. அவரும் ஸ்ட்ராஸ்மெனும் யூதர்கள் என்பதால் அவர்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது அவருக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் தனது பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.
1939 நேச்சர் (Nature) பத்திரிகையில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியானது. 1945ஆம் ஆண்டு ஓட்டோ ஹானுக்கு இதற்காக நோபல் பரிசும் கிடைத்தது. அப்போதும் லீசாவின் பெயர் வெளியில் தெரியவில்லை. 1949இல் அவர்கள் கண்டுபிடித்த புரோடாக்டினியம் தனிமத்திற்கு ஓட்டோ ஹான் மற்றும் லீஸ் மீட்னர் இருவருக்கும் அங்கீகாரம் கிடைத்தது . இரண்டாம் உலகப்போரின் போது ஓட்டோ ஹான் ஹிட்லரின் நாஜிப் படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டதால், லீஸ் பல்கலைக்கழக அணு ஆய்வுத் துறையின் தலைவரானார்.
(தொடரும்)
படைப்பாளர்:
தென்றல். சென்னையில் பணிபுரியும் கதிரியக்க மருத்துவர். வாசிப்பில் நாட்டம் கொண்டு புலனங்களில் புதுக்கவிதை எழுத ஆரம்பித்து வளரி கவிதை இதழின் பொறுப்பு ஆசிரியர் மற்றும் பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் தலைவராகவும் இலக்கிய உலகில் அடி எடுத்து வைத்திருக்கிறார். 2023இல் வளரி எழுத்துக்கூடத்தின் மூலம் ’பெண் எனும் போன்சாய்’ கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.