“பெயர் தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்” என்கிறார் வஜினியா வுல்ஃப். பெண்கள் தந்த படைப்புகள் நிலைத்து நின்றுவிடும், ஆனால் அவர்களின் பெயர்கள் மறக்கப்பட்டுவிடும், அல்லது மறைக்கப்பட்டுவிடும். அறிவியலிலும் இதே போன்ற ஒரு போக்கு இருந்தது. கல்வி கற்பதில் தொடங்கி வேலை பெறுவது வரையில் எல்லாப் படிகளிலும் இருந்த தடைகளைத் தகர்த்து முன்னேறி, தனது துறையில் கால்பதித்து ஒரு சாதனையை நிகழ்த்தினால், அவர்களுக்கான அங்கீகாரம் வேறு எவருக்கோ போய்ச்சேரும்.
பெண் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் அவர்களது சக பணியாளர்களான ஆண் விஞ்ஞானிகளுக்குக் கிடைப்பதை Matilda effect என்று குறிப்பிடுகிறார் அறிவியல் வரலாற்றாசிரியர் மார்கரெட் ரோசிடர். மடில்டா ஜோஸ்லின் கேஜ் என்கிற செயற்பாட்டாளர், “பெண் கண்டுபிடிப்பாளர்கள்” என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட பெண் கண்டுபிடிப்பாளர்களைப் பற்றி விரிவாகப் பேசியிருந்தார். அந்தக் கட்டுரையின் அடிப்படையில் இந்தப் போக்குக்கு மடில்டா விளைவு என்று மார்கரெட் பெயர் வைத்தார். மடில்டா விளைவு என்கிற பதம், ஒரு பெண் விஞ்ஞானியின் பங்களிப்பைக் குறைவாக மதிப்பிட்டு ஆண்களுக்கு அங்கீகாரம் அதிகமாக வழங்கப்படுவதையும் குறிக்கிறது.
மடில்டா ஜோஸ்லின்
வரலாற்றைத் தேடிப் பார்த்தால் எண்ணிலடங்கா மடில்டா பெண்களைக் காணமுடியும். “கணிப்பொறியைக் கண்டுபிடித்தவர் யார்?” என்று கேட்டால், பள்ளி மாணவர்கள்கூட சார்லஸ் பாபேஜ் என்பார்கள். ஆனால், உலகின் முதல் கணிப்பொறி புரோக்ராமை எழுதியவரான அடா லவ்லேஸின் பெயர் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய கணிப்பொறி இயந்திரத்தை ஆராய்ந்து, “இது சும்மா கணக்குப் போடுவதைத் தவிர வேறு பல விஷயங்களையும் செய்யும்” என்று கணித்தவரும் அடாதான். “கணிப்பொறி யுகத்தின் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படும் அடாவின் பங்களிப்புகளுக்கான போதிய புகழ் கிடைப்பதில்லை.
அடா லவ்லேஸைவிடவும் வரலாற்றில் மோசமாக வஞ்சிக்கப்பட்ட பல பெண்கள் உண்டு. உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கிய குழுவின் முக்கிய உறுப்பினர் ஜீன் பர்டி. இங்கிலாந்தில் உள்ள ஓர் ஆய்வு மையத்தில் ராபர்ட் எட்வர்ட்ஸ், பேட்ரிக் ஸ்டெப்டோ, ஜீன் பர்டி ஆகியோர் கொண்ட குழுவினர் 1978இல் முதல் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கினார்கள். இந்தச் சாதனையைப் பாராட்டும்வண்ணம் ஆய்வு வளாகத்தில் ஒரு கல்வெட்டைப் பொறிக்க ஏற்பாடுகள் நடந்தன. ராபர்ட், பேட்ரிக் ஆகிய இருவரின் பெயரை மட்டும் வைத்து கல்வெட்டு பொறிக்கப்பட்டது.
வெளியிலிருந்து பார்க்கும் எல்லாரும் சாதனையை நிகழ்த்தியது இருவர்தாம் என்று நினைத்துக்கொண்டனர். இந்தச் சாதனையின் இருபதாவது ஆண்டுவிழாவில் பேசிய ராபர்ட், ஜீன் பர்டியின் பங்களிப்பை உலகுக்கு அறிவித்தார். பர்டியின் பங்களிப்பு வெளிச்சத்துக்கு வந்தது. 2010ஆம் ஆண்டில் சோதனைக்குழாய் குழந்தைக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக அதற்குள் பர்டி இறந்திருந்தார். இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் வழக்கம் கிடையாது என்பதால் அந்த அங்கீகாரமும் பர்டிக்குக் கிடைக்கவில்லை.
மேரி கால்கின்ஸ்
இவை எல்லாம் நடந்து முடிந்து ராபர்ட்டின் மறைவுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டில் அவரது கடிதங்கள் பொதுப்பார்வைக்கு வந்தன. அப்போதுதான் பர்டியின் பெயர் வேண்டுமென்றே மறைக்கப்பட்டிருந்தது உலகுக்குத் தெரிந்தது. ஆய்வுக்குழுவினர் அனைவரின் பெயர்களும் கல்வெட்டில் இடம்பெற வேண்டும் என்று ராபர்ட் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், ஆய்வுக்கூட நிர்வாகிகள், ராபர்ட், பேட்ரிக் இருவரின் பெயரை மட்டுமே கல்வெட்டில் பொறித்தனர். நொந்துபோன ராபர்ட், “என்னுடன் 10 ஆண்டுகாலம் ஆய்வில் பயணித்து, எனக்குச் சமமான பங்களிப்பைக் கொடுத்தவர் ஜீன் பர்டி. அவரது பெயரும் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளாமல் இருவரது பெயரை மட்டும் வைத்து கல்வெட்டு பதித்தது. இத்தனை உண்மைகளும் 2019இல் வெளிச்சத்துக்கு வந்தன. வாழும் காலத்தில் தனக்கான பெரிய அங்கீகாரங்கள் எதையும் கண்டுணராமலேயே பர்டி மறைந்துபோனார்.
சூரியனை விடவும் அதிகமான எடை கொண்ட பல்சர் நியூட்ரான் நட்சத்திரங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் ரோஸ்லின் பெல் பர்னல். தனது மேற்பார்வையாளர் ஆண்டனி ஹ்யூவிஷ், வானியலாளர் மார்டின் ரைலுடன் சேர்ந்து இந்த ஆய்வின் முடிவுகளை பெல் வெளியிட்டார். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்காக 1974ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, பெல்லின் பெயர் அதில் சேர்க்கப்படவில்லை. பல்சர்களின் தரவுகளை முதன்முதலில் கவனித்தவர் ரோஸ்லின், அது நிஜமானது என்று வாதாடி ஆய்வு மேற்கொண்டவரும் அவர்தான். ஆனாலும் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.
“என்ன இருந்தாலும் அவர் ஆய்வு மாணவிதானே, அதனால் நோபல் பரிசுக்கு அவரது பெயர் சேர்க்கப்படவில்லை” என்றெல்லாம் சமாதானம் சொன்னார்கள். ஆனால், உண்மை நிலவரம் வேறாக இருந்தது. ரோஸ்லின் மீது கடுமையான பாலின வேறுபாடு காட்டப்பட்டது. தனது வாழ்க்கை பற்றி எழுதும் ரோஸ்லின் இவ்வாறு குறிப்பிடுகிறார். “கேம்ப்ரிட்ஜில் இருந்த பெரும்பாலானோர் ஆண்கள். அங்கு இருந்த பெண் பேராசிரியர்களும் தங்களை முனைவர் என்கிற முன்னெட்டோடு அழைத்துக்கொள்ளக்கூட தயங்கினார்கள். அங்கு எனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மிகவும் போராட வேண்டியிருந்தது. பல்சார் கண்டுபிடிப்பு நடந்த பின்னர் பல பேட்டிகள் கொடுத்தோம். என்னுடைய மேற்பார்வையாளர் ஆண்டனியிடம் கண்டுபிடிப்பைப் பற்றிக் கேட்பார்கள். என்னிடம் எனது காதலர்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்பார்கள். உடல் அளவுகள் பற்றிய கேள்வி வரும். பத்திரிகையாளர்களிடம் கோபமாக ஏதாவது கத்தவேண்டும் என்று தோன்றும். முனைவர் பட்டம் அப்போது கிடைத்திருக்கவில்லை என்பதால் பிரச்சனை பண்ண வேண்டாம் என்று அமைதியாக இருப்பேன்” என்று ரோஸ்லின் கவலையுடன் எழுதியிருக்கிறார்.
நெட்டி ஸ்டீவன்சன்
“இருக்கும்போது உலகம் கண்டுகொள்ளாது” என்பது பல பெண் விஞ்ஞானிகளின் விஷயத்தில் உண்மைதான். தொழுநோய்க்கான மருந்தைத் திரவ வடிவில் உருவாக்கியது ஆலிஸ் பால் என்கிற பெண் வேதியியலாளர். ஆனால், இந்தச் செயல்முறையை ஆய்வுக்கட்டுரையாக வெளியிடுவதற்குள் அவர் இறந்துவிட்டார். ஆலிஸ் உருவாக்கிய செய்முறையை
அறிந்துவைத்திருந்த அவரது மேற்பார்வையாளர் ஆர்தர் டீன், ஆலிஸின் ஆய்வுமுடிவுகளைத் தன் பெயரில் வெளியிட்டார். “டீன் முறை” என்கிற பெயரில் அந்தச் செயல்முறை பிரபலமாகத் தொடங்கியது. ஆலிஸின் பங்களிப்புகள் அடுத்த தொண்ணூறு ஆண்டுகளுக்கு வெளியில் தெரியவில்லை. பலரது போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக 2000ஆம் ஆண்டில் அவரது கண்டுபிடிப்பை ஹவாய் பல்கலைக்கழகம் அங்கீகரித்தது.
புழுக்களில் ஆய்வு மேற்கொண்ட நெட்டி ஸ்டீவன்ஸ் என்கிற பெண் மரபணுவியலாளர், மரபிழைகள் (chromosome) மூலமாகத்தான் பால் வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்று 1905இல் கண்டுபிடித்தார். அவரது ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே எட்மண்ட் வில்சன் என்கிற விஞ்ஞானியும் பால்சார் உறுப்புகளில் ஆய்வு நடத்திக்கொண்டிருந்தார். தனது ஆய்வில் நெட்டியையும் மேற்கோள் காட்டி வில்சன் ஓர் ஆய்வுக் கட்டுரையையும் வெளியிட்டார். ஆனாலும் பல வரலாற்றாசிரியர்கள் வில்சனை மட்டுமே அங்கீகரித்தனர். இதற்கிடையில் “டி.எச்.மார்கன் என்கிற விஞ்ஞானிதான் பால் மரபிழைகளைக் கண்டறிந்தவர்” என்கிற பெயரும் பரவியது. மார்கனுக்கு நோபல் பரிசும் தரப்பட்டது. வில்சனை அறிவில் சமமானவராக பாவித்த மார்கன், நெட்டியை ஏற்றுக்கொள்ளவில்லை. வில்சனையும் மார்கனையும் ஆய்வு பற்றிய உரைகள் வழங்க மாநாடுகளுக்கு அழைப்பார்கள், நெட்டிக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. வில்சனும் மார்கனும் பெரிய இடங்களுக்குப் போய் மரபிழைகளைப் பற்றி உரையாற்றுவார்கள், அவர்கள்தாம் எல்லாவற்றையும் கண்டுபிடித்தார்கள் என்கிற தோற்றம் உருவானது. நெட்டியின் பெயர் மேலும் மங்கிப்போனது. வில்சன் நெட்டியை உதாசீனப்படுத்தவில்லை என்றாலும் நோபல் பரிசு பெற்ற நட்சத்திர விஞ்ஞானியான மார்கனின் சொற்களே கவனிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் தனது ஆய்வுநூலில் வில்சனையோ நெட்டியையோ மருந்துக்கும் குறிப்பிடாமல், முழுவதும் இது தன் கண்டுபிடிப்பு என்பதைப் போல எழுதினார் மார்கன். இன்றும்கூட பல பள்ளிப்பாடங்களில் பால் மரபிழைகளைக் கண்டறிந்தவர்களாக மார்கன், வில்சன் ஆகியோரின் பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.
ஃப்ராய்டு என்றதும் நமக்குக் கனவுகளைப் பற்றிய அவரது நூல்தான் நினைவுக்கு வரும். ஃப்ராய்டே மேற்கோள் காட்டிய பெண் உளவியலாளரைப் பற்றித் தெரியுமா? உளத் தூண்டுதல் பற்றிய மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியவர் மேரி விட்டன் கால்கின்ஸ். இவரது கனவு பற்றிய ஆய்வுகளைத் தனது நூலில் சிக்மண்ட் ஃப்ராய்டு மேற்கோள் காட்டியிருக்கிறார். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மேரி, தனது கல்விக்காக மிகவும் போராட வேண்டியிருந்தது. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக சேர்வதற்குக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. பெண் என்பதால் அவரைச் சேர்த்துக்கொள்ள ஹார்வார்ட் மறுக்கவே, மேரியின் அப்பா நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதி அனுமதி தருமாறு மன்றாடினார். “சரி, சும்மா வகுப்பில் உட்காரட்டும்” என்று ஹார்வார்ட் அனுமதி அளித்தது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட மேரி, சரசரவென்று முன்னேறி பல ஆய்வுகளை மேற்கொண்டார். உளத்தூண்டுதல்கள் பற்றிய பல விஷயங்களைக் கண்டறிந்தார். அவரது கண்டுபிடிப்புகளை அப்படியே எடுத்துக்கொண்ட ஜி.ஈ.முல்லர், ஈ.பி.டிசெனர் ஆகிய இரு உளவியலாளர்கள், கண்டுபிடிப்பில் சில மாறுதல்களைச் செய்துவிட்டு தங்களது சொந்த கண்டுபிடிப்புகளைப் போல அவற்றை வெளியிட்டனர். “எனது கண்டுபிடிப்பை விமர்சனம் செய்த முல்லர், அதன் அடிப்படையை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்” என்று தனது சுயசரிதையில் மேரி எழுதினார்.
இன்னொரு நிகழ்வைப் பார்க்கலாம். 1958ஆம் ஆண்டில், ஜெரோம் லெஜூன் என்கிற விஞ்ஞானி டவுன், “சிண்ட்ரோம் எனப்படும் ஒருவித மூளை வளர்ச்சிக் குறைபாட்டுக்கு 21வது மரபிழையில் இருக்கும் சிக்கல்தான் காரணம்” என்று கண்டறிந்ததாக அறிவித்தார். ஜெரோம் லெஜுன், டர்பின், மார்த்தே காட்டியே ஆகியோரின் பெயரில் ஆய்வுக்கட்டுரை வெளியானது. ஜெரோம்தான் இந்தக் கண்டுபிடிப்புக்குக் காரணம் என்பது போன்ற பிம்பம் உருவானது. மார்த்தே நொந்துபோனார். தனது ஆய்வுச்சில்லுகளைப் படம் எடுப்பதற்காகக் கடன் வாங்கிய ஜெரோம், தனது சொந்த கண்டுபிடிப்பைப் போல அதை வெளியிட்டுவிட்டார் என்று மார்த்தே குற்றம் சாட்டினார். “படத்தைக் காட்டுங்கள் என்று கேட்டபோதுகூட என்னிடம் என்னென்னவோ சாக்கு சொன்னார். ஏதோ நடக்கிறது என்று புரிந்தது. ஆனால், இந்தத் துறையில் இதை எதிர்கொள்வதற்காக அனுபவமோ அதிகாரமோ என்னிடம் இருக்கவில்லை. ஏதோ அரசியல் செய்துவிட்டார்கள்” என்று எழுதிவைத்த மார்தே, வெறுத்துப்போய் மரபணுவியல் துறையையே விட்டுவிட்டு, குழந்தை மருத்துவத்துறைக்கு மாறிக்கொண்டார். அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு அவரது கண்டுபிடிப்புகள் வெளியில் வரவில்லை. இந்தக் கண்டுபிடிப்பின் பொன்விழா கொண்டாட்டத்தின்போது தனது பங்களிப்பைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டார் மார்தே. அதற்குப் பிறகு உலகம் ஜெரோமின் கண்டுபிடிப்பிற்குப் பின்னால் இருக்கும் நிஜ வரலாற்றை மறுசீராய்வு செய்யத் தயாரானது. ஃப்ரான்ஸின் தேசிய மருத்துவ ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், நிஜமாகவே என்ன நடந்தது என்று தீவிரமாக ஆராய்ந்தனர். 2014ஆம் ஆண்டில், “ஜெரோம் வெறுமனே புகழ் தேடிக்கொள்ளும் வேலையைத்தான் செய்திருக்கிறார். மார்தேவின் பங்களிப்புதான் நிஜமானது” என்று அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றார் மார்த்தே.
வாட்சன், கிர்க்கின் டி.என்.ஏ ஆய்வுகளுக்கு மூலக்காரணமாக இருந்து மறைக்கப்பட்ட ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின், ஒயர்கள் இல்லாத தகவல் தொடர்பு முறையைக் கண்டுபிடித்திருந்தாலும் அங்கீகரிக்கப்படாத ஹைடி லெமார், ஜான் டிண்டலுக்கு முன்பே பசுங்குடில் விளைவைக் கண்டறிந்தவராக இருந்தாலும் வரலாற்றிலிருந்து மறைந்துபோன யூனிஸ் ஃபுட் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
எல்லாப் படிநிலைகளிலும் தொடர்ந்து தடைகளை எதிர்கொள்ளும் ஸ்டெம் பெண்களுக்கு இந்த மெடில்டா விளைவு ஒரு பெரிய சாபக்கேடு. குறிப்பாகச் சமீபகாலங்களில் அறிவியல் என்பதே ஒரு கூட்டு முயற்சியாக மாறிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் சரியாகக் கிடைக்காவிட்டால் முன்னேறுவதே கடினமாகிவிடும். ஆய்வுத்துறை போட்டிகள் நிறைந்தது. ஒரு கண்டுபிடிப்பை யார் முதலில் எழுதி வெளியிடுகிறார்கள் என்பது பெரிய பந்தயக்களம். அங்கீகாரம் பெறுவது வெறும் புகழுக்கான செயல்பாடு மட்டுமல்ல, அடுத்தடுத்த நிதி ஒதுக்கீடுகளிலும் அங்கீகாரம் உள்ளவர்கள்தாம் அதிகமாகக் கவனிக்கப்படுவார்கள். ஆகவே நாம் முன்னேறுகிறோமா இல்லையா என்பதே நமது பங்களிப்பு அங்கீகரிக்கப்படுவதில்தான் இருக்கிறது. ஏற்கெனவே பாலின ஏற்றத்தாழ்வுகளால் முன்னேற முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு மெடில்டா விளைவு அதிகமான மன உளைச்சலைத்தான் கொடுக்கும்.
“பெண்கள் இதுபோன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்க மாட்டார்கள்”, “பெண்களுக்கு அறிவு குறைவு” என்பது போன்ற நம்பிக்கைகள் பரவலாக இருந்த காலகட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் சாதாரணமாக நடந்தன. சமீபக் காலங்களில் இது குறைந்திருக்கிறது என்பதே பொதுவான பிம்பம். “இல்லை. மெடில்டா விளைவு இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அதன் வடிவம் மாறியிருக்கிறது, அவ்வளவுதான்” என்று உறுதியுடன் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நவீன காலத்தில் மெடில்டா விளைவு எடுத்திருக்கும் வடிவம்தான் என்ன?
(தொடரும்)
படைப்பாளர்:
நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!