அவனும் அவளும்

சென்னையில் கல்லூரியில் படிக்கும் காலத்தில், அவனை முதன் முதலாகச் சந்தித்த நாளிலிருந்து இப்போதுவரை அவனிடம் பார்க்கவும் நினைக்கவும் விநோதமாயிருப்பது ஒன்றே ஒன்றுதான். காலுக்குச் செருப்பணிய மாட்டான். சீராக ‘டக்இன்’ செய்யப்பட்ட பேண்ட் சர்ட், ஒழுங்காக வாரப்பட்ட தலைமுடி, மென் புன்னகை, ஆழ்ந்த கண்கள், பேசினால் அறியவரும் உலகளாவிய ஞானம். ஏனோ செருப்பணியாத கால்கள்.

இவளின் ஐயா செருப்பணிய மாட்டார். ‘ஒரு விவசாயிக்கு எப்போதும் மண்ணோடு பிணைப்பிருக்கணும்; செருப்பணிவது, மண்ணை மதிக்காதது போல தனக்கு’ என்பார். அவர் பரம்பரையாக விவசாயி என்பதால், அதுவும் அவர் இப்படியொரு விளக்கம் தந்த பிறகு அது விநோதமாகத் தெரிந்ததில்லை. ஆனால், இவன் பேண்ட் சர்ட் டை, காலணியற்ற கால்கள் என்பது அவ்வளவு விநோதத்தைக் காட்டியது.

இவள் கேட்டு ஐயா எதையுமே மறுத்ததில்லை. இவள் விரும்பிய படிப்பு, இவள் விரும்பிய வாழ்க்கை, இவள் விரும்பிய இவன்.

திருமணத்தன்று காசியாத்திரைக்கான மரக்காலணிகளைக்கூட அணிய மறுத்தான்.

ஐயா வற்புறுத்த வேண்டாமெனச் சொல்லிவிட்டார்.

அவனுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். அவன் அம்மா இவனைப்போலவேதான் அதிகம் பேசுபவளில்லை.

இவர்களுக்குத் திருமணம் முடிந்ததுமே, நிலபுலன்கள் ஆடு மாடுகளை விட்டு வந்திருப்பதை நினைவுபடுத்தி உடனே ஊருக்குக் கிளம்பிவிட்டாள்.

இவனும் வாய் வார்த்தையாகக்கூட அவளைத் தங்கச் சொல்லவில்லை. இது இன்னொரு விநோதம்.

இவள் விரும்பினாள் என்று அவன் தாயாரிடம்  திருமணத்திற்காகப் பேச, ஐயா முதன் முறையாக அவனது சொந்த கிராமத்திற்குப் போயிருந்தார். வந்தவரை ஒரு வார்த்தை மலர்ந்து பேசவில்லை அந்தம்மாள். ‘வௌங்காத பயங்க அவன். பத்து வயசிலயே அப்பனை முழுங்கினவன். உங்களுக்கு விருப்பம்னா தாராளமா உங்க பொண்ணுக்குக் கட்டி வைங்க. உங்க இஷ்டம்’ என்று அச்சாணியமாகச் சொன்னாள்.

முதலிரவன்று அவள் உள்ளே நுழைந்ததும் அவன் காலில் விழப் போனாள். அவன் தடுத்தான். ‘காலில் விழுவது மரியாதையே இல்லை’ என்றான். அவள் விழித்தாள். ‘யார் காலிலும் விழுந்து நீங்க உங்க மரியாதையைக் குறைச்சுக்கக் கூடாது’ என்றான்.

கல்யாணத்திற்குப் பிறகு அவள் எவ்வளவு கேட்டுக் கொண்டாலும், அவளைப் ‘போ வா’ என்று பேச மறுத்தான். இவளது அந்தஸ்து காரணமாகவா என்று முதலில் நினைத்தாள். ஆனால் அவன் எப்போதுமே எல்லாரிடமும் மரியாதையாக நடந்துகொள்பவன்தான். கல்லூரியில் ஜுனியர்ஸைக்கூட அவன் அப்படித்தான் அழைப்பான். அவள் நேரிடையாகப் பார்த்திருக்கிறாள்.

பொதுவாக அமைதியானவன்; யார் வந்து பாடத்தில் என்ன சந்தேகம் கேட்டாலும் தயங்காமல் சொல்லித் தருவான். அழகாக வழி நடத்துவான். அவனாக அதிகம் பேச மாட்டான். கல்லூரி கேளிக்கை எதிலும் அவன் இருக்கும் இடமே தெரியாது. 

இவள் அப்படியே நேர்மாறு. இவளிருக்கும் இடத்தில் சிரிப்பிற்குப் பஞ்சமே இருக்காது. ஒரே அரட்டையும் கூத்துமாகத்தான் இருக்கும்.

காதலித்த காலத்தைவிடவும் திருமணத்திற்குப் பிறகு, அவள் அவனை இன்னும் இன்னுமென நேசித்தாள். தன் நேசத்தின் ஒவ்வொரு துளியையும் அவனுடலில் தொட்டு மலர்த்தினாள். உள்ளம் குளிர்ந்து, அவனுக்கு அவளை மனமாரத் தந்தாள். அவனுக்கே இதுவரை தெரியாத, அவனுடலின் ரகசியங்களைக் காட்டினாள்.

அனுதினமும் அவனுக்கு அதிசயமும் பேரதிசயமுமாக இருந்தாள்.

அவனோ, வசந்தகாலம் வர ஒரு மரம் காத்திருப்பது போல ஒவ்வொருமுறையும் அவள் மனம் நெகிழ்ந்து அவனிடம் வரக் காத்திருந்தான்.

ஏன் அவனாக எதையும் முன்னெடுக்கிறான் இல்லை. என்ன  தயக்கம் இது? அதுவும் அவளுக்கு அவனிடம் விநோதமாக இருந்தது. ஆனால், விநோதங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவனிடம் அவளுக்கு வசீகரமும் அதிகரித்தது.

அன்று முழுநிலா நாள். மொட்டை மாடியில் பாய் விரித்தார்கள். அன்று ‘மூன் லைட் டின்னர்.

நிலவொளியில் அவள் முகம் கிறக்கம் தந்தது. அவர்களுக்கு மனமொத்து அமைந்த தினம் அது.

அவள் அவன் காலைத்தான் முதலில் பற்றினாள். அவள் பற்றிய மறுநொடி அவன் வெடுக்கென்று காலை எடுத்துக்கொண்டான்.

அது வரை அவன் காலை யாரும் தொட்டதில்லை. கால் யார் மேலாவது தெரியாமல் பட்டால், ‘சிவா’ என்று சொல்ல வீட்டில் பழக்கி இருந்தார்கள். கால் பட்டால் அது மரியாதைக் குறைவு. கால் என்பதும் செருப்பு என்பதும் கீழ்மையான விஷயங்கள். இப்படித்தான் அவன் அறிந்து வைத்திருந்தான்.

புறங்காலில் முத்தமிட்டாள். ‘காலில்தான் தொடங்கணும்’ என்றாள். பாதத்தை மெல்லப் பிடித்து விட்டாள். நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவன் கண்களில் கண்ணீர். அவள் அதிர்ந்தாள்.

சுந்தரத்தின் அப்பா

அது கடுங்கோடைக்காலம். சுந்தரத்தின் அப்பாவுக்கு சாதாரணமாகவே வியர்த்துக் கொட்டுகிற உடம்பு. வெளியே கடுங்குளிர் மழை பெய்து கொண்டிருக்கும்போதே வியர்க்கிற உடம்பு, இந்த வேகாத வெயிலில், வேட்டியும் சட்டையும் உடலில் ஒட்டிப் பிசுபிசுக்க நடந்து கொண்டிருந்தார். வேட்டியை மடித்துக் கட்டியிருந்தும், உடலின் வியர்வை வேட்டியில் பட்டு நனைந்து தடுக்கித் தடுக்கிவிட நடந்து கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கட்டுக் கட்டாக சிகரெட் அட்டைகள் இருந்தன. எல்லாம் கடன் அட்டைகள். வசூலாகாத கடனட்டைகள்.

அல் அமீன் உருது தமிழ் மேநிலைப் பள்ளி அருகிலேதான் அவரது கடை இருந்தது. அவரது கடையில் வீட்டு உபயோகத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். சிகரெட், பீடி, பாக்கு, புகையிலை போன்றவையும் இருக்கும். எல்லா வாத்தியார்களும் ரீசஸ் பெல் அடித்தால் அங்கு வந்து விடுவார்கள். புகைப்பார்கள். சிறுதீனி வாங்குவார்கள். பசங்களும் பலப்பம், நோட்டு, பறக்கும் தட்டு, சவ்வு மிட்டாய் வாங்க வருவார்கள்.

வாரம் ஒருமுறை டவுனுக்குப் போய், கடைக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கி வருவார். மகன் சுந்தரம் கெட்டிக்காரப் பிள்ளை. நன்றாகப் படிப்பவன். மனைவி செண்பகம் பெரிதாக எந்தப் பிக்கல் பிடுங்கலும் தருபவள் இல்லை. இவர் சேமித்ததில் ஒவ்வொரு வருடமும் அவள் கேட்காமலேயே ஒரு ஜோடி கம்மல், சங்கிலி, வளையல் என்று வாங்கித் தருவார்.

சுந்தரத்தின் அப்பா சற்று இரக்கமான மனதுக்காரர். ‘அப்புறம் தர்றேன் அண்ணாச்சிஎன்றால், சரி என்று தந்துவிடுவார். இப்படித்தான் கடன் அட்டை தொடங்கியது. தீர்ந்த சிகரெட் பெட்டியைக் கிழித்து, குட்டி அட்டைகளாக்கி அட்டையின் உட்புறம் கடனை எழுதி கையெழுத்து வாங்க ஆரம்பித்தார். அதுதான் கையெழுத்துப் போடுகிறார்களே என்று கடன் கொடுத்து, கொடுத்து, கடன் தொகை பெருக ஆரம்பித்தது. ஒரு வாடிக்கையாளருக்குப் பத்து அட்டை எனும் அளவு பெருகியது.

வரவு இல்லாமல், வெறும் செலவாகப் போய்க் கொண்டிருந்ததில் ஒரு கட்டத்தில் வியாபாரம் சரியத் தொடங்கியது. இவர் கடனாளியாகத் தொடங்கினார். எதிர்த்த வீட்டு மெய்யப்பரிடம் அடகுக்கு வைத்த நகைகள் மூழ்கத் தொடங்கின. குருவி மூக்கில் சேர்ப்பது மாதிரி சேர்த்து மனைவிக்குப் போட்டிருந்த அத்தனை நகைகளையும் அடகு வைத்து, வட்டி குட்டி போட்டு, குட்டிக்குக் குட்டி போட்டு எல்லாம் போயின.

வீட்டில் மனைவியிடம் மரியாதைக் குறையத் தொடங்கியது. வீட்டிற்குள்ளே நுழைந்தாலே எப்போதும் சண்டைதான்.

சுந்தரத்தின் அப்பா சுதாரிக்கத் தொடங்கினார். ஒவ்வொருவரிடமும் கடன் காசைக் கேட்க ஆரம்பித்தார். கடனைக் கொஞ்சமாவது அடைத்தால்தான், பொருள் தருவது என்பதைக் கைக்கொள்ள ஆரம்பித்தார். சிலர் கடைக்குப் பொருள் கேட்க வராமலேயே கடனடைக்காமல் நழுவ ஆரம்பித்தனர்.

வாத்தியார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இதோ அடுத்த மாதம் தருகிறேன் அதற்கடுத்த மாதம் தருகிறேன் என்று இழுத்தடித்தார்கள்.

உண்மையில், சிகரெட் அட்டையின் பின்னால் எழுதி வைத்திருக்கும் கடனெல்லாம் ஒரே நேரத்தில் மொத்தமாக வசூலாகி வந்தாலே, அவருடைய இந்த நிலையைச் சமாளித்து விடலாம்.

ஆனால், எல்லாருமே கிட்டத்தட்ட தினக் கூலிகள். யாரையும் நெருக்கிப் பிடித்து பணத்தை வசூலிக்க முடியாது. இவர் சின்ன வயதிலிருந்து வாழுகிற ஊர். எல்லோருமே தெரிந்தவர்கள்.

ஒவ்வொருவரிடமும் தினமும் நடையாக நடந்துகொண்டிருக்கிறார்.

இட்லி விற்கும் விசாலாட்சியிடம் போய் நின்றார். அவள் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த எட்டணா காசை இவர் கையில் தந்தாள். அவள்தான் என்ன செய்வாள். இவர்தான் என்ன செய்வார்.

அடுத்துப் பூக்கடை தனசேகரன். அவன் ஒரு ரூபாய் தந்தான்.

 இப்படி ஒரு ரூபாயும் அரை ரூபாயும் தந்தால், அன்றன்றைக்கான பொழப்பு ஓடிவிடும். ஆனால், மொத்தமாகத் தலைக்கு மேல் நிற்கும் கடன்?

அவருக்குச் சாவதைத் தவிர வேறு வழியில்லை

நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை கண்ணில் பட்டுக் கண்ணீராக வழிந்தது.

சயாசுதீன் சார்

சயாசுதீன் சாருக்கு அன்றைய காலை விடியும்போதே அந்த நாளின் லட்சணம் அப்படியே அப்பட்டமாகத் தெரிந்தது.

அவரது இரண்டாவது மகள் சுனைனா படுக்கையை நனைத்திருந்தாள். பக்கத்தில் படுத்திருந்த அவரது முழு உடையும் நனைந்துவிட கண்விழித்தார்.

அவரது மனைவி சமையல்கட்டிலோ அல்லது வேறு வீட்டு வேலைகளிலோ இருந்து அவ்வாறு நடந்திருந்தால், அவருக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அவள் பக்கத்து வீட்டு பானுவிடம் கதையளந்துகொண்டிருந்தாள். அது அவரை இன்னும் கோபப்படுத்தியது.

ஏலே, சித்த இங்க வாரியளா. வம்பளந்தது போதும்என்று கூப்பாடு போட்டார்.

எப்போதுமே காலையில் எழுந்ததும் ஒருவாய் காப்பித் தண்ணி குடித்த பிறகுதான் அவருக்கு அன்றைய நாள் கொஞ்சம் விளங்கும்படி இருக்கும்.

இப்படிக் கண் விழித்தது எரிச்சலாக இருந்தது.

அன்றைய காலை உணவுசைவாய்க்கு வௌங்கும்படி இல்லை. காப்பித் தண்ணிதண்ணிதான். வாய்க் கொப்புளிக்கக்கூட லாயக்கு இல்லை.

வெறுப்பாக முனகியபடியே பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினார்.

கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இன்றைக்கு என்று பார்த்து ஹெட்மாஸ்டர் பள்ளிக்கூட கேட் வாசலிலேயே நின்றிருந்தார்.

வாத்தியாரே இப்படி இருந்தா படிக்க வார பசங்க எப்படி இருப்பாங்கஎல்லாருக்கும் கேட்கும்படி கேட்டார்.

இரண்டொரு பசங்கள் வாய்ப் பொத்தி சிரித்துக்கொண்டு போனார்கள்.

அது புதுக்கோட்டைஅல் அமீன் உருது தமிழ் மேநிலைப் பள்ளி’.

அங்கு சுந்தரம் ஐந்தாவது வகுப்பு சியில் படித்துக் கொண்டிருந்தான்

அவனும் சையத்ம் முகம்மது அலி ஜின்னாவும் கூட்டாளிகள்.

முதலிரண்டு பீரியட்கள் தமிழ் வகுப்பு. அது முடிந்ததும் ரீசஸ் பெல் அடித்தது.

சுந்தரம் சையத்தின் முதுகில் ஓங்கி அறைந்து, திரும்பிப் பார்க்காமல் வகுப்பை விட்டு வெளியே ஓடினான். இது அவர்களுக்குள் ஒரு விளையாட்டு. தினமும் நடப்பது. ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டு. ஒருவன் மற்றவனை அடித்துவிட்டு ஓடி விடுவான். மற்றவன் அவனைத் துரத்திப் பிடிப்பான். பிடித்தால் அவன் அவுட். அடுத்து அவன் இவனைத் துரத்துவான்.

முகம்மது அலி ஜின்னாவுக்கு ஒரு கால் சூம்பிப் போய் இருக்கும்; அவன், அவன் உயரத்திற்கு இருக்கிற பெரிய கம்பு ஊன்றித்தான் நடப்பான். இவர்கள் இருவரும் விளையாடுவதை வேடிக்கைப் பார்ப்பான். தேவைப்படும்போது நடுவராக இருந்தான்.

சையத்தும் சுந்தரமும் பள்ளி மைதானம் முழுக்க ஓடிக்கொண்டே இருந்தார்கள். எவ்வளவு துரத்தியும் சையத்தால் சுந்தரத்தைப் பிடிக்க முடியவில்லை.

அதற்குள் வகுப்பு தொடங்குவதற்கான பெல் அடித்தது.

இனி, இன்று விட்டால், நாளைதான். சையத் எப்படியாவது சுந்தரத்தை அவுட் பண்ணும் நோக்கத்துடன் தன் செருப்பைத் தூக்கி அவன் மேல் விசிறினான். அது சரியாக சுந்தரத்தின் முதுகைத் தாக்கியது.

அவுட்என்று கத்தினான்.

சுந்தரம் ஒத்துக்கொள்ளவில்லை.

அதெப்படி கையால தொட்டாத்தான் அவுட்.’

அப்படி எதாவது ரூல்ஸ் வச்சிருக்கமா. செருப்பால தொட்டாலும் அவுட்தான்.

இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. அதற்குள் இரண்டாவது பெல்லும் அடிக்க, இருவரும் தங்களது நடுவரான ஜின்னாவைப் பார்த்தார்கள். அது அவுட்தான் என்று முடிவாக ஜின்னா சொன்னான்.

எல்லாரும் வகுப்பிற்குள் வந்துவிட்டார்கள். சயாசுதீன் சார் வகுப்பிற்குள் நுழைந்தார். அவர் சரியான கோவக்காரர். பையன்கள் அவரைக் கண்டாலே அலறுவார்கள். ஒரு கையில் புத்தகமும் இன்னொரு கையில் விசிறியும் வைத்திருப்பார். விசிறியால் வீசிக் கொண்டே பாடம் நடத்துவார். அப்புறம் கேள்விகள் கேட்பார். தவறாகச் சொன்னால், விசிறியைத் திருப்பிப் பிடித்து அதன் குச்சியால் அடிப்பார்.

சயாசுதீன் சார் பாடம் நடத்தத் தொடங்கினார். எழுந்து அன்று நடத்திய பாடத்தின் கேள்வி பதில்களைக் கரும்பலகையில் எழுத ஆரம்பித்தார்.

சையத் எழுதிக் கொண்டிருந்த பென்சில் மொக்கு உடைந்துவிட, பிளேடால் கூர்தீட்டினான். பிறகு பிளேடால் டெஸ்க்கைச் சுரண்டினான். அந்த மெல்லிய தூசியை எடுத்து, சுந்தரத்தின் மேல் விளையாட்டாய் ஊதினான்.

மரத் தூள் சுந்தரத்தின் கண்ணில் விழுந்துவிட்டது. வலி பொறுக்கமாட்டாமல் சுந்தரம், ‘செருப்பாலடிப்பேன்டாஎன்றான்.

சையத், ‘எங்க அடி பார்ப்பம். அதுவரைக்கும் என் கையென்ன பூப்பறிக்குமாஎன்க, சட்டென்று செருப்பை எடுத்து சையத்தை அடித்துவிட்டான்.  

வகுப்பில் லேசாக சலசலப்பு எழுந்தது.

கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்த, சயாசுதீன் சார் பையன்கள் பக்கம் திரும்பினார்.

சையத்தும் சுந்தரமும் அவர் கண்ணில் பட்டார்கள்.

ரெண்டு பேரும் எந்திரிங்கடா.

சாக்பீஸை சுந்தரத்தின்மேல் எறிந்தார். அது குறி தவறாமல் அவன் உச்சந்தலையில் விழுந்தது. அடுத்து டஸ்டரை எடுத்து சையத்தின் மேல் விட்டெறிய, அவன் பாதி முகம் சாக்பீஸ் தூளால் வெள்ளையானது. பசங்கள் கொல்லென்று சிரிக்க, அவன் கண்களில் விழுந்த சாக்பீஸ் தூள் கண் எரிச்சலில் சத்தமாக அழ ஆரம்பித்தான்.

நான் ஒண்ணும் பண்ணல சார். சுந்தரம்தான் என்னைய செருப்பால அடிச்சான்.

என்னது? செருப்பால அடிச்சானா?

இருந்த கடுப்பில் சுயாதீன் சார் இருவரையும் ஹெட்மாஸ்டரிடம் கூட்டிப்போனார்.

அவர் மீட்டிங்கில் இருந்தார். அதற்குள் எப்படி எப்படியோ விஷயம் தீயாய்ப் பரவி, பாதி ஊர்க்காரர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டார்கள்.

ஹெட்மாஸ்டர் இது மதப் பிரச்சினையாக ஆகிவிடுமோ என்று பயந்தார்.

சுந்தரத்தின் அப்பா கடையில் அவருக்கும் கடனிருந்தது. கிட்டத்தட்ட பள்ளியின் அத்தனை வாத்தியார்களுமே கடன் கணக்கு வைத்திருந்தார்கள்.

கடைக்குப் போய் சுந்தரத்தின் அப்பாவைக் கூட்டிவரச் சொன்னார். கடை பூட்டியிருந்தது.

ஆளாளுக்குச் சத்தமாக ஏதேதோ பேசத் தொடங்கினார்கள்.

கடைசியாக எல்லாரும் சுந்தரத்தின் வீட்டுக்குப் போவது என்று முடிவானது.

சுந்தரத்தின் அப்பா சோர்ந்து போய் வீடு வருகையில், ஊரே அவர் வீட்டு வாசலில் கூடியிருந்தது.

விதவிதப் பேச்சுகள்; சண்டைகள்; உரத்தக் கூச்சல்கள்.

எல்லாருமே எவ்வளவு காலமாக வேண்டியவர்களாக இருந்தவர்கள், இப்போது எதிரிகள் போலப் பேசினார்கள்.

பிள்ளையை வளர்க்கத் தெரியவில்லைஎன்று குற்றப்படுத்தினார்கள்.

பிள்ளைக்கு இரும்புக் கம்பியைக் காய்ச்சி சூடு போடணும்என்று தண்டனை தந்தார்கள்.

நோன்பு காலத்தில முஸ்லிம் பையனைச் செருப்பால் அடித்ததற்கு, குடும்பம் வெளங்காமல் போய்விடும்என்று சாபமிட்டார்கள்.

… … … … … … … … … … … …

… … … … … … … … … … … …

சுந்தரத்தின் அப்பா யாருமே எதிர்பார்க்காத ஒன்றைச் செய்தார். தடாலென்று சையத்தின் கால்களில் விழுந்தார்.

விழுந்து எழும்போது சையத்தின் செருப்பை எடுத்துமடேர் மடேரெனத் தலையிலடித்துக் கொண்டார்.

கூட்டம் ஸ்தம்பித்தது.

அன்றிரவு யாரும் சாப்பிடவில்லை. சுந்தரம் அழுது கொண்டே தூங்கிப் போனான். சுந்தரத்தின் அப்பா எங்கோ வெறித்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவன் அம்மா தன் நிலையை நொந்தபடி, காத்திருந்து பார்த்துவிட்டு அவளும் உறங்கப் போய்விட்டாள்.

மறுநாள், படுக்கை அறையையும் சமையலறையையும் பிரிக்கும் அந்த நீள வராந்தாவில் சுந்தரத்தின் அப்பா தூக்கு மாட்டி இறந்து போயிருந்தார்.

கால்கள் உந்தித் தூக்கில் தொங்கும்போது நாற்காலி தரையில் மோதி எழும் சப்தம் யாரையும் எழுப்பிவிடாமல் இருக்க, கீழே சாக்குப் பைகளைப் போட்டிருந்தார்.

குளிர்காலத்தில் தரையின் ஓதம் தாக்காதிருக்க, அந்தச் சாக்குப் பைகளைத்தான் எப்போதும் பாய்க்கு அடியில் போட்டு சுந்தரத்தைத் தூங்கவைப்பார்.

அந்த சாக்குப் பைகளின் கள்ள மௌனத்தின் மேல் நாற்காலி தாறுமாறாகக் கிடக்க, அப்பா இறந்து போயிருந்தார்.

அம்மாவின் அலறிய அலறலில் ஊரே கூடியிருந்தது.

துக்கத்தில் வரும் வார்த்தைகள் விஷக் கொடுக்கு. அப்பா இல்லாத அவனைப் பார்த்து அம்மா சொன்னாள்,

பாவி சண்டாளா, ஒன் அப்பனை நீயே கொன்னுட்டியேடா

அந்த நொடியிலிருந்து சுந்தரம் அம்மாவும் இல்லாத அநாதை ஆனான்.

வள் மடியெல்லாம் அவனது கண்ணீரால் நனைந்திருந்தது. அப்படியே அவனை – சுந்தரத்தை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

‘இந்த மொத்த உலகத்துல, நம்மோட வாழ்க்கைங்கிறது சின்னஞ்சிறிய கண்ணி. எறும்பைவிடச் சின்னது. உலகத்துல நடக்குற எல்லாத்துக்கும், உலகத்தின் மொத்த கன பரிமாணத்துக்கும் நாம மட்டுமே பொறுப்பேத்துக்கிட்டு நம்மளை கஷ்டப்படுத்திக்கக் கூடாது.’

அவன் கண்ணீரைத் துடைத்தாள்.

முதன் முறையாக அவன், அவள் பாதத்தில் முத்தமிட்டான்.

படைப்பாளர்:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. கேளடா மானிடவா, கடல், அருவி முதல் அயலி வரை, கதவு திறந்ததும் கடல், அப்புறம் என்பது எப்போதும் இல்லை, வாழ்க்கை வாழ்வதற்கே ஆகிய நூல்கள் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வந்துள்ளன.