குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் பொறுப்புடன் செய்ய வேண்டிய ஓர் அற்புதமான கலை. அழகான வேலைப்பாடுகள் கொண்ட கண்ணாடிப் பொருளை எவ்வாறு கவனமாகக் கையாளுவோமோ அதைக் காட்டிலும் பலமடங்கு கூடுதலான கவனம் குழந்தைகளை வளர்க்கத் தேவைப்படுகிறது. ஆனால் நம் இந்தியச் சமூகத்தில் எத்தனை பெற்றோர் குழந்தைகளை இயல்பாக வளர்க்கிறார்கள்? முதலில் நம் குழந்தைகளை நாம் சரியான முறையில்தான் வளர்க்கிறோமா என்று யோசித்துப் பார்க்கலாமா தோழர்களே?.

குழந்தைப் பருவம் என்பது பெரும்பாலான நாடுகளில் பதினெட்டு வயது வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜப்பானில் இருபது வயது வரை குழந்தைகளாக அறியப்படுகிறார்கள். குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களுக்குச் செல்லம் கொடுத்து, தேவைப்படுமா, தேவைப்படாதா என்றுகூட யோசிக்காமல் அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கித் தந்து, கேட்காததையும் தகுதிக்கு மீறி வாங்கித் தந்து, அவர்கள் வளர்ந்து வாலிபப் பருவம் எய்தி, சுயமாகத் தன்னிச்சையாக ஏதேனும் செய்ய நினைத்தால் தடுமாறிப் போய்த் தானே நிறையப் பெற்றோர் நிற்கிறார்கள். இன்னொருபுறம் கேட்டது எதையுமே அது அத்தியாவசியமாக இருந்தாலும்கூட வாங்கித் தராமல், தன் விருப்பப்படியான பொருட்களை மட்டுமே வாங்கித் தந்து, தன் விருப்பத்தை அவர்கள் மூளையில் திணித்து, தன் சொல்படியே கேட்டு நடக்கும் தலையாட்டிப் பொம்மைகளாகக் குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் கொஞ்சம் பேர். இதுவா குழந்தை வளர்ப்பு?.

குழந்தைகளைக் கண்டிக்கிறோம் பேர்வழி என்று எல்லார் முன்பும் அவமானப்படுத்துவதைச் சில பெற்றோர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதிகமாகக் கண்டிக்கவும், தண்டிக்கவும் படும் ஒரு குழந்தை உளவியல் ரீதியாகப் பெரும் துன்புறுதலுக்கு ஆளாகிறது. நாளாவட்டத்தில் அவர்கள் சூழலைப் பொறுத்து சைக்கோ மனநிலையைக்கூட அடைந்து விடுகிறது. குடும்ப அமைப்புக்குப் பெயர் போனவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நம் இந்தியச் சமூகத்தில்தான் குழந்தைகளை வளர்க்கத் தெரியாத பெற்றோர் நிறைந்து இருக்கிறார்கள். அதிகமாகத் தண்டிக்கப்படும் குழந்தை பிற்காலத்தில் தானும் அடுத்தவர்களைத் துன்புறுத்தி இன்பம் அடைகிறது. அதிகமாகக் கண்டிக்கப்படும் குழந்தை சிரிப்பு என்பதை மறந்துவிடுகிறது. எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தால் குழந்தை தன் மனதில் இருக்கும்  எண்ணங்களை வெளிப்படுத்த இயலாமல், கடுமையான மனச்சிக்கலுக்கு ஆளாகிவிடும் என்பதைப் பெரும்பாலான இந்தியப் பெற்றோர் உணர்வதே இல்லை. குழந்தைகளிடம் அதிகக் கண்டிப்புடன் நடந்து கொள்வதுதான் நல்லது என்று அவர்கள் தவறாக வழிகாட்டப்பட்டு இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு நல்லது செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே தேவையில்லாமல் ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைப்பதைப் பெரும்பாலான பெற்றோர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். சாதாரணமான உணவு, உடை போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில்கூடத் தாங்கள் சொல்வதைத்தான் தன் குழந்தைகள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய மனநிலை எதில் போய் முடிகிறது என்றால் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளான மிக முக்கியமான படிப்பு, திருமணம் போன்றவற்றில்கூடத் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதிலேயே இந்தியப் பெற்றோர் குறியாக இருக்கிறார்கள். இதில் ஏதேனும் மாறிவிட்டால் அதைப் பற்றிக் கொண்டு பெரும் பிரச்னை செய்கிறார்கள். இது குழந்தைகளுக்கு மனரீதியான அழுத்தத்தைக் கொடுத்து அவர்களின் எதிர்கால வாழ்வைச் சீர்குலைப்பதில் போய் நிற்கிறது.

குழந்தைகள் குறித்து ‘உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல..’ என்று கலீல் ஜிப்ரான் எழுதிய கவிதையின் சில வரிகள்..

     ” உங்கள் குழந்தைகள் 

       உங்களுடையவர்கள் அல்லர்..

       அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்..

        அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களே அன்றி 

         உங்களிடம் இருந்து அல்ல..

         உங்களுடன் இருந்தாலும் 

        அவர்கள் உங்களுக்கு உரியவர்கள் அல்லர்..

        அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்..

         எண்ணங்களை அல்ல..

         அவர்களுக்கென்று சுய சிந்தனைகள் உண்டு..

         அவர்களை நீங்கள் சிறைப் படுத்தலாம்..

         ஆன்மாக்களை அல்ல..

         கனவிலும் நீங்கள் நுழைய முடியாத 

         எதிர்காலக் கூட்டில் 

         அவர்கள் ஆன்மாக்கள் வசிக்கின்றன..

         நீங்கள் அவர்களாக முயலலாம்..

         அவர்களை உங்களைப் போல 

         உருவாக்க முயலாதீர்கள்..

         வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதோ 

         நேற்றுடன் தங்கிப் போவதோ இல்லை..

         உயிர் கொண்ட அம்புகளாய் 

         உங்கள் குழந்தைகளும் 

         விரைந்து செல்லும் வில்லாய் 

         நீங்களும் இருக்கிறீர்கள்..

         வில்லாளியானவர் 

         முடிவில்லாத பாதையின் இலக்குகளை நோக்கி 

         தன்னுடைய அம்புகள் 

         துரிதமாகவும், தூரமாகவும் செல்லும் வண்ணம் 

         உங்களை வளைக்கிறார்..

         அவர் கைகளில் உங்களின் வளைவு 

         மகிழ்வுக்குரியதாக இருக்கட்டும்..

         ஏனெனில்..

          பறக்கும் அம்புகளை மட்டுமல்ல 

          நிலைத்து நிற்கும் வில்லையும் அவர்     நேசிக்கிறார்..”

எவ்வளவு அற்புதமான கவிதை இது! நம்முடன் இருந்தாலும் குழந்தைகள் நம்முடைய உடைமைகள் அல்லர். உயிரும் உணர்வுமான தனி மனிதர்கள் என்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறோம்?. எது சரி, எது தவறு என்கிற நம் எண்ணங்கள் அவை சரியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளிடம் அவற்றைக் கற்பிக்கலாம். ஆனால் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவது ஆகச் சிறந்த வன்முறை. தீ சுடும் என்று உதாரணங்களுடன் விளக்கலாம். ஆனால், சில குழந்தைகள் தொட்டுப் பார்த்துதான் உணர்வேன் என்று பிடிவாதமாக இருக்கும் பட்சத்தில் பட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுவதுதான் நல்லது. ஆனால் அப்படிப் பட்டுத் தெரிந்து கொண்ட குழந்தைகளை அரவணைக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய பக்குவத்தைப் பெற்றோர் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுடன் நாம் வசிக்கலாம். ஆனால், அவர்களின் எண்ணங்களில் நாம் வசிக்கும் அளவுக்கு அவர்களுடன் நமக்கு ஓர் இணக்கமான நட்பையும், நேசத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதில்தான் பெரும்பாலான பெற்றோர் தவறு செய்கிறார்கள். நாம் அவர்களைப் போல வேண்டுமானால் மாறலாம். ஆனால் தப்பித்தவறிக் கூட அவர்களை நம்மைப் போல் மாற்ற எண்ணக் கூடாது என்று ஜிப்ரான் அழகாகச் சொல்கிறார். குழந்தைகளிடம் நாம் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. நாம் குழந்தைகளை எளிதாகக் கையாண்டு எதையும் சொல்லித் தரலாம். ஆனால் அவற்றை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று அவர்களை நாம் வற்புறுத்தக் கூடாது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் அவர்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தரலாம். ஆனால் நாமே மீன்பிடித்து சமைத்துக் கொடுக்கும் பழக்கத்தைத்தான் நம் இந்தியப் பெற்றோர் தங்கள் ஆயுட்காலம் முழுவதும் தாங்கள் செய்வதோடு, தங்கள் வம்சாவளியினருக்கும் அதையே கடத்துகிறார்கள்.

யாரையும் சார்ந்து வாழாத தன்மையைப் பெற்றோர் வழங்குவது இல்லை. எதற்கு எடுத்தாலும் தன்னிடம் அனுமதி பெற்றுத்தான் எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும் என்று இன்றும் எதிர்பார்க்கிறார்கள். என் தோழியின் மகளுக்கு நீண்ட கூந்தல் இருக்கும். அவளால் அதைப் பராமரிக்க இயலவில்லை. முடியை வெட்டிக் கொள்ள விரும்பினாள். ஆனால் தோழியும், அவர் கணவரும் அதற்கு ஒப்புக் கொள்ளவேயில்லை. காரணம் குடும்ப கௌரவம் கூந்தலில்தான் இருக்கிறது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்! அவர்கள் மகளுக்கு இது மன உளைச்சல் கொடுக்கும் ஒன்று என்று அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இது ஒரு சிறிய விஷயம்தான். ஆனால் இந்தச் சிறு விஷயத்தில்கூட குழந்தையின் விருப்பத்தைவிட குடும்ப கௌரவம்தான் முன்னிலையில் இருக்கிறது. இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல?. இத்தகைய உறவுகளில் இணக்கம் எப்படி ஏற்படும்?.

இன்றைய காலகட்டத்தில் மதிப்பெண்கள் என்பவை குழந்தைகளைவிட முன்னிறுத்தப்படுகின்றன. எத்தனை மதிப்பெண்கள் வாங்கினாலும் அவை போதுமென்கிற திருப்தியைத் தருவதில்லை. இன்னும் அதிகம் வாங்க வேண்டும் என்று மதிப்பெண்களின் பின்னே குழந்தைகள் துரத்தப்படுகிறார்கள். நாங்கள் படிக்கும் காலத்தில் எல்லாம் அதிகபட்சமே நானூறைத் தொடும் மதிப்பெண்கள்தான் முதல் மார்க்காக வாங்குவார்கள். அதற்கே அவர்கள் பள்ளியில் மிகவும் கொண்டாடப்படுவார்கள். ஆனால் இன்றைக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற்றாலும்கூட திருப்தி இல்லாமல் எதையோ பறிகொடுத்த மாதிரிதான் குழந்தைகளும் பெற்றோரும் இருக்கிறார்கள். பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்கும் வாய்ப்பு நம் சமூகத்தில் எத்தனை குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது?. மதிப்பெண் போதாமை, நுழைவுத் தேர்வில் தேறாமை, பணமின்மை மட்டுமன்றி அடுத்தவர்கள் சொன்னதைக் கேட்டும், அடுத்தவர் குழந்தைகளைப் பார்த்தும் ஏதோவொரு படிப்பில் சேர்த்துவிடுகிறார்கள். பிடிக்காமல் சேர்ந்து குழந்தைகள் படிக்கிறேன் பேர்வழி என்று காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள். எதிர்காலத்தைச் சிரமப்படுத்திக் கொள்கிறார்கள். காலம் கடந்த பிறகு கண்ணீர் வடிக்கிறார்கள். பத்தில் ஒன்பது இந்தியக் குழந்தைகள் மன அழுத்தத்துடன் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 

என் மகளின் வகுப்புத் தோழன் கற்றல் குறைபாடு கொண்டவன். எப்படியோ பள்ளியிறுதிவரை வந்து விட்டான். பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவனை நான் சந்திக்க நேர்ந்தது. சிறிது நேரம் மனம் விட்டுப் பேசியதில் அவனது பிரச்னை என்னவென்று புரிந்தது. ஆனால் அவன் பெற்றோர் அவ்வாறு அவனிடம் பேசக் கூடச் செய்ததில்லை என்று அறிந்த போது உள்ளபடியே வருந்தினேன். வாழவே பிடிக்கவில்லை என்று சொன்னவனிடம் நிறைய அறிவுரைகள் இதமாகச் சொன்னேன். அவன் தாயிடம் பேசுவதாகச் சொன்னபோது அவன் சொன்னது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. “வேண்டாங்க ஆண்ட்டி.. அப்புறம் எங்களைக் குறை சொன்னியா அவங்ககிட்டன்னு திட்டுவாங்க” என்றான். “படிப்பு வரலைன்னு வருத்தப்படாதே தம்பி. உனக்குள்ளே வேற திறமைகள் நிச்சயம் இருக்கும்.. அது என்னன்னு கண்டுபிடிச்சு.. அதை வளர்த்துக்கோ..” என்றேன். தலையாட்டிச் சென்றான். அதன் பின் சில வருடங்கள் கழித்து மீண்டும் அவனைப் பார்த்தேன். பள்ளியிறுதியில் தோற்று, தனித்தேர்வு எழுதித் தேர்வு பெற்று இப்போது தொழில்நுட்பப் பிரிவில் சேர்ந்து நன்றாகப் படித்து வருவதாகச் சொன்னான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுவதற்கு எத்தனை பெற்றோர் முன்வருகிறார்கள்?. அவர்களது ஈகோதான் இதற்கு முக்கியக் காரணம். நான் பெற்ற குழந்தை நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும்,  கேட்க வேண்டும் என்கிற ஆதிக்க மனப்பான்மைதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் மூலக் காரணம்.

நம் இந்தியச் சமூகத்தில் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் பெற்றோர் மிகவும் குறைவே. தங்கள் சிறகுகளிலேயே பொதிந்து வளர்த்துவிட்டுப் பிறகு திடுமென்று ஒருநாள், “உனக்கு ஒன்றும் தெரிவதில்லை. நீ எதையும் கற்றுக் கொள்வதில்லை..” என்று அவர்கள் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். இது குழந்தைகளுக்கு இன்னும் பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது. தங்கள் விருப்பப்படி குழந்தைகள் இயங்க பெற்றோர் முதலில் அனுமதிக்க வேண்டும்.  அவர்களின் செயல்பாடுகளை நம் கண்காணிப்பில் வைத்துக் கொண்டு அவர்கள் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும். அவர்கள் செயல்பாடுகளில் நல்லது கெட்டதுகளைப் பதமாக எடுத்துரைத்தால் காலம் முழுவதும் அவர்கள் அதனை மறக்க மாட்டார்கள். எளிதாக இருக்கும் குழந்தை வளர்ப்பை நாம்தான் மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டு புலம்பித் தள்ளுகிறோம்.

மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்தப்படும் குழந்தை எதையும் சுலபமாகக் கற்றுக் கொள்கிறது. குழந்தை வளர்க்கும் போது அதில் தாய், தந்தை இருவருக்குமே பங்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நம் சமூகத்தில் எல்லாப் பொறுப்பும் தாயின் தலையிலேயே கட்டப்படுகிறது. குழந்தையின் செயல்கள் தந்தைக்குப் பிடித்தமானதாக இல்லாத போது தாய்தான் குற்றம் சாட்டப்படுகிறார். இதை தவிர்க்க குழந்தை பிறந்தபின் சில வருடங்கள் தாய் பராமரிக்க வேண்டும். அதன் பின்னால் சில வருடங்கள் கட்டாயமாகத் தந்தைதான் முழுப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். அப்போதுதான் ஒருவரை மட்டுமே சுட்டிக்காட்டும் விரல்களின் எண்ணிக்கை குறையும். குழந்தை பிறந்த முதல் ஆயிரம் நாட்களில் அவற்றின் மூளை மிகவும் வேகமாகச் செயல்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் குழந்தையின் கற்றல் திறன், வளர்ச்சி மற்றும் சமூகத்தில் அவர்களது பங்களிப்பு போன்றவை தீர்மானிக்கப்படுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. குழந்தையின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு போன்றவற்றைப் பொறுத்தே அந்த வாய்ப்பு செயல்படுகிறது. குழந்தையின் சூழல்தான் அவர்களின் மூளை வடிவமைப்பை உருவாக்குகின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதனால் குழந்தையின் வாழ்க்கையில் முதல் ஐந்து ஆண்டுகளில் அவர்களுக்கான சரியான, தெளிவான, ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலை உருவாக்கப் பெற்றோர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது நாம் அமைத்துக் கொடுக்கும் அடித்தளம்தான் குழந்தைகள் பின்னாளில் தங்கள் வாழ்க்கை என்னும் கட்டிடத்தை அழகாக எழுப்ப உதவுகிறது.

குழந்தைகள் கேட்கும் எதையும் உடனே வாங்கித் தந்துவிடக் கூடாது. அந்தப் பொருளின் முக்கியத்துவத்தையும், தேவையையும் பொறுத்து அவற்றை வாங்கித் தரவேண்டும். நம் குழந்தைகள் எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்க கூடாது என்று நினைப்பது நல்ல எண்ணம்தான். ஆனால் அதுவே அவர்களை முடக்கி போடும் ஒன்றாக இருந்து விடக்கூடாது அல்லவா? பெற்றோரின் சிரமங்களையும் குடும்பத்தின் சூழ்நிலையையும் குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் வளர்க்க வேண்டும். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கார் ஷோரூமிற்கு வேலைக்குச் சென்ற இளைஞர் அங்கே வேலை செய்யப் பிடிக்காமல் தன் பெற்றோரிடம் வந்து அதேபோல ஒரு ஷோ ரூம் வைத்துத் தருமாறு கேட்டிருக்கிறார். இதற்கான ஆரம்பகட்ட முதலீடாக 50 லட்சம் வேண்டும் என்று அசால்டாக சொல்கிறார். குடும்பத்தின் சூழலைப் புரிந்து கொள்ளாமல் அவரை வளர்த்த பெற்றோரின் வளர்ப்புதானே இதற்குக் காரணம்?.

காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து குழந்தைகளை நாம் வழிநடத்திக் கொண்டே இருக்கிறோம். குளிக்க, கழிவறை செல்ல, உடுத்த, சாப்பிட, படிக்க, நிற்க, நடக்க, பள்ளி செல்ல, தூங்க என்று எல்லாவற்றையும் நம் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று மெனக்கெடுகிறோம். அவர்கள் சுயமாகச் சிந்திக்க நாம் நேரமே கொடுப்பதில்லை. என் தோழியின் உறவினர் பெண் ஒருவர் தன் மகளை நீச்சல், சிலம்பம், கராத்தே, குதிரை ஏற்றம், இந்தி, அபாகஸ், ஜெர்மன் க்ளாஸ், டிராயிங் என்று சகல வகுப்புகளுக்கும் அனுப்புகிறார். அது குழந்தையா அல்லது ரோபாட்டா என்று எனக்கு மலைப்பாக இருந்தது. அந்தக் குழந்தை எல்லா வகுப்புகளுக்கும் முழு மனதோடு சென்றால் பரவாயில்லை. நிறைய வகுப்புகளுக்குப் புலம்பிக் கொண்டே செல்கிறாள் என்று தோழி சொன்னதைக் கேட்டு வருத்தமாக இருந்தது. எல்லாக் கலைகளையும் கரைத்து ஸ்பூனில் ஊட்டி விட வேண்டும் என்றுதான் பெற்றோர் அவசரப்படுகிறார்கள். இதில் பெரும்பாலான பெற்றோர் தன் குழந்தை சகலகலா வல்லவராக விளங்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுவதில்லை. அடுத்த குழந்தைகளைவிட மேம்பட்டு இருக்க வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மையில்தான் குழந்தைகளை வற்புறுத்துகிறார்கள். குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்துக்குள் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை இதுதான். வாழ்க்கையில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று சமூகம் கொடுக்கும் அழுத்தம் இன்னொரு வன்முறை.

குழந்தைகள் வளர்ந்த பின்னாவது அவர்களை நிம்மதியாக விடுகிறோமா?. “எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைப் பெத்து வளர்த்தேன்.. என்னை நீதான் பார்த்துக்கணும்.. என்னை விட்டுட்டு நீ எங்கேயும் போகக் கூடாது.. எனக்குச் சாகுற வரைக்கும் கஞ்சி ஊத்து..” என்று அவர்களை எவ்வளவு எமோஷனல் டார்ச்சர் செய்கிறோம். அவர்கள் நம் வயிற்றில் பிறந்ததே தவறோ என்று எண்ணும் அளவுக்கு அவர்களை நோகடிக்கிறோம். பாசம், பாயாசம் என்றெல்லாம் சொல்லி அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்குப் பெருந்தடை விதிக்க இந்தியப் பெற்றோர் வெட்கப்படுவதேயில்லை. பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வேலை செய்யவோ, படிக்கவோ சென்றிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் கூச்சமின்றி, “வயசான காலத்துல உங்களை இப்படித் தனியா விட்டுட்டுப் போகலாமா?” அப்படி, இப்படி என்று பற்ற வைத்து விட்டுப் போக ஒரு கும்பல் இருக்கும். உண்மையைச் சொல்லப் போனால் இன்று எத்தனை பேர் தங்கள் தாய், தந்தை தங்களை வளர்த்ததைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?.

சரியான குழந்தை வளர்ப்பு என்பது அந்தந்தத் தருணங்களில் அவர்களை மகிழ்ச்சிகரமாக உணரச் செய்வதே. நம் கடந்த கால ஆசைகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் போன்றவற்றை அவர்கள் மீது அழுத்தமாகத் திணிக்கக் கூடாது. அவர்கள் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். தவறே செய்யாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் தவறுகள் பெரிதாகாமல் வழிநடத்த வேண்டும். அதற்காகப் பெற்றோர் முதலில் தங்கள் கண்ணோட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். குழந்தைகள் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துதல் முக்கியம். பெற்றோர் வளர்ந்த சூழ்நிலையும், குழந்தைகள் வளரும் சூழ்நிலையும் நிச்சயம் வேறுபட்டுத்தான் இருக்கும். அவற்றை ஒன்றோடு இன்னொன்று ஒப்பிட்டுக்கொண்டு நம்மை நாமே குழப்பிக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் மிக்கது. அவர்களை ஒருவரோடு இன்னொருவரைப் பொருத்திப் பார்த்துப் பேசுவதை விட்டுவிட வேண்டும். வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்ள கற்றுத் தர வேண்டும். மிக முக்கியமாக நம்மைப் பார்த்துதான் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். நம் குறைகளை அவர்களிடம் மறைக்காமல் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது நன்மை பயக்கும். பாடங்களை மட்டுமே படிக்க வற்புறுத்தாமல் இந்த வானத்தின் கீழ் இருக்கும் எல்லா விஷயங்களையும் பற்றிப் பேசலாம். பெற்றோர் தங்கள் குழந்தைகள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் நேர்மையான பதில் சொல்லத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சக மனிதர்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். அதற்கு முன் நமக்கு அந்த அக்கறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் குழந்தைகள் கருத்தையும் கேட்கலாம். அது அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வழிவகுக்கும். எத்தகைய பிரச்னை என்றாலும் பெற்றோரிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோர் தங்களுக்குள் ஒரு சுய அலசல் செய்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சர்வாதிகாரம் செய்யும் பெற்றோரா?, நடுநிலையுடன் நடந்து கொள்ளும் பெற்றோரா?, நட்புடன் பழகும் பெற்றோரா?, எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற பெற்றோரா? இதில் நாம் எந்த வகை என்று எந்தவித சமரசமும் இன்றி ஒப்புக் கொள்ள வேண்டும். 

இன்றைய குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள். மிக வேகமாக முதிர்கிறார்கள். அவர்கள் தொலைந்து போன குழந்தைமை உடையவர்களாக இருக்கிறார்கள். குழந்தை பருவம் எங்கு முடிகிறது; இளமைப் பருவம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை அறுதியிட்டுக் கூற இயலாது. என்றாலும் கால மாற்றத்தினை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நாமும் குழந்தை வளர்ப்பில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வளர்ப்பு முறையையே வலுக்கட்டாயமாகப் பின்பற்றி வந்தால் நிச்சயம் குழந்தைகளுக்கும்,  பெற்றவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளிதான் உண்டாகும். குழந்தைகள் நெகிழ்வான களிமண் போன்றவர்கள். அவர்களை வாகாக வனைந்து அழகான கலைப்பொருட்கள் ஆக்குவது திறமையான, சரியான, அழுத்தங்கள் அற்ற வளர்ப்பு முறையில்தான் இருக்கிறது. ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டமைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது