இரண்டாம் மும்மாதம் என்பது 13வது வாரம் தொடங்கி 28வது வாரத்தில் நிறைவடையும். கருவின் வளர்ச்சியில் இன்றியமையாத ஒரு மும்மாதம் இது.

கருவின் வளர்ச்சி

1) 13வது வாரம்

தாயின் கர்ப்பப்பையின் நீள, அகலங்கள் வளர்ந்து தாயின் அடிவயிறு பெரிதாக வெளியே தெரியும். தாயின் அடிவயிறு ஒரு பந்துபோல் தெரியும். குழந்தை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் காலம் இது.

2) 14வது வாரம்

குழந்தையின் முகம் தெளிவாகத் தெரியும் வாரம் இது. ஏனெனில் காது, கண் போன்றவை எல்லாம் முழு வளர்ச்சி அடைந்து காணப்படும் இவ்வாரத்தில்.

வெளியில் இருந்து வரும் அதிர்வுகளுக்கு குழந்தை எதிர்வினை ஆற்றத் தொடங்கும் காலமும் இதுவே. ஆம்!வெளியில் ஏற்படும் அதிர்வுகள் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஒரு தூண்டுதலாய் அமையும். அதன்பொருட்டு குழந்தை அசைய தொடங்கும். குழந்தையின் கைரேகைகள் உருவாகும் காலமும் இதுவே.

3) 15வது வாரம்

குழந்தையின் மயிர்க்கால்கள் வெளிவரத் தொடங்கும் காலம் இது. தலைமுடி அரும்பத் தொடங்கும். தோலில் ரோமங்கள் வளரத் தொடங்கும்.

4) 16வது வாரம்

குழந்தையின் உடலில் ரோமங்கள் நன்கு வளர்ந்து இருக்கும்.

குழந்தையின் இதயத்துடிப்பை ஸ்கேன் இல்லாமலேயே FETOSCOPE அல்லது STETHOSCOPE உதவியுடன் மருத்துவரால் கேட்க இயலும். இந்தக் காலகட்டத்தில்தான் குழந்தையின் அசைவை நன்கு உணர்வார்கள் தாய்மார்கள்.

குழந்தையின் எடை அதிகரிப்பதாலும், கர்ப்பப்பையின் எடை அதிகரிப்பதாலும், தாயின் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்படும் தாய்க்கு. இதன் விளைவாகத் தாயின் கால் பாதங்களில் லேசான வீக்கம் தென்பட ஆரம்பிக்கும். தாயின் கால் வீக்கம் வேறு சில காரணங்களிலும் (நோய்கள்) ஏற்படும். ஆகையால் கால் வீக்கம் physiological தானா அல்லது pathological oedemaவா என மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

5) 17வது வாரம்

குழந்தையின் உடலில் சதைப்பிடிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கும். குழந்தையின் உடல் எடை அதிகரித்திருக்கும். இதனால் தாயின் உடல் எடையிலும் முன்னேற்றம் காணப்படும்.

6) 18வது வாரம்

குழந்தை விரல் சூப்புவது, கொட்டாவி விடுவது இதை எல்லாம் தெளிவாக ஸ்கேன் மூலம் காணமுடியும் இவ்வாரத்தில். தாயின் வயிற்றில் லேசான அசைவை கொடுத்தால்கூட கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் கண் இமைகள், கண்மணிகள் அசையும். தாயின் தொப்புளுக்குச் சற்று கீழேவரை கர்ப்பப்பை வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

7)19வது வாரம்

குழந்தையின் சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய vernix எனப்படும் வெண்ணிறப்படலம் குழந்தையின் தோலின்மேல் உருவாகியிருக்கும்.

8) 20வது வாரம்

வெளியில் இருக்கும் அதிர்வுகளை எல்லாம் நன்கு கிரகித்துக்கொள்ளும் குழந்தை. அதற்குத் தகுந்தாற்போல் குழந்தையின் உடலும் அசையும். பனிக்குட நீரில் நீந்துதல், அசைதல், உடலைத் திருப்புதல் போன்றவற்றைச் செய்யும் குழந்தை. தாயின் தொப்புள்வரை கர்ப்பப்பை வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

9) 21,22,23வது வாரங்கள்

குழந்தையின் தசை வளர்ச்சி இன்னும் அதிகரித்து இருக்கும். குழந்தையின் பல் ஈறுகள் உருவாகி வலுப்பெறத் தொடங்கும். கர்ப்பத்தினால் ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம், உயர் சர்க்கரை அளவு போன்றவை 20வது வாரத்தில்தான் தெரியவரும்.

அதனால் 20வது வார முடிவு தொடங்கி 24வது வாரம் வரை அவசியம் ரத்த அழுத்தத்தையும், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவையும் காணவேண்டும்.

குழந்தை குறைபாடுகள் கண்டறியும் ஸ்கேன் பரிசோதனையும் 20-21வது வாரத்தில் செய்தல் வேண்டும். ஏனெனில் உடல் உறுப்புகள் அனைத்தும் உற்பத்தியாகி அதன் பெரும்பாலான வளர்ச்சியைக் குழந்தை அடைந்திருக்கும் 20வது வாரத்தில்.

10) 24,25,26,27வது வாரங்கள்

குழந்தையின் உடல் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகத் தொடங்கியிருக்கும். இதனால் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் மேம்படும்.

குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் காலம் இது. குழந்தையின் தோல் முழு வளர்ச்சியடைந்து இருக்கும். அதனால் கை கால்களில் தோல் மடிப்புகள் எல்லாம் உருவாகி இருக்கும்.

‘குழந்தை’ என நாம் கருதும் குழந்தையின் உருவம் தற்போது நன்றாகத் தெரியும் ஸ்கேன் பரிசோதனையில்.

11) 28வது வாரம்

REM எனப்படும் Rapid eye movement தொடங்கியிருக்கும் குழந்தைக்கு. ஒருவரின் உறக்கத்தில் இந்த REM நிலையில்தான் கனவுகள் எழும். அதனால் குழந்தைக்கும் இந்த வாரம் முதல் கனவுகள் எழும். குழந்தையின் துரித கண் அசைவுகொண்டு நம்மால் இதைக் கணிக்க முடியும்.

(தொடரும்)

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.