பெண்களின் பெரும்பாலான நேரத்தையும் உழைப்பையும் சுரண்டும் மிக முக்கியமான இடம் வீட்டின் சமையலறைதான் என்று கூறினால் மிகையாகாது.

சமையல் வேலைகள் என்றாலே, பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்றும், எங்களைத் தவிர சமையலறைக்குள் வேறு யாரும் நுழைய அனுமதியில்லை எனவும், இதுதான் குடும்பத்தில் தங்களுக்கான அடையாளத்தை நிரூபித்துக் காட்டும் இடம் என்று பெண்களே சமையலறையைக் குறித்துப் பெருமையடித்து உரிமைக் கொண்டாடும் அளவிற்குப் பெண்களின் மூளையைச் சலவை செய்து வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.

ஒவ்வொரு வீட்டிலும் +2 தேர்விற்குத் தயாராகும் பிள்ளைகள், கல்லூரிகளுக்குச் செல்லும் பிள்ளைகள், அவசர அவசரமாக காலைப்பொழுதில் பறக்கும் சாஃப்ட்வேர் பறவைகள் என அத்தனை பேரும் அவர்களுடைய வேலைக்கு நேரத்திற்குச் செல்கிறார்கள் என்றால், அதற்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள்?

வீட்டிலுள்ள அனைவரும் உறங்கிய பின் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு, மறுநாள் காலை யாருக்கு என்ன உணவு சமைக்கலாம் என்கிற யோசனையுடன் ஒவ்வொரு வீட்டிலும் பின் தூங்கி முன் எழுகிறாளே அவள்தான் காரணம்…

காலை எழுந்ததும் காபி போடுவதில் ஆரம்பித்து, அவசரமாக அலுவலகத்திற்குத் தயாராகும் கணவருக்கு, காலை உணவாகச் சுடச்சுட இட்லி சம்பாரில் தொடங்கி, சம்பார் பிடிக்காத பிள்ளைகளுக்குக் கட்டிச் சட்னி மறுபக்கம், வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களின் உடல்நலத்திற்கேற்றவாறு நவதானிய சாப்பாடு செய்த பின்னர், போதாகுறைக்கு டயட் பின்பற்றுபவர்கள் இருந்தால், அவர்களுக்கு உப்புச் சப்பில்லாத தனிச் சாப்பாடு, மதியத்துக்கான சாப்பாட்டை அனைவருக்கும் டப்பாவில் கொடுத்துவிட்டு, தான் சாப்பிடலாம் என மணியைப் பார்க்கும் போது, அடுத்த வேலைகள் சமையலறையில் வரிசைகட்டி நிற்பதைப் பார்த்தால் தலையே சுற்றிவிடும்.

சரி, இவ்வளவு அதிகாலை எழுந்து வீட்டிலிருப்பவர்களின் ருசியறிந்து பல வகையான உணவுகளைச் சமைத்து தரும் எந்தப் பெண்ணாவது, நிதானமாக அமர்ந்து சுடச்சுட, தான் செய்து வைத்த சமையலை முதலில் சாப்பிட்டதுண்டா என்று கேட்டுப்பாருங்கள்?

சில நேரம் காலை வேலைப்பளுவால் அரை வயிற்றுக்குச் சாப்பிடுவதும், உணவைத் தவிர்ப்பதும், காலை உணவை மதியம் சாப்பிடுவதும், முந்தைய நாள் மீந்த உணவைச் சேர்த்து வைத்து சாப்பிடுவதும் எனத் தன் உடல்நிலை குறித்து அக்கறையில்லாமல் இருக்கும் பெண் தியாகிகளை என்னவென்று சொல்வது?

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த விடுமுறை நாட்களிலாவது அவள் நிதானமாக எழுந்து, அவளுக்குப் பிடித்த வண்ணம் பதார்த்தங்களைச் செய்ததுண்டா என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை என்றுதான் வரும்.

வீட்டிலுள்ள மற்றவர்கள் அனைவருக்கும் வாரம் இரண்டு நாட்களாவது, ஒரு நாளாவது தங்கள் வேலையிலிருந்து ஓய்வெடுக்க விடுமுறை உண்டு. ஆனால், பெண்களின் சமையலறைக்கு மட்டும் 365 நாட்களும் வேலை நாட்கள்தாம். ஊதியமில்லா உழைப்பாளிகள் அல்லவா பெண்கள்.

இப்படி நேரம் காலம் பார்க்காமல் வருடத்தின் அத்தனை நாட்களும் ஓயாது உழைக்கிறாளே, உங்கள் வீட்டு மகராசி, அவளுக்கு ஒரு நாளாவது நீங்கள் லீவு கொடுத்ததுண்டா தோழர்களே? என்றாவது ஒரு நாள், நீங்கள் சாப்பிடும்போது, “சேர்ந்து சாப்பிடலாம் வா” என்று உங்கள் இணையரையோ தாயையோ என்றாவது அழைத்ததுண்டா? “தினமும் நீதானே பரிமாறுகிறாய், இன்று நீ உட்காரு. நான் உனக்கு தோசை சுடச்சுட சுட்டுத் தருகிறேன்” என்று கூறியதுண்டா?

விடுமுறையின் போதுதான், சுடச்சுட பஜ்ஜி போண்டா சுட்டுக் கொடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இதிலும் பெருங்கொடுமை பண்டிகைக் காலம் வந்துவிட்டால் கேட்க வேண்டிய தேவையே இல்லை. வீட்டிலுள்ள ஆண்கள், நண்டு சிண்டுகள் என அனைவரும் புத்தாடை உடுத்தி வெளியே சென்று பட்டாசு வெடிப்பதும், தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்து அரட்டை அடிப்பது எனக் கொண்டாட்டம் களைகட்ட, பண்டிகை நாளிலும் கூட புது உடுப்பு உடுத்தினால் எண்ணெய் பட்டு பாழாகிவிடும் என நினைத்து, நைந்த பழைய உடுப்பில் எண்ணெய் சட்டியில் பலகாரம் சுட்டுக் கொண்டிருப்பாள் அந்த வீட்டின் குடும்பத் தலைவி.

“ரசித்துதானே இதைச் செய்கிறார்கள் பெண்கள்..” என்று நீங்கள் கேட்கலாம். பல தலைமுறைகளாகப் பழக்கப்படுத்தி வைத்ததால் வேறு வழியில்லாமல் போலியாக ரசிக்க கற்றுக்கொண்டுவிட்டனர் என்பதுதான் எதார்த்தம். “உன்னோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது” என்பது போன்ற வார்த்தைகள் பெண்களை அடுப்பங்கறையில் கட்டி வைக்கப் பயன்படுத்தும் மாயக்கயிறுதானே!

திருமணத்திற்கு முன்பு காலோடு தலை தெரியாமல் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து, அடுத்த நொடி செய்ய வேண்டிய வேலை குறித்த எந்தவித ஆரவாரமில்லாமல், தூங்கும் அந்தக் காலங்கள் தந்த அனுபவங்களை நினைத்தாலே இனிக்கும் கனாக்காலங்கள்தாம்.

வாழ்க்கைப் பயணத்தில் தனக்குப் பிடித்த பல பிரியமான விஷயங்களை இழப்பது இயல்பு. ஆனால், அப்படி இழந்த பட்டியல் ஆணுக்கானதைவிடப் பெண்ணுக்கு எப்போதுமே அதிகம். மிக மிக அதிகம். தூக்கத்தைத் தொலைக்கிறோம்; பள்ளி கல்லூரி கால தோழிகளைப் பிரிகிறோம்; அடையாளங்களை, ஆசைகளை, தன்னுடைய திறமைகளை, குறிப்பாகத் தோழிகளுடன் சேர்ந்து அரட்டை அடித்து சத்தம் போட்டுச் சிரிப்பதை, தனக்கான நேரத்தை என்று பல ஆயிரம் விஷயங்களைப் பெண்கள் பாதியிலேயே விட்டிருக்கிறார்கள் என இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

நல்லவேளை விஞ்ஞான வளர்ச்சியால், மிக்ஸி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டி, கேஸ் அடுப்பு, இன்டக்ஸன் என நம் சமையல் அறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பெண்களின் மூளையைச் சுற்றி ரிங்காரமிட்டுக் கொண்டிருப்பது சமையல் செய்திகள்தாம். காலையிலிருந்து படுக்கையறைக்குச் செல்லும் வரை அடுத்தடுத்த சமையலறை குறித்த எண்ணங்களே அவர்கள் மூளையில் வலம் வருகின்றன.

சமையல் என்பது ஒரு கலை. அது மறுப்பதிற்கில்லை. அடுப்பில் மசாலாப் பொருட்கள் வறுப்பதைக் கண் பார்க்க, அதன் மணத்தை நாசி நுகர, வறுபடும் சத்தம் காதுகள் கேட்க, கையிலெடுத்து பதம் பார்க்க, இறுதியில் நாவின் சுவையரும்புகள் ருசி பார்க்க என ஐம்புலன்களையும் ஈடுபடுத்தி செய்ய வைக்கும் ஒரே கலை.

குழந்தைப் பருவத்திலிருந்து தாயின் கையால் ஒரு பக்குவத்தில் ரசித்து புசித்து ருசி கண்ட நாவின் சுவையரும்புகள், அவற்றை போல தன் வாழ்நாளெல்லாம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு.

தன் தாய் வயதாகிவிட்டாலும், அன்பு என்ற பெயரில் “உன் கைப்பகுவம் யாருக்கும் வராது” என்று கூறி அவர்களை சமைக்கச் சொல்லி வற்புறுத்தும் முன் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் . நமக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்று.

உங்கள் சுயநலத்திற்காக ஒருவரை தொடர்ந்து வேலை வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?

உண்மையிலேயே உங்கள் அம்மாவின் மீதோ, உங்கள் வீட்டுப் பெண்கள் மீதோ அதீத அன்பிருந்தால், உங்களால் முடிந்தளவு சமையலறையில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

உங்கள் வயதான தாயின் பாரத்தை குறைக்க விரும்பினால், சமையல் உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம்.

சமையல் தொடர்ந்து செய்வதால் வேலையில் சலிப்பு உருவாகிறது என்று அலுத்துக் கொண்டாலும், நம் பெண்கள் அதை வேறு யாரிடமும் ஒப்படைக்க மறுப்பு தெரிவிப்பதும், தயக்கம் காட்டுவதும் சுவாரஸ்யமான உளவியல் உண்மை.

நானே அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொள்ள வேண்டும், நான் ஓடாய் தேய்வதைப் பார்த்து குடும்பத்தார் அனைவரும் என் தாய் போல் உண்டா? என் மனைவியைப் போல யாராவது இப்படிச் சமைக்க முடியுமா? எங்களுக்காக எவ்வளவு மெழுகுவத்தியாக உருகுகிறாள்?” என்று அவர்களைக் குறித்துப் பாராட்ட வேண்டும் என்கிற ஒருவித ஏக்கமும், தீரா தாகமும் எப்போதுமே பெண்களைவிட்டு விலகாமல் இருக்கிறது என்பது மற்றுமொரு கசப்பான உண்மை.

வீட்டு வாசலில் இருக்கும் பால் பாக்கெட்டை அம்மாவிடமும், நியூஸ் பேப்பரை அப்பாவிடமும் கொடுக்க வேண்டுமென்று இந்தக் குழந்தைகளுக்கு யார் சொல்லிக் கொடுத்தது?

அம்மாதான் சமையல் செய்ய வேண்டும்; அப்பாதான் குடும்பத்திற்காக வெளியே சென்று உழைத்து கொட்ட வேண்டும்; அக்கா இருந்தால், வீட்டைக் கூட்டி சுத்தம் செய்து அம்மாவிற்கு உதவியாக இருக்க வேண்டும்; தம்பி என்றால் விளையாடலாம் என்று குடும்ப உறவுகளைப் பற்றிய தவறான புரிதலை காலங்காலமாக நம்மிடம் விதைத்தோடு மட்டுமல்லாமல், பிஞ்சுகளின் உள்ளங்களிலும் பள்ளிப் பாடங்களின் மூலமாக விதைக்கிறதல்லவா இந்தச் சமூகம்.

இன்று பெரும்பாலான குடும்பத்திலிருக்கும் அனைத்துப் பெண்களும் அலுவலகம் சென்று சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். அப்படியிருக்கும் பட்சத்தில் இன்னும் பெண்கள் தலையில் மட்டுமே சமையலறை வேலையைத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்?

எங்கள் வீட்டில் அம்மா, அப்பா இருவரும் அலுவலகம் செல்கிறார்கள். அதனால் காலைப் பொழுது நானும் தம்பியும் சேர்ந்து வீடு பெருக்குவோம், சுத்தம் செய்வோம், அப்பா அம்மாவிற்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்வோம், அப்பா ஒரு நாள் சமையல்; மற்றொரு நாள் அம்மா சமையல், விடுமுறை நாட்களில் இருவரும் சேர்ந்து சமையல் செய்து தருவது, பண்டிகை நாட்களில் நாங்களும் அப்பா அம்மாவுடன் சேர்ந்து பலகாரங்கள் செய்ய உதவுவது என்று சமையலறை வேலையைப் பங்கிட்டு செய்வதே வழக்கம் என்கிற பாடத்தைப் பிள்ளைகளுக்கு கற்பித்தல் தானே வீட்டிற்கும், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் நல்லது.

அன்றைய காலங்கள் போல அடுக்களை பக்கமே நுழையாத ஆண்கள் மாதிரி எல்லாம் இன்றைய தலைமுறைகள் இல்லை.

ஆண்களும் வீட்டு வேலைகளில் இணையாருக்கு உதவி செய்வது கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்திருக்கிறது என்பதெல்லாம் மறுப்பதிற்கில்லை. விரைவில் சமையலறை பகிர்வும் நடைமுறையில் வரும்.

இப்படியான மாற்றம் வந்தால் போதும் சமையலறை பெண்களுக்கு எப்போதுமே சாபமாகத் தெரியாது.

ஒரு குறிப்பட்ட வயதிலிருந்தே ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் சமையலறையின் வேலைகளை பகிர்ந்து கொடுத்து பழக்கப்படுத்துவதோடு, இவ்வேலைகள் அனைத்தும் குடும்பதிலுள்ள ஒவ்வொருவரின் பொறுப்பு என்ற
உணர்வை உருவாக்குவதே பெண்களின் மிக முக்கியமான கடமை.

இப்படியான புரிதலைப் பெண்கள் தங்கள் குடும்பத்திலுள்ளவர்களிடம் விதைத்தால் மட்டும் போதும், காலங்காலமாக சமையலறை என்ற பெயரில் கிடைத்த சாபத்திலிருந்து பெண்கள் தங்களை மீட்டுக் கொள்ள முடியும்.

படைப்பாளர்:

 இராஜதிலகம் பாலாஜி. ஹங்கேரியில் வசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளர். பிரதிலிபி தமிழ், பிரித்தானிய தமிழிதழ், சஹானா இணைய இதழ் பலவற்றில் கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் பல எழுதி வருகிறார். சிந்தனைச் சிறகுகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்.