இதய கீதம் 1950 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். 

F நாகூர், ஜோசப் தளியத் Jr  இருவரும் இணைந்து சிட்டாடல் ஸ்டூடியோ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ஞான சவுந்தரி படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். அந்த சிட்டாடல் ஸ்டூடியோதான் இந்தத் திரைப்படத்தையும் தயாரித்து இருக்கிறது. இத்திரைப்படம் ஜீவன் தாரா என இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இதய கீதம் என்கிற இதே பெயரில், 1990 ஆம் ஆண்டு, வெளிவந்த பிரேம யுத்தம் என்கிற தெலுங்கு திரைப்படம், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கதை இந்தத் திரைப்படத்தின் கதைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்துள்ளது. இரண்டிற்கும் பெயர் பொருத்தம் தவிர, வேறு பொருத்தம் ஒன்றும் இல்லை.

கதை மற்றும் ஆர்ட் டைரக்டராகவும் ஜோசப் தளியத் Jr 

வசனகர்த்தா & வசன டைரக்டர் நாஞ்சில் டி. என். ராஜப்பா

பாடல்கள் கம்பதாசன், கே. பி. காமாட்சி 

இசை எஸ். வி. வெங்கட்ராமன்

இப்படித் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களைப் போட்ட பின் நடிக, நடிகர்கள் பெயர் போடுகிறார்கள்.

டி. ஆர். மகாலிங்கம்- ஜீவன் 

டி. ஆர். ராஜகுமாரி- தாரா 

P S வீரப்பா- பிரதாபன்

K சாரங்கபாணி- லாலா 

M G சக்கரபாணி- அமைச்சர் 

டி. பி. ராஜலட்சுமி தாராவின் தாய் 

V சுசீலா- ராகினி 

T S ஜெயா- லீலா 

நடனம்:

லலிதா &பத்மினி

கதையின் களம் அருகருகில் இருக்கும் இரு ராஜபுத்திர அரசுகள். காலம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இறுதிப் போரில் பீரங்கி காட்டுகிறார்கள். அதனால், பாபரின் வருகைக்குப் பிறகு என எடுத்துக் கொள்ளலாம். அலாவுதீனின் அற்புத விளக்கா வைத்து இருக்கிறீர்? நினைத்தவுடன் திருமண ஏற்பாடு செய்ய என வீரப்பா, ஒரு காட்சியில் MG சக்கரபாணியிடம் கேட்கிறார்.  அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை, ஆயிரத்தொரு இரவுகள் புதினத்தில் உள்ள கதை. இந்தப் புதினம், முதன் முதலாக 1704 ஆம் ஆண்டு, இரவுகள் என்கிற பெயரில் பிரெஞ்சு மொழியிலும், பின்னர் 1706ஆம் ஆண்டு அரேபிய இரவுகள் என ஆங்கிலத்திலும் மொழிபெயற்கப்பட்டது. இதனால், இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு கதை நடப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 

எடுத்தவுடன், ஜீவன், தாரா இருவரின் காதல் பாடல்தான். பிறகு பிரதாபன் போரில் வெற்றி பெற்று வருவதைக் காட்டுகிறார்கள். பிரதாபன், ஜீவன் இருவரும் சகோதரர்கள். நாட்டின் இளவரசர்கள். தாராவின் அப்பா போரில் இறந்ததால், அவரும் அவரின் அம்மாவும் அரண்மனையில் வாழ்கிறார்கள். பிரதாபன், ஒரு யுத்தத்தில் போரிடச் செல்கிறான். அச்சமயம் ஜீவனுக்கும் தாராவிற்கும் இடையே காதல் மலர்கிறது. பிரதாபன், சண்டையில் வெற்றி பெற்றுத் திரும்பி வருகிறார். 

நாட்டின் அமைச்சராக இருப்பவர் M G சக்கரபாணி. அவர், சகோதரர்கள் இருவரையும் முதலில் பிரிக்க வேண்டும்; பின் நாட்டைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும்’ என நினைக்கிறார். இதனால், போர்க்களத்தில் இருந்து வரும் பிரதாபன் மற்றும் தாரா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என ஆலோசனை சொல்கிறார். குடும்பத்தில்  அனைவரும் ஏற்கின்றனர். தாரா ஒன்றும் சொல்ல முடியாமல் அழுகிறார். இவர்தான் உன் அண்ணி என சொல்லும்போது, ஜீவனும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.

பின் ஜீவன், தாராவைத் திட்டுகிறார். இதனால், தாரா தற்கொலைக்கு முயல்கிறார். பிராதபனிடம், ஜீவன், தன்னைத்தான் தாரா திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்துவதாகவும், ஆனால், தாரா பிரதாபனைத்தான் காதலிக்கிறார் என்றும் அமைச்சர் சொல்கிறார்.

தற்கொலைக்கு முயன்ற  தாராவைச் சந்திக்க ஜீவன் செல்கிறார். இதைத் தவறாகப் புரிந்து கொண்டு, பிரதாபன், சண்டை போடுகிறார். 

எதிரி நாட்டிற்கு ஒற்றராக ஜீவனின் நண்பர் லாலா செல்கிறார். ஆனால், அது இங்குள்ள அமைச்சருக்குத் தெரியவர, லாலா சிறைபிடிக்கப் படுகிறார். சகோதரர்கள் இருவரையும் போருக்கு அனுப்பி, மன்னரை அமைச்சர் சிறை வைக்கிறார். சிறையில் இருக்கும் மூவரும் லாலாவின் காதலி லீலாவால் காப்பாற்றப்பட்டு, நாட்டை மீட்கிறார்கள். சிறையில் இருக்கும் போதே, உண்மையை பிரதாபன் அறிந்து ஜீவன், தாராவை இணைத்து வைக்கிறார். 

TR மகாலிங்கம் தான் நாயகன் என்றாலும், பிரதாபன் பாத்திரமாக வரும் வீரப்பன் தான் நிறைய நேரம் வருகிறார். அவருக்கு இணையாக, MG சக்கரபாணியும் வருகிறார்.

லலிதா பெண்ணாகவும், பத்மினி ஆணாகவும் என எதிரி நாட்டு அரண்மனையில் ஒரு நடனம் ஆடுகிறார்கள். லாலாவாக வரும்  K சாரங்கபாணி அவர்களுக்கு கொடுக்கும் வரவேற்பு நடனமாக அது அமைகிறது. அவருக்கும் ஒரு டூயட் பாடல் உள்ளது. கதையை நகர்த்துவதில் அவரின் பங்கு கூடுதல். வெறும் நகைச்சுவை பாத்திரமாக இல்லாமல், கதை நெடுகிலும் வருமாறு இருக்கிறார். 

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.