ஒருவரைப் பார்த்தவுடனே நாம் முதலில் கவனிப்பது அவர்களது ஆடை மற்றும் அலங்காரத்தைத்தான். பெரும்பாலான மக்களை அடுத்தவர்களின் ஒப்பனையே முதலில் கவர்ந்திழுக்கிறது. இது இயற்கை. பெண்கள் மட்டுமன்றி இப்போது ஆண்களும் குழந்தைகளும்கூட ஒப்பனை இன்றி வெளியே செல்வதில்லை.

மேக்கப் வேண்டுமா, வேண்டாமா என்று இன்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த விவாதத்திற்குள் போவதற்கு முன் ஒப்பனைக்கலை தோன்றியது குறித்துப் பார்க்கலாம். இது இன்று, நேற்று தோன்றியதல்ல. உலகம் தோன்றிய போதே ஒப்பனைக் கலையும் தோன்றிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆடையின்றி நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த மனிதர்கள் இலையாடை, தழையாடை உடுத்திய காலத்தில்தான் உலகின் முதல் ஒப்பனை தோன்றியது. பண்டைக் காலக் குகை ஓவியங்களிலேயே பெண்கள் ஒப்பனை செய்துகொள்வதைப் பற்றிச் சித்திரங்கள் கதை சொல்லின. ஆண் வேட்டைக்குச் செல்லும்போது, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்த பெண் எஞ்சிய நேரத்தில் இந்த ஒப்பனைக் கலையைக் கண்டறிந்திருக்கலாம். உலகின் முக்கியமான கண்டுபிடிப்புகளை எல்லாம் பெண்களே நிகழ்த்தியிருக்கின்றனர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

தமிழ் இலக்கியங்கள் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்களின் ஆடை, அலங்காரத்தோடு வர்ணிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. சங்க இலக்கியங்களில் பெருங்கதை கூந்தல் ஒப்பனை, முக, நக ஒப்பனை, தொய்யில் எழுதுதல் பற்றியெல்லாம் விரிவாகப் பாடியிருக்கிறது. பெண்கள் நீராடிய பின் நறுமணப் புகையால் உலர்த்தி, மணமூட்டி, அதை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அலங்காரம் செய்துள்ளதைப் பாடல் சுட்டுகிறது. மேலும் தங்கள் உடலிலும், மார்பிலும், தோள்களிலும் சந்தனக் குழம்பைத் இறகால் தொட்டு தொய்யில் என்னும் ஒருவித ஓவியம் வரைந்தனர். முகத்தை ஒப்பனை செய்ததோடு புருவங்களையும் திருத்திக் கொண்டதாகப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

சிலப்பதிகாரத்தில் மாதவி தன்னை எவ்வாறு அலங்கரித்துக்கொண்டாள் என்று இளங்கோவடிகள் வர்ணிக்கிறார். 

“பத்துத் துவரினும் ஐந்து விரையினும்

முப்பத்திரு வகை ஓமாலிகையிலும் ஊறின,
நன்னீருரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல்
நலம்பெற வாட்டிப் புகையிற் புலர்த்திய
பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ் சேறூட்டி.”

அதாவது தன்னுடைய கரிய கூந்தலைப் பத்து வகையான மூலிகைகள். ஐந்து வகையான விதைகள், நன்னாரி, கஸ்தூரி வேர், தமாலம், வகுளம் போன்ற 32 வகை ஓமாலிகளும் ஊற வைத்த நன்னீரிலே கூந்தலை நனைத்தாள். பின்னர் அகிற்புகையில் கூந்தலை உலர்த்தி, அதில் கஸ்தூரிக் குழம்பைப் பூசினாள் என்று கூறுகிறார்.

‘கிள்ளை வாயி னன்ன வள்ளுகிர் நுதி விரல் சிவப்ப’ என்கிற வரிகள் மூலம் அன்றைய பெண்கள் நகத்தினைச் சிவப்பாக அலங்கரித்திருந்தனர் என்பது தெளிவாகிறது. கால்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசி அலங்கரித்திருக்கின்றனர். அதுதான் இன்றைய மருதாணி என்று நினைக்கிறேன். செம்பஞ்சுக் குழம்பால் ஒப்பனை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுதுகோல் இலேகை எனப்பட்டது.

கண்களுக்கு அஞ்சனம் தீட்டி மகிழ்ந்தனராம் பெண்கள். பொன்னால் செய்த ஆபரணங்கள் அணிந்த பெண்கள், பலவித மணிகள் கோர்த்த வடங்களை அணிந்திருக்கின்றனர். மேலும் பொற் சிலம்புகளையும் பொன் வளையல்களையும் அணிந்து விளையாடிக்கொண்டிருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. உலகிலேயே முதலில் உதட்டுச்சாயம் தயாரித்துப் பயன்படுத்தியவர்கள் நம் இந்தியர்கள்தாம். கி.மு.3300 ஆம் ஆண்டுகளிலேயே இன்றைய பஞ்சாப் பகுதியில் வசித்த மக்கள் உதட்டுச்சாயம் உபயோகித்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பண்டைய எகிப்து கலாச்சாரத்தில்  அதாவது சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழகு சாதனப் பொருட்கள் ஆண்கள், பெண்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டன. தோற்றத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கவும் அவர்கள் இத்தகைய பொருட்களைப் பயன்படுத்தினர். ராணி இசபெல் தான் கொல்லப்படுவதற்கு முன்பு கண்களுக்கு வண்ணம் தீட்டி தலையை அலங்கரித்துக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. கண் மை பூசும் வழக்கத்தை எகிப்தியர்கள்தாம் முதலில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

அலங்காரம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் அழகு மட்டுமே எல்லாம் என்கிற கருத்தை நம்மீது திணித்து வருவது கண்டிக்கத்தக்கது. அக் கருத்து தவிர்க்கப்பட வேண்டியதும்கூட. பெண்கள் ஒப்பனை செய்துகொள்வது குறித்தான நகைச்சுவைகள் (?) காலாவதியான காலத்திலும்கூட பெண்களின் ஒப்பனைப் பேசு பொருளாகத்தான் இருக்கிறது. அழகான ஆடை அணிந்து, ஒப்பனை செய்து கொண்டு வெளியிலோ அலுவலகத்திற்கோ ஏதேனும் நிகழ்வுகளுக்கோ செல்வது அனைவருக்கும் பிடிக்கும்தானே? பின் ஏன் பெண்கள் ஒப்பனை செய்வதையே இந்தச் சமுதாயம் கேலி செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது?. 

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி எழுபது வயதைத் தாண்டியவர். ஆனால், ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அழகான புடவையை அணிந்து, விதவிதமான டிசைன்களில் ரவிக்கை அணிந்து, கழுத்தில் மேட்சிங்கான பாசி மாலைகள் போட்டுக் கொண்டு காணப்படுவார். அவரைப் பார்க்கும் போதே நமக்கும் அவரது சிரிப்பு தொற்றிக் கொள்வதோடு பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதையும் மறுப்பதற்கில்லை. “இந்த வயசுல இந்தம்மா இப்படி மினுக்கிட்டு திரியுது” என்று கிசுகிசுக்கும் குரல்களை அவர் பொருட்படுத்துவதே இல்லை.

ஆனால், எத்தனை இளையதலைமுறையினர் வயதான பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதை இயல்பாக ஏற்றுக்கொள்கின்றனர்? ஒரு நிகழ்ச்சியில் என்னுடன் சில இளவயதினரும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நடுத்தர வயது மற்றும் அதைத் தாண்டிய பெண்களின் தலை அலங்காரம் மற்றும் முக ஒப்பனையைக் குறித்து, ‘தென்காசியை விட்டே மிஸ்ஸாகிப் போன அழகிகள்’ என்று குறிப்பிட்டார் ஓர் இளைஞர். நான் அவரிடம், “வயதானால் கசங்கிய ஆடையை அணிந்து கொண்டு மூட்டுவலி, முதுகுவலி என்று மூச்சுக்கு முன்னூறு நோய்களைச் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா தம்பி?” என்றேன். அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வயதாவது ஒன்றும் குற்றச் செயல் அல்லவென்றும், அவரவருக்குப் பிடித்த அலங்காரங்களைச் செய்துகொள்வது அவர்களை பாஸிட்டிவாக வைத்துக் கொள்ளத்தானென்றும், நாளைக்கு அவருக்கும் வயதாகுமென்றும் விளக்கினேன். மறுக்காமல் ஒப்புக்கொண்டார். தனது சிந்தனையின் போக்கை மாற்றிக்கொள்வதாகவும் சொன்னார். 

வெளிர் நிறத்தின் மீதான ஆசை இந்தியச் சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறது. ஒரே வயிற்றில் பிறந்த குழந்தைகளாயினும் நிறத்தின் அடிப்படையில் வேறுபடுத்தித்தான் பார்க்கப்படுகின்றனர். கறுப்பு என்பது அபசகுனம் என்கிற நினைப்பு ஏன் வந்தது? வெள்ளை மீதிருக்கும் மோகத்தால் அதை உயர்வுபடுத்தச் சொன்னதுதான் கறுப்பு கூடாதென்று. அதனால்தான் சிவப்பழகு க்ரீம்கள் இங்கு விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒப்பனை மூலமாவது சிவப்பாகி அதாவது வெளுத்துவிட மாட்டோமா என்றுதான் இன்றும் பெண்களை ஏங்க வைத்திருக்கிறது சமூகம். அதுதான் அழகு என்று மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள் முன்னோர். ஒப்பனைப் பொருட்கள் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆக இதுதான் முக்கியமான காரணம். 

மேக்கப் போடுவது அல்லது போடாமல் இருப்பது அவரவர் விருப்பம். அதற்கு செலவு செய்வதும் அவரவர் விருப்பம். அழகு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் மாறுபடும். அகத்தின் அழகுதான் முக்கியம். அதுதான் இறுதிவரை உடன் வரும். ஆனாலும் புற அழகுக்கும் கொஞ்சம் இடம் தரலாமே. அதில் தவறொன்றும் இல்லை. நமக்குப் பிடித்தால் நாமும் நம்மைச் சிறப்பாக அலங்கரித்துக்கொள்வோம். இல்லை என்றால் விட்டுவிடுவோம். அலங்கரித்துக் கொள்பவர்களைப் புறங்கூறாமலாவது இருப்போம். அதுதான் நமது அகத்தின் அழகைப் பிரதிபலிக்கும். உடலுக்கு ஒப்பனை செய்யலாம். ஆனால், ஒருபோதும் நமது மனதுக்கு மட்டும் ஒப்பனை செய்து மறைக்கக் கூடாது. அது இயற்கை அழகுடன் ஒளிரட்டும்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.