எந்த நொடியிலும் அவன் வந்து அவளை வழிமறித்து, கூந்தலைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்று வீட்டுக்குள் கதவைச் சாத்தி கீழே தள்ளுவான். அறுவடை நேரம் நெல்மணிகளைப் பிரித்தெடுக்க நெற்போரில் கட்டி அடிக்கும் நெற்கதிராக அவளை அவன் அடித்து மிதிப்பான் என்கிற பயம் அவள் நடையின் வேகத்தைக் கூட்டியது.

அவளின் திட்டத்தை எப்படியோ அறிந்து கொண்டு அவள் பின்னால் தொடர்ந்து வந்துவிடுவான் என்கிற‌ படபடப்போடு அவ்வப்போது திரும்பிப் பாரத்தவாறே அந்த மழையில் காலுக்கடியில் வெள்ளமாக ஓடிய மழைநீரையும் ஆங்காங்கே உடைந்து குழிவிழுந்த தார்ச்சாலையின் மேடு பள்ளங்களையும் தாண்டி விறுவிறுவென நடந்தாள்.

தண்ணீரின் வேகத்தில் ஏற்கெனவே பலமுறை தையல் போட்ட செருப்பின் ஒரு வார் அறுந்தது. தூக்கி எறிந்துவிட்டு நடந்து விடலாம் என்கிற எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். இன்னும் அவள் வெகுதூரம் நடக்க வேண்டி இருக்கிறது. தாலியில் குத்திப் போட்டிருந்த ஒரு ஊக்கை எடுத்துச் செருப்பை வாரோடு சேரத்துக் குத்தினாள். எதுக்கும் இருக்கட்டும் என்றுகூட ஒன்றையும் சேர்த்துக் குத்திவிட்டு நடையைக் கட்டினாள்.

வழக்கமான நாட்கள் என்றால் அவன் மதிய சாப்பாட்டுக்கு வரும் நேரம் அவள் வயல்காட்டில் வேலைக்குச் சென்றிருப்பாள், மாலையில் அவள் வீட்டுக்கு வரும்போது அவன் சாப்பிட்டுவிட்டுச் சென்றதற்கு அடையாளமாக கலைஞர் டிவி இருந்த சின்ன மர மேஜைக்கு எதிராக நடுவீட்டில் கைகழுவி வைக்கப்பட்ட தட்டும், ஒருமுறை கோபத்தில் அவன் தூக்கி எறிந்ததால் கழுத்து வளைந்த சொம்பும், சோத்துச் சட்டியும், குழம்பு கும்பாவும் இருக்கும்.

ஆனால் இரண்டு நாட்களாகப் பெய்து வரும் மழையால் வேலைக்குச் செல்லாமல் அவள் வீட்டில் இருந்தாள். அவன் ஆட்டோ சத்தம் கேட்டதும் அந்தப் பத்துக்குப் பத்து அறையில் ஓர் ஓரத்தில் கிடந்த கயித்துக் கட்டிலில் முகத்தை சுவற்றுப் பக்கமாக திருப்பி படுத்துக் கொண்டாள்.

மழையினூடாக கேட்ட ஆட்டோ இஞ்சின் அணைந்த சத்தமும் அதைத் தொடர்ந்து மரக்கதவு திறந்த சத்தமும் கேட்க கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவன், “வீட்ட இருட்டா போட்டுட்டு ஒரு பொம்பள இருந்தா, வீடு விளங்குன மாதிரிதான்” என்று சொல்லிவிட்டு,  அகல்விளக்கு பொருத்தப்பட்டதைத் தீக்குச்சி உரசும் சத்தம் சொன்னது. அதன்பின்  பாத்திரங்கள் உருண்ட சப்தம் அவன் சாப்பிட ஆயத்தமானதைக் காட்டியது.

முன்னால் இருந்த திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போதே அவன் கைபேசியில் அவன் சேக்காளியுடன் பேசியது கேட்டது,

“அஞ்சு நிமிசந்தான் மாப்ள, அப்பிடியே பார்ட்டிய பிடிச்சு வையி. குளம்லாம் ஒண்ணும் இன்னும் நிரம்பல, ஆனா நிரம்பிட்டுன்னு சொல்லி ஊரச் சுத்திக் கொண்டு வுட்டு நாலு காசு தேத்துனாதான் உண்டு” என்று ஒரு கோரமான சிரிப்பைச் சிரித்துவிட்டு, அவளைச் சற்றும் பொருட்படுத்தாமல் மழையில் கைகழுவிவிட்டு நேற்றுப் போலவே அவசரமாகச் சவாரிக்குப் புறப்பட்டுவிட்டான். எப்போதும் இப்படி அவளைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால் அவள் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டியதில்லை என்று நினைத்தபோது அவளையும் மீறிக் கொண்டு ஒரு பெருமூச்சு வந்தது .

எதிர்பாராத அடைமழை பெய்ததால் அவர்கள் ஊரான தேமாங்குளத்திலோ அருகிலிருந்த வெள்ளமடத்திலோ இல்லை ஏதேனும் ஒரு சுற்றுவட்டார கிராமத்திலிருந்தோ அவசரத்துக்கு நாசரேத்துக்குச் செல்லவோ அங்கிருந்து ஊருக்குத் திரும்பிச் செல்லவோ ஆட்டோ மட்டும்தான் தற்சமயம் இருந்தது.

ஆங்காங்கே ஆறு, குளங்களின் கரைகள் உடைபட்டுப் பேருந்து சிற்றுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதிக காசு பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளூர்காரன் என்பதால் இண்டு இடுக்கு சந்து பொந்து எல்லாம் அவனுக்கு அத்துப்படி.

நேற்று நள்ளிரவு அவன் முழு மப்பில் திரும்பி வந்து, “எம்புட்டு ஏத்தமுடி உனக்கு? ஒரு மனுசன் ஓடியாடி மாடா உழச்சி சம்பாதிச்சு கொட்டுனா, அவனுக்குச் சோறு தண்ணி வேணுமா என்ன ஏதுன்னு கேக்காம, ஒய்யாரமா கால் மேல கால் போட்டு நடுவீட்டுக்குள்ள ராசியமா பண்ணுறே?” என்று அடிக்க ஆரம்பித்தான்.

குடி அவனை மிருகமாக மாற்றியதை அவள் அறிந்து பத்து வருடங்களாகியிருந்தது. அதற்கும் அவன் அடிக்கும் பழகிய அவள் உடலும் மனமும் மரத்திருந்தது.

அவனின் கோபத்துக்கு வடிகாலாக அவள் மாறிப்போனதற்கு ஒரே ஒரு காரணம்தான். யார் யார் மீதோ உள்ள வெளிக்காட்ட முடியாத கோபத்தை அவள் மீது காட்டினான்.

அவள் உடலுக்குத் தெரிந்தது அவனை விட்டுவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்று, ஆனால் மனம் ஊர் என்ன சொல்லும், உலகம் என்ன நினைக்கும் என்றெல்லாம் நினைத்துப் பதறியது.

வயதான அப்பா அம்மாவுக்கு இதைச் சொல்லிக் கஷ்டப்படுத்த மனமில்லாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாள். ஆனால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது, அப்போது முடிவெடுத்தாள் இனி இவனுடன் வாழ்வதில்லை என்று.

அவன் திரும்பி வீட்டுக்குச் சென்று அவள் இல்லை என்பதைக் கண்டுபிடித்து தேடி வர குறைந்தது நான்கைந்து மணிநேரமாவது இருந்தது. ஆனால் இடையில் அவன் கண்ணிலோ அவன் ஸ்டாண்டில் உள்ள சக ஆட்டோ ஓட்டுநர்கள் கண்ணிலோ படாமல் செல்ல வேண்டும்.

“ஏ, புள்ளி மகேசு, பாத்து பத்திரமுடி. உம் புருஷங்காரன் கண்ணுல படாம போயிரு புள்ள. இல்லன்னா கொண்டே புடுவான் அந்தப் படுபாவி. நீ மெட்ராசுக்குப் போயிட்டின்னா வேல உறுதிதான். அண்ணாச்சி கடைல வேல பாக்குற நம்ம முத்தாயி, சூப்பர்வைசர் அண்ணங்கிட்ட பேசிட்டாளாம். அந்தண்ணன் நம்ம செய்துங்கநல்லூர்தானாம். நல்ல மாதிரியாம். புள்ளயகூடக் கூட்டிட்டுப் போயிரலாம் அடுத்த தாட்டி வந்து. அதுக்கு ஒரு லாயரம்மா உதவி பண்ணுவாகளாம். நம்மூரு பொம்பள போலீசும் தொணைக்கு வருமாம். எப்புடியிவது இந்த எமகாதக பயகிட்ட இருந்து தப்பிச்சிருடி ஆத்தா”

என்று அவள் எவ்வளோ மறுத்தும் சில நாட்களுக்கு முன் அவள் கையில் திணித்த பணத்தில் அவள் தோழி செந்தாமரையின் உழைப்பும் கரிசனமும் சம அளவில் கதகதத்தது. 

அவள் ஏற்கனவே எவ்வளவோ செய்துவிட்டாள்‌. முதலில் அவள் கணவன் அடிக்கத் தொடங்கிய நாட்களில் ஓடிச் சென்று அவள் வீட்டில்தான் தஞ்சம் புகுவாள். ஆனால் அவள் கணவன் அவளை அங்கு தேடி வந்து அவளை வசைபாடியதோடு நில்லாமல் ஒருமுறை அவனைத் தடுத்து கைநீட்டிய அவள் கணவன் முத்துராசு அண்ணனோடு அவளைச் சேர்த்து அசிங்க அசிங்கமாக பேசவும், இனியும் அவர்களுக்கு அவளால் தொல்லை வரக்கூடாது என்று நினைத்து வீட்டோடு இருந்துவிட்டாள்.

அவள் தோழி எத்தனை முறையோ போலீஸ் புகார் அளிக்கச் சொல்லியும் மறுத்துவிட்டாள். திரும்பி அவன் வந்ததும் மீண்டும் அவனுடன் தானே வாழ்க்கை நடத்தியாக வேண்டும். எத்தனை நாள்தான் போலீஸ்காரர்கள் வந்து காவலுக்கு நிற்பார்கள்?

அவளுக்கு அமைந்த மோசமான வாழ்வில் ஆறுதல் அவள் தோழியும் அவள் மகனும்தான் என்று நினைத்தபோது, மின்னலில் தெரிந்த ஈஸ்வரியம்மன் கோயிலைப் பார்த்தாள்.

தான் எப்படியும் பத்திரமாகச் சென்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள எழுந்த ஆவலை இந்த முறை அவள் வழக்கம் போல் கட்டுப்படுத்தவில்லை. தனக்காக வேண்டிய போது செவி சாய்க்காத அந்த தெய்வம், தன் குழந்தைக்காக இறங்கி வந்துவிடாதா என்கிற தாயின் ஆதங்கம் அவளை வேண்ட வைத்தது.

“அம்மா தாயே, இது என் புள்ளைக்காக. அது வாழ்க்கை நல்லபடியா அமையணுங்கிறதுக்காக இந்தக் குடிகாரன் கையில இருந்து தப்பிக்க ஒரு வழிய காட்டினது நீதான். எப்படியாவது என்னைய பத்திரமா கொண்டு உட்டுரு ஆத்தா”

என்று மானசீகமாக வேண்டிக் கொண்டே நடையைத் துரிதப்படுத்தினாள்.

ஆள் அரவமற்ற அந்த அந்திக்கருக்கலில் மழை மட்டும் அவள்கூட நடந்தது. அதன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டு அவளும் நடந்தாள்.

‘நேரம் இரவு எட்டு மணி’ என்று வேதக் கோயிலில் இருந்த மணி அவள் நடையை இன்னும் வேகப்படுத்தியது‌.

கடைவீதிக்கு அடுத்துப் பேருந்து நிலையம். அதற்குச் சற்றுத் தொலைவில் ரயில் நிலையம். அவள் இலக்கை அடைய மிஞ்சிப்போனால் இன்னும் கால்மணி நேரம்தான். ஆனால் அதைக் கடப்பதுதான் கடினம். அவளுக்குத் தெரிந்தவர்கள் யார் கண்ணிலும் படாமல் இருப்பதுகூட சாத்தியம். அவள் புருஷன் நடமாட்டமில்லாத இடம் இங்கு எதுவும் கிடையாது.

மர்காஷிஸ் பள்ளிக் கூடத்தைக் கடக்கும் போது, அவள் உயிர் வாழ்வதற்கான ஒரே ஒரு பிடிப்பு அங்கு ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறது.

வாய்க்கு வந்துவிடும் போல் வேகமாக துடிக்கும் இதயம் ரயில் நிலையத்தின் பின் பாதையை அடைந்த போது சற்று ஆசுவாசமானது. இன்னும் இருநூறு அடிதான் அவள் விடுதலைக்கான தூரம். அவளுக்கும் அவள் குழந்தைக்குமான நல்ல எதிர்காலத்துக்கான தூரம் என்று நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி நடந்தவளின் ரத்தம் உறைந்தது,

அவளுக்குச் சற்றுப் பின்னால் கேட்டது ஓர் ஆட்டோ சத்தம்…

(தொடரும்)

படைப்பாளர்:

பொ.அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.