எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயு கசிந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் 100 நாட்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு வடிவமாக எண்ணூரில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது . எண்ணூர் மக்கள் அதிகாரத்திற்கு  எதிரான கோஷங்கள் நிறைந்த பதாகைகளை ஏந்தி தங்களுக்கான நியாயத்திற்காக அணிதிரண்டனர்.

மனித சங்கிலியில் ஹிஜாப் அணிந்துகொண்டு தொடர்ச்சியாகப் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அணிவகுத்திருந்தனர். இஸ்லாமிய விரோத சட்டமான சிஏஏ அமலாக்கப்பட்ட 2 நாட்களில், ரமலான் நோன்பில் இருப்பதால் உடல் களைப்புற்றிருந்தும் வெயிலில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான உந்துதல் அந்தப் பெண்களுக்கு எப்படிக் கிடைத்தது. இருத்தியலுக்கும், நோயற்று வாழ்தலுக்குமான போராட்டத்தினால் கிடைத்த ஆற்றலின்பால் அவர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தவில்லை.

யார் அவர்கள்? ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வியக்கத்தின் கீழ் எண்ணூரில் இயங்கும் பெண்களை வழிநடத்துபவர் சாஜிதா. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கமானது மதம் கடந்த சமூக சேவையைச் செய்து வருகிறது. எளிய குடும்பத்தில் உள்ள பெண்களுக்குத் தையல் பயிற்சி, வெள்ள நிவாரணப் பணிகள், கரோனா பேரிடரின் போது முதியோர்களைப் பாதுகாத்தல், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. எண்ணூர் பகுதியில் இவ்வமைப்பை ஒருங்கிணைப்பவர் சாஜிதா.

அவர் அன்று நோன்பில் இருந்தார். ஆனால் எந்தவொரு களைப்பும் அவர் முகத்தில் இல்லை. அவர் நோன்பு இருப்பதால் தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. ஆனால் எனக்கு மாதுளை பழச்சாறை வாங்கி வரச்செய்தார். 

சாஜிதா பிறந்து வளர்ந்ததெல்லாம் எண்ணூரில் உள்ள திருவள்ளுவர் நகர். 18 வயதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தில் பயணிக்கத் தொடங்கினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மூலம் மதம் கடந்த சேவைகள் செய்தாலும் இறைநம்பிக்கை சார்ந்த செயல்களிலும் ஈடுபடுகிறது. நோன்பு, மக்கள் சேவை, தொழுதல் ஆகியவை முதன்மை கடமையாக இஸ்லாமிய பெண்களுக்குக் கற்றுத் தரும் ஓர் அமைப்பாகவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயல்படுகிறது.

”நாங்கள் இஸ்லாமியப் பெண்களிடம்தான் எங்கள் மதப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசுகிறோமே தவிர மற்ற மதத்தினருக்கு எங்கள் மத நம்பிக்கையை எடுத்துச் செல்ல மாட்டோம்” என்கிறார்.

இன்றைய இந்தியச் சூழலில் இஸ்லாமிய சகோதரர்கள் மீதான பொய்ப் பிரச்சாரங்கள் வெறுப்பை விதைக்கும் சூழலில் சிறுபான்மையினரான சமூகம் தன்னை நிரூபிக்க எவ்வளவு சிரமப்படுகிறது என்பதை சாஜிதா எடுத்துக்கூறினார்.

சாஜிதா ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பயணிக்கிறார். இயக்கத்தில் பயணிக்கும் சக தோழரையே திருமணம் செய்துகொண்டார். இவ்வியக்கத்தின் மூலம் வெள்ள நிவாரணம், வரதட்சணை, மணிப்பூர் வன்முறைக்கு எதிராக , சூழலியல் நீதிக்கான போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்.

”சமூகம் அல்லல்படுவதையும், அழிவதையும் கண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? அவர்கள் எந்த மதநம்பிக்கை உடையவராக இருந்தாலும் அவர்களும் எங்கள் உடன்பிறப்புகள் தானே?. கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதைக் கண்டு என் மனம் துயரத்தால் நிரம்பியது. ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. அதன் வெளிப்பாடாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக எண்ணூர் டான் பாஸ்கோ வளாகத்தில் சமூக நல்லிணக்க பொதுக் கூட்டம் நடத்தினோம். பாதிக்கப்பட்டவர்கள் எந்த மதம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நானும் மணிப்பூர் பெண்களும், பெண் என்கிற ஒற்றைப் புள்ளியில் இணைகிறோம். சக பெண்ணாக அவர்களுக்காகக் குரல் கொடுத்தாக வேண்டும் என்கிற உணர்வுதான் சுயமாகக் கூட்டம் நடத்தவும், மற்ற அமைப்புகள் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கும் தூண்டுதலாக இருந்தது.” 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புக்குப் பகுதி சார்ந்த தன்னார்வலப் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மூலம் கூட்டங்களும் போராட்டங்களும்  ஒருங்கிணைக்கப்படுகிறது. இவ்வமைப்பு தன்னிச்சையாகச் சில போராட்டங்களை முன்னெடுக்கிறது மற்றும் முற்போக்கு இயக்கங்களான விசிக, திராவிட மற்றும் கம்யூனிச அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.

இச்சமூக சூழலில் மிகவும் நலிவடைந்த பிரிவினராகப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பும் சுயமரியாதையும் இந்தியச் சூழலில் கேள்விக்குள்ளாகியுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம், ஆனால் இன்றும்கூடப் பெண்கள் வரதட்சணை கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர். பாதிப்பின் தீவிரத்தைக் குறைப்பதற்கு, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை மக்கள் மத்தியில் சாஜிதாவும் அவரது குழுவினரும் விநியோகித்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பைப் போற்றும் மிகப்பெரிய பேரணியை சாஜிதா ஒருங்கிணைத்துள்ளார். கம்யூனிச தோழர்கள், தன்னார்வலர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் அப்பேரணியில் கலந்துகொண்டனர். 

போராட்டங்கள், பிரச்சாரங்கள் மட்டுமல்லாமல் சாஜிதா மக்கள் நல சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். அரிசியைச் சேமித்து மாதத்திற்கு 50 கிலோ அரிசியை ஏழை எளிய மக்களுக்கு சாஜிதா தலைமையிலான பெண்களின் குழு வழங்கி வருகிறது. சுஜாதா, ‘தினமும் சமைப்பதற்கு முன் ஒரு பிடி அரிசியை டப்பாவில் சேமிப்போம். ஆண்டு முடிவில் அனைத்துப் பெண்கள் சேமித்த அரிசியும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டு பைகளில் கட்டி தேவைப்படுவோருக்குப் பகிர்ந்தளிக்கப்படும்’ என்றார்.

2015ஆம் ஆண்டு வெள்ளம் வந்த போது எண்ணூரில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் கிராமத்தின் மறுவாழ்விற்கு சாஜிதா அமைப்பின் சார்பாக உதவியுள்ளார். அங்குள்ள குழந்தைகள் பலர் வெள்ள பாதிப்பால் கல்வியை இடையிலேயே நிறுத்தினர். அவர்கள் கல்வியைத் தொடர உதவியுள்ளார். கரோனா காலத்தில் 100 முதியோர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கம் தத்தெடுத்து அவர்களின் உணவு, மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்துள்ளது.

மழை வெள்ளத்தால் எண்ணூரை அடுத்துள்ள பகுதிகளில் 56 இருளர் குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்தன, பொருளாதாரமும் சிரழிந்தது. அதனால் சாஜிதாவின் தலைமையில் எண்ணூரில் இயங்கி வரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு 56 குடும்பங்களையும் தத்தெடுத்து அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்தது. அவர்களுக்கான உணவு தேவையைப் பூர்த்தி செய்வது, வீடுகளைச் சீரமைப்பது அவர்களின் பொருளாதாரத்தில் தேவைகளை நிவர்த்தி செய்ய மீன்பிடி வலை வழங்குவது போன்ற உதவிகளைச் செய்துள்ளது. ‘அங்கேயே சமைத்து, உறங்கி அவர்களில் ஒருவராக வாழ்ந்த நாள்கள் இன்றும் மனதை நெகிழச் செய்கிறது’ என்கிறார் சாஜிதா.

தற்போது எண்ணூர் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு எதிராக சாஜிதாவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தினரும் போராடி வருகின்றனர்.

  

படைப்பாளர்:

கு.சௌமியா, பத்திரிகையாளர்