4000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட திருமணம் எனும் சமூக கட்டமைப்பு இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. பிறப்பு, இறப்புபோல் திருமணமும் இயற்கை என்ற மாயைக்குள் சிக்குண்டு, ஏன் திருமணம் செய்கிறோம் என்ற உண்மையான விளக்கங்கள் இல்லாமலே நாம் அனைவரும் அந்த உறவுக்குள் இருக்கிறோம். குறிப்பாக, ஆசிய ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளில் திருமண உறவு கட்டாய வாழ்வியல் முறையாக உள்ளது.

மதம் சார்ந்த நம்பிக்கைகளும் சடங்குகளும் திருமணங்களில் பெரும்பங்கு செலுத்துவதை நாம் தெளிவாகக் காண்கிறோம். உலகெங்கும் மதங்கள் ஆண் சார்பானவையாக இருப்பதும்  பெண்கள் ஒரு படி கீழே வைக்கப்பட்டிருப்பதும் நாம் கண்டு தெளிந்து வரும் கருத்தியல் உண்மைகள். பல விதி முறைகள் பல சடங்கு சம்பிரதாயங்கள் திருமணத்துடன் தொடர்புள்ளதுடன் அவை தலைமுறை தலைமுறையாக இங்கே கடத்தப்படுகின்றன. பெண் அடிமைத்தனத்தைக் கடத்தி செல்லும் கருவியாக திருமணம் இருந்துள்ளது, இருந்து வருகின்றது என்பதை மறுக்க முடியுமா?

மணமுடிக்கும் பெண் மீதான அதிகாரத்தை, மதம் மற்றும் திருமண சம்பிரதாயங்கள் ஆணுக்கு வழங்குகின்றன.

எடுத்துக்காட்டாக, இஸ்லாத்தில், ஒரு ஆண் தனது மனைவியை ‘தலாக்’ என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரிப்பதன் மூலம் மட்டுமே விவாகரத்து செய்யமுடியும்; மேலும் பெண் எந்த விருப்பமும் இல்லையென்றாலும் அந்த விவாகரத்தை ஏற்கவேண்டும்.

இதேபோல் கிறிஸ்தவத்தில் பைபிள் கூறுகிறது, ‘மனைவிக்கு கணவனே தலைவன், கிறிஸ்துவின் தலைமையில் திருச்சபை இருப்பது போல…’ ( For the husband is the head of the wife, even as Christ is the head of the Church: Eph: 5:23)

இந்து மதத்தில் பெண் ‘கன்னிகாதானம்’ எனும் சடங்குக்குள் திருமணத்தின்போது உட்படுத்தப்படுவாள். மணப்பெண்ணின் தந்தை தன் மகளின் வலக்கையை மணமகனின் வலதுகையின் மேல் வைத்து, அவ்வேளையில் ஓதப்படும் மந்திரங்கள், அக்கினி சாட்சியாக, அவளை தானமாக மணமகனிடம் ஒப்படைப்பார்.

பெண்களின் மீது ஆண் எவ்வாறு அதிகாரம் பெறுகிறான் என்பதை இது காட்டுகிறது; பெண்கள் அந்த அதிகாரத்தை ஏற்று ஆணுக்கு சேவை செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இத்தகைய அதிகாரம் ஒவ்வொரு மதத்திலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஆண்களுக்கு வழங்கப்படுகிறது.

திருமணத்தின்போது பெண்கள் மிகவும் குறைவாகவே பேசுகிறார்கள்; குடும்பத் தலைவர்கள் தங்களுக்கெனத் தேர்ந்தெடுத்ததை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. திருமணத்துக்குள் நுழைந்த பிறகு, அவர்கள் தனது கணவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டும் என்றும் அவற்றை மீறினால் தீய விளைவுகள் ஏற்படும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆண்கள் பலதார மணம் புரியவும், ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் வைத்துக்கொள்ளலாம் எனவும் அனுமதிக்கப்பட்டது; மனைவிகளுக்கு எதையும் கூறவோ அல்லது எதிர்க்கவோ உரிமை இல்லை.

இந்து மதத்தில், கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை மதிப்பற்றதாகக் கருதப்பட்டது. இது ஒரு பெண்ணின் மேல் ஆணின் மேலாதிக்கத்தைச் சித்தரிக்கிறது.

திருமணத்தின் மற்றொரு முக்கிய அம்சம் சமூக சமத்துவமின்மையை வடிவமைப்பதில் அது வகிக்கும் பங்கு ஆகும். எடுத்துக்காட்டாக, திருமணம் என்பது சமூக, வர்க்கம், இனம் அல்லது பாலின படிநிலைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாயிருக்கிறது. ஏனெனில் சில குழுக்கள் தங்கள் சொந்த சமூகக் குழுவுக்குள் திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்புகளே இங்கு அதிகம். கூடுதலாக, திருமணமான தம்பதிகள் திருமணமாகாத தனிநபர்களுக்கு இல்லாத சில சட்ட மற்றும் பொருளாதார நன்மைகளைப் பெரும்பாலும் அணுகுவதால், திருமணம் ஒரு சில சலுகைகளைப் பெறுகிறது. சில மேலைநாடுகளில் திருமணமான தம்பதிகளுக்கு வரிச்சலுகைகள்கூட உண்டு.

 திருமணம் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள், அது இல்லாதவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைக்க முயலும் கட்டமைப்பாகப் பார்க்கிறேன. 

சமூகவியல் பார்வையில் திருமணத்தின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று பாலியல் நடத்தை மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதாகும். பாலியல் உறவுகளுக்கான சட்ட மற்றும் சமூகக் கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் குழந்தைகள் நிலையான குடும்பங்களில் பிறப்பதையும், பெற்றோரின் பொறுப்புகள் அவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுவதையும் திருமணம் உறுதிசெய்வதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாலினப் பணிகள், அதிகார ஏற்றத்தாழ்வுகளையும் வலுப்படுத்தலாம். ஏனெனில் திருமணத்துக்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் பாரம்பரிய எதிர்பார்ப்புகள், பரந்த சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிக்கின்றன.

சமூகவியலாளர்கள் சமீபத்திய தசாப்தங்களில் திருமணத்தின் தன்மை மற்றும் பொருளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டறிந்துள்ளனர், இதில் முக்கியமானவை விவாகரத்து விகிதம் மற்றும் பாரம்பரியமற்ற தனிப்பெற்றோர் குடும்ப வடிவங்கள்.

 சமூகவியலில் திருமணம் பற்றி புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று, இது ஒரு இயற்கைசார் அல்லது உயிரியல் நிகழ்வு அல்ல; மாறாக மனித சமுதாயத்தின் உற்பத்திப் பொருள்களில் ஒன்று. அதுபோல, திருமணத்தின் பொருளும் நடைமுறைகளும் பண்பாடுகள் மற்றும் வரலாற்றுக் காலகட்டங்களில் வேறுபடுகின்றன. பல சமூகங்களில், திருமணம் என்பது குடும்பங்களுக்கு இடையே உறவை உருவாக்குவதற்கும், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், பாலியல் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், திருமணத்தின் பொருளும் நோக்கமும் காலப்போக்கில் மாறிவிட்டன. திருமணம் பெரும்பாலும் இரு நபர்களிடையே அன்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் உறவாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்று உண்மையில் திருமணங்கள் வெறும் அன்பு அல்லது காதலை மையமாக வைத்து நடப்பதில்லை. சாதி, சமயம் பாகுபாடுகள் பலவற்றை தீர்மானிக்கின்றன. மறுபுறம் ஒருவரின் சொத்து பலம், மாத சம்பளம், பட்டப்படிப்பு, பொருளாதார தேவைகளின் நிமித்தம் கல்யாண சந்தையில் அவரின் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது. வயதான பெற்றோரை கவனிப்பது, வீட்டை பராமரிப்பது, குழந்தை வளர்ப்பு, சுவையான சுத்தமான சமையல் போன்ற காரணிகள் ‘வீட்டோடு இருக்கும் பெண்களை’ மணமுடிக்க காரணமாகின்றன. மூன்றாம் உலக நாடுகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் கடவுச்சீட்டுக்களும் விசாக்களும் திருமணங்களை தீர்மானிப்பதை அவதானிக்கின்றோம்.

‘குடும்பத்தை நிறுவுதல்’ என்ற முக்கிய செயல்பாட்டுடன் திருமணம் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது மனிதர்களின் பொருளாதார மற்றும் சமூகப் படி நிலையை பிரதிபலிக்கிறது. சில கலாச்சாரங்களில், திருமணம் என்பது குடும்பங்களுக்கு இடையேயான ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் ஜாதி, மதம் மற்றும் சமூக நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான கணவன் அல்லது மனைவியரைத் தேர்ந்தெடுக்கும் ‘ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள்’ இன்றும் சகஜமாக உள்ளன.

பல ஆண்டுகளாக திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டுமே இருந்தது. பண்டைய காலங்களில் ஓரின திருமணங்கள் பல்வேறு காரணங்களுக்காக நடாத்தப்பட்டன. ஆச்சரியமான, விநோதமான அவ்வகையான திருமணங்கள் உலகில் எங்கெல்லாம் நடந்தன என இனிவரும் அத்தியாயங்களில் காணலாம்.

இன்று அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நோர்வே, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இது திருமணத்தின் வரையறை மற்றும் அதை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கத்தின் பங்கு பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை எதிர்ப்பவர்கள் அது பாரம்பரிய விழுமியங்களுக்கு எதிரானது என்றும் திருமணத்தின் நோக்கம் இனப்பெருக்கம் செய்வதே என்றும் வாதிடுகின்றனர். இருப்பினும், ஆதரவாளர்கள் திருமணம் ஒரு அடிப்படை உரிமை என்றும் ஒரே பாலின தம்பதிகளுக்கு திருமணம் செய்து கொள்ளும் உரிமையை மறுப்பது ஒரு வகையான பாகுபாடு என்றும் வாதிடுகின்றனர். கடந்த வருட இறுதியில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் ஓரின திருமணங்களுக்கெதிராக தீர்ப்பளித்திருந்தமை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசியாவைப் பொறுத்த வரை தாய்வானும் தாய்லாந்தும் இதுவரை ஒரே பாலின திருமணங்களை சட்ட பூர்வமாக அங்கீகரித்துள்ளன. 

சமீப ஆண்டுகளில் விவாகரத்து விகிதம் அதிகரித்து, மறுமணமும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மாலத்தீவு அதிக விவாகரத்து விகிதம் கொண்ட நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது. ரஷ்யா, சீனா, பெலரூஸ், கியூபா போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களுக்குள் காணப்படுகின்றன. வியட்நாம், இலங்கை, பெரு, இந்தியா போன்ற நாடுகள், விவாகரத்து விகிதம் குறைந்த பட்டியலில் முன்வரிசையில் உள்ளன. பாலஸ்தீனம், எகிப்து, பிஜி, பஹாமஸ் மற்றும் உஸ்பெகிஸ்தான் திருமண விகிதம் கூடிய நாடுகளாக தற்போது உள்ளன. 

சமூகம் மாறும்போது, ​​திருமண நிறுவனமும் மாறுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் எழுந்த சில சமகால சிக்கல்கள் இவை:

20ஆம் நூற்றாண்டில் பரவலாக உலகெங்குமுள்ள பெண்கள் வாக்குரிமை, சொத்துரிமை, கல்வியுரிமை போன்றவற்றைப் பெற்றுக் கொண்டதால்,
திருமணத்தின் பரிணாமங்கள் மாறத் தொடங்கின.

கணவன் மனைவியின் சம்மதமின்றி பாலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்கொடுமை (Marital Rape) என சட்டமாக்கபட்டமை மற்றும் பாலினம் பால், பாலியல் தன்மை (Gender, Sex, Sexuality) ஆகியவற்றின் வேறுபாடுகளில் ஏற்பட்ட பெரும் விழிப்புணர்வும் திருமணங்களின் நவீன வரலாறைத் திருத்தி எழுதியுள்ளன.

உலகெங்கும் குடும்ப வன்முறை (Domestic abuse/violence) சட்ட விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதும் பல திருமணங்களின் ஆயுட்காலத்தைத் தீர்மானிக்கின்றது.

ஆயிரம் காலத்துப் பயிராக திருமணங்கள் இப்போது இல்லை.
அந்த ஆயிரம் காலத்துப் பயிர், பெண்களை ஒடுக்கி வைத்ததாலேயே கடந்த நூற்றாண்டுகளில் அடர்ந்து வளர்ந்தது. பெண்கள் கல்வியறிவும் தொழில் தேர்ச்சியும் சொத்துரிமைகளும் கண்ட பின், பாரம்பரிய திருமண அமைப்பு நிலைகுலையத் தொடங்குவதற்கு, திருமணம் எனும் சமூக நிறுவனத்தின் குறைபாடுகளே காரணம். இனி வரும் பகுதிகளில் திருமணத்தின் வரலாறைப் புரட்டிப் பாப்போம்…

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.