பல நேரத்தில் நிறைய தேர்வுகள் கண் முன்னே இருந்தாலும், நமக்கு நன்மை பயக்கின்ற தேர்வுகளைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. அதிலும் குறிப்பாக உறவுகளில் வருகின்ற உணர்வு ரீதியான சவால்களின்போது, நமக்கு மகிழ்ச்சி உணர்வைத் தராத உறவுகளிலிருந்து நம்மால் அவ்வளவு எளிதாகப் பிரிந்துவர முடிவதில்லை.

நன்றாக யோசித்துப் பின்னர் பிரிந்துவிட வேண்டும் என்ற முடிவை எடுத்தாலும் பலர் சொல்வது இதுதான், ‘என் மூளை சொல்வதை இதயம் கேட்கவில்லை. என்னால் அவ்வளவு எளிதில் இதைச் செயல்படுத்த முடியவில்லை’ என்பது.

கீழ்வருவன போன்ற நிகழ்வுகளைச் சமுதாயத்தில் பார்க்கலாம்.

தன்னை மதிக்காத, தனக்காக எதுவும் எந்தக் காலத்திலும் செய்யப் போவதில்லை என்ற போதும், பிள்ளைகளுக்காக மீண்டும் மீண்டும் எல்லாவற்றையும் தரும் பெற்றோர்.

சிறுவயதில் தன்னை அன்பாக கவனிக்காதபோதும், எப்போதும் துணை நிற்காத பெற்றோரைக் கவனிக்கும் குழந்தைகள்.

தான் அவமானப்படுத்தப்படுவோம் அல்லது நிராகரிக்கப்பட்டுவிடுவோம் எனத் தெரிந்தும், தான் காதலிக்கும் பெண்ணிடம் தன் காதலை வருடக்கணக்கில் தெரிவித்துக்கொண்டிருக்கும் நபர்கள்.

தான் காதலித்த நபரையே வருடக்கணக்கில் நினைத்து, சோகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நபர்கள்.

எனக்குப் பரிச்சயம் ஆன சுயமாகச் சம்பாதிக்கும் ஒருவர், திருமணமான நாளிலிருந்து உணர்வு ரீதியான, உடல் ரீதியான துன்பத்தை அனுபவித்து வருகிறார். வீட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத் தேவையும், அவர் கணவன் வீடு உட்பட எல்லாவற்றையும் இவர்தான் பாத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பொறுப்பற்ற கணவரை, குழந்தைகளுக்கான எந்தவிதமான பொறுப்பையும் எடுத்துக்கொள்ளாத, தனக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத கணவனுடன், எல்லாப் பொறுப்புகளையும் தானே சுமந்துகொண்டு, 10 வருடங்களுக்கு மேலாக ஒரு சுமை தாங்கியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அந்த நிலை மாற வேண்டும் என்று அவர் முயற்சி செய்வதில்லை. மாறாக, கணவர் பெயரைப் பாதுகாக்கும் வகையில் காரணங்கள் சொல்வார்.

இவை எல்லாவற்றிருக்கும் இரண்டே காரணங்கள்தாம்.

1. உணர்வு ரீதியான பிணைப்பு.

2. வழக்கம்.

எல்லா உறவுகளிலும் உணர்வுபூர்வமான பிணைப்பு (emotional bonding) இருப்பதைப் பார்க்கலாம்.

இங்கு நிறைய குடும்பங்களில் abusive relationship, அதாவது கணவனால் துன்பத்திற்கு உள்ளாகியும், அவரோடு வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணம், கணவன் என்ற மனிதன் மீதான பிணைப்பைவிட, கணவன் என்ற உறவுமுறை மீது சிறு வயதிலிருந்தே உருவாக்கப்பட்ட உணர்வு ரீதியான பிணைப்பே. அந்த உறவு தருகின்ற அடையாளத்துடன் ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பாகக்கூட இருக்கலாம்.

இதில் பழக்கமும் முக்கியக் காரணம். ஏனென்றால் நீண்ட நாள் பழக்கம் இல்லாத உறவுகளிலிருந்து, சூழ்நிலைகளிலிருந்து நீங்கள் எளிதாக வந்துவிட முடியும். நீண்ட நாள் பழக்கம் என்பது உரையாடல்கள், அந்த உறவுகளுடன் ஏற்பட்ட அனுபவங்கள், அல்லது மனத்தளவில் வெறும் நினைவுகளால் மட்டுமே ஏற்படுத்திக் கொண்ட பழக்கமாகக்கூட இருக்கலாம்.

மேலும் அந்தக் கஷ்டத்திற்கும் அந்தத் துன்பச் சூழலுக்கும் அவர்கள் பழகி இருப்பார்கள். அவமானப்படுவது சகஜம். துன்பமும் சோகமும் சகஜம் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள்.

இவர்கள் எல்லாரிடமும் ஒரே தன்மைதான். அது தாங்கள் காயப்படுவோம் என்று தெரிந்தேதான், அவர்கள் தங்கள் உறவுகளுக்காகச் செய்கின்ற செயல்களைச் செய்து வருகிறார்கள். தன்னுடைய மகிழ்ச்சிக்காக அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தேர்ந்தெடுப்பது இதையே.

இது அவர்களுக்குச் சரி, தவறு அல்லது ஏற்புடையது, ஏற்புடையதல்ல என்று சொல்ல வரவில்லை. மாறாக, அவர்கள் தேர்வு செய்யும் வாய்ப்புகள் அனைத்திலும் தெரிந்தே தங்களை ஒரு வகையான அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதைப் பார்க்கலாம்.

இதிலிருந்து மாற்றம் தேவை என்பதை நினைவில் கொண்டு, தங்கள் வழக்கத்தில் இருந்து, வழக்கமான அனுபவங்களிலிருந்து மாற்றம் வேண்டும். மகிழ்ச்சியும் முன்னேற்றத்தையும் ஆதரவையும் தருகின்ற உறவுகள் வேண்டும். தாம் அதற்கு முற்றிலும் ஏற்புடையவர்கள் என்பதை நம்ப வேண்டும்.

நமது வழக்கத்தை மாற்றி, நமக்கான தேர்வை விழிப்புணர்வோடு, தேர்ந்தெடுப்பதுதான் அனைத்திற்கும் தீர்வாக இருந்தாலும், சில உறவுகளைப் பொறுத்தவரை இது கடினம்.

ஏனென்றால் நம்மைக் காயப்படுத்திக்கொள்வதற்கு அல்லது அசௌகரியத்திற்கு உள்ளாக்கிக்கொள்வதற்குத் தயாராக இருப்போம்.

இந்தப் பண்பை ப்ரேனி ப்ரோன் என்ற ஆராய்ச்சியாளர், ‘காயப்படும் தன்மை’ (‘vulnerability’ ) என்று குறிப்பிடுவார்.

vulnerability என்பது மூன்று விஷயங்களை உள்ளடக்கியது.

  1. ஒன்று எதிர்காலத்தில் தனக்கு, தான் எதிர்பார்த்தது கிடைக்கும் என்ற உறுதி இல்லாதது. (uncertainity)
  2. துணிவு (risk) தனக்கு நேர விரயம் ஏற்படலாம், ஏதோ விரயங்கள் ஏற்படலாம் எனத் தெரிந்த பிறகும் அதைச் செய்வது.
  3. தன்னைப்பற்றி அடுத்தவர் எல்லாமே தெரிந்துகொள்வதற்கு உணர்வு ரீதியாகத் தன்மை வெளிப்படுத்துவது. (emotional exposure).

இங்கு, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில், உறவுகளில் வலிய சென்று அன்பை வெளிப்படுத்துபவர்களைப் பார்த்தால், நம்மில் எத்தனை பேருக்கு அவர்கள் தைரியசாலிகளாகத் தெரிவார்கள்?

பெரும்பான்மையானவர்களுக்கு, அவர்கள் கோழைகளாகத் தெரிவார்கள். ஆனால், அது கோழைத்தனமல்ல. நிஜத்தில் அதுதான் தைரியம்.

தான் நிராகரிக்கப்படுவோம் அல்லது அவமானப்படுத்தப்படுவோம் எனத் தெரிந்த பின்னும் வெளிப்படுத்தப்படும் காதலாகட்டும். இது ஒத்துவராது எனத் தெரிந்த பின்னும், உறவில் கசப்பு வந்த பின்பும், கடினமான காலத்தில் துணை நிற்கின்ற உறவுகளாகட்டும் அதில் தைரியமும் துணிச்சலும் மட்டுமே இருக்கிறது. கோழைத்தனமல்ல.

மனித வாழ்வில் vulnerability பண்பை அனுபவிக்காமல், அர்த்தமுள்ள உறவுகள் சாத்தியமே இல்லை. மேலும், அதை உணர்வதைத் தவிர்க்க முடியாது என்றாலும் குறிப்பிட்ட நபரிடம் வெளிப்படுத்துவதைத் தேர்வு செய்ய முடியும்.

ஆனால், நீங்கள் வெளிப்படுத்துவதன் மூலம், இரண்டு வகையான சாத்தியங்கள் நிகழலாம்.

  1. புரிதலின் மூலம் அந்த உறவு பலப்படுத்தப்படலாம்.
  2. உறவிலிருந்து முழுப் புரிதலோடு, மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு, வெளிவரலாம்.

ஏனென்றால் இரண்டு பேர் ஓர் அறைக்குள் நுழையும்போது எப்போதும் ஒரே மாதிரியானவர்களாக நுழைவதில்லை. உறவுகளுக்குள்ளும் புரிதல்கள் மாறிக்கொண்டேதான் இருக்கும்.

மேலும் இந்த இரண்டு முடிவுகளுமே நீங்கள் மகிழ்ச்சியோடு வாழ்வைக் கொண்டாடுவதற்கான சாத்தியங்கள்தாம்.

உணர்வுகளில் சரியென்றும், தவறென்றும், இப்படித்தான் என்றும் வரையறுக்க எதுவுமில்லை. எந்த உணர்வாக இருந்தாலும் உங்கள் உணர்வுகளை அங்கீகரிப்பதுதான் முதற்படி. Vulnerability உணர்வை அங்கீகரித்தல், உங்கள் உறவுகளை மேம்படுத்த துணைநிற்கும்.

இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது, Vulnerability ஐ வெளிப்படுத்தும் போது, முற்றிலும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய, ஆதரவைத் தரக்கூடிய, உங்களைப் பலப்படுத்துகின்றன ஓர் உறவுக்கு, நீங்கள் முற்றிலும் தகுதியானவர் என்பதை நினைவில் வைத்து, முழு விழிப்புணர்வுடன் வெளிப்படுத்த வேண்டும்.

சமூக விலங்குகளாக, அறிவுப்பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் சிந்திக்க தெரிந்த நீங்கள், வழக்கத்தை மாற்றி, காயப்படும் தன்மையை, முழு ஒப்புதலோடு அனுமதித்து, உணர்வுகளை உணர்ந்து, உணர்வுகளோடு ஒன்றி, மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளைக் கண்டுபிடித்து, மகிழ்ச்சியாக இருப்பதையே தேர்வுசெய்து, மகிழ்ச்சியாக இருத்தலை வழக்கப்படுத்திக்கொள்வோம்.

Vulnerability என்ற தைரியத்தை விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுத்து, உறவுகளை அர்த்தமுள்ளதாக்கி, வாழ்வைக் கொண்டாடலாம் வாங்க!

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.