ஹாய் தோழமைகளே,

கடந்த அத்தியாயத்தில் லட்சியத்தின் முக்கியத்துவத்தைப் பார்த்தோம். அதை அடையும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

முதல் படி, நமது நோக்கமென்ன என்கிற தெளிவு இருக்க வேண்டும். அது நேரான வழியில் அடையக்கூடிய நோக்கமாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு லட்சியத்திற்கும் ஒரு நியாயமான காலக்கெடு இருக்க வேண்டும். நீங்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்று முடிவு செய்தால், அதற்கு குறைந்தபட்ச கல்லூரிக் காலம் மற்றும் தகுதி தேர்வுக்கான தயாரிப்பு காலம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டே காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும்.

லட்சியத்தில் தெளிவு வந்த பின் அதை அமையும் வழியில் கவனம் செலுத்துங்கள் தோழிகளே.

முதலில் ஒரு SWOC analysis செய்வோம்.

S – Strength – பலம்

W – Weakness – பலவீனம்

O – Opportunities – வாய்ப்புகள்

C – Challenges – சவால்கள்

உங்களது லட்சியத்திற்கு இந்த ஆய்வைச் செய்யுங்கள்.

பலம் – உங்களின் லட்சியத்தை அடைவதற்கு உதவும் உங்களின. பலங்களை வரிசைப்படுத்துங்கள்.

பலவீனம் – உங்கள் லட்சியத்தை அடைவதற்கு தடையாக இருக்கும் உங்கள் பலவீனங்களை வரிசைப்படுத்துங்கள்.

வாய்ப்புகள் – உங்கள் லட்சியத்தை அடைய உங்களுக்குள்ள வாய்ப்புகள் எவை என எழுதுங்கள்.

சவால்கள் – லட்சியத்தை அடைய தடையாக உள்ள சவால்கள் எவை எனக் கண்டறியுங்கள்.

பலம் மற்றும் பலவீனம் உங்களுக்குள் உள்ளவை. இரண்டும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவை. நீங்கள் பலவீனங்களைச் சரி செய்யவும், பலத்தை இன்னும் மெருகேற்றவும் முழு மூச்சோடு வேலை செய்யலாம்.

வாய்ப்புகளும் சவால்களும் புறக்காரணிகள் அவை மாறிக்கொண்டே இருக்கும். சவால்களுக்கேற்றவாறு உங்களின் அணுகுமுறை மாற வேண்டும்.

இப்போது ஒரு Goal setting Blue Print (லட்சியத்தின் செயல் திட்டம்) உருவாக்கலாம்.

உதாரணத்திற்கு உங்கள் நோக்கம் நிறைவேற ஒரு பத்தாண்டுகள் தேவை என நீங்கள் முடிவு செய்தால் ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் நீங்கள் எந்தப் புள்ளியைத் தொட வேண்டும் என்கிற இலக்கு தெளிவாக இருக்க வேண்டும்.

அடுத்து அந்த ஒவ்வோர் ஆண்டிலும் உங்களது செயல்களை மாதந்தோறும், வாரந்தோறும், தினந்தோறும் உங்களின் முன்னேற்றத்தை அளவிடக்கூடிய அளவில் திட்டமிடல் வேண்டும். தினமும் எத்தனை மணி நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும்.

உதாரணமாக, உங்கள் லட்சியம் ஒரு நல்ல பாடகியாவது என்றால், அதற்கு எத்தனை ஆண்டு கற்க வேண்டும், ஒவ்வொரு வருடமும் உங்களின் முன்னேற்றம் எந்த அளவில் இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி செய்யக் கற்க ஒதுக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

செயல்திட்டத்தை உருவாக்கும் போதே நாம் வெற்றியின் திசையில் பயணிக்கத் தொடங்குகிறோம்.

ஆனால் வெற்றியைத் தொட அதைத் தொடர்ச்சியாகவும், சுய விருப்பத்தோடும் செயல் படுத்த வேண்டும். உங்களின் லட்சியத்திற்கு வேறு யார் உழைப்பார்கள்?

நாம் யாரும் இயந்திரமல்ல, நிச்சயம் இதிலிருந்து அவ்வப்போது விலகுவோம். ஆனாலும் பாதைத் தெளிவாக இருந்தால்தான், விலகுகிறோம் என்பதே புரியும். இல்லாவிடில் வெகுதூரம் வந்த பின்தான் பாதை மாறியதே தெரியும். சரி செய்ய நீண்ட காலம் பிடிக்கலாம் அல்லது சரி செய்ய முடியாமலே போகலாம்.

அது சரி இதெல்லாம், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் உதவும், எந்த வகையில் உணர்வை நல்லவிதமாகக் கையாள உதவும் என நீங்கள் கேட்கலாம்.

உணர்வைச் சரியாகக் கையாள முடியாமல் போவதற்கு மிக முக்கியக் காரணமே, நம்மிடம் நாம் முழு மகிழ்ச்சியோடு இல்லாதிருப்பது, எதையும் மனம் ஒன்றிச் செய்யாதது, இந்த நாளை நான் எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற தெளிவில்லாததே காரணம்.

கடிவாளமில்லாம உணர்வும் ஆற்றலும் நம்மைச் சீரழித்துவிடும். நம் லட்சியமே வாழ்வின் கடிவாளம்.

தன்னை அறிந்து, தன் வாழ்வின் நோக்கம் புரிந்த ஒருவருக்கு எல்லாச் சந்தர்பத்திலேயும் மனம் அதை நினைவூட்டும். உணர்ச்சி கொந்தளிக்கும் போது உனது களம் வேறு இங்கு நேர, சக்தி விரயம் கூடாதென எச்சரிக்கும்.

இதை எல்லாம் தாண்டி ஒரு சிறு விழுக்காடு மக்கள் உணர்வின் பிடியில் ஆட்படுவர். அதற்கான மந்திரம் அடுத்த வாரம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.