குறிக்கோள்

நாம் எல்லோரும் சின்ன வயதில் எதிர்நோக்கிய ஒரு கேள்வி, நீ என்னவாக போகிறாய் ? கண்கள் மின்ன நாம் ஒரு பதில் சொல்லியிருப்போம். இன்றைக்கு அந்த நிலையில் இருக்கிறோமா என்று யோசித்தால் சிலர் ஆமென்றும், வெகு சிலர் அதைவிட நல்ல நிலையிலும், பலர் அதற்கு சம்பந்தமில்லாத இடத்திலும் இருப்பர்.

அதிலும் நாற்பதைக் கடந்த பல பெண்களுக்குத் தினசரி வேலைகளைத் தாண்டி வாழ்க்கை என்று ஒன்று இருப்பதே மறந்திருக்கும். அதெப்படி ஒரு சிலர் மட்டும் லட்சியத்தை அடைந்ததும், சிலர் அதையும் தாண்டி சாதித்ததும் சாத்தியமானது ?

அவர்கள் எத்தனை தூரம் அந்த லட்சியத்தை நேசித்தார்கள் என்பதைப் பொருத்தே வெற்றி அமைகிறது.

‘மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்’ என்று ஏழாம் அறிவு திரைப்படத்தில் வரும் அற்புதமான பாடல்.

நம் லட்சியத்தை மனதில் இருத்தி தினமும் அதை நோக்கி நகரும் போது, ஒரு நாள் அதை அடைந்தே தீருவோம், சில நேரம் அதையும் தாண்டி வெற்றி அடைவதும் உண்டு.

உங்களின் தனிப்பட்ட லட்சியம் என்ன ? ஓராண்டுக்குப் பிறகு நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் இருந்தால் அதில் உறுதி இருந்தால் உங்கள் வெற்றியை யாருமே தடுக்க முடியாது. ஆனால், நம்மில் நிறைய பேருக்கு அப்படி ஓர் இலக்கே இல்லை என்பதே வருத்தமான விஷயம்.

லட்சியமே இல்லாத வாழ்க்கையில் சிலிர்ப்போ நெகிழ்ச்சியோ உற்சாகமோ இருப்பதில்லை.

கடனே என்று ஒரு வாழ்க்கையில் சிக்கிக்கொள்கிறோம்.

இலக்கில்லாமல் போகும் வண்டி வீடு போய்ச் சேர்வதில்லை. எந்த வேலையிலும் ஈடுபாடு குறைந்து, ‘என்ன இப்போ, அப்புறம் பார்த்துகலாம்’ என்கிற சோம்பேறித்தனமான மனநிலைக்கு வந்துவிடுவோம்.

நீங்கள் ஒரு சிறிய குறிக்கோளை முயற்சி செய்து பார்க்கலாம். அதை வென்றெடுக்கும் போது வரும் சிலிர்ப்பு (Thrill) அலாதியானது.

ஒரு லட்சியத்திற்காக நாம் வேலை செய்ய ஆரம்பிக்கும் போது அது நம் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். அந்த நேர்மறை மாற்றங்களே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் பல மடங்கு அதிகப்படுத்துகிறது. எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கிறது, வாழ்வில் எது போனாலும் லட்சியப் பிடிமானம் இருந்துவிட்டால் வாழ்வு அழகாகிறது.

லட்சியம் என்பது ஏதோ விண்ணை வளைப்பது போன்ற பெரிய காரியம் என்றில்லை. அது எவ்வளவு சிறியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது எடை குறைப்பு, புது மொழி கற்றல் என அன்றாட வாழ்வோடு பிணைந்ததாகவும் இருக்கலாம் அல்லது பட்டம் வாங்குவது, 5 இலக்க எண்ணில் சம்பாதிப்பது, உங்களுக்குப் பிடித்த துறையில் முன்னேறுவது என எதிர்காலத்தின் திட்டமாகவும் இருக்கலாம்.

உங்களை நீங்களே உற்று நோக்கி, உங்களை அறிந்து கொள்வதின் மூலம் உங்களுக்கான லட்சியத்தை முடிவு செய்யலாம்.

இதில்கவனிக்கவேண்டியவிஷயம்உங்களின்லட்சியத்தைநீங்களேதீர்மானிப்பது. நமக்காகப்போராடிவெற்றிகொள்ளும்போதுதான்வெற்றியின்சுவைஅதிகமாகும்.

சரி, நம்மை நாமே அறிந்துகொள்வதில் நமது கனவு என்ன என்று புரியும். அதை அடைவதற்குத் திட்டமிடுவது எப்படி?

  1. முதலில் ஏன் அந்த இலக்கைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நிஜமாகவே அது தேவையானதுதானா என்கிற தெளிவிருக்கும்.
  1. உங்கள் இலக்கை அடைய தேவையான தகுதிகள் என்ன, அது உங்களிடம் உண்டா, இல்லையெனில் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதைத் திட்டமிடுங்கள்.

3.SWOC (Strength, Weakness, Opportunities, Challenges, Analysis)

இந்த இலக்கை அடைய, உங்களின் பலம், பலவீனம், வாய்ப்புகள், சவால்கள் போன்றவற்றை ஆராயுங்கள். உங்கள் பாதையை நிர்ணயிக்க இந்த ஆய்வு உதவும்.

4. லட்சியத்தைp பல சிறு சிறு குறிக்கோளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சிறு குறிக்கோளுக்கும் நியாயமான காலக் கெடு முடிவு செய்யுங்கள்.

5. திட்டமிட்ட காலத்திற்குள் அதைச் செய்து முடிக்க தெளிவான திட்டம் தீட்டுங்கள். ஒரு நாளில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும், எப்படிச் செலவிட வேண்டும் என்கிற வரைபடம் முக்கியம்.

6. குறிப்பிட்ட கெடுவுக்குள் அந்தப் பகுதியை முடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்யுங்கள். இது ஒரு செயலை ஒருமுகபட்ட மனதோடு செய்து முடிக்கும் திறனை வளர்க்கும். கவனச் சிதறல்களைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும்.

7. அவ்வப்போது உங்கள் முன்னேற்றத்தை அளவிடுங்கள், அது உங்களை ஊக்கப்படுத்தும். ஒருவேளை நீங்கள் பாதை மாறி இருந்தால் மறுபடியும் சரியான பாதைக்கு வர இந்த அளவீடு உதவும்.

8. அவ்வப்போது உங்கள் இலக்கையும் சரி பாருங்கள். நீங்கள் முன்னரே முடிவு செய்த இலக்கு தவறென்றால் அதைத் திருத்திக் கொள்ள உதவும்.

இலக்கை நிர்ணயிக்கும் போது நாம் செய்யும் பொதுவான சில தவறுகள், நம் இலக்கைத் தொட்டுவிடும் தூரத்தில் இருந்து துரத்திவிடும்.

  1. ஆர்வ மிகுதியில் சில நேரம் நாம் யதார்த்தத்தை மீறிய இலக்கை நிர்ணயிக்கலாம்.
  2. இலக்கை மற்றவர்களின் கருத்தின் அடிப்படையில் முடிவு செய்வது.
  3. ஒரே நேரத்தில் பல இலக்கினை நோக்கி நகர்ந்து நமக்கு நாமே அழுத்தம் தருவது.

இது போன்ற தவறுகளைத் தவிர்த்தால், ‘தொடு வானம் அது தொடும் தூரம்’ என்று ஜெயிக்கலாம், ஜொலிக்கலாம்.

வாருங்கள், உங்கள் கனவுகளைக் கனவாகவே மடிந்து விடாமல் அதற்குச் செயல் வடிவம் தருவோம்.

உலகின் மிக சிறந்த சொல், ‘செயல்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.