பெண் உடலும் உடையும் அப்பெண்ணுக்கு உரித்தானது இல்லை. அந்தப் பெண்ணின் மானமும் குடும்பக் கெளரவமும் அவற்றில்தான் பொதிந்துள்ளது என்பதாக நம் சமூகத்தால் அழுத்தமாகக் கட்டமைக்கப்பட்டிருப்பது பெண்ணை அடிமைத்தனத்தில் கட்டிப்போட என்பது புரியாமல் பெண்களும் அதற்குள் கட்டுண்டு போய் தங்களைப் பலி கொடுத்து வருவது தொடர்கிறது.

சமூக வலைத்தளத்தின் தாக்கத்தால் பல நல்லவையும் அல்லவையும் சேர்ந்தே பரவி வரும் நிலையில், இங்கும் பெண் உடல் உடை சார்ந்த பிரச்னைகள் பெரும் பேசு பொருளாக அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளர்த்தி வருகின்றன. பெண்ணின் உடை குறித்தான சர்ச்சைகள் எழும்போதெல்லாம் அதில் ஆண்கள் அதிகளவில் பண்பாடு, கலாச்சாரம் எனப் பொங்குவதைப் பார்க்க முடியும்.

ஒரு பெண்ணின் உடலையும் உடையையும் மையமாக வைத்து நடத்தப்படும் ஒடுக்குமுறை ஆணுக்கு நடக்கிறதா? ஆணின் அரை நிர்வாணம் என்றாவது கேள்விக்குள்ளாக்கப்படுகிறதா? பெரும்பாலும் இல்லை. காரணம் ஆணின் அரை நிர்வாணத்தை யாரும் பாலுறவுடன் தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை. ஆனால், பெண்ணின் அரை நிர்வாணம் பாலுறவுடன் மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. அதனால்தான் பிரேசிலின் பெண் மந்திரி பார்லிமெண்ட் நடக்கும்போது தனது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தது பூதாகரமாக ஆண் சமூகத்தால் பேசப்பட்டது. அமைச்சராக அவர் என்ன பேசினார்? அவரது கருத்தின் மீதான நிறை, குறைகள் என்ன என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவர் அரை நிர்வாணமாக, கவனம் ஈர்க்கவே அவ்வாறு செய்தார் என மெத்தப் படித்த பலராலேயே விமர்சிக்கப்படுகிறது.

பெண்ணின் மார்பு கவர்ச்சியானது. பாலியலுடன் தொடர்புடையது என்பதைத் தாண்டி சிந்திக்க முடியாத அளவு நம் சிந்தனை முடமாகிப் போய் இருப்பது எவ்வளவு வருத்தத்திற்குரியது. இயற்கையை ஒட்டி வாழ்க்கை வாழ்ந்து வரும் பல இனத்தவர்கள் குழந்தைக்குப் பால் கொடுப்பதை ஒளித்து மறைத்து செய்வதில்லை. ஆனால், நாகரிகமான சமூகம் எனப் பீற்றிக்கொள்பவர்களில் பலரும் அனைத்து விஷயங்களையும் பாலியலுடன் தொடர்புபடுத்தி சர்ச்சைகளை உருவாக்குகின்றனர்.

பெண்ணின் உடை பற்றி விமர்சிக்காத ஆண்களே இல்லை. பெண்களும்தாமே என்பவர்களுக்கு அவர்களும் ஆணால் கட்டியமைக்கப்பட்ட, ஆண் மைய சமூக அமைப்பை ஏற்றுக்கொள்ளப் பழக்கப்பட்ட பெண்கள் என்பதைச் சுலபமாக மறந்து விடுகிறார்கள். ஒரு பெண்ணுக்கு உடை குறித்த அழுத்தம் அவளுக்குள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பலரால் உணரப்படுவதே இல்லை.

பெண்கள் உடல் வெளியே தெரிந்துவிட்டால் அவள் உயிர் வாழக் கூடாது, கணவனுக்கு மட்டுமே அவள் உடல் உரித்தானது, அதை அந்நிய ஆண்கள் பார்த்துவிட்டாலே அவள் வாழத் தகுதியற்ற பெண் போன்ற பத்தாம்பசலித்தனமான கருத்துகள் இன்றும் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படுவதால் எத்தனை உயிர்கள் பறிபோகின்றன?

உயிரே போனாலும் வீட்டுப் பெண்கள் ஆடை விலகக் கூடாது என்று மூர்க்கமாக அறநெறி வகுக்கும் ஆண்கள், அதை ஆமோதிக்கும் பெண்கள், வீட்டுப் பெண்கள் அல்லாது பிற பெண்களின் நிர்வாணத்தைத் திரையிலும், சந்தர்ப்பம் அமையும் போது திரை மறைவிலும் ரசிப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது என்ன மாதிரி அயோக்கியத்தனம். இந்த அயோக்கியத்தனத்தை கலாச்சாரம், பண்பாடு என எவ்வளவு அழகாக மறைக்கிறது.

என் பாட்டிக்கு மரணத் தருவாயில் கை, கால்களை அசைக்க முடியாது. சுயநினைவு இழந்து, அவ்வப்போது சுற்றிலும் பார்த்து சோர்வாகக் கண்ணை மூடும் அந்த இறுதி நிமிடங்களில், குடும்பமே அவரைச் சுற்றிக் கூடியிருந்தோம். எனக்கு அந்தச் சூழலின் கணம் புரிந்தும் புரியாமலும், மெளனமாக பாட்டிக்கு அருகே அமர்ந்திருந்தேன்.

என் அப்பா அதாவது பாட்டியின் மருமகன் பாட்டியைப் பார்க்க உள்ளே நுழைகிறார். பாட்டியின் காதில் பெரிய மாப்பிள்ளை வந்திருப்பதாக என் மாமி கூறுகிறார். அரை குறையாகக் கண்விழித்து அப்பாவைப் பார்க்க முயற்சித்த பாட்டி, அருகே இருந்த என்னைக் கூப்பிட்டு அவர் புடவையை இழுத்து போர்த்த ஜாடை காண்பித்தார். நானும் அது இயல்பு என்பதாகப் பழக்கப்பட்டுப் போயிருந்த அப்போதைய மனநிலையில் அதனை செய்தேன். ஆனால், பின்னாளில் பாட்டி செயலின் அந்த வீரியம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தோள் எல்லாம் சுருக்கம் விழுந்து இறக்கும் தருவாயில் இருக்கும்போதுகூட ஒரு பெண் தனது உடை பற்றிக் கவலைப்பட வேண்டுமா? ஏன் பெண்களுக்கு மட்டும் எப்போதும் உடல் பற்றியும் ஆடை பற்றியும் பிரக்ஞை என்ற கேள்வி பூதாகரமாக இருந்து வருகிறது.

சமீபத்தில் AI மூலமாகப் பெண்ணின் சாதாரண ஒளிப்படம், முகம் மட்டும் இருந்தால்கூடத் துல்லியமாகப் பெண்ணின் நிர்வாண உடலுடன் மார்பிங் செய்யப்பட்டு பொதுவெளியில் பகிரப்படும் அபாயம் இருக்கிறது, ஆகவே பெண்களே எச்சரிக்கையாக இருங்கள் என்கிற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதுவும் பெண்ணுக்குதான் எச்சரிக்கை. ஒரு பெண்ணின் போட்டோ அல்லது முகம் தெரியாமல் சமூகத்தில் வலம் வர முடியுமா? டெக்னாலஜி வெகுவாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு பெண்ணின் ஒளிப்படம் கிடைப்பது மிக அரிதான விஷயமா? வினுப்பிரியா என்கிற பெண்ணின் போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் அவள் தற்கொலை செய்து கொண்டபோது சமூக வலைத்தளத்தில் நான் எழுதிய ஒன்றைத்தான் இங்கும் பகிர்கிறேன்.

“டெக்னாலஜி வெகுவாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு பெண்ணை ஆபாசமாகப் படம் எடுப்பது ஒன்றும் பிரம்ம பிரயத்தனமல்ல. அதற்காக முக்காடிட்டுக் கொண்டே அலைய முடியாது. மார்பிங் செய்யப்பட்ட படமென்றாலும் அல்லது உங்களையே எடுத்த படமென்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் துணிந்து ஆமாம் என் உடம்புதான் எல்லாப் பெண்களுக்கும் இயற்கையாக அமைந்ததுதான் எனக்கும். என்ன பப்ளிக்கா போடுவியா போட்டுக்கோ என்று பெண்கள் என்று துணிந்து சொல்லத் தொடங்குகிறார்களோ அன்றுதான் இந்த ஆபாச படம் மார்பிங் பிரச்னை ஒழியும்.

முதலில் கடினம்தான். ஆனால், இருவர் துணிந்து இறங்கி, இந்த அடக்குமுறைக்குப் பெண் அடிபணிய மாட்டாள் என்கிற எண்ணத்தை விதைத்தாலே பாதி வெற்றி.

நானும் ஒரு கட்டத்தில் ஆபாசத் தளமொன்றில் என் ஒளிப்படமும் அதற்குக் கீழ் கொச்சையான வார்த்தையும் கண்டு சுருண்டிருக்கிறேன். அதன் பின் போங்கடா என்னை எனக்குத் தெரியும் என்று இன்றுவரை போட்டோ பற்றி அலட்டிக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். என்ன இந்தப் பதிவு பார்த்து சில வக்கிரபுத்தி ஃபேக் ஐடி மார்பிங் செய்து போடக்கூடும். போட்டுக்குங்க.

இந்தச் சமூக வலைத்தளத்தில் இயங்கும் ஆண்களின் தோழியோ உறவினரோ, அவருக்குத் தெரிந்தவரின் ஒளிப்படம் வெளியானால், அந்தப் பெண்ணை அதைரியப்படுத்தாமல் தைரியமாக எதிர்கொள்ளக் கற்றுக் கொடுக்கலாம். மாறாக ஏன் போட்டோ போடுகிறீர்கள் என்றோ கண்டவன்கூட பழகினா இப்படிதான் என்றோ குற்றப்பத்திரிக்கை வாசிக்காதீர்கள்.

உடல் உயிரைச் சுமக்கும் சாதனம். யோனியும் முலையும் மட்டும் பெண்ணல்ல என்பதை முதலில் பெண்கள் புரிந்து கொள்ளுங்கள். புரிந்துகொள்ளாத ஆண்களும் புரிந்து கொள்ள முயற்சிப்பது ஒன்றுதான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும்.

நம்மை அறியாமல் எடுக்கப்படும் படமாக இருக்கட்டும், அல்லது நாமே பகிர்ந்த படமாக இருக்கட்டும். அது ஓர் ஒளிப்படம் என்பதைத் தாண்டி அதற்கு அதிகளவு முக்கியத்துவம் தர தேவையில்லை. சமூகம் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான் ஒரு பெண்ணைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கி, சில நேரம் தற்கொலை வரை கொண்டு போய்விடுகிறது.

பெண்ணிற்குச் சிறு வயதில் இருந்து உடை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் உடை முழு உடலையும் மறைக்க வேண்டும். உடல் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது என்கிற ரீதியில் அவளுக்குள் சிறுவயதில் இருந்தே திணிப்பதைத் தவிருங்கள். அது பெண்ணை உடலாகப் பார்க்கக் கட்டாயமாக்கப்பட்டு, அவளையறியாமல் பெருஞ்சுமையாக இறக்கும் வரை சுமக்கிறாள் என்பதை உணர முற்படுங்கள்.

இதனால்தான் அவள் நிர்வாணம், அரை நிர்வாணம் அவளையறியாமல் வெளியிடப்படும் போது உடைந்து போகிறாள். உயிர் வாழவே தகுதியற்ற மிகப்பெரும் அவமானம் நேர்ந்து விட்டதாக வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறாள். அது மட்டுமல்ல

இதனால் அவளுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் உட்பட பல உடல் ரீதியான உபாதைகளை அவள் வெளியில் சொல்லாமல், அது முற்றி மரணத்தில் போய் முடிவது நம் இந்தியச் சமூக அமைப்பில் சர்வ சாதாரணமான ஒன்று.

ஒரு பெண் தன் உடல் உபாதையைக்கூட வெளியில் சொல்ல முடியாத, காண்பிக்க முடியாத மன நெருக்கடி எதனால்? ஒரு பெண் சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது அல்லது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும்போதுகூட முதலில் அவள் கண்விழித்தவுடன் உடைகளைச் சரி செய்ய கைகள் நீள்வது எதனால்? ஒரு சைக்கிளில் இருந்தோ பைக்கில் இருந்தோ கீழே விழும்போதுகூட அடிபட்டதை முதலில் கவனிக்காமல் உடையைக் கவனிப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா? உடலைத் தாண்டி உடை பற்றிய சிந்தனை அவள் மனதில் எந்த அளவு ஆழப் பதிந்திருந்தால் இது சாத்தியம்?

மானம், கெளரவம் எல்லாமே முக்கியம்தான், ஆனால் அதைவிட உயிரும் பாதுக்காப்பும் முக்கியம் என்பதை குழந்தைகளிலிருந்து சொல்லிக் கொடுத்து வளர்ப்போம்.

உடை உடலுக்கு மட்டுமே, ஆனால் அந்த உடையை பெண்ணின் ‘கை விலங்காக’ மாற்றியதால்தான் சில பெண்கள் சுதந்திரத்தின் அடையாளமாக உடையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எதிலும் காட்ட முடியாமல் அடக்கப்பட்ட சுதந்திர உணர்வை உடையில் காட்டி தீர்த்துக் கொள்கிறார்கள்.

இந்தக் கட்டுரையின் சாராம்சம் எப்படி வேண்டுமானாலும் உடுத்தலாம் என்பது இல்லை. ஒரு பெண் பிறந்ததிலிருந்து, விவரம் அறிந்ததிலிருந்து, சாகும் வரை இப்படி இரு அப்படி இரு… இப்படி உடுத்து அப்படி உடுத்து என்று ஒவ்வொரு நொடியும் அவள் உடலைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடாமல் செய்வதைப் பற்றிச் சிந்திக்க…

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.