பதின்ம வயதில் இருக்கும் என் வீட்டு வாண்டுவிடம் நடந்த உரையாடல்:

“பாலின பேதம் (Gender disparity) எல்லாம் அந்தக் காலம்மா. இப்போ எங்க ஸ்கூல்ல எல்லாம் அப்படி இல்ல!”

“அப்படியா? நீ அப்படி ஃபீல் பண்ணா சந்தோஷம்.”

“நெஜமா, நீங்க உங்க டைம் கதை சொல்றீங்க. ஆனா, அது கூடல்லாம் கம்பேரே பண்ண முடியாது.”

“சரி வாயேன், இப்போ பாலின பேதம் இருக்கான்னு பார்ப்போம்.”

“ஓகே.”

“உன் க்ளாஸ்ல பிரைவேட் ட்ரான்ஸ்போர்டேஷன் இல்லாம, தானே ஸ்கூலுக்கு வர்றதுல பசங்க ஜாஸ்தியா, பொண்ணுங்களா?”

“பசங்கதான் ஜாஸ்தி. கொஞ்சம் பொண்ணுங்க தானே வர்றாங்க. ஆனா, மோஸ்ட்லி யாராச்சும் கூட வந்துதான் பொண்ணுங்கள விடுறாங்க!”

“ஸ்கூல் முடிஞ்சி எக்ஸ்ட்ரா நேரம் கேம்பஸ்ல செலவழிக்கிறது பசங்களா, பொண்ணுங்களா?”

“ஸ்போர்ட்ஸ், எக்ஸ்ட்ரா-கரிகுலர், கோ-கரிகுலர்னு எல்லாத்துலயும் பொண்ணுங்களவிட பசங்கதான் ஜாஸ்தி.”

“சும்மா கேம்பஸ் சுத்தி அரட்டை அடிக்கிறதுல?”

(முறைத்துக்கொண்டே) “பசங்கதான்.”

“நீ ஐந்தாம் வகுப்பு படிச்சப்ப பொண்ணுங்களும் பசங்களும் பேசுனதுக்கும், இப்போ பொண்ணுங்களும் பசங்களும் பேசுறதுக்கும் வித்தியாசம் தெரியுதா?”

“ரெம்ப டீடெயிலிங் கேக்கலன்னா சொல்றேன்…”

“ஆங் தெரியுது, இன்சைட் இன்ஃபோக்குப் போகாம கேக்குறேன். இப்ப பொண்ணுங்களும் பசங்களும் பேசுற அந்த வித்தியாசத்த மட்டும் எடுத்துக்கோ. பசங்க பொண்ணுங்ககூடப் பேசும்போது வர்ற ஒரு வைப் கவனிச்சியா?”

“ஆமா!”

“அதைப் பசங்க மறைக்க ட்ரை பண்றாங்களா?”

“மோஸ்ட்லி மாட்டாங்க. ஒரு சில பசங்க மறைக்க ட்ரை பண்ணுவாங்க, பட் அந்தப் பசங்க நான் பொண்ணுங்களவிட

நான் சுபீரியர்ன்ற ஒரு திமிர் காட்ற மாதிரி அது.”

“சூப்பரு. பொண்ணுங்க பசங்ககிட்ட பேசும்போது அந்த வைப் பாத்திருக்கியா?”

“இருக்கும். ஆனா, ரெம்ப டைட்டா அது இல்லாத மாதிரி மெயின்டெய்ன் பண்ணுவாங்க!”

“அதுல நான் சுபீரியர்னு தோணுமா?”

“இல்ல, அது அப்படி இல்ல. நான் இந்த ஃபீலே இல்லாதவன்ற மாதிரி காட்டிக்க ட்ரை பண்றாங்கன்னு தோணும்.”

“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுதா?”

“தெரியுது. பசங்க ஃப்ளர்ட் பண்ணாகூட யாரும் தப்பா நெனைக்க மாட்டாங்க. ஃப்ளர்ட் பண்ணலன்னாலும் கெத்து.

ஆனா, பொண்ணுங்க அந்த ஏரியாவே இல்லாத மாதிரி இருக்க வேண்டியிருக்கு. அப்பதான் நல்ல பொண்ணுன்னு பேர் வாங்க முடியும்.”

“சரி, பேரன்ட்ஸ் மீட்டிங்னு ஒவ்வொரு மாதமும் தேர்வு வைக்கிறாங்களே, அப்போல்லாம் நான் சரியா மார்க் வாங்கலன்னா, அம்மா வந்தா பரவால்ல, எப்பிடியாச்சும் சமாளிச்சிருவேன், அப்பா வந்தா தொலைஞ்சேன்னு எத்தன பேரு நெனைக்கிறாங்க?”

”ஆல்மோஸ்ட் எல்லாரும் அப்பிடித்தான் நெனப்பாங்க. மார்க்லாம் பிரச்னை இல்லை. பொதுவாவே அம்மா வந்தா நெறய கேள்வி கேக்க மாட்டாங்க, இதெல்லாம் உனக்குப் புரியாதுன்னு சொல்லி எஸ்கேப் ஆயிறலாம்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. எனக்கும் அதைக் கேக்கும்போதே கஷ்டமா இருக்கும். ஏன்னு கேளுங்க?”

“ஏன்?”

“எல்லா அம்மாவும் இவ்ளோ பாவமா இருக்காங்களே, எனக்கு வாச்சது மட்டும் பாவியா இருக்கேன்னு.”

(சிரிப்பு)

“சரி, உங்க ஸ்கூல்ல எத்தன பேர் மிடில் கிளாஸ் அண்ட் பிளோ மிடில் க்ளாஸ்னு சொல்லலாம்?”

“கிட்டத்தட்ட 50%.”

“சரி, ரைட் டு எஜுகேஷன்ல ஒரு பையனும் பொண்ணும் ட்வின்ஸ் படிக்கிறாங்கல்ல?”

“ஆமா பொண்ணு என் க்ளாஸ். பையன் வேற செக்ஷன்.”

“காலேஜ் போக ஒருத்தருக்குதான் செலவு செய்ய முடியும்னா, அவங்க வீட்ல யாரைப் படிக்க வைப்பாங்கன்னு நீ நினைக்கிற?”

(சோகமாக) “அந்தப் பையனத்தான்.”

“சரி விடு. லக்கிலி தமிழ்நாட்டுல இலவசமா படிக்க நெறய ஆப்ஷன் இருக்கு. அதெல்லாம் அவளும் படிச்சிருவா?

எனக்கெல்லாம் உன் வயசுல மினிமம் 2 பேராச்சும் பொண்ணு கேட்ருப்பாங்க. உங்க க்ளாஸ்ல அப்படி கதை எதும் இருக்கா?”

“ஐயோ ஆமா, 3 கேர்ள்ஸ் வீட்ல கேட்ருக்காங்க. அதுல ஒருத்திய செகண்ட் மேரேஜ்க்கு கேட்டாங்களாமாம். அவளுக்கு அம்மா இல்லைல. அதனால டோக்கன் ஃபார் க்ராண்ட்டட்னெஸ் இருக்கும். கஷ்டமா இருக்குல்ல கேக்க?”

“ஆமா. ஆனா, பசங்களுக்குப் படி, படி, வெளயாடாத தவிர வேற ஒன்னும் பெரிய பிரச்னை வெளிய இருந்து இல்லை தான்.”

“அப்போ யோசிச்சு பாத்தா பாலின பேதம் இருக்கு போலயே…”

“ஆமா. நம்ம ஊர்ல ஊருக்குள்ள நுழையும்போது கொஞ்சம் வீடு இருக்குல்ல என்ன தெரியுமா?”

“தெரியும். நம்ம தாத்தா காலத்துல தீண்டாமை கடைப்பிடிச்சிருக்காங்க. இரட்டைக் குவளை எல்லாம் வச்சிருந்திருக்காங்க கடைல.”

“ஆமா, அம்மா படிச்சப்போ லாஸ்ட் பெஞ்ச்ல உட்கந்திருந்தாங்க. ஆனா, இப்போ நம்ம ஊர் ஸ்கூல்ல அவங்க மட்டும்தான் படிக்கிறாங்க.”

“காலனில இல்லாதவங்க கடன் வாங்கியாச்சும் டவுன்ல இங்லீஷ் மீடியம் படிக்க வைக்கிறாங்க. மீடியம் ஒரு சாக்கு தான். உண்மையா பேசிப் பார்த்தா தெரியும். அந்தச் சாதிக்காரங்களோட படிச்சா கௌரவக் குறைச்சல்னு மெல்ல சொல்லுவாங்க.”

“இப்ப யாரும் ஏன் துண்ட தோள்ல போட்டன்னோ, ஏன் என் தெருவுல செருப்பு போட்டு வந்தென்னோ கேக்குறதில்லை. ஏன்னா, கேட்டா இவங்க கம்பி எண்ணணும்னு பயம்தான்.

ஆனா இன்னும் அவங்க சுடுகாடு தனி, ரெட்டை டம்ப்ளர்லாம் ப்ளாஸ்டிக் கப்னால ஒழிஞ்சு/ஒளிஞ்சிருச்சு.

அவங்க இருக்குற இடத்த அம்மா காலத்துல ‘… குடி’ன்னு சொல்வாங்க. ஆனா, இப்போ அப்படிச் சொல்றதில்லை. ‘காலனி’ன்னு சொல்றாங்க. இப்ப சொல்லு, தீண்டாமை இல்லாம போச்சா?”

(கோபமாக) “இல்ல, இருக்கு. மனசுல அழுக்கா, கறையா இருக்கு. வேற பேர் சொல்லி ஏமாத்துறாங்க!”

பெரியார்

“அதேதான். அதுல சட்டத்து கிட்ட இருந்து தப்பிக்க செய்றாங்கன்னா,பொண்ணுங்க விஷயத்துல சமூகத்துல நாகரீகம்னு காட்டிக்க நடிக்கிறாங்க. அவ்ளோதான். நம்ம கவனமா பார்க்கணும். அடக்குமுறை எந்த வடிவத்துல வந்தாலும் அன்பு, பாசம், கருணை, தெய்வம், சேஃப்டினுகூட வரும். அப்பவும் ஏமாந்து போயிறக் கூடாது. அதை எதிர்க்கணும். முழுசா எதிர்க்கணும்.”

“ஆமா. வில்லன் மேக்கப் போட்டுட்டு எம்ஜிஆர் படத்துலதான் வருவார். இப்ப வர்ற வில்லன்கள் எல்லாம் ஹீரோவவிட ஸ்மார்டா வருவாங்க.”

“அந்த எம்ஜிஆர் பட வில்லன்கள்ல பார்த்தீன்னா…”

“அம்மா, அதுவும் caste/class/color stereotype projectionனு நம்ம ஏற்கெனவே பேசிட்டோம். உங்க உரைய முடிச்சுக்கோங்க.”

பல்பு வாங்கியதும் உரையாடல் இனிதே முடிந்தது.

இவற்றை எல்லாம் எனக்காக நான் யோசிக்கும் முன், யோசித்து சூப்பர் டெம்ப்ளேட் ரெடி பண்ணி வைத்ததற்கு நன்றி பெருசு!

#HBDPeriyar144

படைப்பாளர்:

காளி. இதே பெயரில் Twitter-ல்  @The_69_Percent  என்று இயங்கி வருகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் புனைபெயரில் அழைக்கப்படுவதையே விரும்புகிறார். ஆணாதிக்கத்திடம் அதிகாரம் இழந்த பெண்மையைக் குறிக்கவே இந்தப் பெயர். முச்சந்துமன்றம் என்ற பெயரில் உள்ள புத்தக வாசிப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.