ஞாயிறு காலை.

“வருண்…”

“வருண்ண்ண்ண்… எத்தனை தடவை கூப்டறது? யார்கூட போன்ல அரட்டையைடிச்சிட்டு இருக்கே?”

“ஏன் கத்துற நிலா? கிரைண்டர்ல மாவெடுத்துட்டு இருக்கேன். அதான் நீ கூப்டது கேட்கல.” முழங்கை வழிய மாவுடன் வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான் வருண்.

“கீதா அவசரமா ஒரு வேலையா கூப்டுறா. வெளில போயிட்டு வந்துடுறேன்.”

“இப்பதானே டீ போடச் சொன்னே? போட்டுட்டு இருக்கேன்.”

“இல்லண்ணா, நாங்க போயிட்டு சீக்கிரம் வந்துடுறோம். கவலப்படாதீங்க, உங்க ஒய்ஃபை பத்திரமா அனுப்பி வெச்சிடுறேன்.”

வருணின் பதிலுக்குக் காத்திராமல் சிரித்துக்கொண்டே வெளியேறினர் நிலாவும் அவளது தோழி கீதாவும்.

பெருமூச்சு விட்டுக்கொண்டே கிச்சனுக்குள் நுழையப் போன வருண் அகஸ்மாத்தாக அத்தையின் ரூமை எட்டிப் பார்த்து அதிர்ச்சியானான்.

மாமாவுக்கு கிச்சன் மட்டும்தான் உலகம். ஆனால், அத்தை டிஜிட்டல் தொழில் நுட்பங்களிலும் இணையத்தைப் பயன்படுத்துவதிலும் கில்லாடியாகவே இருந்தார். குழந்தைக்கான ப்ராஜெக்ட் தொடர்பான வேலைகளை எல்லாம் அவரே பார்த்துக் கொடுத்து விடுவார். வருணுக்கு அது ஒரு நிம்மதி.

ஆனால், இன்று அவரது திரையில் பார்த்த காட்சியை வருணால் ஜீரணிக்க முடியவில்லை. சே! இந்த வயசுல இவங்களுக்கு ஏன் இப்படிப் புத்தி போகுது? நிலா கிட்ட சொல்லணும் என்று கறுவிக் கொண்டான்.

“நிலா…”

“ம்…”

“இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல. உங்கம்மா பார்ன் பாக்குறாங்கன்னு நினைக்கிறேன்.” தயங்கித் தயங்கிச் சொன்னான் வருண்.

“ம்ச்… உனக்கெப்படித் தெரியும்? அவங்க போனை எடுத்து நோண்டுனியா?” சரேலென்று எரிந்து விழுந்தாள் நிலா.

“இல்ல, இல்ல… யதேச்சையா அவங்க ரூம்ல பார்த்தேன். சிஸ்டம்ல பார்த்துட்டு இருக்காங்க.”

…….

“அடச்சே, இந்தம்மாவுக்கு அறிவே இல்ல, ரூமை லாக் பண்ணிட்டுப் பார்க்க வேண்டியதுதானே?” என்று முணுமுணுத்தாள் நிலா.

“நிலா, என்ன சொல்ற? உனக்கு அது தப்புன்னு தோணலியா?” வருணின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

“என்ன தப்பு? அது அவங்க ப்ரைவசி. அதுல நீ மூக்கை நுழைக்கிறதுதான் தப்பு. பொம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க. உங்கம்மா பார்க்க மாட்டாங்கன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்று நக்கலாகக் கேட்டாள் நிலா.

வருணுக்குச் சுருக்கென்றது. ஆம், உண்மையாக இருக்கலாம்.

“அதில்ல நிலா. இனியாக் குட்டிகூட அவங்க போனை எடுத்து கேம்ஸ் எல்லாம் விளையாடுறா. அதான் கவலையா இருக்கு” என்று தணிந்த குரலில் பேச்சைத் தொடர்ந்தான் வருண்.

“ம்ம்… நீ சொல்றதும் கரெக்ட்தான்.” யோசித்தாள் நிலா. “சரி, நீ ஒண்ணும் கவலைப்படாதே, நான் பார்த்துக்குறேன்” என்று நிலா ஆறுதல் சொன்னதும் வருண் நிம்மதியுடன் அவளை அணைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை.

அம்மாவிடம் ரூமுக்குள் தனியே போய்ப் பேசிவிட்டு வந்த நிலா குழந்தையை அழைத்தாள்.

“இனியாக்குட்டி…”

“என்னம்மா?”

“இனிமே பாட்டி போனை நீ எடுக்கக் கூடாது. அவங்க அதுல முக்கியமான டாக்யுமெண்ட்ஸ், பேன்க் டீடெய்ல்ஸ் எல்லாம் வெச்சிருப்பாங்க. லாக் பண்ணிட்டாங்க. உனக்கு கேம்ஸ் விளையாடணும்னா தாத்தா போனை எடுத்துக்கோ என்ன?”

எந்தச் சலனமுமின்றி கால் மேல் கால் போட்டு போனைப் பார்த்துக் கொண்டிருந்தார் நிலாவின் தாயார், அறுபது வயதான அன்பரசி.

குழந்தை அடம்பிடித்து அழத்தொடங்கினாள்.

கிச்சனிலிருந்து ஓடிவந்த தாத்தா குழந்தையைச் சமாதானப்படுத்தத் தொடங்கினார். ”அழாத கண்ணு, என் போனை எப்பனாலும் எடுத்துக்கோ. தாத்தா ரொம்ப யூஸே பண்றதில்ல.”

“போ தாத்தா. உன்னோடது டப்பா போன். பாட்டியோடதுதான் செம்மயா இருக்கும்.”

அப்பா அம்மாவின் ஐம்பதாவது திருமணநாளுக்கு அம்மாவுக்கு ஐ போனும் அப்பாவுக்கு கேக் அவனும் வாங்கிக் கொடுத்திருந்தாள் நிலா!

அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தித் தன் போனைக் கொடுத்துவிட்டு, பாட்டியிடம் வந்தார் தாத்தா.

“அறிவிருக்கா உனக்கு? நீ என்ன எழவைப் பார்த்தியோ, மருமகன் பார்த்துட்டு நிலா கிட்ட சொல்லி இருக்கான். ஏன் இப்படி மானத்த வாங்குற?”

“போடா, பொம்பளைங்க அப்படித்தான் இருப்போம். நீ உன் மருமகனை அடக்கி வையி. நான் பொட்டிக் கடை வரைக்கும் போயிட்டு வரேன், சிகரெட் தீர்ந்து போச்சு. அடுப்புல ஏதோ தீயுது போய் அதைப் பாரு…”

அலட்சியமாகச் சொல்லிவிட்டுச் சீட்டியடித்தபடியே வெளியேறினார் இனியாவின் பாட்டி அல்லிமலர்.


(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.