முதன் முதலாக ட்ரெக்கிங் போகும்போது ரயிலில் வைத்து, எனது டிராவல் குரு கீதா இளங்கோவன் ‘விபாசனா’ பற்றிச் சொல்லும்போதே எனக்கு உடனேயே அங்கு போக வேண்டும்போல இருந்தது. ட்ரெக்கிங் முடித்து வந்து விபாசனா சென்டரில் பேசும்போது, அங்கு குழந்தையை எல்லாம் பார்த்துக்கொள்ள மாட்டார்கள்; பதினெட்டு வயது நிரம்பியவர்களை மட்டுமே விபாசனா செய்ய அனுமதிப்பார்கள் என்பது தெரிந்தது.

ஒரு வருடம் கழிந்த பிறகு, கீதா, ரித்திகாவைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூற, பள்ளியில் விடும் பொறுப்பை அலுவலகத்தில் (வேறு யார், சரவணன்தான்) ஒரு நண்பரும், ரீனாவின் ஜெய்யும் ஏற்க, பள்ளியிலிருந்து டேகேரில் இருக்கும் ரித்திகாவை கீதா கூப்பிட்டுக்கொள்ளும் பொறுப்பை ஏற்க, பத்து நாட்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுத்து விபாசனா தியான வகுப்பிற்கு சென்றேன்.

வெகு நிச்சயமாக இது கீதா எமக்களித்த வாழ்நாள் பரிசு! ஒரு பத்து தினங்கள் இந்தப் புற உலகோடு எந்தத் தொடர்புமற்று, எந்த விஞ்ஞான தொழில்நுட்ப சாதனங்களுமற்று, யாரோடும் பேசாமல், மௌனமாக நம்மை நாமே உணர ஒரு வாய்ப்பு கொடுப்பது; இந்த வாழ்வில் நாம் ஏன் பிறந்தோம், நாம் யார், எதற்கு இந்த அலைச்சல் உளைச்சல்கள்? அன்றாடம் நாம் செய்பவை நமது பிறவிப் பயனை அடைவதற்கானவைதானா என நம்மையே நாம் அறிவதற்கு இந்த வாழ்வில் ஒரேயொரு முறையாவது நிகழ்த்திக் கொள்ள வேண்டும்.

சிறு வயதில் உடைந்த வளையல்களை எல்லாம் குமித்தது போல போட, அதைத் தென்னை விளக்குமாறு குச்சியின் கூர் முனையால், அசையாமல் ஒவ்வொன்றாக, கவனமாக எடுப்பது ஒரு விளையாட்டு. அந்த விளையாட்டு போலத்தான் நம் மேல் படிந்த நூற்றாண்டு நினைவுகளை ஒவ்வொன்றாக வெங்காயத்தின் தோல் உறிப்பது போல, உள்ளே உள்ளே சென்று நம்மைக் கண்டடைய முற்படுவது. அடுத்ததை, பிறகு அதற்கடுத்ததை எனக் கடைசியில் இருக்கும் ஒன்றை மட்டும் – விதையை மட்டும் கண்டடைந்து கூறாய்வது.

கீதா விபாசனா பற்றிச் சொல்லும்போதே ‘டின்னர்’ கிடையாது என்பதுதான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு ‘மைக்ரேன்’. பசி தாங்க மாட்டேன். கீதா வீட்டில் விருந்து என்றால், ‘சாப்பிடலாமா’ என்கிற முதல் குரல் எனதாகத்தான் இருக்கும். அப்படி வயிறு எனக்கு. எதுவானாலும் சரி என்று விபாசனாவிற்குப் போவது என முடிவாகிவிட்டது.

காலை எழுந்ததும் தியானம்; பிறகு நாளெல்லாம் தியானம்; அதிகாலை ஆறரை மணிக்கு, பிறகு பதினோரு மணிக்கு சாப்பாடு. மாலை தேநீர். முதல் முறை வந்தவர்களுக்கு ஒரு துண்டு பழமும் பொறியும் தருவார்கள். அவ்வளவுதான். முதல் நாள் மாலை நமக்கு விதிமுறைகள் எல்லாவற்றையும் சொல்லி விடுவார்கள். எல்லாவற்றிற்கும் சம்மதம் என்றால் கையெழுத்திட்டு உள்ளே செல்ல வேண்டும்.

ஓரறைக்கு இருவர். பூட்டு கிடையாது. யாரோடும் பேச அனுமதியில்லை. யாரையும் யாரும் தொடக் கூடாது. கண்ணோடு கண்கூடப் பார்க்கக் கூடாது. கையசைப்போ சைகையோ கூடாது. மௌனம் மட்டுமே.

ஒவ்வொரு நாளும் தியானம் முடிந்து, ‘கோயங்கா’ அவர்களின் அருளுரை வீடியோ போடுவார்கள். அந்தந்த நாளின் சந்தேகத்தைத் தீர்ப்பதாக அது அமைந்திருக்கும்.

எனக்குச் சின்ன வயதிலிருந்து ஒருவரைப் பற்றிய உருவம் என்றால் சரியாக முழுமையாகச் சொல்ல வராது. அவர்களின் தன்மைதான் மனதில் இருக்கும். என் அம்மா என்றால், அவர்களின் உடை, உடையின் வடிவமைப்பு, நிறம் எல்லாம் அச்சு பிசகாமல் சொல்வார். எழுத்தாளராகவும் ஆன பிறகும் எனக்கதில் தோல்விதான். அப்படித்தான் நம்பியிருந்தேன்.

இரண்டாம் தினத்தில், ஒருநாள் அலுவலகத்திற்கு வந்திருந்த எனது (முன்னாள்) கணவரின் நண்பர், பொடிக் கட்டத்தில் கறுப்பும் சிவப்பும் கலந்து அவர் போட்டிருந்த சட்டை முதற்கொண்டு நினைவு வந்தது. கூடவே அன்று வெகு இயல்பாக அலுவலக விஷயம் பேசுவது போல வந்துவிட்டு அவர் சென்ற பிறகுதான், அதற்கடுத்த வாரம் கணவரிடமிருந்து ‘நோட்டீஸ்’ வந்ததும் நினைவுக்கு வந்தது. அவர் வந்த காரணமே என்னை வேவு பார்க்கத்தான் என்பதும் புரிந்தது.

நம் நினைவிலிருந்து எதுவுமே நீங்குவதில்லை. நாம்தான் மறந்தாற் போல ஏடு படிந்து இருக்கிறோம். எந்த உணர்வுமற்று மனம் எப்போதும் நினைவுகளைச் சேமித்தபடியேதான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

இப்படி முதல் மூன்று தினங்கள், நம் வாழ்வின் எவ்வளவோ நிகழ்ச்சிகள், பிடித்த பிடிக்காத நிகழ்வுகள் எல்லாம் நினைவில் வந்து வந்து செல்லும்.

இப்படி முதல் மூன்று தினங்கள் கடுமையான மனப் போராட்டமாக இருக்கும். ஆறாம் நாளில் ஓரளவு உள்ளச் சமநிலையை அடைய ஆரம்பிப்போம்.

விருப்பு வெறுப்பு அற்று, எந்தக் கட்டுப்பாடும் அற்று, அதன் போக்கிலேயே நமது மூச்சைக் கவனிப்பதுதான் விபாசனா.

அங்கு தியானத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது எப்படி இருக்கும் என்றால், அதிக நேரம் அமர்ந்தால் கால் மரத்துப் போகுமே, கை முட்டியில் அடிபட்டால் ஒரு கரெண்ட் ஷாக்கின் விர்… ஏறுமே, அது போல உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளில் பூச்சிகள் பறக்கும். இதொரு உணர்வு.

பிறகு விபாசனா ஹாலில் 50 பேர் 100 பேர் இருக்க, நாம் தனியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, தியானிக்கச் சொல்வார்கள்.

மூன்று நான்கு தினங்கள் கழிந்து, பகோடா ஹாலில் அனுமதிப்பார்கள். இரண்டாம் முறை போகிறோம் என்றால், விரும்பினால் முதல் தினத்திலேயே போகலாம்.

அங்கு ‘பகோடா ஹால்’ என்று ஒன்று வெறும் பத்தடிக்குப் பத்தடி ரூம். முதல் முறை அங்கு சென்றதும், சிறிது நேரத்தில் (அப்படி எனக்குத் தோன்றியது, ஆனால் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தில்) காற்று போல உணர்ந்து மேலே மேலே போய்க்கொண்டிருக்கையில் – மணி அடித்து எல்லாரும் போய்க்கொண்டிருப்பதை உணராமல் – மேலே மேலே போக – ஒரு பெண் என்னவோ நான் தனியாகச் செத்துவிடுவேன் என்பதான அக்கறையில் தடாலெனக் கதவைத் தட்டித் திறக்க – மரத்தின் மேலிருந்து நான் கீழே விழ, மரத்தின் முறிந்த கிளையில் அப்படியே தொங்க …

ஒரு சாவைத் தொட்டுத் திரும்பிய மாதிரி இருந்தது. ஆனால், மகிழ்வாக இல்லை. செத்திருக்கலாம் போல – அப்படி விரும்பத் தகாமல் இருந்தது.

விபாஸனா போவதற்கு முன் – நீச்சல் கற்க கிணற்றில் குதிக்கும் முன்பு, அதைச் சுற்றிச் சுற்றியே வருவோமே, அதைப் பற்றியே நிறைய பேசுவோம், எழுதுவோம், கேட்போம், வாசிப்போம் – அது போல, இணையத்தில் தேடும்போது ஒருவர் எழுதியிருந்தது மிகவும் கவர, செய்து பார்க்கத் தொடங்கினேன்.

வெளிக்காற்று மூக்கைத் தொடும் இடத்திலிருந்து காற்று உள்ளே போவதை உணர்ந்துகொண்டே போய், நுரையீரல் முழுக்க உணர்ந்து பார்ப்பது. அதே போல நுரையீரலிலிருந்து வெளியேறி மூக்கின் முதலில் காற்று தொடும் இடத்திற்கு. இதொரு ஊஞ்சல் போல அசைவு, லயம் கூடி, அதனுள் இன்னும் இன்னும் ஆலிஸின் விளைவு தெரியாத அறியும் ஆவலில் தொடர்ந்து பயணிக்க – ஒரு கணம் எதுவுமே இல்லாமல். காற்றாக. உருவமற்ற காற்றாக. அங்கு நானில்லை. நான் என்பதே இல்லை. வெறும் உலகம் மட்டும்.

நான் உலகத்தோடு கலந்ததாக, அப்படி எல்லாம் இல்லை; உலகம் தனியாக அப்படியே இருக்கிறது. நானில்லை. நான் என்பதே இல்லை. ‘நான்’ என்று எவ்வெப்போதும் உணர்ந்து கொண்டிருக்கிற எதுவுமே இல்லை. அந்த உணர்வில், பிடித்தம் பிடிக்காமை, பயம் வெறுப்பு நேசம் எந்த உணர்வுத் தீவிரமும் அதில் இல்லை. எதுவுமே இல்லை. வெறும் ஒரு ஜன்னல் வழி உலகம், ஜன்னலற்றுத் தெரிவது போல. அவ்வளவுதான்.

ஆளற்ற கடற்கரை. அப்படி யாருமற்ற வெளி. ஆனால், யாருமற்ற வெளியைப் பார்ப்பது யார்? யாருடைய (கேமரா) கண் அது? அதுவுமற்றுப் பார்ப்பது எப்படி இருக்கும்? காட்சியே அற்ற இருள்? இதற்கு மேல் அந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. ஆனால், அது பிற்பாடு எப்பவும், இப்ப வரை ஏற்படவில்லை. சில சமயம் மனம் அதற்கு ஏங்கும். தவிக்கும்.

முதல் முறை விபாசனா சென்று வந்த பிறகு மைக்ரேன் தலைவலியும் குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கிருந்த முதுகுவலியும் போனது. வலி என்பதே மூளை தனதில் பதித்துக்கொள்வதால்தான் என்பது புரிந்தது. ‘வழி கூறும் மூளை புத்தகத்தில் இடது கையற்ற மனிதனுக்கு உள்ளங்கை அரித்ததைப் பற்றி விளையனூர் எஸ். ராமச்சந்திரன் விவரித்திருப்பார். நமது மூளை அதனுடலை வரைபடமாகத் தனக்குள் பதித்திருப்பது பற்றிச் சொல்லியிருப்பார். இடது உள்ளங்கை அரிப்பை நீக்க, அந்த உணர்வை எப்படி நீக்கினார்கள் என்பது பற்றியும் விவரித்திருப்பார்.

நமது உடம்பின் அமைப்பில் தலை முக்கியமான உறுப்பு; கை கால்கள் அப்படியே ஆக்டோபஸ் போல கற்பனை செய்ய முடிவதாக இருப்பது. தலையின் நீட்சிதான் உடம்பு. அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள். அகம் என்பதை உள்ளம் என்று மட்டும் குறுக்காமல், உடலோடு சேர்ந்த உள்ளம் என்று வைத்தோமானால், கர்ப்பப்பைப் பிரச்னை உள்ளவர்களுக்கு அது கன்னத்தில் நிற மாற்றமாக வெளிப்படும்; ஆண்களானால் இனவுறுப்புப் பிரச்னை. நுரையீரல் பிரச்னையை மூக்கு வெளிப்படுத்தும். இப்படி. அந்த இடது கையற்ற மனிதரின் உள்ளங்கை அரிப்பு உணர்வு, அவரது இடது கன்னத்தில் வருடியதும் நீங்கியதை ராமச்சந்திரன் சொல்லியிருப்பார்.

அதே போல, நாம், நான் என்பதை எனது உடம்பு தரும் எல்லைக்குள் வகுத்துக்கொள்ளாமல் அதன் எல்லை வரைகோடுகளை நீக்கிவிட முடியும்போது – நாம் எல்லையற்றவர்களாக ஆக முடிவது. இதை, இதைவிட என்னால் சொல்ல முடியவில்லை. ஆக முடிந்ததா என்று கேட்டால், முயற்சிதான் என்று பதில் சொல்வேன்.

தொட்டுத் திரும்பிய கணங்கள் உண்மை. ஆனால், அதிலேயே ஆழ்ந்திருக்க முடிந்ததில்லை. அன்றாடம் என்பதன் நித்திய கடமைகளில் பற்றற்றிருக்க முடிந்ததில்லை. எல்லாப் பணிகளையும் செய்துதான் ஆக வேண்டி இருக்கிறது. அன்றாடக் கடமைகளை விலக்க முடிந்ததில்லை. அல்லது அது தேவையுமில்லை. நான் நானாக அறிதல்களும் புரிதல்களும் அறியாமை தரும் எளிமையுமாக இருத்தலே இந்த வாழ்வு என்றுகூடத் தோன்றுகிறது. இது அந்தந்தக் கணம் மட்டுமே. மின்னலென மின்னி மறைந்த ஒரு மழை நொடி போல. அதைப் பிடித்துக்கொண்டுதான் மற்ற கணங்கள் யாவுமே. விதை தாங்கிக்கொள்ள விரிந்த விருக்‌ஷம் போல.

படைப்பாளர்:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.