அவள் துள்ளிக்குதித்து விளையாடியவாறே, தன் கையில் வைத்திருந்த உப்பு, மிளகாய்த்தூள் தூவிய மாங்காய் சீவலை ரசித்துக் கடித்துக்கொண்டிருந்தாள். நாக்கில் சப்புக் கொட்டிக் கொண்டே அவள் அதை ருசி பார்த்தது அழகாக இருந்தது.

விளையாட்டிலிருந்த கவனத்தில் வீட்டையே மறந்து விட்டாள். ‘ரத்னா ‘ எனத் தன் அப்பாவின் குரல் அவளை மட்டுமல்ல, அவளது குழுவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்பொழுதுதான் நேரம் போனதும் தெரியாமல், இருட்டத் தொடங்கியதையும் உணராமல் விளையாடியிருக்கிறோம் என்ற உணர்வே அந்த இளம் உள்ளங்களுக்குள் உதித்தது. அன்றைய விளையாட்டு விடைபெற்று விட்டுச் சென்றது.

ஓடோடி வந்த ரத்னாவுக்கு அப்பாவின் கோப முகம் புரியவில்லை. அவர் வார்த்தைகளால் வந்த கோபக் கனல்கள் சுட்டதும்தான் புரிந்தது; பள்ளியிலிருந்து வந்தவுடன், அடுப்பை மூட்டி, உலை வைத்து அரசி களைந்து போட்டிருந்தாள், சாதம் வடிப்பதற்காக. விளையாட்டு மும்முரத்தில் அடுப்பும் அரிசியும் மறந்து போக, தோழி பிரியமாகக் கொடுத்த மாங்காய்த் துண்டு அடியோடு வீட்டையே நினைவிலிருந்து மெது மெதுவாக நகர்த்தி இருந்தது. இதற்கிடையில் கஷ்டப்பட்டு பற்ற வைத்த விறகு அடுப்பு அணைய, (விறகு அடுப்புல ஊதுகுழுல் கொண்டு ஊதினால்தான் விறகு அணையாமல் எரியும்.) அரிசி பானையில் ஊரத் தொடங்கியிருந்தது. இதுதான் அப்பாவின் கோபத்திற்கு வித்திட்டிருந்தது.

ஒருவாறு அப்பாவும் மகளும் சமரசமாகி, அப்பா அடுப்படியை ஆக்ரமிக்க, அப்பாவின் சமயற்கலையை அருகில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ரத்னா. மனதில் அம்மாவின் நினைவு வந்து போனது. அம்மா உடல்நலம் சரியில்லாத தன் பெற்றோரைப் பார்க்க வெளியூர் சென்றிருந்தார்.

அப்பா ஒரு வழியாக வேகமாக சாதத்தை வடித்து எடுத்தார். கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து, சுவையான தயிர் சாதம் மணக்க மணக்க சமைத்து முடித்தார். தொட்டுக்கொள்ள சிறிய வெங்காயத்தை உரித்து வைத்தார். சுவையோ சுவை! ரத்னா ஆறாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தாள்.

காலங்கள் நிற்பதில்லை, தொடர்ந்து நாம் ரசித்துக்கொண்டிருக்க. எத்தனையோ வகை வகையாகச் சுவைத்த ரத்னாவின் நாவிற்கு அப்பா சமைத்த தயிர் சாதம் மனதைவிட்டு நீங்குவதேயில்லை.

அப்பா உலகை விட்டுச் சென்று வருடங்கள் ஆனாலும், ஏனோ அப்பாவின் நினைவுகள் அழகாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன ரத்னாவுடன்.

படைப்பாளர்:

மெலிதா. ஓய்வுபெற்ற ஆசிரியர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப் பிடிக்கும். Her stories ஃபேஸ்புக் வாசிப்பதில் ஆர்வம், வாழ்க்கையின் உந்துகோல்களில் ஒன்றாக உணர்கிறார். புனைபெயரில் எழுத விரும்புகிறார்.