சக்கர வடிவ நாற்காலியில் அமர்ந்தபடி கையில் தேநீர் கோப்பையைப் பிடித்துக்கொண்டு முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாகத் தேநீரைச் சுவைத்துக்கொண்டிருந்தாள் சாந்தி. திங்கள்கிழமை என்பதால் சற்று வீட்டு வேலைகள் அதிகம்.

ஞாயிற்றுக் கிழமை வேலை அதிகம் இருக்கும். லீவு போடாதே என்று சொன்னால், அந்த அம்மா எங்கே கேட்கிறார்? நேற்று முழுவதும் எல்லா வேலைகளையும் செய்து, மீதியை காலையில் முடித்து, இவர்களுக்கு டிபன் செய்து, மதியச் சாப்பாடும் கட்டிக் கொடுத்து, பள்ளிக்கும் வேலைக்கும் அனுப்பிவிட்டு, கொஞ்சம் உட்காருவதற்குள் மணி ஒன்பது ஆகிவிடுகிறது.

தேநீரைக் குடித்துக்கொண்டே வாசலின் ஓரத்தில் இருக்கும் லஞ்ச் பேக்கைப் பார்த்துவிட்டாள். தேநீர் கோப்பையை அப்படியே வைத்துவிட்டு ஓடினாள்.

இன்னிக்கு லஞ்ச் பேக்கை மறந்து வைத்துவிட்டு போய்விட்டாளா?அவருக்கு கால் பண்ணிப் பார்க்கலாம்.

“ஏங்க நீங்க எங்க இருக்கீங்க? பாப்பா இன்னிக்கும் லஞ்ச் பேக்கை மறந்து வச்சிட்டுப் போயிட்டா. வந்து வாங்கிட்டுப் போங்க.”

“இல்லம்மா, அவ மறக்கல. அவளுக்கு பீட்சா வேணுமாம். நான் வாங்கித் தந்துட்டேன், அத நீயே சாப்பிடு.”

அடுத்துப் பேச ஆரம்பிக்கும் முன்பே அவன் அழைப்பைத் துண்டித்து விட்டான்.

லஞ்ச் வேண்டாம் என்று காலையில் என்னிடம் சொன்னால் என்ன? அவள்தானே இன்னிக்கு லெமன் ரைஸ் கேட்டாள். அவளுக்கு மட்டும் தனியாகச் செய்து கொடுத்தால், இப்படிச் செய்கிறாள். என்ன பண்ணுவது? எல்லாம் நம் தலையெழுத்து என்று புலம்பிக்கொண்டே லஞ்ச் பேக்கை உள்ளே வைத்துவிட்டு, தேநீர் கோப்பையை எடுத்தாள். பால் ஏடுகட்டி ஆறிப் போயிருந்தது. என்ன வாழ்க்கை இது? ஒரு டீகூட நிம்மதியா குடிக்க முடியவில்லை. மெல்ல நாற்காலியில் சாய்ந்துகொண்டு, கண்களை மூடிக்கொண்டு பழைய வாழ்க்கைக்கு நகர்ந்தாள்.

பழைய பள்ளி வாழ்க்கையும் இரண்டு அடுக்கு டிபன் பாக்ஸும் கண் முன் வந்தன. எனக்கு அம்மா எப்போதும் தயிர் சாதம் உருளைக்கிழங்கு, புளி சாதம் உருளைக்கிழங்கு, சாம்பார் சாதம் வாழைக்காய் மட்டும்தான் செய்து தருவார். நான் எம்.எஸ்சி முடிக்கிற வரைக்கும் இதுதான் மெனு.

ஒரு டிபன் பாக்ஸில் என்ன இருக்கிறது என்று வாசகர்களுக்குத் தோன்றும். ஆனால், அதில்தான் எதிர்காலத் தூண்களான குழந்தைகளின் ஆரோக்கியம் அடைக்கப்பட்டுள்ளது. வருங்காலக் குழந்தைகளின் வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சி. நாட்டின் பாதுகாப்பு.

சாந்தி தன் கண்களை மூடியபடி பழைய நினைவுகளை அசை போட்டார்.

“சாந்தி, இந்தச் சாப்பாடைச் சாப்பிடு காலையில. வெறும் வயிறா ஸ்கூலுக்கு போகாத” என்றார் சாந்தியின் அம்மா.

“போங்கம்மா, எனக்கு சாம்பார் சாதம் வேண்டாம். மதியம் சாப்பிடறேன். நேரம் ஆச்சு நா ஸ்கூலுக்குக் கிளம்பிறேன்.”

“சாந்தி, இன்னிக்கு என்னடி லஞ்ச் கொண்டுவந்திருக்க?”

“சாம்பார் சாதம், உருளைக்கிழங்கு.”

“ஏய், ப்ளீஸ்டி நீ என்னோட இட்லியும் சட்னியும் சாப்பிடு. நான் உன்னோட சாப்பாட சாப்பிடுறேன்.”

“தமிழ், நீ ஏண்டி அவ சாப்பாட சாப்பிடுற? அவளே தொடப்பகுச்சி மாதிரி இருக்கா. அவ சாப்பிடுற இரண்டு வாய் சாப்பாட்டையும் நீ வாங்கிச் சாப்பிடற? ஏற்கெனவே பூசணிக்கா மாதிரி இருக்க.”

“இல்லடி சசி, எனக்கு சாம்பார் சாதம்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க பாட்டியால இட்லி தோசை இதத்தான் செய்ய முடியும். அதையே மதியமும் கட்டித் தருவாங்க. அதான் அவ சாப்பாட்ட சாப்பிடுறேன். ஏய், ஒல்லிக்குச்சி உனக்கு இட்லி பிடிக்குமா? சரி, இட்லியாவது ஒழுங்கா சாப்பிடு.”

“எனக்கு இட்லி பிடிக்கும், அவளுக்குச் சாதம் பிடிக்கும். ஆனா, இரண்டு பேர் டிபன் பாக்ஸ்ஸும் எங்களுக்குப் பிடிக்காத சாப்பாட்ட சுமக்குது.”

“ஏய் சாந்தி, சசி, தமிழ், இன்னைக்கு எங்ககூட சாப்பிட வாங்கடி. இனிமே நாம எல்லாம் ஒன்னா சாப்பிடலாம்.”

“செல்வி எங்க உன்னோட டிபன் பாக்ஸ்?”

“ஆயா எடுத்து வருவாங்கடி. எனக்குச் சாப்பாடு சூடா இருக்கணும். எங்க அம்மா இப்பதான் சமைச்சி இருப்பாங்க. ஆயா வந்துடும். செல்வி ஆயானு சொன்னதும் அவங்க ஆயானு நினைச்சேன். ஆனா, அவங்க சாப்பாடுக்கூடை தூக்கி வர ஆயா. கொஞ்சம் வசதியான குழந்தைகளுக்கு மதியச் சாப்பாடு எடுத்து வர வேலைக்கு ஆயா கிடைப்பாங்க.”

“செல்வியோட ஆயா வந்தாச்சு. சசி, சாந்தி, மீன் முட்டை சாப்பிடு நல்லா இருக்கும். செல்வி, தொடாம கொடுத்தாதான் அவ சாப்பிடுவா. சாந்தி நீயே எடுத்துக்கோ.”

“செல்வி, இந்த மீன் முட்டை ரொம்ப நல்லா இருக்கு. நான் இப்பத்தான் முதல் முறையா சாப்பிடுறேன். நிஜமாவே அந்த மீன் முட்டைல மேஜிக் இருக்கு.”

“வாய தொறந்து பேசாதவ பேசிட்டா.”

“ஏய் தமிழ், வாயமூடு. அவ தேவைப்பட்டா மட்டும்தான் பேசுவா. டீச்சர் கேள்வி கேட்கும்போது நீ பேசுவியா? அவ பேசுவா.”

“செல்வி எனக்காகப் பேசியது அதிசயமாக இருந்தது. அவங்கள ரொம்பப் புடிச்சது. நானா பேசினா வடசென்னைனு என்ன சொல்லிடுவாங்கனு நா பேசவே மாட்டேன். அப்படியே பேசினாலும் தூயத் தமிழ்ல பேசுவேன். அதுவே என்னைப் பேச்சாளராக மாத்திடுச்சி. ஆனா, அன்னைக்கு நா கவனிச்ச ஒன்னு இப்பவும் என் ஞாபகத்தில் இருக்கு. டிபன் பாக்ஸ்க்குக்கூட வசதியும் சாதியும் இருக்கு.”

ரேஷன் கடை அரிசியில் செய்த சாதம் பிடிக்காமல், நான் குப்பையில் கொட்டும்போது எனக்குக் கொடுக்க வேண்டியதுதானே, தினமும் மோர் சாதம் சாப்பிட்டு போர் அடிக்கிறது என்று இந்துமதி சொன்னது எனக்கு எத்தனை வேதனையைத் தந்தது. திடீரென்று ஒருத்தி சாப்பாத்தி கொண்டுவர அவசரமாக விழுங்கி, தொண்டையில் சிக்கி, சசி மயங்கினாள்.

சாதம், குழம்பு, பொரியல், ரசம் என்று தனித்தனியாக டப்பாக்களில் எடுத்துவரும் சில தோழிகளின் மத்தியில் ஒரே டப்பாவில் ஏதோ ஒரு கலந்த சாதத்தை எடுத்துக்கொண்டு சென்று உண்பது எத்தனை சங்கடமான நிலை.

டிபன்பாக்ஸில் மட்டுமா கல்லூரியில் தோழி என் தண்ணீரைக் குடித்துவிட்டு, அதே வேகத்தில் ஜன்னல் வழியாகத் துப்பிவிட்டு, “இது என்னது” என்று கேட்க, நான் “தண்ணீ” என்று சொல்ல, “இதையா குடிப்பீங்க, கார்ப்பரேஷன் தண்ணீயா? கேன் வாட்டர் வாங்க மாட்டிங்களா?” என்ற போது என் வாட்டர் பாட்டிலிலுமா வறுமை என்று தோன்றியது.

முதுகலை படிப்பில் எப்பொழுது நேரம் கிடைக்குமோ அப்பொழுதுதான் லஞ்ச் டைம். ஒருநாள் 3 மணிக்கு டிபன் பாக்சைத் திறக்கும்போது ஒரு வாய் சாப்பிட்டவுடன் வாடை வந்ததும் மூடிவிட்டேன். சகமாணவன், “ஏங்க சாப்பிடல பிடிக்கலையா” என்று கேட்டபோது, “பிடிக்கவில்லை” என்ற ஒற்றை வரியுடன் நகர்ந்தது. எப்படிச் சொல்ல முடியும் ,கிளறிகட்டும் சாம்பார் சாதம் விரைவில் கெட்டுவிடும் என்று.

இந்தச் சின்ன டிபன் பாக்ஸில் எத்தனை சோதனைகள்! சின்ன டிபன் பாக்ஸ்தான், ஆனால் அதில்தானே உடல் நலம் இருக்கிறது!.

மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மட்டும் 2022-2023இல் மத்திய பட்ஜெட்டில் 83000 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். கடந்த வருடத்தைவிட 16.5 சதவீதம் அதிகம். இப்போது தெரிகிறதா டிபன் பாக்ஸில் என்ன இருக்கிறது என்று?

கைபேசி அலறல் கேட்டு கண்களைத் திறந்தவள், கடிகாரத்தைப் பார்த்துவிட்டு மிச்சம் இருந்த வேலைகளை நோக்கி ஓடினாள்.

நான் படிக்கும்போது பட்ட கஷ்டத்தை இவர்கள் படக்கூடாது என்று ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டா என்று எல்லாத்தையும் பார்த்து விதவிதமாகச் செய்தால் என்ன புண்ணியம்?

“சாந்தி மேடம் என்ன ஆச்சு உங்களுக்கு? மதியம் கிளாஸ் இருக்குனு சொன்னிங்க, டிபன் பாக்ஸ திறந்து வைச்சுட்டு சாப்பிடாமா எதையோ யோசிக்கிறீங்க?”

“ஒன்னும் இல்லைங்க மேடம், இதோ சாப்பிடுறேன். எனக்கு என்னோட டிபன் பாக்ஸ்ல யாராவது கை வைச்சா பிடிக்காது. ஆனா, இன்னைக்கு என்னுடைய டிபன் பாக்ஸ்ல எத்தன வெரைட்டி…

அவரு மிச்சம் வைச்ச துவையல், அவளுக்குக் கட்டிய மிச்ச லெமன் ரைஸ், நண்டு பையன் கடிச்சி வைச்ச பாதி ஆம்லெட், தெரிஞ்சே மறந்து வைச்சிட்டு போன டிபன் பாக்ஸ். இதை வறுமையிலேயும் கட்டாயத்திலேயும் சாப்பிடல. எல்லாத்தையும் சாப்பிட ஒரே காரணம்தான், எல்லாத்தையும் கஷ்டப்பட்டு சமைச்சது நான்.”

மெல்லிய புன்னகையுடன் டிபன் பாக்ஸ் முழவதையும் காலி செய்து மூடினாள். இப்பொழுது எல்லாம் அவள் மிச்சம் வைப்பது இல்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.