அன்றும் வழக்கம் போல, கடைசி ரூட் பஸ்ஸில் தான் கிளம்பினாள் நர்மதா. இது இந்த ப்ராஜக்ட்டில் வேலை செய்பவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை. இருநூறு பேருக்கும் மேல் வேலை செய்யும் ஒரு பெரிய ப்ராஜக்ட். அது அந்த கணினி நிறுவனத்தின் ஏழு பிரிவுகளில் ஒன்றின் ’பிரட்வின்னர்’ என்று அழைக்கப்பட்ட ப்ராஜக்ட், அதாவது அந்தப் பிரிவின் பெரும்பகுதி வருவாய் அந்த ஒரே ப்ராஜக்ட்டில் இருந்து வந்தது. அந்த நிறுவனத்தின் அலுவலகம் நகரத்தின் பல முக்கிய இடங்களில் இருந்தாலும், இந்தப் பிரிவு மட்டும் சொந்த கட்டிடம் இருந்த தகவல் தொழில்நுட்பச் சாலைக்கு மாற்றப்பட்டது.

2000ஆம் வருடம், அரசு அந்தச் சாலைக்குப் புதிய பெயர் கொடுத்து தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க, ஆறு வழிச்சாலை கொண்டு வரும் திட்டத்தை அறிவித்திருந்தது. அப்பொழுதுதான், பல பெரிய கணினி நிறுவனங்கள் அந்தச் சாலையில் பிரம்மாண்டமான அலுவலகங்களைக் கட்டிக் கொண்டிருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் புல்வெளி பச்சை நிறப் பட்டுப்புடவை போல விரிந்து, புடவையின் பார்டர் போல தூரத்தில் மலைகளைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. நகரத்தை விட்டுச் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அலுவலகம் இருந்த காரணத்தினால், பெரும்பாலான நிறுவனங்கள் நகரத்தின் பல மூலைகளிலுமிருந்து ஊழியர்கள் வந்து செல்வதற்குப் பேருந்து வசதி செய்திருந்தன. நகரத்திற்கு வெளியே அலுவலகக் கட்டிடம் இருப்பது நிறுவனத்திற்குப் பெரிய அளவில் செலவைக் குறைத்தாலும், பல மணி நேரத்தைப் பயணத்தில் செலவிட வேண்டியிருப்பதால், ஊழியர்களிடையே இதற்கு வரவேற்பு மிகவும் குறைவு.

பேருந்து இயக்குவதன் மூலம் ஊழியர்களைச் சமாதானம் செய்வது மட்டுமல்லாமல், குறித்த நேரத்தில் பெரும்பாலானோரை அலுவலகத்திற்குக் கொண்டுவந்து சேர்ந்துவிடுவதில் மேனேஜ்மெண்ட்டுக்கு நல்ல அனுகூலமும் இருந்தது. எப்படிப் பார்த்தாலும் குறைந்தது ஒரு மணி நேரப் பயண தூரம் என்பதால், அநேகம் பேர் காலை ஏழு மணிக்கு முன்னரே வீட்டிலிருந்து கிளம்ப நேரிடும். இது எவ்வளவுக்கு அசௌகரியமோ அவ்வளவுக்கு ஆரோக்கியம். விடியற்காலை எழுந்திருப்பது, சூரியனும் அவன் வம்சமும் தன் உச்சபட்ச சுறுசுறுப்பை அடையுமுன் டென்ஷன் இல்லாமல் பேருந்து பிடித்து, அதிலும் பிடித்த இடம் தேடி வசதியாக அமர்ந்து, காலைப் பொழுதை ரசித்தபடி அலுவலகம் செல்வது நிச்சயம் உடலுக்கும் மனதுக்கும் உகந்தது.

நர்மதாவிற்கு கடற்கரை வழியாகச் செல்லும் பேருந்தில், கடலில் குளித்துவிட்டு வரும் இளஞ்சூரியனையும் அவனை சைட் அடிக்க வரும் மக்களையும் பார்ப்பது, உடற்பயிற்சி செய்வதைப்போல புத்துணர்ச்சியைக் கொடுக்கும். உடல் எடையைக் குறைப்பதற்காக ஷூ அணிந்துகொண்டு, கையை வீசிவீசி நடக்கும் மனிதர்கள், நடைபாதையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், அருகம்புல், கேரட் ஜூஸ் கடைகள்… இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு செல்லும் அந்தச் சில நிமிடப் பயணம் சுவாரசியமாக இருக்கும். அதற்குப் பிறகு, டிராபிக் குறைவான, மக்கள் நெருக்கடி இல்லாத, கடைகள் பெரும்பாலும் மூடி இருக்கும் சாலைகள் வழியாக நகரத்தின் எல்லையைத் தாண்டி, புதிதாகக் கட்டிடங்கள் முளைத்துக் கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்பச் சாலை என்று நாமகரணம் செய்யப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலை வழியே நெடுந்தூரப் பயணம்.

பெரும்பாலானோர் காதுகளில் ஹெட்போன் மாட்டியபடி பிடித்த பாடல்களைக் கேட்டபடி வருவார்கள். சிலர் ஸ்தோத்திரம் படிப்பார்கள், மேலும் சிலர் சிரத்தையாக காலை உணவைச் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். இப்படி எந்த வேலை செய்தாலும், கொஞ்ச நேரத்திற்குப் பிறகு காலையில் கைவிட்ட நித்ரா தேவி மீண்டும் செல்லமாக எல்லோரையும் தழுவிக்கொண்டிருப்பாள். நர்மதாவிற்கும் இருக்கையின் பின்புறம் சாய்ந்த கொஞ்ச நேரத்தில், அம்மா மடியில் போட்டுத் தட்டுவது போல உறக்கம் வந்துவிடும். இறங்கும்போது தலைமுடி கலைந்து அலங்கோலமாகிவிடும் என்பதால் எல்லோரும் கழிவறை நோக்கி ஓடுவார்கள். அதன் பின்னர் காலை உணவு, வேலை என்று ஆரம்பிக்கும். காலை நேரம் இப்படிச் சுகமாக இருந்தால், மாலை நேரம் கொடுமையாகத்தானே இருக்க வேண்டும்!

மாலை இரண்டு, மூன்று ட்ரிப்களில் வேறு வேறு ரூட்களில் பேருந்துகள் செல்லும். அதிக வேலை இருக்கும் ப்ராஜக்ட்களில் அல்லது அமெரிக்க கிளையண்ட்டுக்கு வேலை செய்பவர்கள், முதல் அல்லது இரண்டாவது ட்ரிப்களில் கிளம்ப இயலாது. கடைசி ட்ரிப்பில் கிளம்பினால், எல்லா ஏரியாக்களுக்கும் பேருந்து செல்லாது. அதனால் நர்மதா வீட்டிற்கு மீண்டும் மாநகரப் பேருந்து பிடிக்க வேண்டும். இரவு எட்டு மணிக்குக் கிளம்பி, 25 கிலோமீட்டர் பயணித்து, மாநகரப் பேருந்து பிடிக்கும்போதே 10 மணி ஆகிவிடும். 10.30 மணிக்குதான் வீட்டுக்குள் நுழைய முடியும். டிவி நிகழ்ச்சிகளும் முடிந்து மக்கள் உறங்க ஆரம்பிக்கும் நேரம் சாலைகள் வெறிச்சோடி, இருள் சூழ்ந்திருக்கும். இதற்காகவெல்லாம் வீட்டை மாற்றிக்கொண்டு அலுவலகத்திற்கு அருகில் செல்ல முடியாது. வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கோ மற்ற எதற்குமோ அது வசதியாக இருக்காது.

இந்த ப்ராஜக்ட்டில் வேலை செய்பவர்களில் பலர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் தங்கும் விடுதிக்குக்கூடச் செல்ல நேரம் இல்லாமல், அலுவலக கெஸ்ட் ரூமில் ஓய்வெடுத்து விட்டு வேலையைத் தொடர்வது மிகவும் சாதாரணமாக நடக்கும். நர்மதா போன்று பலர் கடைசிப் பேருந்து பிடிக்க ஓடும்போது, வழியில் நிறுத்தி ’என்ன இன்னைக்கு ஹாஃப் டேயா’ என்று கேட்கும் பிரகஸ்பதிகளும் உண்டு. மாதக் கணக்கில் இப்படித்தான் வந்துகொண்டிருந்தாலும் நர்மதாவிற்குப் பேருந்திலிருந்து இறங்கி, வீட்டிற்குச் செல்லும் அந்தப் பத்து நிமிடங்கள் எப்போதும் வயிற்றில் புளியைக் கரைக்கும். அதற்குக் காரணம் வெறும் இருள் சூழ்ந்த வெறிச்சோடிய தெருக்கள் மட்டுமல்ல, சில விஷமிகளும் தான்.

கைபேசி அதிகம் உபயோகத்தில் இல்லாத காலம், அதனால் வீட்டிற்குத் தெரிவிப்பது இயலாது. அப்பாவைத் துணைக்கு வரச் சொல்லலாம் என்றால், அப்பா அலுவலகத்திலிருந்து வந்திருக்க வேண்டும். இந்தப் பத்து நிமிடங்களைத் தவிர, நர்மதாவிற்கு வாழ்க்கையில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனாலும் வீட்டிற்கு மூத்த பெண்ணாக இருப்பதால், தைரியமானவளாகக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம். பின்னே, தங்கைகள் முன் கெத்து போனால் என்னாவது?

நர்மதாவிற்குப் பேருந்தைவிட்டு இறங்கும்போதே பரபரப்பு வந்துவிடும். கையை வீசி, வேகமாக அக்கம்பக்கம் யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டடம்விட்டபடியே, படு உஷாராக நடந்து செல்வது அவளுக்குக் கைவந்தகலை. இருட்டில் யாராவது சாலையோரமாக நின்றிருக்கிறார்களா, சாலையின் இந்தப் பக்க, அந்தப் பக்கச் சந்திப்பில் யாராவது வருகிறார்களா, ஏதேனும் பைக் அல்லது சைக்கிள் வரும் ஓசை கேட்டால் அது எந்தத் திசையிலிருந்து வந்து எந்தத் திசையில் செல்கிறது என்று கவனமாகப் பார்த்தபடியே செல்வாள். ஏதேனும் ஆண் உருவம் நடந்து சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தால், வேகத்தைக் குறைத்தோ கூட்டியோ அவர்கள் தன்னையோ தான் அவர்களையோ கடக்கும் வரை, திக் திக் என்று இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகரித்து, வியர்த்து வழிந்துவிடும் அவளுக்கு. இதனால் சாலையின் குறுக்கே அங்குமிங்கும் மாறி மாறி முன்னெச்சரிக்கையாக நடந்து போவதும் உண்டு.

ஆனால், வீட்டிற்கு அருகில் சென்றவுடன் நடையில் பதற்றத்தைக் குறைத்து, இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு, ’எதற்கு வீட்டு வாசலில் காத்துக்கிட்டு இருக்கீங்க?’ என்று ஒரு செல்லக் கோபத்தைக் காட்டுவதிலெல்லாம் ஒரு குறைச்சலும் இருக்காது. அந்தப் பத்து நிமிட நடையை யாராவது பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்!

இதற்கு காரணம் ஓரிருமுறை, சைக்கிளில் வந்து பின்னால் தட்டிவிட்டுச் சென்ற விஷமிகள்தாம். முதல்முறை அவ்வாறு நேர்ந்தபோது பயத்திலும் அவனை ஒன்றும் செய்ய முடியாத இயலாமையிலும் தன்மீதே கோபம் வந்தது அவளுக்கு. அதற்குப் பிறகு, சைக்கிள் ஏதேனும் அருகில் வருவது தெரிந்தால், உஷாராகி லாகவமாக ஒதுங்கிச் செல்வதும், திரும்பி நின்று முறைத்துப் பார்ப்பதும், கையில் கிடைக்கும் கல்லைக் கொண்டு அடிப்பதும் என்று சில பல வீர சாகசங்களைப் புரிந்துவிட்டு, ஒன்றுமே நடக்காதது போல வீட்டிற்கு வந்து சேர்ந்த அனுபவங்கள் தாம், அவளையும் அறியாமல் உட்சபட்ச சுதாரிப்பில் அவளை வைத்துவிடுகின்றன.

அன்று மற்றுமொரு சோதனை காத்திருந்தது, அலுவலகத்திலிருந்து கிளம்பிய சிறுது தூரத்திலேயே பேருந்து பிரேக்டவுன் ஆகிவிட்டது. இதுபோன்று நடந்தால், அலுவலகத்தில் இருந்து வேறு வாகனங்களை அனுப்புவார்கள். அன்று, முந்தைய ட்ரிப் சென்று திரும்ப வேண்டிய வண்டி டிராபிக்கில் மாட்டிக் கொண்டதால், மாற்று வண்டி ஏற்பாடு செய்யும்வரை அரை மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. அவ்வளவுதான், நர்மதாவிற்கு வந்த டென்ஷனைப் பற்றிக் கேட்கவா வேண்டும்.

எப்போது பாரிமுனை போய், அடுத்த பேருந்தில் ஏறி, வீட்டுக்குப் போய்ச் சேருவது என்று தெரியவில்லை. பொதுவாகப் பாரிமுனையிலிருந்து வீட்டிற்குச் செல்லும் பேருந்தில் பெண்கள் கூட்டம் இரவு எட்டு மணியைத் தாண்டிவிட்டாலே குறைவாகத்தான் இருக்கும், அங்கு வியாபாரம் செய்யும் பெண்கள் சிலர் மட்டுமே இருப்பார்கள். பத்து மணிக்கு மேலானால், கடைகளும் திறந்திருக்காது. கைகளைப் பிசைவதும் சாலையைப் பார்ப்பதும் நகத்தைக் கடிப்பதுமாக அந்த அரைமணி நேரம் அரையுகமாகக் கழிந்தது. மாற்றுப் பேருந்து வந்து சேர்ந்தது. என்னதான் கடவுள்களை எல்லாம் கூப்பிட்டாலும் பத்தரை மணிக்குதான் பாரிமுனைக்கு வந்தது பேருந்து.

நர்மதா ஓடுகிறாளா, நடக்கிறாளா என்று சொல்ல முடியவில்லை. ஒரு பேருந்தில் ஏறினாள். சொற்ப ஆண்கள் இருந்தனர். தெரிந்த முகம் எதுவும் தென்படுகிறதா என்று பார்த்தாள். இல்லை. அப்போது ஒரு குடிமகன் ஆடியாடி நடந்தபடியே, “இதுங்க எல்லாம் ஊர்சுத்திட்டு என்ன தெனாவட்டா லேட்டா போகுதுங்க பாரு, வீட்டுல எல்லாம் கேக்க மாட்டாங்க போல” என்று சொன்னபோது, அவனை ஓங்கி ஓர் அறை விடலாம் என்று தோன்றியது நர்மதாவுக்கு.

அப்போது அவள் காதில் தேன் வந்து பாய்வதைப்போல, சில பெண்களின் பேச்சுக் குரல்கள் கேட்டன. அவள் அமர்ந்திருந்த பேருந்தில் ஏறினர். அப்பாடா! சற்று நேரத்தில் பேருந்து கிளம்பியது. எல்லா டென்ஷனும் குறைந்து, நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்ட நர்மதாவுக்குச் சட்டென்று வீட்டுக்கு எப்படிப் போவது என்ற டென்ஷன் தொற்றிக்கொண்டது.

அந்தப் பெண்கள் எல்லாம் நர்மதா இறங்குவதற்கு முன்னரே இறங்கிவிட்டனர். எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞன் சட்டென்று நர்மதாவுக்குப் பின்னால் வந்து அமர்ந்தான். நர்மதா உஷாராக அமர்ந்திருந்தாள்.

அவளுடைய நிறுத்தம் வந்தது. வேகமாக இறங்கி, பஸ் ஸ்டாப்பைப் பார்த்தாள். வழக்கமான நேரத்தைவிட அதிக நேரமாகிவிட்டதால் அப்பா எப்படியும் வந்திருப்பார் என்று நினைத்தாள். ஆனால், அப்பாவைக் காணவில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டு நடக்க ஆரம்பிக்க, அவளுக்குப் பின்னால் யாரோ வருவது தெரிந்தது. சட்டென்று திரும்பிப் பார்த்தால், பின்னிருக்கை இளைஞன் குறுஞ்சிரிப்போடு அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். தெருவில் ஒருவர்கூட இல்லை. என்ன செய்வது? நடையின் வேகத்தைக் கூட்டினாள் நர்மதா. அவனும் வேகத்தை அதிகரிப்பது தெரிந்தது. பயத்தில் கால்கள் பின்னிக்கொண்டன. தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. அப்பாதான் வருகிறார் என்று நினைத்த நர்மதாவுக்குத் தைரியம் வந்தது. ஆனால், அந்த வண்டி அவளைக் கடந்து சென்றுவிட்டது. அவன் நிதானமாக வந்துகொண்டிருந்தான். சட்டென்று அவள் ஓட ஆரம்பித்த போது, ’நர்மதா’ என்ற குரல் கேட்டு நின்றாள். அப்பா தான் வண்டியைத் தள்ளியபடி வேகமாக வந்துகொண்டிருந்தார். உடனே அவன் வேகத்தைக் குறைத்துவிட்டான்.

“பஸ் பிரேக் டவுனா? கொஞ்ச நேரம் பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்ணிட்டு, உன் ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டப்பதான் தெரிந்தது. பாரிஸ் வரலாம்னு கிளம்புனேன். வழில உன்னைப் பார்த்துட்டு, திரும்பிட்டேன். திடீர்னு வண்டி நின்னு போச்சு. அதான், தள்ளிக்கிட்டு வர லேட் ஆயிடுச்சு” என்றார் நர்மதாவின் அப்பா.

அவர்கள் இருவரையும் தாண்டி முன்னே சென்றவன், அடுத்த தெருவில் திரும்பினான். வண்டி ஸ்டார்ட் ஆகிவிட, நர்மதா அப்பாவின் பின்னால் அமர்ந்தாள். வண்டி கிளம்பிய நிம்மதியில் திரும்பிப் பார்த்தாள். அவன் அந்தத் தெருவிலிருந்து வெளியில் வந்து, மெயின் ரோட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான். ஜஸ்ட் எஸ்கேப் என்று நினைத்தபோது நர்மதாவின் உடல் சிலிர்த்தது.

அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை என்றாலும், தன்னையும் அறியாமல் தினமும் யாராவது பின்தொடர்கிறார்களா என்று கவனிப்பது நர்மதாவுக்கு வழக்கமாகிவிட்டது.

வெகு நாட்கள் கழித்து பள்ளித் தோழிகளைப் பார்க்க, ரம்யா வீட்டுக்குச் சென்றாள் நர்மதா. நீண்ட நேரம் அரட்டை அடித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

“ஐயோ… நேரமாயிருச்சு. எங்க ஏரியாவில் ஆட்களே இருக்க மாட்டாங்க. நான் கிளம்பறேன்” என்று பதறினாள் நர்மதா.

”நான் உன்னை டிராப் பண்ணட்டுமா?” என்ற குரலைக் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

நர்மதாவின் இதயம் நின்றுவிட்டது.

”நான் சொல்ல மறந்துட்டேன் நர்மதா. இவன் என் அண்ணன். நம்ம ஸ்கூல்ல தான் படிச்சான். சூப்பர் சீனியர். உன்னைக் கொஞ்ச நாள் முன்னாடி பஸ்ஸில் பார்த்தானாம். ரொம்ப லேட்டாதான் அடையாளம் தெரிஞ்சதாம். பேரு நினைவில்லையாம். நீ தனியா இருட்டில் போறதைப் பார்த்து உனக்குத் துணையா வர உன் ஸ்டாப்பில் இறங்கிட்டானாம். பேர் தெரியாமல் எப்படிப் பேசுறதுன்னு தயக்கத்தோட உன் பின்னால வந்தானாம். அதுக்குள்ள உங்கப்பா வந்துட்டாராம். அதுக்கப்புறம் தான் இவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தானாம்.”

நர்மதாவுக்குச் சங்கடமாகிவிட்டது.

”ஐயோ… அண்ணா, அன்னிக்கு இருந்த டென்ஷனில் உங்களை நான் சரியா பார்க்கல. ரொம்ப ரொம்ப சாரிண்ணா. உங்களை நான்…”

“நீ சொல்லவே வேணாம்மா. உன் முகத்திலேயே அது தெரிஞ்சிருச்சு!”

***

படைப்பாளர்:

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக இரண்டரை வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

ஹெர்ஸ்டோரீஸ் இணையதளத்தில் கனடா அனுபவங்களைத் தொடராக எழுதியிருக்கிறார். தற்போது சிறுகதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.