பிறரால் வழங்கப்பட்ட பெயர்களைச் சுமந்து கொண்டு பல பழங்குடியினர் வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். அவர்களின் உண்மைப் பெயர்கள் வழக்கிழந்து போயின. இனவெறியர்களால் அவர்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. ‘நீக்ரோ*’ என்ற சொல் கருப்பு நிறத்தைக் குறித்தது போல… ‘இருளர்’ என்ற சொல் ‘இருளில் உள்ள மக்கள்’ என்ற பொருள் கொண்டது போல…
*இந்தச் சொல் பயன்பாடு எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கவே அந்த காலச் சூழலில் பயன்படுத்தப்பட்டது போல குறிப்பிடப்படுகிறது. இச்சொல் பயன்பாட்டில் எழுத்தாளருக்கோ, பதிப்பாளருக்கோ உடன்பாடில்லை.
அமெரிக்காவின் வரலாறு முழுவதும் பெரும்பாலான பழங்குடியின மக்கள் கூட்டாக ‘இந்தியர்கள்’ என்றே இவ்வாறு அழைக்கப்பட்டனர். அலாஸ்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி ‘எஸ்கிமோ’ என்றழைக்கப்பட்டார்கள். ‘பச்சை இறைச்சியை உண்பவர்கள்’ என்று பொருள் கொண்டு அது அவர்கள் மனங்களைப் புண்படுத்தும் வகையில் இருந்ததால், அந்தப் பெயரை ‘இனூட்’ (Inuit) என மாற்ற பழங்குடியினர் போராடினர். பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
அது போலவே ‘ஏனாதி’ என்ற பெயரும் பல சொற்பிறப்பியல் யூகங்களுக்கு உட்பட்டது.
தெலுங்கு மொழி இலக்கண விதிகளின்படி ‘ஏனாதி’ என்ற சொல் தவறானது. தாழ்ந்த காட்டுப்பகுதியில் வாழும் பழங்குடியினரைக் குறிக்கும் சொல் இனாதி. இனாதி என்ற சொல் நீண்டு ‘ஏனாதி’யாக மறுவியிருக்கலாம். அவர்கள் எங்கு தோன்றினார்கள் என்று புரியாத நிலையில் தொடக்கமற்ற, ஆதரவற்ற, பாதுகாப்பற்ற மக்கள் என்று பொருள் விளங்க, சமஸ்கிருத வார்த்தையான ‘அனாதி’, ‘அனாதை’ என்ற சொற்களிலிருந்து – உயிர் ஒலியை நீடித்து ‘ஏனாதி’ ஆகி இருக்கலாம்.
‘ஏனாதி’ என்ற பெயர் ‘அனாதி’ என்னும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து மருவியதாகவும் அதற்கான பொருள் ‘ஆதி வரலாறு இல்லாதவர்கள்’ என்றும் எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.1*
ஒரு பழங்குடியினரை எவ்வளவு இழிவுபடுத்தும் சொல்லாக ‘அனாதை ‘ என்ற சொல் இருந்திருக்கும்?
கடற்கரையைக் குறிக்கும் தெலுங்கு வார்த்தையான ‘யானடம்’ என்ற சொல்லில் இருந்து ஏனாதி என்று பெயர் பெறப்பட்டிருக்கலாம் என்று அகராதியாளர்கள் பிரவுன் மற்றும் சீதாராமசார்லு கூறுகிறார்கள்2*. ‘யானம்’ என்றால் படகும்கூட. எனவே கடல் தொடர்பான இச்சமூகத்தின் வாழ்க்கையைக் குறிப்பிட இந்தச் சொல் ஏற்பட்டிருக்கலாம்.
ஏனாதிகள் ‘சோமாலியர்களுடன்’ ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். வரலாற்றாசிரியர் மக்லீன், ஏனாதிகளைச் சமவெளியில் உள்ள மலைவாழ் பழங்குடியினர் என்று குறிப்பிடுகிறார்.3*
‘பாப்டிஸ்ட் மிஷன் ‘ ஆசிரியர், கப்பல் விபத்துக்குள்ளானதால் ஏதோ ஒரு தீவு அல்லது கண்டத்திலிருந்து நெல்லூர் கடற்கரையில் சிக்கிக்கொண்டவர்கள் என்று தென்னிந்தியாவின் ஏனாதிகளுக்கும் வடக்கு கலிபோர்னியாவின் யானான்களுக்கும் இடையே ஒரு சாத்தியமான தொடர்பைப் பரிந்துரைக்கிறார். ஆனால் இந்தக் கப்பல் விபத்துக் கோட்பாட்டை உறுதுசெய்யும் வரலாற்றுத் தரவுகள் இல்லை.
யானம் (படகு) மற்றும் அடி (அர்த்தம்) ஆகியவை ஏனாதிகளுக்கு ஆற்றங்கரையின் சுற்றுச்சூழலுடன் உள்ள நெருங்கிய தொடர்பைப் பரிந்துரைக்கின்றன.
பிரடெரிக் எஸ். நுால்லி, ஏனாதி மரபு, பழவேற்காடு ஏரிக்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதிகளின் பூர்வகுடிகள்; அவர்கள் விருப்பப்படி மீன் பிடித்து, வேட்டையாடினர் என்பதை அவதானிக்கிறார். ஏனாதிகளின் உண்மையான வசிப்பிடங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன.4*
ஏனாதிகள் மீன்பிடி-வேட்டைக்காரர்- சேகரிப்பாளர் பழங்குடியினர்; கற்கால இடங்கள் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர்கள் என்றும் ஒரு கோட்பாடு உள்ளது. ஏனாதிகளை ‘கருப்பு இந்தியர்கள்’ என்கிறார்கள். சர்க்கார் (1976) படி அவர்கள் இந்தியாவின் உண்மையான பழங்குடியினர் மற்றும் தென்னிந்தியாவின் சமவெளிகளில் வாழ்கின்றவர்கள்.5*
பலர், ஏனாதிகள் ஸ்ரீஹரிகோட்டாவின் பூர்வீகக் குடிமக்கள் என்று நம்புகிறார்கள் 6*, சிலர் காடுகள் மற்றும் மலைகளிலிருந்து சமவெளிகளுக்கு வந்ததாக நம்புகிறார்கள்.
ஏனாதிகளின் தோற்றம் இனவியல் மற்றும் தென்னிந்திய வரலாற்றில் ஒரு புரியாத புதிர். அவர்களின் தோற்றம் ஒரு பெரும் மர்மமாகவே உள்ளது. அவர்களின் சமூக பழக்கவழக்கங்கள் மிகவும் தனித்துவமானவை. அவர்களின் கட்டிடக்கலைக்குச் சான்று, அவர்கள் கட்டிக்கொள்ளும் எளிமையான பனையோலைக் குடிசைகள் மட்டுமே. அவர்களின் கடந்த கால வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட ஒரு கல்வெட்டும் கிடையாது; ஒரு நினைவுச் சின்னமும் கிடையாது…
தொடரும்…
தரவுகள்:
1. Caste and Tribes of Southern India: Edgar Thurston assisted by K. Rangachari
2. Yanadis of Southern India by T.Ranga Rao
3. The Yanadis: V. Raghaviah
4. The displaced Yanadis of Sriharikota Island: A study of changing interaction between Environment and Culture: Reddy, P. Sudhakara and A. Munirathnam Reddy
5. Tribals from Tradition to Transition – G. Stanley Jayakumar
6. Cushing, S. W. (1917), SRIHARIKOTA AND THE YANADIS: A Sandy Island Off the East Coast of India and its Inhabitants. Annals of the Association of American Geographers, 7(1), 17–23. https://doi.org/10.1080/00045601709357053
படைப்பாளர்

சித்ரா ரங்கராஜன்
கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய தொடர், தற்போது ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் நூலாக வந்திருக்கிறது. அலையாத்தி வேர்கள் – ஏனாதிகள் என்கிற இந்தத் தொடருக்கான ஓவியங்களை இவரே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கியுள்ளார்.