வன்முறையை நிறுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அது சமுதாய மாற்றத்தைக் கோருவது. பலருடைய மன மாற்றத்தைக் கோருவது. ஒரே நாளில் சிவப்பு விளக்கில் இருந்து பச்சை விளக்குக்கு மாறுவது போல மாறக்கூடியதும் அல்ல. பலரிடம் இருந்து பல் வேறு நேரத்தில் நிகழக்கூடிய பல தொடர் நிகழ்வுகளில் ஒட்டுமொத்த விளைவாகக்கூட இருக்கக்கூடும்.

பல முறை இத்தகைய செயல்பாடுகள் தனி மனிதரின் தனிப்பட்ட செயல்களாக இருக்கும். ஆனால், ஒரு சமூக விளைவை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டிருக்கும். சமீபத்திய எடுத்துக்காட்டாக மீ டூ விளைவைச் சொல்லலாம். அல்லது மாவு அரைத்து விற்கின்ற சிறுதொழிலைக்  கேவலப்படுத்துவது போன்ற தொனியில் ஓர் எழுத்தாளர் எழுதிய நிலைத் தகவலுக்குப் பரவலாக எழுந்த கண்டனப் பதிவுகள் ஏற்படுத்திய விளைவுகளைச் சொல்லலாம்.

சில நேரத்தில் சமூகவலைத் தளங்களில் காட்டப்பட்ட எதிர்ப்புகளால் திரைப்படங்களில் சில காட்சிகள் வெட்டப்படுவதைக் கூடச் சொல்லலாம்.

ஒரு நாட்டின் வரைபடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆங்காங்கே சின்ன சின்ன வன்முறைகள் தலைதூக்குகின்றன. அது திடீரென நாடு முழுவதும் ரத்த விளாராக எல்லா இடங்களிலும் பரவும் அபாயம் இருக்கிறது. நடுவே அமைதியாக ஒரு சின்ன க்ரீன் டாட் இயக்கம் தோன்றி அது பரவ ஆரம்பித்து இடைவெளியை உருவாக்கினால் எப்படி இருக்கும்? எல்லாச் சிவப்பு இடமும் சட்டென்று அமைதி கொண்டு பசுமையாக மாறினால் வன்முறை அமைதியாகிப் போனால் எப்படி இருக்கும்?

இதுதான் சாதி, இனம் தொடர்பான வன்முறைகளில் தேவையாக இருக்கிறது. இந்தத் தடையும் கொஞ்சம் சிந்திக்க அவகாசமும் தேவை. அந்த அவகாசத்தில் தொடர் சிந்தனையும் அமைதிக்கான தொடர் செயல்பாடுகளும் வெவ்வேறு மனிதர்களால் வெவ்வேறு இடங்களில் நடந்துவிட்டால் வன்முறை நிறுத்தப்பட்டுவிடும்.

தனி மனிதர்களின் தொடர் செயல்பாடுகள் அவசியம். என்ன நடந்தால் எனக்கென்ன என்கிற போக்கு இருந்து தொடர் சங்கிலி அறுபட்டால், இந்த மாற்றம் நிகழக் கால தாமதம் ஆகும். சமுதாய மாற்றம் நிகழ இந்தக் கூட்டு முயற்சியும் மக்கள் மன மாற்றமும் அவசியம். ஆனால், இந்த மாற்றம் சட்டத்தால் ஏற்படுத்தப்படும் மாற்றத்தைவிட நல்ல கட்டுக்கோப்பானது உறுதியானது.

நண்பர்களுடைய தாக்கம், வழிப்போக்கனாக மக்களின் தீர்வு ஆகியன இந்தக் கலாசார மாற்றத்தின் அடிப்படை. அப்படி இருப்பின் தனி மனித சக்தி சார்ந்த வன்முறையைத் தீர்க்க முடியும்.

ஓர் அரசியல் சார்ந்த எடுத்துக்காட்டையும் பார்ப்போம். உக்ரைனின் அதிபர் போர் நடக்கும் நாட்டில் இருந்து சமாதானத்தை விரும்பி அதற்கு உதவி கோரி அமெரிக்காவுக்கு வருகிறார். அமெரிக்க அதிபர் நன்றாகவே பேசுகிறார். இடையே தலையிட்ட துணை அதிபர், தனக்கு நல்ல பெயர் எடுக்க, “நீ அதிபருக்கு நன்றி சொன்னாயா, உன்னிடம் நல்ல ஆடைகளே இல்லையா” என்றெல்லாம் ஆரம்பித்து உக்ரைன் அதிபரைச் சாடுகிறார். தான் அதிபருக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டிக்கொள்வது இருக்கட்டும், இதில் எவ்வளவு ஆபாசமாக வன்முறை இன்னொரு நாட்டு அதிபர் மீது செலுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். எத்தனை  இனத்துவேஷமும்கூட.

இதே எலான் மஸ்க் ஓவல் அலுவலகத்தில் டீ ஷர்ட்டும் பேஸ்பால் தொப்பியும் அணிந்து வந்த போது அவர் ஒரு வெள்ளைக்காரர் என்பதால் உலகிலேயே செல்வந்தர் என்பதால், பேசத் துணிவு வரவில்லையா? இதைத்தான் மேட்டுக்குடிகாரர்களின் வன்மம் வன்முறை என்பது. சில சலுகைகள் அவர்கள் கேட்காமலே அவர்களுக்குத் தரப்படுகின்றன.

இந்த வகை வன்முறைகள் எப்படி நிறுத்தப்படும் என்றால், டிரம்பும் வான்ஸ்ஸும் செலன்ஸ்கியை  நடத்தியவிதம் சரியல்ல என்கிற உண்மையை உலகெங்கும் உள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம். அதைச் சமூக வலைத்தள மக்கள் யாரும் சொல்லாமலே செய்தார்கள். உலக ஊடகங்கள் அனைத்தும் பரவலாகச் செய்தார்கள். யாரும் வல்லரசான அமெரிக்காவிடம் மண்டியிட்டு இருக்கவில்லை. இதைத்தான் சமூக ஊடுருவல் எதிர்பார்க்கிறது.

யாரும் ஒரு போராட்டமோ புரட்சியோ ஒன்றிணைக்காமல் இயல்பாகவே தன்னிச்சையாகத் தனித் தனியாக இது தவறு என்றெழுதியதால்தான் சற்றே சீற்றம் குறைந்து வெள்ளை மாளிகை இன்னொரு பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றது.

இதுதான் சமூக ஊடுருவல் முறை (social diffusion theory). ஒரு நல்ல பழக்கத்தைக்கூட தனித் தனியாகச் சொல்லிக்கொடுத்து சமூகத்தில் உள்ள அத்தனை பேரையும் மாற்ற முடியாது. ஆனால், பிரபலமான ஒருவர் அதைச் சொல்வதன் மூலம் அந்த மாற்றத்தை உருவாக்க முடியும்.

மிகப் பிரபலமான நடிகை ஒருவர் தான் மனநலனுக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சையைப் பற்றிச் சொல்ல, அதனால் மனநலன் மீதான பலருக்கும் இருந்த சங்கடங்கள் குறையத் தொடங்கின. தொடர்ந்து பலரும் சிறிது சிறிதாகத் தங்கள் குறைகளை, அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினர். அவரவர் சிகிச்சை முறைகளைச் சொல்லத் தொடங்க, இப்போது இந்தியாவில் மனநலச் சிகிச்சை பெருமளவுக்கு இல்லை என்றாலும், மக்கள் எளிதாக அணுகக்கூடிய அளவில் இருக்கிறது.

அதிகாரம் ஒருவரைச் சட்டென்று தன் சக்திவாய்ந்த இயந்திரங்கள் மூலம் ஒருவரை முடக்கிவிடக்கூடும். எப்படிப் பிரபலமானவர்கள் வன்முறையை நிறுத்த உதவுவார்களோ அதேபோல பிற்போக்குக் கருத்துகளைப் பரப்புவதற்கும் வன்முறையைத் தூண்டவும் தனி மனிதப் பழக்கங்களை மீண்டும் தவறான பாதையில் செலுத்தவும் சிலர் முயலுவார்கள். இதை இனம் கண்டு முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.

1. பொதுவாக ஓர் ஆபத்தான சூழ்நிலை வரும் போது பலரும் கூட்டமாக இருக்கும் போது எல்லாரும் இன்னொருவர் இதைத் தடுக்க முயல்வார், நாம் ஏன் ஆரம்பிக்க வேண்டும் என அமைதியாக இருப்பார்கள். இது சகஜம்.

2. சூழ்நிலையை அவதானித்து வரும் அச்சம் ஓர் ஆபத்தான சூழலில் எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதைவிட நம் தடுக்கும் முயற்சிகள் முட்டாள்தனமாகப் பலரால் பார்க்கப்பட்டுவிடுமோ என்கிற தயக்கம்.

3. பன்முனை அறியாமை – பலரும் கூடியிருக்கும் சூழலில் ஒரு வன்முறை நிகழும்போது ஓர் ஆபத்தான சூழலில் தனி மனிதர்கள் அந்த வன்முறையைத் தடுப்பதற்கான முடிவை எடுப்பதை அடுத்தவர்களுடன் விட்டுவிடுவார்கள்.

4. என்ன ஆபத்தான சூழலாக இருந்தாலும் சிலர் வன்முறையைக் கண்டால் துணிந்து நிறுத்துவதற்கான செயலில் துணிந்து இறங்கிச் செய்வார்கள். இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களும் தொடர்ந்து இயங்குவதோடு அவர்களை உற்சாகப்படுத்துவதோடு பின்பற்றவும் செய்வார்கள். இவர்களைப் போன்றவர்கள் பல சின்ன சின்ன தடைகளை உடைத்தெறிந்து முன் சொன்ன பலரின் அச்சங்களை அவர்களையும் அறியாமலேயே போக்குகிறார்கள்.

சமூக ஊடுருவல் கோட்பாடு இப்படியானவர்களை இனம் கண்டுகொள்வதையும் ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது. இவர்களைக் கண்டறிந்து ஆதரவு தருவதோடு அவர்களின் உற்சாகம் வடிந்து போகாமல், அவர்களின் தன்னம்பிக்கை குலைந்து போகாமல் காக்கவும் வைக்க முயலுகிறது. அதைச் செய்வது க்ரீன் டாட்டின் வெற்றிக்குக் காரணம்.

சமூக ஊடுருவல் கோட்பாடு யார் மூலம் எவ்விதம் வன்முறையைத் தடுப்பது என்பதைப் பேசுகிறது. அதே நேரம் வழிப்போக்கர் கோட்பாடு வன்முறையாளர் தன் இரையை எப்படித் தேர்ந்தெடுக்கிறார், அதை எப்படித் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார், எப்படி எல்லாம் காயப்படுத்துகிறார் என்கிற தெளிவைத் தந்து, அதை எப்படித் தனி ஒருவனாக/ஒருத்தியாகத் தடுக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இந்த இரண்டு கோட்பாடுகளும் இணைந்து செயல்படும் போதுதான் வன்முறையை நிறுத்துதல் முழு வெற்றி அடைய முடியும்.

இந்தப் பெண்கள் தினத்தில் பெண்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்படும் சில வன்முறைகளைப் பட்டியல் இடுங்களேன். அவை எந்த வடிவத்தில் இருந்தாலும் – படங்கள், காட்சிகள், எழுத்து எப்படி இருந்தாலும். நான் ஓர் உதாரணம் சொல்கிறேன். மாலை வேலை முடிந்து அவரவர் வீட்டுக்குத் திரும்பிய பின் கணினி தொடர்பாக எந்த அப்டேட் செய்ய வருவார்கள். அந்த நிறுவனத்தில் ஒரு சிஸ்டம் அனலிஸ்ட் அந்தப் பெண்ணின் Screen Saver ஆக எப்போதும் ஆபாசப் படம் ஒன்றை வைத்துவிட்டுச் சென்றுவிடுவார். காலையில் கணினியில் வேலையை ஆரம்பிக்கும் போது முதலாக இந்தப் படம் திரையில் விழும். இது ஒருவகையில் பாலியல் வன்முறைதான். நீங்களும் வன்முறைகளை இனம் காண ஆரம்பியுங்கள்.

வன்முறையாளர்களைப் பட்டாம்பூச்சி சட்டகத்தில் சிறைப்படுத்துவது  எப்படி எனப் பார்ப்போம்

(தொடரும்)

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.