வன்முறையில் பல வகைகள் உண்டு. இவை யார், யார் மீது செலுத்தும் வன்முறை என்பதைவிட, வன்முறைகளின் தன்மையைக் கொண்டே வகைப்படுத்தி இருக்கிறார்கள். அவை ஒன்பது வகைப்படும்.
உடல்மீது செலுத்தும் வன்முறை/ஆதிக்கம்:
ஒரு தனிமனிதனின் நடவடிக்கைகளை அவரது உடலின் மீது செலுத்தும் ஆதிக்கத்தால் கட்டுப்படுத்துவது. பாலியல் வன்முறை, உடல் சித்திரவதைகள், அடித்தல் போன்றன.
வீட்டு வன்முறை அல்லது குடும்ப முறை பாலியல் வன்முறை:
நெருக்கமான உறவு கொண்ட இருவரில் ஒருவர் மீது இன்னொருவர் செலுத்தும் ஆதிக்கம் காரணமாகக் காட்டும் வன்முறை. இதில் உட்பிரிவுகளாகப் பல வன்முறைகள் உள்ளன.
உணர்வு வகையான வன்முறை:
பெற்றோரோ அல்லது அன்புக்குச் சொந்தமானோரோ மற்றவரிடம் அந்த அன்பையே காரணம் காட்டி வன்முறைக்கு ஆளாக்குவது. பெற்றோர் பிள்ளைகளிடம், அல்லது பிள்ளைகள் பெற்றோரிடம், சில நேரம் நண்பர்கள், காதலர்கள் என விரித்துக்கொண்டே போகலாம். அல்லது எமோஷனல் பிளாக் மெயில் செய்து பிடிக்காத வேலைகளைச் செய்யச் செய்வது. நீ இந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவில்லையானால் நமது குடும்ப மானமே போகும் என்பதுகூட மனதளவில் அழுத்தம் கொடுக்கும் சின்ன வன்முறைதான்.
மனரீதியிலான வன்முறை:
ஒருவரின் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்துவது. அவர்களின் எண்ணங்களிலும் உள்ளுணர்வுகளில் அழுத்தம் கொள்ளச் செய்வது. அவர்களின் சுயமதிப்பை இழக்கச் செய்வது. நாளடைவில் அவர்களின் சுயமரியாதையை இழக்கச் செய்து தன்னம்பிக்கையைக் குலைக்கச் செய்வது. பிறகு சுயசார்பின்றி ஆளுமை செலுத்துபவரையே சிறு சிறு செயல்களுக்கும் நம்பியிருக்கச் செய்வது.
மத அடிப்படையிலான வன்முறை:
ஒருவரின் மத நம்பிக்கைகளைப் பகடி செய்வது, அவர் நம்பிக்கைகளைப் புண்படுத்துவது, தொடர்ந்து அவருடைய மத நெறியாளர்களைத் தாழ்த்திப் பேசுவது, அவரது மதம் சார்ந்த கொண்டாட்டங்களைச் செய்யத் தடைவிதிப்பது அல்லது விரதம் அல்லது சடங்குகளைச் செய்ய அனுமதிப்பது போல அனுமதித்து தடைகளை ஏற்படுத்துவது போன்றன அடங்கும். பாதியில் அந்த விரதத்தை விடும் போது உண்டாகும் குற்ற உணர்வில் ஆழ்த்துவதும் இவ்வகையில் வரும்.
கலாசாரம் சார்ந்த வன்முறை:
இது சர்வசாதாரணமாக நடைபெறுவதையும் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டே நடப்பதையும்கூட காணலாம். ’அவங்க கலாச்சாரத்தில் அப்படித்தான், அவங்க இறப்பில் பறை அடிச்சு நடனமாடுறது உண்டு. துக்கம்கூட நாசூக்கா அனுஷ்டிக்கத் தெரியாது. அவங்களுக்கு எல்லாம் ஒரு ஆடு அடிக்கணும் எல்லா கொண்டாட்டத்துக்கும், உவ்வேன்னு நமக்குத்தான் கொமட்டும்’ என்பதுபோல. அல்லது ‘அவாளுக்கு எல்லாம் இப்படித்தான் ஆச்சாரம்னு” என எதுவும் புரியாமல் கலாச்சாரத்தின் பழக்க வழக்கங்களைச் சார்ந்து பகடி எனும் பெயரில் செய்யப்படும் வன்முறை. அரசியல் தலைவர்களேகூட நான் ஒரு தலித் வீட்டில் இன்று உணவருந்தினேன் என்று மகிழ்ச்சியாகச் சொல்லும்போது அதன் அடிப்படையில் செய்யத் தகாத ஒரு காரியத்தைச் செய்து முடித்த நுண்ணரசியல் இருப்பதைக் காணமுடியும்.
இது சில நேரம் உணவு சார்ந்ததாக இருக்கலாம், சில நேரம் சாதி சார்ந்ததாக இருக்கலாம்.
சொற்களினால் வன்முறை:
சொல் வன்முறை மற்றவர்களை நம் கட்டுப்பாட்டில் வைக்கவும், அதிகாரத்தைச் செலுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் நமது கலாச்சாரத்தில் இதை எல்லாம் பெற்றோர் குழந்தைகளிடத்தில், கணவன் மனைவியிடத்தில் அல்லது மனைவி கணவனிடத்தில் செலுத்தும் வன்முறையை முன்கோபம், அல்லது கண்டிப்பு என்கிற வகையில் சேர்த்து விடுவார்கள். இதனால் ஏற்படும் மனக்காயத்தைக் கண்டுகொள்வதே இல்லை.
சொல்லத் தகாத சொற்களைச் சொல்வது, பிறகு அந்தப் பொருளில் சொல்லவில்லை அல்லது அது நகைச்சுவை என்று மழுப்பிச் சமாளிப்பது எல்லாம் சொல்வன்முறையில் அடங்கும். ஒருவர் ஆர்வமாகப் பேசும் போது, அந்தச் செய்தியை இடைமறித்து தனக்குப் பிடித்தமானவற்றை மட்டும் பேசுவது, அவரைப் பேச விடாமல் செய்வது. என்னைப் பேசவிடாமல் செய்கிறாய் என்றால், உடனே உனக்குச் சரியாகப் பேச தெரியவில்லை, நான் பேசும் போது இடைமறிக்கிறாய், சுருங்கச் சொல்லத் தெரியவில்லை என்று மேலும் மேலும் குறை சொல்வதுகூட சொல் வன்முறைதான்.
மனதிற்குப் பிடித்தம் இல்லா நிகழ்வுகளை எதிர்கொள்ள நேர்ந்தால், மற்றவர் மீது பழியைப் போடுவதுகூட சொல் வன்முறைதான். உதாரணமாக, எனக்கு இன்றைய தினம் சரியாகப் போகாததற்குக் காரணம் நீ சரியாகக் காலை உணவு தயாரித்து நேரத்திற்குக் கொடுக்காதது, அல்லது பிள்ளைகள் சரியாகப் படிக்காமல் இருந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால், நல்ல சத்துள்ள உணவைத் தயாரித்துக் கொடுக்க உனக்குத் தெரியவில்லை என்று குற்றம்சாட்டுவது.
தரக்குறைவான சொற்களைக் கூறிக் கூசச் செய்வதும், மட்டம் தட்டுவதும், எல்லாவற்றையும் எடை போட்டு விமர்சிப்பதும், தான் சொன்னதை மறுநாள் மறுப்பதும், நீ தவறாகப் புரிந்துகொண்டாய் எனப் பாதிக்கப்பட்டவர் மேலேயே குற்றம் சொல்வதும்கூடச் சொல் வன்முறையில் அடங்கும். குரலை உயர்த்திப் பேசுவது, கோபத்தில் வாயை மூடு என்று சொல்வதுகூட வன்முறையே. யாரும் இன்னொருவர் மீது குரல் உயர்த்திப் பேசத் தேவையில்லை
பொருளாதார வன்முறை:
பெண்களோ ஆண்களோ பொருளாதாரத்திற்கு ஒருவரைச் சார்ந்திருக்கும் போது, தேவையான செலவுகளுக்குக்கூட நிதி அளிக்காமல், அல்லது காலம் தாழ்த்தி அளித்து அது பயன்படாமல் போகச் செய்வதுகூட வன்முறை. இது நம் நாட்டில் பெண்களுக்கு அதிகம் நிகழும். அதுவும் திருமணம் ஆன பெண்கள் தங்கள் பெற்றோருக்கோ அல்லது உடன் பிறந்தோருக்கோ உதவ நினைத்தால், சுதந்திரமாக எதுவும் செய்ய இயலாமல் பணம் கேட்பதற்குள் கூனிக்குறுகிப் போய்விடுவார்கள். இயல்பாக கணவனும் அது நம் இருவரின் நிதி என்று உணரவைப்பதில்லை.
பெண்களுக்குப் பொருளாதாரம் பற்றியே தெரியாது என்கிற செய்திகளைப் பரப்பி இன்றளவுக்கும் அதை உண்மை என நம்ப வைத்திருக்கிறார்கள். இது குறித்துப் பல நகச்சுவைத் துணுக்குகள் உண்டு. உண்மையிலேயே பொருளாதாரத்திற்காகக் கணவனை நம்பியிருக்கும் பெண்கள், எங்கெல்லாம் சேமிக்கப்பட்டிருக்கிறது என்றுகூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். பலரும் விவரங்களைப் பகிர்ந்து கொள்வது இல்லை. காப்பீடு போன்ற விவரங்கள், ஆயுள்காப்பீடு, இன்னும் பல பங்குச் சந்தை விவரங்கள் தெரிவது இல்லை. விவரங்களை மறைத்து, எதிர்காலம் குறித்து மனதளவில் கவலைகளையும் அச்சங்களையும் வளர்ப்பதுகூட வன்முறைதான்.
கவனிக்காமல் விடுதல்:
ஒருவரின் உடல்நலம் அல்லது அவரின் இருப்பையே அங்கீகரிக்காமல் இருத்தல்கூட வன்முறைதான். அலுவலகத்தில் செய்யும் பணிகளுக்கு மேலதிகாரிகள் புகழ அல்லது அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் வீட்டில் அம்மா, மனைவி அல்லது அப்பா கணவன் செய்யும் சின்ன சின்ன வேலைகள் பார்த்துப் பார்த்துச் செய்யும் வேலைகளை, சமைக்கும் உணவை எந்தப் பாராட்டோ நன்றியோ சொல்லாமல் ஏற்றுக்கொள்வது. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதுகூடத் தெரியாமல் இருப்பது, அவர்களின் உடல்நலத்தில் ரசனையில் அக்கறையும் கரிசனமும் காட்டாமல் இருப்பதும் வன்முறையில் அடங்கும்.
இந்த அனைத்து வன்முறைகளின் உட்பிரிவுகள், தன்மை முழுதும் அறிந்துகொண்டால்தான் அதைத் தடுப்பது எப்படி என அறிந்துகொள்ள முடியும். எனவே ஒவ்வொன்றைப் பற்றியும் வன்முறைச் சக்கரம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றியும் விளக்கமாகப் பார்க்கலாம்.
(தொடரும்)
பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.