சுஜாதா, என் நெருங்கிய தோழியின் தங்கை என்பதால் சிறுவயது முதல், சொல்லப்போனால் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். இருவரின் புகுந்த ஊரும் ஒரே ஊர் என்பதால் தொடர்பு என்பது அறுபடாமல் இருக்கிறது. நமக்கெல்லாம் 24 மணிநேரம்; இவருக்கு மட்டும் 48 மணிநேரமா? என அவ்வப்போது தோன்றுவதுண்டு. அதன் தொடர்ச்சிதான் இந்தக் கட்டுரை.
அவரது வாழ்க்கை குறித்துச் சிறிது பார்க்கலாம். இரண்டு அக்காக்கள், இரண்டு அண்ணன்கள் ஒரு தங்கை எனப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அப்பா வெளிநாட்டில் வேலை செய்ய, அம்மா அன்பாகப் பிள்ளைகளை வளர்த்தார். நடுத்தர வசதி கொண்ட குடும்பம். அம்மா மிகவும் துணிவானவர்; சரியான முடிவுகளை எடுப்பவர்; பிள்ளைகளின் விருப்பத்திற்குப் பக்க பலமாக இருப்பவர். “நான் ஓய்வின்றி இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பதற்கு அம்மா அப்பாதான் காரணம். இருவரிடமும் சோம்பேறித்தனம் கிடையாது. அம்மா இரண்டு ஆண்டுகளாகத்தான் சும்மா இருக்கிறார்கள். ‘நமக்கு எல்லாம் இருக்கிறது; இருந்து சாப்பிடுவோம்’ என அம்மா ஒருபோதும் நினைத்ததில்லை. ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பார்கள்; இப்போதும் (78 வயது) அவர்களே சமைத்துச் சாப்பிடுகிறார்கள். தன்னை வருத்தி தான் எங்களை வளர்த்தார்கள். எங்கள் அனைவரின் வளர்ச்சியிலும் வேர் என்பது அம்மா தான்” என்கிறார்.
அம்மா, நடனத்தில் விருப்பம் கொண்ட சுஜாதாவை அருகில் இருக்கும் சிறு நகரத்திற்கு அழைத்துச் சென்று நாட்டியம் கற்க வைத்தார். அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஊரில் யாரும் நாட்டியம் கற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் அது இது எனச் சுற்றித் திரிந்த சுஜாதா, கல்வியில் தனது நாட்டத்தைச் செலுத்த வேண்டும் எனக் குடும்பம் நினைத்தது. அதனால் அவரை விடுதியில் தங்கிப் படிக்க வைத்தது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இவ்வாறு படித்த அவர் நல்ல மதிப்பெண்களும் வாங்கியிருக்கிறார். பெரிய அளவில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை இக்காலகட்டத்தில் தவிர்த்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
மீண்டும் கல்லூரிப் படிப்பை உள்ளூரில் (கள்ளிகுளத்தில்) தொடங்கி, முதலாமாண்டு மட்டும் இங்கே படித்துவிட்டு பின் இரண்டு ஆண்டுகளும் வேறு ஊரில் விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்கியவர், மீண்டும் தனது நடனத்தைக் கையிலெடுத்திருக்கிறார். பட்டம் வாங்கியவர் அதற்கு இணையாக நடன நிகழ்ச்சிகளில் தன்னால் இயன்ற அளவிற்குப் பங்கு கொண்டிருந்திருக்கிறார். வெற்றிகளும் விருதுகளும் பெற்றிருக்கிறார். நடனம், பாடல், கோலம், நடிப்பு, நாடகம் என எந்தப் போட்டியையும் அவர் விட்டுவைக்கவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி எனச் சுற்றித் திரிந்திருக்கிறார். உடனே தலைப்பு கொடுத்தாலும் அதற்கான எந்த ஆயத்தமும் இல்லாமல் போட்டிகளின் கலந்து கொண்டு வெற்றிகளைக் குவித்து இருக்கிறார் என்றால் அவருக்கு இத்தகைய கலைகளிலிருந்த திறமையையும் அதை வளர்த்தெடுக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சியுமே காரணம் எனச் சொல்லலாம். எதுவுமே நமக்கு இலகுவில் கிடைப்பதில்லை.
பட்டம் முடித்த கையேடு வடக்கன்குளம் ஊரைச் சார்ந்த மதன் என்பவருடன் திருமணம். அப்படி இருந்தாலும் நடனம் அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கிறது. அதனால் நாகர்கோவில் சென்று செவ்வியல் நடனம் மீண்டும் கற்கத் தொடங்கியிருக்கிறார். ஒப்பனைக் கலை (beautician Course) கற்றிருக்கிறார். குழந்தை பிறப்பு, வளர்ப்பு என ஒருபுறம் இருந்தாலும், மீண்டும் கள்ளிகுளம் கல்லூரியில் சேர்ந்து PGDCA படித்திருக்கிறார். பின் தொலைதூரக் கல்வி என MCA படித்திருக்கிறார்.
பின் மும்பை வாசம். அங்குச் சென்றவர் மீண்டும் செவ்வியல் நடனம், மோகினியாட்டம், பாடல் மூன்றிற்கான பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
கற்ற கலை மறந்துவிடக்கூடாது என உடனே நடனப் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 2005ஆம் ஆண்டு மும்பை சென்றவர், 2007ஆம் ஆண்டே வகுப்புகள் எடுக்கத் தொடங்கிவிட்டார். 2015இல் ஊர் திரும்பும்போது, இவரின் மாணவியரிடம் அந்த பள்ளியை ஒப்படைத்துவிட்டு வந்திருக்கிறார். இன்றும் இவரது மாணவிகள், இவர் பெயரில் அப்பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மும்பையிலிருந்த காலகட்டத்தில், நான்கு ஆண்டுகள் ஒரு ஜூனியர் கல்லூரியில் பேராசிரியராக இருந்திருக்கிறார். கல்லூரியில் வேலை செய்ய BEd தேவை என்ற சூழ்நிலை வந்தபோது, அதையும் சென்னை வந்து படித்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் மும்பையில் உள்ளூர்த் தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். கூடவே டியூஷன் சென்டர், அழகு நிலையம் போன்றவற்றையும் நடத்தியிருக்கிறார். ‘அதற்காகப் பிள்ளைகளைத் தனியே விட்டுச் சென்றதுமில்லை. அவர்கள் பள்ளிக்குச் செல்லும் நேரம், டியூஷன் செல்லும் நேரம் போன்றவற்றைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்தாற்போல் எனது நேரத்தைப் பிரித்துக் கொள்வேன்; திட்டமிட்டுக் கொள்வேன்’ என்கிறார்.
குடும்பச் சூழ்நிலையால் 2015ஆம் ஆண்டு ஊர் திரும்புகிறார். மீண்டும் முதல் படியில் கால் எடுத்துவைக்க வேண்டிய சூழ்நிலை. அப்போதும் அவர் சோர்ந்து போகவில்லை. தனது வீட்டிலேயே ஒரு பகுதியில் நாட்டியப் பள்ளி, டியூஷன் சென்டர் எனத் தொடங்கி நடத்துகிறார். இப்போது அருகில் இருக்கும் எந்த விழாவானாலும் இவரது மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடக்கும். பள்ளி விழாக்கள் என்றால் இவர் நடன ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இப்படி அந்தப் பகுதியில், நடனத்தில் தவிர்க்க இயலாதவராக மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
பிள்ளைகள் பள்ளிப்படிப்பு படிக்கும் வரை அவர் வேறு தொழில்களில் ஈடுபடவில்லை. பிள்ளைகள் வளர்ந்ததும் கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைக்கிறது. அடுமனை (Baking) வகுப்புச் சென்று கற்கிறார். இப்போது உணவு செய்து கொடுப்பது மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சி வகுப்பும் நடத்துகிறார்.
மும்பையில் அழகுக்கலை படித்ததால், அதையும் இங்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இவருக்கென வழக்கமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தற்போது காளான் பண்ணை வைத்திருக்கிறார். அதில் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். ‘மாதம்… ரூ.62,500… காளான் வளர்ப்பில் கை நிறைய லாபம்!’ என சுஜாதா குறித்து கட்டுரை ஒன்று விகடன் இதழில் வெளிவந்திருக்கிறது. காளான் விற்பனையும் செய்கிறார் மதிப்புக்கூட்டுப் பொருளாகக் காளான் ஊறுகாயும் செய்து விற்கிறார். MiksMico products என்ற பெயரில் தரச்சான்றிதழ் வாங்கிக் கடைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். காளான் பால் செய்யும் திட்டம் உள்ளது.
குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி (play school) வைத்திருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் வயதான சமைக்க இயலாதவர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டு கொடுக்கிறார். முதலில் தனியாகச் செய்து கொண்டிருந்தவர், தொழில்கள் பெருகப் பெருக தனக்கு உதவியாளர்களை வைத்துக் கொள்கிறார். இவ்வாறு தற்சமயம் 12 உதவியாளர்கள் இருக்கிறார்கள்.
இவரிடம் கற்கும் நடன மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு படிக்கிறார்கள். இப்போது அவர்களுக்கான பாடத்திட்டம் என்ன? புதிதாக என்ன பாடங்கள் வந்திருக்கின்றன என்பதைத் தான் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தானும் BA சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார். இவருக்குச் சட்டம் படிக்கும் விருப்பம் இருந்திருக்கிறது. பெண் பிள்ளைகளுக்கு அது சிரமம் என அப்பா தடுத்ததால் படிக்கவில்லை. அதையும் விரைவில் படிக்கப் போவதாகச் சொல்கிறார். “எங்கள் ஊரிலேயே (வடக்கன்குளம்) கல்லூரி இருப்பதால் அது எளிது தான்” எனச் சொல்கிறார்.
சமூகப்பணிகளிலும் சுஜாதாவிற்கு ஆர்வம் உண்டு. “ஒருவரது தேவை கருதி உதவுவது, அவர்களின் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வை சிந்திப்பது இயன்றால் தீர்வை எட்டச் செய்வது என என்னால் இயன்றவற்றைச் செய்கிறேன். அதில் ஒரு உளநிறைவு. வயதானவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்; அவர்களுக்கும் என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அவர்கள் வேலை செய்யும் அளவிலிருந்தால் சிறு சிறு வேலைகள் கொடுத்துத் தகுந்த சம்பளம் கொடுப்பதுண்டு” என்கிறார்.
எதிர்கால கனவு என அவர் சொல்வது, ‘பலரும் என்ன செய்யலாம் எனத் தெரியாமல் என்ன தொழில் தொடங்கலாம் என்ற புரிதல் இல்லாமல் தங்களது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தொழில் தொடங்குவதற்குத் தேவையான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்துச் சிறு வருமானத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்; அவர்கள் பாதையில் சிறு விளக்கேற்றி வைக்கவேண்டும்”.
மகள் நியூரோ சைக்காலஜி படித்து இருப்பதால் அதற்கென ஒரு இடத்தை உருவாக்கிவிட வேண்டும். தேவைப்படுவோருக்கு உள சிகிச்சை கொடுத்து, அவர்கள் பாதுகாப்பற்று இருப்பவர்களாக இருந்தால் தங்க இடம் கொடுக்க வேண்டும். புதிய வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்களே முதியவர்களாக இருந்தால் அவர்களுக்கு வீட்டில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பது என்பது தனது நீண்ட கால சிந்தனை. அதற்காகத் தனது ஊதியத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பதற்காகச் சொல்கிறார். அதைச் செய்வார் என்றே நான் நம்புகிறேன். முதியவர் ஒருவருக்கு உணவுத் தேவை என ஒருமுறை சுஜாதாவிடம் பேசியபோது, அவர் கேட்ட தொகை என்பது மிகவும் சொற்பமாகவே எனக்குத் தோன்றியது. அதை அவர் ஒரு சேவையாகவே கருதுகிறார் எனத் தோன்றியது. முதியவர்கள் மீது இயல்பிலேயே கரிசனப்பார்வை அவருக்கு இருக்கிறது.
குடும்பம் குறித்துக் கேட்கும்போது, ‘திருமணம் எனக்கு ஒரு தடையாக இல்லை. கணவர்தான் என்னைப் பல படிப்புகளைப் படிக்க வைத்தவர்’ என்கிறார். “அவர் உன் விருப்பம் எனச் சொல்வது மட்டுமல்லாமல் எந்தத் தலையீடும் செய்யாததால்தான் என்னால் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போக முடிகிறது. இரண்டாவது நான் எதையும் காசு எதிர்பார்த்துச் செய்வதில்லை. அதற்காகக் காசு நான் வாங்குவதில்லை என்பது பொருளல்ல. இதைச் செய்தால் இவ்வளவு காசு கிடைக்கும் எனக் காசை ஒரு அளவுகோலாக வைத்து எதையும் தீர்மானிப்பது இல்லை. இது கணவர் ஆதரவு இல்லாமல் சாத்தியப்படாது. என்னால் நடனமாடாமலோ அதைச் சொல்லிக் கொடுக்காமலோ இருக்க முடியாது என்பது அவருக்கும் நன்கு தெரியும். எனது நேரத்தைத் தகுந்த முறையில் செலவழிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள். பணமும் இணைந்தே வருவது இரட்டிப்பு மகிழ்ச்சி” என்கிறார்.
‘பிள்ளைகளை இது செய் அது படி என நான் சொன்னதுமில்லை. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது போல எப்போதும் மாணவர்கள் சூழ்ந்து இருப்பதால், படிப்பு நடனம் எல்லாம் இயல்பாகவே வந்து விட்டது. அவர்களால் எனக்கு என்றுமே சிரமம் இருந்ததில்லை’ என்கிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் விபத்து ஏற்பட்டு இனி நடனமாட முடியாது என மருத்துவர் சொன்னபிறகும் இவ்வளவு விரைவில் மீண்டு வந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது பக்தி தான் காரணம் என்கிறார். கடவுள் கையில் தான் இருப்பதாக உணருவதாகச் சொல்லும் அவர், ‘கடவுள் கையில் நாம் இருக்க வேண்டுமென்றால், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகச்சரியாக இருக்க வேண்டும்; நேர்மையாக இருக்க வேண்டும்’ எனச் சிந்தித்தே செயல்படுவதாகச் சொல்கிறார்.
சுஜாதாவிற்குப் பகல் முழுவதும் ஓய்வில்லா உழைப்புதான். நமது வாழ்க்கையைப் பார்த்தால் ‘ யாரெல்லாம் தோல்வி என நினைத்துத் துவண்டு போயிருக்கிறார்களோ அவர்கள்கூட வெற்றியடைய வேண்டும்; ஒன்றும் முடியாது என நினைப்பவர்களுக்குக் கூட ஒரு விழிப்புணர்வு செய்தியாக நம் வாழ்க்கை இருக்க வேண்டும்; நமக்குப் பின் வரும் நான்கு தலைமுறை என்ன! ஒரே ஒரு தலைமுறையாவது, நாமும் இதைக் கடைப்பிடித்து முன்னேற வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் தான் செயல்படுவதாகக் கூறுகிறார்.
ஒவ்வொரு நாளும், ‘இன்னும் என்ன செய்யலாம், இன்னும் என்ன செய்யலாம்” என்ற சிந்தனை வந்து கொண்டே இருக்கும்’ என்கிறார். “ஒன்றைத் தொடங்கி அதை ஒரு கட்டத்திற்கு எடுத்துவந்த பின் அடுத்து என்ன? அடுத்து என்ன? (What next? What next?) என என் உள்ளம் சிந்திக்கத் தொடங்கிவிடும். ஒவ்வொரு இரவும் அது குறித்துச் சிந்தித்துக் கொண்டேயிருப்பேன். அன்றைய நாள் என்னென்ன என் வாழ்வில் நடைபெற்றன என நினைவுபடுத்திக் கொள்வேன். அதே நேரம் மறுநாளுக்கான திட்டங்கள், நேர அட்டவணை, இதைச் செய்ய வேண்டுமென்றால் எத்தனை மணிக்கு எழுந்தால் சரியாக இருக்கும், இன்று செய்து முடிக்கவேண்டிய அனைத்தையும் முடித்து இருக்கிறேனா, எது சரியாகச் செய்தேன்? எதில் தவறு நிகழ்ந்தது? எப்படிச் சரி செய்யலாம் …. இப்படி ஒரு பத்து நிமிடங்கள் என்னை நானே பரிசோதனை செய்து கொள்வேன்; ஆயத்தப் படுத்திக் கொள்வேன். இதை நான் கடைப்பிடிக்கத் தவறியதில்லை” என்கிறார்.
நான் பார்த்து வியந்த அவரது வழக்கம், இவ்வளவு ஓய்வில்லாமல் உழைக்கிறார் என்றாலும் அதை உள்ளத்தில் ஒருபோதும் ஏற்றியவரில்லை. ஊருக்கு வந்தால் வடக்கன்குளத்தில் தான் பெரும்பாலும் இருப்பேன் என்பதால் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு உண்டு. சும்மா நின்று வெட்டிக்கதை பேசுவோம். சிலநாட்கள் கோவில் வாசலில் அமர்ந்து பேசியதுமுண்டு. ‘ஐயோ வேலையிருக்கிறது அக்கா’ என ஒருநாளும் அவர் பரபரப்பு காட்டியதில்லை. மிக இயல்பாக அனைத்தையும் எடுத்துக் கொள்வதால் தான் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பதற்றமில்லாமல் செய்ய முடிகிறது.
நான் பார்த்து வியந்த அவரது இன்னொரு வழக்கம், என்ன ஆனாலும் ஞாயிறு மாலை என்பது அவரது அம்மாவிற்கானது. வாகனத்தில் என்றால் ஊர் போகவர ஒருமணிநேரம்; அம்மாவிற்கு இரண்டு மணிநேரம் என மூன்று மணி நேரம், எப்படியும் ஒதுக்கிவிடுவார். நான் மட்டும்தான் அம்மாவின் அருகில் இருக்கிறேன். அதனால் நான் அவர்களுக்கு நேரத்தை ஒதுக்கியே ஆகவேண்டும் என்கிறார். பெண்கள் தங்களின் உரிமைகள் குறித்துப் பேசும்போது, இது போன்று இருக்கும் கடமைகளையும் இணைத்தே சிந்திக்க வேண்டும். கடமை என வரும்போது மட்டும் ‘கணவர், அவரது குடும்பம் இதை சொல்லும்; இப்படி நினைக்கும்’ எனப் பல பெண்கள் தங்கள் குடும்பத்தில் இருந்து விலகியிருப்பதை ஒரு பெருமையாகவே சொல்வதை நாம் பார்க்கலாம். ஆனால் இவர் அந்தக் கடமையையும், அன்புடன் நிறைவாகச் செய்கிறார்.
இப்போது கள்ளிகுளத்திலும் நடனப்பள்ளி வைத்திருக்கிறாராம். ‘அதற்கான முதல் காரணம் அம்மாவைப் போய்ப் பார்ப்பதற்கு; இரண்டாவது காரணம் நான் பிறந்த, என்னை வளர்த்த ஊரில் நல்லதொரு நடனக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பது’ என்கிறார்.
“அம்மாவிற்குச் சமைத்துக் கொண்டு போவாயா?’ என ஒருமுறை கேட்டதற்கு ‘ஐயோ அக்கா அவர்கள் தான் எனக்குச் செய்து வைத்திருப்பார்கள்.” என்றார் சுஜாதா. அந்த அம்மா குறித்து அறிய வேண்டுமா? அடுத்த பகுதி வரும்வரைக் காத்திருங்கள்!
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.
அருமை அக்கா… நம்ம ஊர் பெண்கள் பெருமை பாரெங்கும் பரவட்டும்… வாழ்த்துகள். 💐🎉