‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது போல முருங்கையைக் கொண்டே தனது வாழ்வை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஒரு பெண்ணின் கதை இது. பெயர் பொன்னரசி. கடந்த பத்தாண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்கிறார்.
பாட்டன் பேரன் சொத்தாக இருந்தாலும் பாடுபட்டால்தான் சாப்பிட முடியும் என இயல்பாகச் சொல்லும் இவர், அவ்வாறு உழைத்து மேன்மை அடைந்துள்ளார். பத்தாம் வகுப்பு வரைப் படித்த இவர், தற்போது நம்பிக்கை நட்சத்திரமாகக் கல்லூரிகள் பள்ளிகளில் உரையாற்றும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார் என்றால் அது அவரது உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதி.
திண்டுக்கல் மாவட்டம் அம்மா பட்டி என்னும் ஊரில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். வறுமையான குடும்பம்தான். பத்தாம் வகுப்பு வரைப் படித்த இவர், மூன்று ஆண்டுகள் மில் வேலை செய்து இருக்கிறார். அவரது பிறந்த ஊர் என்ன எனக் கேட்டபோது, இதுவரை இப்படி ஒரு கேள்வியை யாரும் கேட்டதில்லை என்கிறார்.
19 வயதில் திருமணம். திருமணம் முடிந்து சிலகாலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர், பின் கணவரின் ஊரான நொச்சிப்பட்டி/ திண்டுக்கல் மாவட்டம் வந்து வாழத் தொடங்கியிருக்கிறார். பிறந்த/ புகுந்த குடும்பங்கள் வேளாண்மை தொடர்புள்ள குடும்பங்கள் என்பதால் இயல்பிலேயே அது குறித்த புரிதலும் அறிவும் நிறையக் கிடைத்து இருக்கிறது. அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து டன் கணக்கில் முருங்கை இலை, காய் வெளியில் செல்வதை இவர் பார்த்து இருக்கிறார். அதை என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி உள்ளத்தில் உறுத்திக் கொண்டு இருந்து இருக்கிறது.
இப்படியான காலகட்டத்தில் ஒரு நாள், தனது அக்கா மகளைக் கோவை வேளாண் கல்லூரியில் சேர்க்கும் பொருட்டு சென்று இருக்கிறார். அங்குப் பணி புரிந்து வந்த, ஜான் கென்னடி அவர்கள், இதே கேள்வியை இவர்களை நோக்கிக் கேட்டு இருக்கிறார்கள். ஏனென்றால் அவர் திருநெல்வேலிக்காரர். ஊருக்குச் செல்லும்போது பார்த்து இருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் வீட்டுக்கொரு முருங்கை வளர்க்கும்போது, இவர்கள் ஏன் இப்படி ஏக்கர் கணக்கில் வளர்க்கிறார்கள் என நினைத்து இருக்கிறார். “எதற்காக கொண்டு செல்கிறார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் விளைவித்து அப்படியே கொடுக்கிறோம்” என அரசி சொல்லியிருக்கிறார்.
ஐயா ஜான் கென்னடி ஒரு வாரத்தில் முருங்கையில் இருக்கும் மதிப்புக் கூட்டல் வழிமுறைகள் அனைத்தையும் வாசித்து, இவரிடம் சொல்லியிருக்கிறார். “ஒரு பாட்டி, பொடி செய்து விற்கிறார்கள். பத்து ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பெரியநிலையை அடைந்து இருக்கிறார்கள். இப்படி எத்தனைப்பேர் முன்னேறியிருக்கிறார்கள். நீங்கள் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஜான் கென்னடி அவர்கள் வேளாண் உதவி அலுவலகத்தைக் கைகாட்டி விட்டிருக்கிறார். அங்கு இலவசமாகப் பல நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த அலுவலகம் எல்லா மாவட்டங்களிலும் உள்ளன. இலவசமாக அறிவுரைகள் பெற்றுக் கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்திற்குக் காந்தி கிராமத்தில் உள்ளது என்கிறார் அரசி. முருங்கை எண்ணெய் எடுத்து அதைத் திண்டுக்கல் வேளாண் உதவி அலுவலகத்தில் கொண்டு போய்க் காட்டியிருக்கிறார். வேளாண் உதவி அலுவலகத்தில் வேலை பார்த்த சாத்தப்பன், சுருளியப்பன் எனப் பல அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் ஏற்பாடு மதிப்பூட்டுகிறார்கள் என சுருளியப்பன் அவர்கள் சொல்லிக் கொடுக்க கொடுக்க ஓரிரு நாட்களில் இவர் ‘இதைப் பண்ணிட்டேன் சார்’ எனக் கொண்டு போய்க் கொடுத்திருக்கிறார். இவரது ஆர்வம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அவர்களும் புதிய புதிய தகவல்களைக் கொடுக்கிறார்கள். இவரும் உடனே அதைச் செய்து பார்க்கிறார்.
ஸ்ரீ குமாரி என்ற அலுவலர் பொருளை உற்பத்தி செய்வது எப்படி? தரச்சான்றிதழ் எப்படி எடுப்பது? உற்பத்தி செய்யப்பட்ட பொருள் எவ்வளவு நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும் என எப்படிப் பரிசோதிப்பது? என்பது குறித்த தகவல்களைக் கொடுத்து இருக்கிறார். அதன்பிறகு அரசி, தஞ்சாவூர் சென்று பரிசோதனை செய்து சான்றிதழ் வாங்கியிருக்கிறார்.
இவரது ஆர்வத்தைப் பார்த்து சுருளியப்பன் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமே கூட்டிச் சென்று அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். வினய் சார், விஜயலக்ஷ்மி அம்மா என மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இயல்பாகப் பழகியிருக்கிறார் என்பது அரசி அவர்களின் பேச்சிலிருந்து தெரிகிறது. விஜயலக்ஷ்மி அவர்கள் மகளிர் சுயஉதவிக்குழு, விவசாயக்குழுக்களுக்கு நீங்கள் பயிற்சி கொடுங்கள்; உங்களை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வது அரசின் பொறுப்பு எனச் சொல்லியிருக்கிறார். இயந்திரங்கள் போன்றவை வேண்டுமென்றால் நிதி ஒதுக்குவதாகக் கூடச் சொல்லியிருக்கிறார். ஒரு பெண் இத்தனை ஆர்வமாகச் செய்கிறார் என்னும்போது இத்தனை உதவிகள் இயல்பாகவே வருகின்றன என்பதை நாமும் இவர் மூலம் தெரிந்து கொள்ளலாம். ‘அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்’ அரசிடம் கேட்டால் கிடைக்கும் என்கிறார்.
2015 ஆம் ஆண்டு, வேளாண் தொழில் செய்பவர்கள், தங்கள் பொருட்களை மதிப்புக் கூட்டி, அவற்றைப் பொதிந்து அனுப்புவதற்கு என Pack House கட்டிக்கொள்ள அரசு ரூபாய் 2,00,000 கொடுத்துள்ளது. இது பெண்களுக்கான மானியம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல அரசி அவர்கள் தட்டிய இடமெல்லாம் திறந்திருக்கிறது. இத்தனை உதவிகள் நம் அரசு செய்கிறது என அரசை இவர் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார். எதற்கெடுத்தாலும் அரசைக் குறை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கும் படித்தவர்கள் மத்தியில், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு பெண் இவ்வளவு நம்பிக்கையாகச் சொல்கிறார் என்றால், நாம் உரிய கதவுகளைத் தட்டவில்லை என்றே தோன்றுகிறது. அரசு, சிறந்த விவசாயி என்ற விருது கொடுக்கும் போது ரூபாய் 10000 கொடுத்தும் இருக்கிறது. நம் வேலையை விரும்பிச் செய்யும்போது ஒரு தேடுதலில் இருக்கும்போது, அதற்கும் அரசு பணம் கொடுக்கிறது’ உதவி செய்கிறது என்கிறார் அவர். அரசு உருவாக்கிய சாதனைப்பெண் என இவரைச் சொல்லலாம். சிறந்த விவசாயி, சிறந்த தொழில்முனைவோர், முருங்கை அரசி, மதிப்புக் கூட்டலின் ராணி, பொட்டல் காட்டின் பொக்கிஷம், தேனீக்களின் அரசி இப்படி இவர் பெற்றுள்ள விருதுகள் பல.
அரசி, தனது நிலத்தின் பெரும்பகுதியில் முருங்கை வைத்து இருக்கிறார். கொஞ்சம் பகுதியில், கால்நடைத் தீவனம், பழமரங்கள், வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் எனப் போட்டு இருக்கிறார். அவர்கள் ஊர்ப்பகுதியின் நாட்டு வகை முருங்கையான மூலனூர் வகை முருங்கை மரங்களை மட்டுமே வளர்க்கிறார். முருங்கையில் மட்டும் அறுபது வகைக்கு மேல் உள்ளன எனச் சொல்லும் இவர், மதிப்புக்கூட்டலுக்கு நாட்டு வகைகள்தான் கூடுதல் பலன் கொடுக்கும் என்கிறார். தண்ணீர் பெரிய அளவில் தேவைப்படாது என்பதால், வறட்சி நிறைந்த பகுதியில் இருக்கும் நிலம் வைத்திருக்கும் அனைவருக்கும் முருங்கையை இவர் பரிந்துரைக்கிறார். இவை ஆண்டுக்கு இருமுறை பெப்ரவரி -மார்ச் மற்றும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நிறைந்த பலனைக் கொடுக்கும். உழவு ஒட்டி, கால்நடை எரு போட்டு, சரியான பராமரிப்புடன் வளர்த்தால் ஆண்டுக்கு ஏக்கருக்கு மூன்று டன் காய்கள் காய்க்கும் என்கிறார்.
மீதி நாள்கள்? அதற்காக முருங்கைக் காயை மட்டும் நம்பியிராமல், முருங்கை மரத்தின் அனைத்துப் பொருட்களையும் மதிப்பூட்டுதல், கால்நடை, கோழி வளர்த்தல், தேனீ வளர்த்தல் என எல்லா நாட்களிலும் வருமானம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.
இது ஒரு சுழற்சி முறை; விலங்குகளின் கழிவு தாவரங்களுக்கு உணவு; தாவரங்களின் கழிவு விலங்குகளுக்கு உணவு; எனப் பெரிய செய்திகளை எல்லாம் எளிமையாக விளக்குகிறார். முருங்கை புண்ணாக்கு கால்நடை தீவனம். வேர்பூச்சியை அழிக்கும் என்கிறார்.
ஒரு காயில் பத்து – இருபது விதைகள் வரும். நாட்டுக் காய்களின் விதைகள் அழுத்தினால் உடையாத மாதிரி கடினமாக இருக்கும். இவற்றில் தான் எண்ணெய் கூடுதல் வரும் சில வகை காய்களில் உள்ள விதைகள் எண்ணெய் வராமல், மாவு மாதிரி போய்விடும். கொட்டக்காய் (ஆமணக்கு விதை) போன்று நெறித்தால் எளிதாகத் தோலை எடுத்துவிடலாம் என அவரது கிராம வழக்கத்தில் சொல்கிறார். பத்து கிலோ பருப்பைத் தோல் நீக்கி தூய்மை செய்தால் பருப்பு (கர்னல்) ஆறரை கிலோ வரும். ஒன்றே கால் லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் செக்கில் இதற்குக் கட்டணம் கட்டணம் கூடுதல். ஏனென்றால் பிண்ணாக்கு பசைத்தன்மை உள்ளது என்பதால் தூய்மை செய்வது சிரமம் .எண்ணெய்யின் தற்போதைய விலை லிட்டருக்கு ரூபாய் 5,000. எனத் தனது தொழில் ரகசியத்தையும் இணைத்தே சொல்கிறார் என்றால் எவ்வளவு தன்னம்பிக்கை எனப் பாருங்கள்.
உணவு, மருத்துவம், உராய்வு தன்மையை நீக்க (lubricant) , அழகுப் பொருட்கள் செய்ய என முருங்கை எண்ணெயைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார். Ben oil என இணையத்தில் தேடிப்பாருங்கள் என இவர் சொல்லித்தான் இப்படி ஒரு எண்ணெய் இருப்பது எனக்குத் தெரிந்தது.
‘தேனீயின் வேலை மலருக்கும் மலருக்கும் மணமுடிக்கும் வேலை.’ ‘கோழி வளர்த்தால் கோடி பணம்.’ ‘முருங்கை 300 நோய்களைப் போக்கும்’ ‘முருங்கை நட்டவன் வெறுக்கையோடு போவான்’ (அதாவது இறக்கும் வரை கையில் கம்பு இல்லாமல்). எனப் பழமொழிகளை ஒருபுறம் அடுக்கினாலும், மறுபுறம் தவறான செய்திகளைச் சொல்லிவிடக்கூடாது என்றும் நினைக்கிறார். நான்கு பருப்பு சாப்பிட்டால் சர்க்கரை, கொழுப்பு , மூட்டு வலி குறையும் எனப் பாட்டி மருத்துவம் போலச் சொல்லும் இவர், இன்னொரு பக்கம், ‘ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டில் முருங்கையை வளர்த்து வந்தார். வீடுதோறும் முருங்கை மரத்தை வளர்க்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்’ எனச் சொல்லும்போது வியப்பு மேலோங்கியது. நூலகங்களுக்குப் போய் முருங்கைத் தொடர்பான நூல்களைத் தேடித்தேடிப் படித்து இருக்கிறார். அப்போது தான் ஃபிடெல் காஸ்ட்ரோ குறித்தும் அறிந்து இருக்கிறார்.
பொடி, இட்லிப்பொடி, சாம்பார்ப் பொடி, சோப்பு, எண்ணெய், நொச்சித் தைலம், ஷாம்ப்பூ, தேநீர் என வழக்கமான பொருட்கள் மட்டுமல்லாமல், நவீனத்தின் லிப் பாம் செய்கிறார் என்னும் போது எவ்வளவு சிந்திக்கிறார் என்றே தோன்றியது. எப்படி இந்த சிந்தனை தோன்றியது எனக் கேட்கும்போது, தேன் மெழுகு இவரிடம் வாங்க வந்த ஒருவர் இது குறித்து சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அரசி, அது குறித்த தகவல்களை சேகரித்து இருக்கிறார். ‘எந்தப் பொருள் என்றாலும் ஒன்றிரெண்டு நேரம் சொதப்பும். பின் சரியாக வந்து விடும்’ என சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
நிறமூட்டியாக பசலைக்கீரைப் பழங்கள், பீட் ரூட் சாறு, கள்ளிப்பழங்களின் சாறு என அவர் தேர்ந்தெடுக்கும் பொருட்களே மிகவும் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. முதியார் கூந்தல் சேர்த்து முருங்கை எண்ணெய் செய்வது எல்லாம் புதிய முயற்சி தான். முருங்கையை முதன்மைப் பொருளாக வைத்து 36 பொருட்கள் செய்வதாகச் சொல்லும் இவர், ஒவ்வொரு ஆண்டும் பத்து பொருட்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார்.
மக்களின் கருத்துக்களைக் கேட்டுத் தான் தனது பொருட்களைத் திட்டமிடுகிறார் என்னும்போது, வாடிக்கையாளர்களின் திருப்தி தான் தனது திருப்தி என இருப்பது தெரியவருகிறது. தேவையான மூலப்பொருட்களான செடி கொடிகளை அருகில் இருக்கும் பாட்டிகள் பறித்துத் தருவார்கள். அதன்மூலம் அவர்களுக்கும் சிறு வருமானம் கிடைக்கிறது என்கிறார். சமுக வலைத்தளங்கள் மூலம் தான் தனது தொழில் வளருவதாகச் சொல்கிறார். ஏற்றுமதி கூடச் செய்கிறார். நுரைக்காகத்தான் காஸ்டிக் சோடா பயன்படுத்துகிறார்கள். காஸ்டிக் சோடாவும் உப்பு தான் கெமிக்கல் அல்ல. சிலருக்கு ஒத்துவராது. அந்த நுரை பூந்திக்கொட்டை, சீயக்காய், கரும்புச்சாறு, உளுந்து, வெந்தயம் எனப் பல பொருட்களில் வருகிறது. அவற்றைப் பயன்படுத்தலாம் என அவர் சொல்லும் போது ‘ஆமா இல்லே! இது நமக்குத் தோணவே இல்லையே! என்ற வியப்பு மேலோங்கியது.
பாலின் க்ரீமில் இருந்து எடுக்கும் நெய்யை விடத் தயிரை மத்து போட்டுச் சிலுப்பி (கடைந்து) எடுக்கும் நெய்யிற்குச் சுவை கூடுதல், முருங்கை இலை போட்டு நெய் காய்ச்சினால் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் என்கிறார். அதனுடன் இன்னொரு செய்தி சொல்கிறார். உங்கள் பசுவின் நெய்யை விட எருமை நெய் தான் சுவை மிகுந்தது; இப்போது திட்டுவதற்கு மட்டுமே எருமை எனச் சொல்கிறோம். ஒரு சிறு பெண் ‘எருமை என்பதே திட்டுவதற்குப் பயன்படுத்தும் கெட்ட வார்த்தை என நினைத்தேன். நீங்கள் இதை வளர்கிறீர்கள்’ எனக் கூறியிருக்கிறார். ‘அந்த அளவிற்குத்தான் எருமை மக்களை அடைந்து இருக்கிறது’ என்கிறார்.
முன்பு வீடுகளில் நிறைய எருமைகள் இருந்தன. எருமைப்பால், தயிர், நெய் தான் கிராமத்தில் பெருமளவில் பயன்பட்டது; குழந்தைகளுக்கும் எருமைப்பால் தான் கொடுத்தார்கள். நான் எருமை நெய் எனச் சொல்லித்தான் கொடுக்கிறேன். எல்லோரும் மிகவும் சுவையாக இருக்கிறது என சொல்கிறார்கள் என்கிறார். சிந்தித்துப் பார்த்தால் அது உண்மை தான். மாடுகளுக்கு இணையாக எருமைகளையும் நாங்கள் எங்கள் இளமைப் பருவத்தில் பார்த்து இருக்கிறோம். ‘எருமைத் தயிர் போலக் கெட்டியாக’ என உவமை சொல்வார்கள். சிறுவன் எருமைக்கன்று மேலே அமர்ந்து பாடும் “எருமைக் கண்ணுகுட்டி என் எருமைக் கண்ணுக்குட்டி’ என மந்திரிகுமாரி திரைப்படத்தில் பாடலே உண்டு. எருமைப்பாலா என ஒருவர் ஒரு பால்காரரிடம் கேட்க அவர், ‘எருமைப்பாலை எல்லாம் கலப்படம் செய்ய முடியாது; அது பசும்பாலை விட விலை கூடுதல்’ எனச் சொன்னதைக் கூட கேட்டு இருக்கிறேன்.
தனக்குத் தேவை எனக் கார் ஓட்டக் கற்று இருக்கிறார். இணையத் தளத்தைப் பயன்படுத்தக் கற்று இருக்கிறார். முகநூலில் அறுபத்து நான்காயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்; அதன் மூலம் வருமானமும் வருகிறது என்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. நிறைய வாசிக்கிறார். சிறு நூல்கள் மட்டுமல்ல வேள் பாரி போன்ற பெரிய இலக்கியங்களையும் வாங்கிப் படிக்கிறார். வாசிப்புதான் அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அவர் பயன்படுத்தும் சொற்களும், செயல் விளக்கங்களும் அவர் எவ்வளவு வாசித்து அவற்றை உள்வாங்கியிருக்கிறார் என உணர முடிகிறது. ‘காத்துக்கிடப்பதில் இன்பம் உண்டு; காக்கவைப்பதில் சுகமுண்டு என்பது போல கற்றுக் கொள்வதில் இன்பமுண்டு; கற்கவைப்பதில் சுகமுண்டு’ என வாழ்கிறார். இப்படிப் பல வியப்புகளின் மொத்த உருவமாக நான் அரசியைப் பார்க்கிறேன்.
பத்தாம் வகுப்பு படித்த ஒரு எளிய பெண்மணி இன்று MBA மாணவர்களுக்குத் தொழில்முனைவோர் குறித்த வகுப்பு எடுக்கிறார் என்றால், அவர் பெற்ற அனுபவமும் அதை இணைத்த அவரது வாசிப்பும், அதை முன்னெடுத்துச் சென்ற அவரது உழைப்புமே என்றால் அது மிகையாகாது.
என் வயது தோழிகள் பலர், அரசு வேலைக்காக அவ்வளவு முயற்சி செய்தார்கள்; ஊர் ஊராகப் பயணப்பட்டு வேலை செய்தார்கள். பிள்ளைகளைப் பெரிய பெரிய படிப்புகள் படிக்க வைத்தார்கள். இப்போது அவ்வாறுப் படித்த அந்தப் பெண் பிள்ளைகள் வேலைக்குப் போக விரும்பவில்லை. இந்தக் கருத்தை அரசியும் வலியுறுத்துகிறார். வேளாண் கல்லூரியில் படித்துவிட்டு, சொந்த நிலத்தில் கால் வைக்கக் கூட விரும்பாத பிள்ளைகள் இருக்கிறார்கள் என்கிறார். இந்த இளம் பெண்களின் எண்ணம் மாறவேண்டும். ஏதாவது தொழில் செய்ய முனைய வேண்டும்.
‘நிலம் இருப்பதால் வேளாண்மை செய்கிறார்’ என நாம் சொல்லலாம். பாட்டன் பேரன் சொத்தாக இருந்தாலும் பாடுபட்டால் தான் சாப்பிட முடியும். நிலமிருக்கும் அனைவரும் அதைப் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தும் அனைவரும் அரசின் கதவைத் தட்டுவதில்லை; தட்டும் அனைவரும் கிடைக்கும் வாய்ப்பை முறையாகப் பயன்படுத்துவதில்லை; பயன்படுத்தும் அனைவரும் புதுப்புது பொருட்களை உருவாக்குவதில்லை; உருவாக்கும் அனைவரும் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில்லை.
குடும்பம் என்ற எல்லையைத் தாண்டி பத்தாம் வகுப்பு மட்டும் படித்த பெண் இவ்வளவு உழைக்கிறார் என்றால், இவரைப் பார்க்கும் வசதியும் வாய்ப்பும் பெற்று இருக்கும் பெண்கள் எவ்வளவு உழைக்க வேண்டும் என சிந்தித்தால் நல்லது. அரசியின் இந்த உழைப்பை அன்பர்கள், நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவுவார்கள் என நம்புகிறார். நாமும் நம்புவோம்.
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.
பொருளாதார வெற்றி தான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் பெற்று தரும்… அருமை… வாழ்த்துகள்
முழுவதும் வசித்தேன் அருமை