பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும், ஆண் பெண் பேதமின்றி, மேலாடை அணிவது மறுக்கப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்பதன் வரையறை என்ன?
மனுநீதி தர்மத்தின் அடிப்படையில், வர்ணங்கள், 1.பிராமணன், 2.சத்திரியன், 3.வைசியன், 4.சூத்திரன் நான்காகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால், பரசுராமன் சத்திரியர்கள் அனைவரையும் கொன்று விட்டார் என்கிற கதையை நம்பிய திருவிதாங்கூரின் இந்து மதகுருமார்களான நம்பூதிரி பிராமணர்கள், திருவிதாங்கூர் எல்லைக்குள் 1.பிராமணன் 2.சூத்திரன் என்ற இரண்டே வர்ணங்கள் மட்டுமே வாழ்வதாக வகைப்படுத்தினர். இவ்விரு வர்ணங்களைத்தவிர, வர்ணமற்றவர்களாக சித்தரிக்கப்பட்ட மக்கள், அவர்ணர்கள் என்றும், ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டு, அடிமைகளாக வாழக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
பரசுராமன் வகுத்த நீதியில் பிராமணர்களைத் தவிர அனைத்து சாதியினரும் சூத்திரர்கள் மற்றும் அவர்ணர்களே! குறிப்பாக நாயர் சமூகத்தினர் ‘சூத்திரர்’ என்று அழைக்கப்பட்டனர். பெரும்பாலான வரலாற்று ஆவணங்கள் நாயர் சமூகத்தினரை பிராமணர்களுக்கு அடுத்தப் படிநிலையில் இருக்கும் ‘சூத்திர பிரபுத்துவவாதிகள்’ என்று குறிப்பிடுவதைக் காண முடிகின்றது.1*
பின்னாளில் பரசுராமன் சில சத்திரியர்களையும், வியாபாரிகளையும், பிராமண சாதிக்கு கூலியின்றி ஊழியம் செய்ய சில சூத்திர அடிமைகளையும் அழைத்து வந்ததாகப் புனையப்பட்ட கட்டுக்கதைகளின் நீட்சி தொடர்கின்றன. அவ்வாறாக பரசுராமன் வகுத்ததாகக் கூறப்படும் நீதிகளில் ஒன்று, சூத்திர பெண்கள் தங்கள் இடுப்பைச் சுற்றி, 9 முழம் நீளம் கொண்ட துணியை மட்டும் அணியலாம். அத்துணி அவர்களின் இடுப்புக்குக் கீழ் முழங்காலுக்கு மேல் வரையுள்ள உடலை மட்டுமே மறைக்கும். மற்றபடி அவர்கள் வேறு துணி எதுவும் அணியத் தேவையில்லை. பிற பெண்கள் 18 முழம் துணியை சேலை போல் அணிவதோடு, ரவிக்கை என்ற துணியால் தங்கள் மார்பை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.2*
நாளடைவில், மேற்சொன்ன பரசுராமனின் விதிகள் மருவி, ஆட்சி மற்றும் அதிகாரங்களில் நிலைகொண்ட சில சாதியினரையும், செல்வச் செழிப்பில் உயர்ந்து நின்ற சில சாதியினரையும் தவிர, மற்ற சாதியினர் அனைவரும், அவர்ணர்கள் என்ற பெயருடன் திருவிதாங்கூர் சமுதாயத்தின் கடைநிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
எடுத்துக்காட்டாக 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சாணார் சாதி பல வகை உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் ஒரு சாதியே ‘நாடார்’ என்பது!
‘நாடார்களுக்கும் சாணார்களுக்கும் இடையில் எத்தகைய வேறுபாடும் இருப்பதாகக் கூறுவதற்கில்லை. பிராமணர்கள் தங்களை ஐயர், அய்யங்கார், ராவ் என்ற பட்டப்பெயருக்கு உரியவர்களாகக் கூறிக் கொள்வதைப் போலச் சாணார் சாதியினைச் சார்ந்த சில குடும்பத்தவர்களும், தங்களை நாடார் என்ற பட்டப்பெயர்களுக்கு உரியவர்களாகக் கூறிக் கொள்கின்றனர். நாடார்கள் அனைவரும் சாணார் சாதியாரே’ என்கிற எட்கர் தர்ஸ்டனின் தகவல், 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ‘நாடார்’ என்பது ‘சாணார்’ சாதியின் உட்பிரிவாக இருந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.3*
(சாணார் என்ற சொல் சிலரால் இழிசொல்லாகப் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக சாணார் சாதி(அனைத்து உட்பிரிவு சாதிகளும்) மக்கள் தங்களை ‘நாடார்’ என்று சட்டப்பூர்வமாகப் பதிந்து கொண்ட வரலாற்றின் அரசியலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டியதே)
சாணார்(நாடார்) சாதி உட்பிரிவுகளில் உயர்வாகக் கருதப்பட்ட உட்பிரிவு சாதியினர் ‘நாடான்கள்’ அல்லது ‘நிலவுடைமை நாடார்கள்’ ஆவர். இத்தகைய உயர்ந்த நாடார் குடும்பங்களைச் சேர்ந்த பெண்மணிகள் நாயர் சாதியினரின் எதிர்ப்பின்றி எப்போதும் மேலாடைகளை அணிந்து கொண்டனர்.4*
அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த நாடார் குடும்பங்களில் ஒன்று மகாராஜாவுக்குக் கீழ் சிறப்பு சலுகைகளை பெற்று வந்தது. தோள் சீலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது மேற்சொன்ன நாடார் குடும்பம், ‘நாடார்’ என்னும் முறையில் தங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் மார்பை மறைக்கும் ஆடைகள் அணிய உரிமை உண்டு என்று அறிவித்தது.5*
அவ்வறிவிப்பினை ஆதிக்கசாதிகள் எதிர்க்கவில்லை.
ஆக, மேற்சொன்ன செய்தியின் மூலம் இரண்டு விஷயங்கள் உறுதியாகின்றன.
- ‘சாணார்’ என்ற பெயர் இந்தியச் சட்டப்பதிவேடுகளில் இருந்து அழிக்கப்படும் வரையில் ‘நாடார்(ன்)’ என்று அழைக்கப்பட்ட சாதியினர், அரச குடும்பத்தின் நம்பிக்கை, மற்றும் சலுகைகளைப் பெற்றிருந்த சாதியினராகவே இருந்துள்ளனர்.
- ‘சாணார்’ என்றழைக்கப்பட்ட சாதியினர் அரச குடும்பங்களுக்கும், மற்றும் நாடார்(ன்) குடும்பங்களுக்கும் கீழ்ப்படிநிலையில் அவர்ணர் என்ற பெயரால் தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்துள்ளனர்.
ஆக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராம ராஜ்ஜியம், 18,19ஆம் நூற்றாண்டுகளில், மற்ற அவர்ண சாதிகளுக்கு மார்பை மறைக்கும் உரிமையை மறுத்தது போல், ‘சாணார்’ என்றழைக்கப்பட்ட ‘நாடார்’ சாதியில் பிறந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் மார்பை மறைக்கும் உரிமையை மறுத்தது. நாடான்கள் என்றழைக்கப்பட்ட நாடார் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மார்பை மறைக்கும் உரிமையை மறுக்கவில்லை என்பது புலப்படுகின்றது.
அதே போலவே, இன்றைய நாள்களில் தங்களை உயர் வகுப்பினராகக் கருதிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு நாடார் சாதியின் உட்பிரிவு ‘பூணூல் நாடார்’ என்று தங்களை சொல்லிக் கொள்ளும் சாதி உட்பிரிவினர். இவ்வுட்பிரிவினரைப் பற்றி நான் அறியவும் ஆராயவும் காரணமாக இருந்தவர் திரைப்பட சண்டை இயக்குனர் கனல்கண்ணன் அவர்கள்.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைப்படச் சண்டை இயக்குனர் கனல்கண்ணன், பெரியார் சிலையின் மீது வன்முறை வன்மத்தினைக் கொட்டிய சர்ச்சைப் பேச்சினை நம்மில் பலரும் அறிவோம். அப்போது அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திராவிடக் கழக தோழர்கள் சிலரின் பேட்டிக் காணொலிகளிலிருந்து கனல்கண்ணன் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதையும், அவர் பூணூல் அணியும் வழக்கம் உடையவர் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.
அப்போது கனல்கண்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள், நாடார் சமுதாயத்தினர் மார்பை மறைக்கும் உரிமைக்காக போராடியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்று சுட்டிக் காட்டியிருந்தார்கள். கனல்கண்ணன் எந்த சமுதாயத்தின் எந்த உட்பிரிவு என்பது தேவையில்லாதது, மேலும் அது பற்றி விவரம் சேகரிக்க நான் விரும்பவில்லை.
நான் குறிப்பிட நினைப்பது ஒன்றே ஒன்றுதான்! நாடார்(சாணார்) சாதியில் பூணூல் அணியும் வழக்கம் உடையவர்களை, பூணூல் நாடார் என்று அழைப்பார்கள். சிவகாசியில் பூணூல் அணிந்த நாடார் சாதி மக்கள் வாழ்வதாக பெண்ணொருத்தி சொல்லிக் கேட்டிருக்கிறேன். அச்சாதியினர் ‘பூணூல் நாடார் சாதி’ உட்பிரிவினரைத் தவிரப் பிற சாதியினருடன் திருமண உறவு கொள்வதில்லை. பிற நாடார் சாதியின் உட்பிரிவு மக்களுடன் கூட திருமண உறவு கொள்வதில்லை.6*
அத்தகைய ‘பூணூல் நாடார்கள்’ மார்பை மறைக்கும் உரிமையை பெற்றிருந்தார்களா? இல்லையா? என்பதை ஆராயும்போது, எட்கர் தர்ஸ்டனின் பின்வரும் வரிகள் அதிர்ச்சி தருபவையாக இருந்தன.
‘1858 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாணார் சாதியினர் தங்களைச் சத்திரியர் என உரிமை கொண்டாடித் துண்டுப் பிரச்சாரம் வெளியிட்டனர். 1874-இல் இவர்கள் மதுரையில் உள்ள மீனாட்சி கோயிலினுள் புகுவதற்குத் தங்களுக்கு உரிமையுண்டு எனக்கூறி அக்கோயிலினுள் புக மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டனர் . அப்போதிருந்து இவர்கள் தங்களுக்குப் பூணூல் அணிய உரிமை வேண்டுமென்றும் கேட்டதோடு திருமணங்களின் போது பல்லக்கில் ஊர்வலமாகச் செல்லவும் முற்பட்டனர். தங்களைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மரபில் வந்தவர்கள் எனக் கூறிக் கொண்ட இவர்கள் ஆவணப் பதிவுகளில் சத்திரியர் எனச் சிறப்பித்துக் கூறிக் கொண்டதோடு, இவர் நடத்தும் பள்ளிகளுக்கு சத்திரியர் நிலையங்கள் எனவும் பெயரிட முற்பட்டனர். பிராமணர்களுள் தாழ்ந்த பிரிவினரைத் தங்களுக்குப் புரோகிதம் செய்ய அமர்த்திக் கொண்டதோடு, தங்களை அரச குலத்தவர் எனச் சிறப்பிக்கும் செய்யுள்களையும் செய்வித்து வெளிப்படுத்திய இவர்கள், ஏனோதானோவென்று பூணூல் அணிந்து கொள்ளும் சடங்குகளை நிகழ்த்தியவர்களாகப் கோத்திரங்களைப் பற்றியும் அறியாமை நிரம்பிய வகையில் அதிகம் பேசினர் . இவர்களிடம் பணம் தேவை என வருபவர்களைத் திருவிழாச் சமயங்களில் பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்ல உடன்படுவதாக எழுதி ஒப்பமும் இடச் செய்தனர்’ என்று குறிப்பிடுகிறார் எட்கர் தர்ஸ்டன்.7*
அதன் நீட்சியை இன்றும் நாம் காணலாம்.
‘1890 ஆம் ஆண்டு சிவகாசியில் வாழ்ந்து வந்த நாடார்கள், தங்களை சமஸ்கிருத மயமாக்கிக் கொண்டிருந்ததால், வேளாளர் மற்றும் மறவர் சாதியினருக்கு நாடார் சாதியினர் மீது பகையுணர்வு உருவானது. 1898ஆம் ஆண்டு சிவகாசி நாடார்களின் தலைவராகிய பீ. செண்பகக்குட்டி, பூணூல் பயன்படுத்தும்படி நாடார்குல மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சிவகாசி கலவரத்துக்குப் பிறகுதான் நாடார் மக்கள் பூணூல் அணிவது சம்பிரதாயமாக வந்தது’ என்று இராபர்ட் எல்.ஹார்டுகிரேவ் கூறுகிறார்.8*
எனவே, தோள் சீலைக் கலகம், மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராட்டம், சிவகாசி கொள்ளை போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகே, சாணார் சாதியினராக இருந்த இவர்கள் பூணூல் அணியும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர் என்பதை எட்கர் தர்ஸ்டன், ஹார்டுகிரேவ் போன்றோரின் தகவல்கள் வாயிலாக அறியலாம்.
ஆக, வரலாற்றின் முந்தைய பக்கங்களில், ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக இருந்து சலுகைகளை அனுபவித்து வந்த நாடார்(சாணார்) சாதியின் உட்பிரிவினர் சிலரும், ‘பூணூல் அணிதல்’ முதலான சமஸ்கிருத சம்பிரதாயங்கள் மூலமாக உயர்சாதியாகி விட முடியும் என்ற தவறான புரிதல் கொண்டு, தங்களை ஆதிக்கசாதியினர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் உட்பிரிவினர் சிலரும், இன்று ஆதிக்க இந்துத்துவ சக்தியின் பாசிசக் கொள்கைகளுக்கு பல்லக்குத் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனது கருத்து. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கீழ்க்காணும் காணொளி காட்சி.
அது புரியாத இன்றைய நாடார் சாதி இளைஞர்கள், இந்து மதப்பற்று என்னும் போர்வைக்குள் தங்களையும் அறியாமல் மதவெறியர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற துல்லியமான ஆய்வுகளின் மூலமாகவும், வரலாற்று வாசிப்புத் தேடல்களின் மூலமாகவும் எந்தெந்த சாதியின் எந்தெந்த உட்பிரிவு மக்களுக்கெல்லாம் மார்பை மறைக்கும் உரிமை மறுக்கப்பட்டது என்பதை வாசகர்கள் அறியலாம்.
(மேற்சொன்னபடி பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில், நாடான்கள் என்ற பிரிவினரிடம் இருந்து சாணார்(நாடார்) என்ற பிரிவை பிரித்துக் காட்ட வேண்டிய தேவையிருந்த காரணத்தால் ‘சாணார்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. மற்றபடி அச்சொல்லை பயன்படுத்துவதில் எனக்கோ, பதிப்பாசிரியருக்கோ எள்ளளவும் உடன்பாடில்லை.)
மேலாடை அணிய மறுக்கப்பட்ட சாதிகளில் என் சாதி இல்லை, உன் சாதி இல்லை, அவன் சாதிதான் உண்டு என்று அசிங்கமாக வாதிடும் இன்றைய இளைஞர்களிடம் கேட்க சில கேள்விகள் உண்டு. உங்கள் சாதிப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்தால் மட்டும்தான் திருவிதாங்கூரின் ராம ராஜ்ஜியத்தை எதிர்த்து கேள்வி கேட்பீர்களா? மாற்று சாதி பெண்கள் மார்பை மறைத்துக் கொள்ள வரி விதிப்பதை சரிதான் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? அதுதான் உங்கள் தர்மமா?
அய்யாவழி அறிவோம் என்ற தலைப்புக்கும் இக்கட்டுரைக்கும் என்ன சம்மந்தம் என்று வாசகர்கள் சிந்திக்கக்கூடும். அய்யா வைகுண்டர் எப்போது எதற்காக எப்படி சமூகப் போராளியாக உருவெடுத்தார் என்பதை சொல்ல இக்கட்டுரையின் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்று கருதுகிறேன். அத்துடன் இன்றைய இளைஞர்களின் தவறான புரிதல்கள் மறைந்து தெளிவு உருவாகவும் இக்கட்டுரையின் தகவல்களை அறிய வேண்டியது அவசியமாகும்.
ரிங்கல்தோபே, சார்லஸ் மீட் போன்றோரைத் தொடர்ந்து அய்யா வைகுண்டரின் போராட்டம் அடுத்தக் கட்டுரையில் தொடரும்…
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.
தரவுகள்:
- THE TRAVANCORE STATE MANUAL, V.NAGAM AIYA, VOL II, 1906. பக்கம் எண் : 345. & THE TRAVANCORE STATE MANUAL, V.NAGAM AIYA, VOL–1, FIRST PUBLISHED 1906, பக்கம் எண்: 215.
- THE TRAVANCORE STATE MANUAL, V.NAGAM AIYA, VOL–1, FIRST PUBLISHED 1906, பக்கம் எண்: 213 முதல் 216 வரை.
- ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ தொகுதி 6, ஆங்கில மூலம் : எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: முனைவர் க.ரத்னம், முதற்பதிப்பு: 2003, பக்கம் எண் : 413.
- ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’ இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, பக்கம் எண்: 82
- ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’ இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, பக்கம் எண்: 83.
- அய்யா வழி மரபை பின்பற்றும் பெண் ஒருவரின் பேட்டி.
- ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ தொகுதி 6, ஆங்கில மூலம் : எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: முனைவர் க.ரத்னம், முதற்பதிப்பு: 2003, பக்கம் எண் : 408.
- தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு, இராபர்ட் எல்.ஹார்டுகிரேவ்,தமிழாக்கம் எஸ்.டி.ஜெயபாண்டியன், முதல் பதிப்பு: 2019, பக்கம் எண் : 144.