ஹாய் தோழமைகளே,

சுய நேசிப்பை பற்றிப் பேசத் தொடங்கினோம். நீங்களே உங்களை நேசியுங்கள் என்று சொல்வது மிக எளிது. ஆனால் எங்கே இருந்து தொடங்குவது? காதலிக்கும் ஒருவரிடம் அவர் அழகைப் புகழ்வதோ, திறமையைப் பாராட்டுவதோ, உங்கள் காதலை வெளிப்படுத்துவதோ எளிதில் செய்யலாம். காதல் கொண்ட மனதின் பார்வை போதும் அன்பை, ரசனையை வெளிப்படுத்த. ஆனால் எனக்கு நானே அதை எப்படிச் செய்வேன் என்று குழம்ப வேண்டாம். நிச்சயம் செய்யலாம். என்ன இது நம் இயல்பில் பழகாததால் ஆரம்பத்தில் சிறிது சிரமமும், தடுமாற்றமும் ஏன் கூச்சமும்கூட இருக்கும். நாம் செய்வதை வெளிப்படையாக ஆரம்பத்தில் செய்ய முடியாது. மற்றவர்கள் நம்மைக் கொஞ்சம் கவலையோடு பார்க்கவும் வாய்ப்புள்ளது.

காதலே பைத்தியக்காரத்தனம்தான், சுய காதல் மட்டும் என்ன? ஆனால் இந்தப் பைத்தியம் நம்மை உள்ளிருந்து மலர வைக்கும், தன்னம்பிக்கையோடு தலை நிமிர வைக்கும், எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற தைரியம் கொடுக்கும். பிறகு வேற என்ன வேண்டும்?  நாம் பேசும் அத்தனை பயிற்சியையும் தனியாக இருக்கும்போது செய்வது நலம். மற்றவர்களின் கேலி நம்மைப் பாதிக்காது.  ரகசியமான காதலை ரகசியமாகவே செய்வோம்.

முதல் பயிற்சி, நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை, அது காதல், இணையர், மகன் / மகள் / பெற்றோர் / தோழர் யாராக இருந்தாலும் அவரைப் பார்க்கும்போது உங்கள் பார்வை எத்தகைய அன்பைச் சொரியும், கற்பனை செய்து பாருங்கள். அதற்கு எந்த ஒத்திகையும் தேவையில்லை. எந்த முன்னேற்பாடும் வேண்டாம். பார்த்த கணத்தில் மனதில் மகிழ்ச்சியும் முகத்தில் மலர்ச்சியும் வரும். நீண்ட காலம் கழித்து சந்தித்தால் அவர்களை இன்னும் ரசனையோடு கண்ணில் நிறைத்து நெஞ்சில் நிறுத்திக்கொள்வோம். ஆனால், இதெல்லாம் தன் உணர்வின்றி ஓர் அனிச்சை செயலாகச் செய்வோம். அதையே நமக்கு நாம் முழு உணர்வோடு, காதலோடு செய்யப்போகிறோம்.

முதல் தேவை ஒரு கண்ணாடி. அது சிறிதோ பெரிதோ பிரச்னை இல்லை. ஆனால் நீங்கள் உங்களைப் பார்க்கிறீர்கள் என்கிற உணர்வு உங்களுக்கு வர வேண்டும்.

நிறைய பெண்கள் நான் கண்ணாடியை நின்று பார்த்தே பல வருடம் ஆகிறது, அவசரத்திற்குப் பொட்டு வைக்க சில மைக்ரோ விநாடிகள்தான் கண்ணாடி முன் நிற்போம் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

இது நமக்கு நாமே செய்யும் மிகப்பெரிய வன்முறை. முதலில் நிதானமாக ஓர் இரண்டு, மூன்று நிமிடத்திற்காகவாவது உங்களை ஊன்றி கவனிக்கப் பழகுங்கள். உங்களைப் பார்த்துப் புன்னகை செய்யுங்கள். கண்ணாடியில் தெரியும் உருவத்திடம்,             “நீ எப்படி இருந்தாலும், என்ன தவறு செய்திருந்தாலும் எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உனக்காக எப்போதும் நானிருக்கிறேன்“ என்று மனதாரக் கூறுங்கள். வைரத்திற்கே பட்டைத் தீட்டுவது அவசியம் எனும்போது நமக்கு வேண்டாமா ?

உங்களைக் கவனிக்க கவனிக்க என்ன என்ன மாற்றங்கள் தேவை, எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது புரியும்.

இது வெறும் புற அழகு சம்பந்தப் பட்டதில்லை. சில நேரம் நாம் மிகவும் சோர்வாகத் தெரிவோம், உடல் நிலை எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவாக ஒரு நோயாளியைப் போன்ற தோற்றம் தெரியலாம், எந்தக் கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கத்தால் முகத்தில், உடலில் வந்த மாற்றங்கள் தெரியலாம், உடற்பயிற்சியின் தேவையைக் கண்ணாடி சொல்லலாம். இதெல்லாம் நாம் நம்மைக் கவனித்தால் மட்டுமே புரியும். இதற்காக நீங்கள் மணிக்கணக்கில் கண்ணாடி முன்பு தவமிருக்க வேண்டாம். காலையிலோ மாலையிலோ சில நிமிடங்கள் செலவழிக்கலாம். அது செலவில்லை, உங்களில் நீங்கள் செய்யும் முதலீடு.

ஏன் மாற்றம் வேண்டும், எதை மாற்ற வேண்டும் என்பது புரியும்போது, என்ன செய்ய வேண்டுமென்பது நமக்கே புலப்படும்.

அது உடல் நலத்தில் கூடுதல் அக்கறை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அடிக்கடி முகத்தைப் பளிச்சென்று கழுவி ஒரு ஃப்ரெஷ் தோற்றத்தை கொண்டு வருவதோ, எப்போதும் தூக்கி மேலே கொண்டை போட்டுக் கொண்டிருக்காமல் சிறிது நேரம் செலவழித்து தலை வாருவதோ, நமக்கெதுக்குப் புதுசா என்கிற எண்ணத்தில் எப்போதோ ரிடையர் ஆகி இருக்க வேண்டிய உடைகளையே உபயோகப்படுத்துவதோ எதுவாக இருப்பினும் தேவைப்படும் மாற்றத்தை கொண்டு வர உங்களுக்கு ஓர் உந்து சக்தி வரும். சிறிது சிறிதாக வேண்டிய மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.

மற்றவர்கள் பார்வையில் படுகிறதோ இல்லையோ, நீங்கள் பாருங்கள், மாற்றங்களை ரசியுங்கள்.

உங்களைக் கொண்டாடுங்கள்.

 (தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ’உன்னை அறிந்தால்…’ ‘உணர்வு சூழ் உலகம்’ ஆகிய தொடர்கள், ஹெர் ஸ்டோரிஸில் புத்தகங்களாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளன.