பகல் பதினோரு மணி…
சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு நியாயவிலைக் கடை அது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதுவும் பெண்கள் வரிசை பெரிதும் நீண்டிருந்தது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அங்கே வந்து நின்றாள் கனகா. முன்னால் நீண்டிருந்த வரிசையைப் பார்க்க, வயிறு கலங்கியது. இவளுடைய முறை வரக் குறைந்தது முக்கால் மணி நேரமாவது ஆகிவிடும்.
‘எல்லாப் பொருள்களும் இருக்கிறதோ இல்லையோ?’ அறிந்துகொள்ளும் உந்துதல் உண்டானது.
அதற்கேற்றாற்போல, அவளுக்குத் தெரிந்த அக்கா ஒருவர் கையில் பைகளைச் சுமந்தபடி பொருள்களை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார்.
“காமாச்சி..க்கா” என வரிசையில் நின்றபடியே குரல் கொடுத்தாள்.
முகம் மலர அவளை நெருங்கி வந்து, “எப்புடி இருக்க கனகா! இப்ப எத்தினியாவது மாசம்” என விசாரித்தார் அந்த அக்கா.
“ஆறு முடிஞ்சு ஏழாம் மாசங்..கா”
“ஏண்டீ, ஆறு மாசம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்ற, வவுறு தெரியவே இல்ல. நீ வேற இம்மா மெலிஞ்சி போயி கெடக்கற. சத்தா சோறாக்கி துன்றியா இல்லியா”
“அட போக்கா… கட்டட வேலைக்கிப் போயிகினே, நேரத்துக்கு ஆக்கி துன்னவா முடியுது? இதுல மொத புள்ளிய வேற பாக்கணுமே!”
“அதுக்கே இன்னும் மூணு வயசுகூட ஆவல. அதுக்குள்ள இன்னும் ஒண்ணு தேவையாடீ? இந்த நேரத்துலகூட உன்ன ஒக்கார வெச்சி சோறு போட துப்பில்லயா உன் வூட்டுக்காரன் பேமானிக்கு?”
“என்ன இன்னாக்கா செய்யச் சொல்ற?”
“தெனம் மூக்கு முட்ட குடிச்சிட்டு வூட்டுக்கு வந்து உன்ன அடிச்சி சாவடிக்கிறான். அவன தொடப்பகட்டையால நாலு போட்டு வெளிய தொரத்தாம, இப்ப வந்து என்கிட்ட இந்த கேள்விய கேளு.”
“எங்க இருந்து..க்கா, அந்தாள வுட்டாலும் எனக்கு வேற கெதி இல்லயே”
“க்கும்… ஏன் தொர ரேஷன் கடைக்கெல்லாம் வராதாமா? தண்ட சோர துன்னுட்டு வூட்டுல குந்திகினு இன்னாத்த வெட்டி முறிக்குது?”
“நீ வேறக்கா… சாமான் வாங்க வெச்சிக்கற துட்ட கூட குடிச்சி காலி பண்ணிட்டு, என்கியானா மட்டயாயி என் உசுர எடுக்கும். அத நம்பி துட்ட தர சொல்றியா? மொத வாரமா இருக்கே, எல்லா சாமானும் இருகுங்காட்டியுன்னுதான் இன்னிக்கி வேலைக்குக்கூடப் போவாம இங்க வந்தேன். அது சரி, எல்லா சாமானும் இருக்குதா?”
“அரிசி, பருப்பு, பாமாயிலு எல்லாமே இருக்குது, கனகா. தோ பாரு, தோரம்பருப்பு இன்னாமா மணி மணியாக்குதுன்னு”
‘அப்பாடா, இந்த மாசம் முழுக்க, நிம்மதியா புள்ளைக்கும் ஆக்கிப்போட்டு நாமளும் துன்னலாம்’ என மனதில் ஒரு நிம்மதி பரவ, அந்தப் பருப்பைப் பார்த்துவிட்டு, “மெய்யாலுமே நல்லாக்குது..க்கா” என்றாள் கனகா.
அதற்குள் காமாட்சி அக்காவின் கணவர் வாகனத்துடன் வந்து நிற்க, “மாமா வந்துடுச்சு. நான் கிளம்பறேன். நீ ஒடம்ப பாத்துக்க. ஆஸ்பத்திரில கொடுக்கற சத்து மாத்தரைய உடாம சாப்புடு” என அக்கறையாகச் சொல்லிவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து அகன்றார் காமாட்சி.
கால் கடுத்து வலிக்க, அரை மணி நேரத்துக்கு மேல் வரிசையில் நின்றாள். நேரம் செல்லச் செல்ல உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. வியர்த்து வடிந்து அணிந்திருந்த அவளது ரவிக்கை தெப்பமாக நனைந்திருந்தது, ஏதோ மழையில் நனைந்தது போல உச்சிமுடி மொத்தமும் ஈரமாகிவிட்டது. புடவைத் தலைப்பால் கழுத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, தலையையும் துவட்டிக் கொண்டாள்.
அவளுக்கு முன் இரண்டே பேர் என்கிற நிலையில், கைரேகை வைக்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும், மற்ற எல்லோரையும் மறுநாள் வரும்படியும் சொல்லிவிட்டார் அங்கே பணியில் இருந்தவர்.
அவளுக்குப் பின்னால் மேலும் பலர் நின்றிருக்க, மக்களிடம் சலசலப்பு உண்டானது. ஆனாலும் யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. புலம்பியபடியே எல்லோரும் கலைந்து சென்றனர்.
அடுத்த நாள் வந்தாலும், இன்று போல எல்லாம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வரவேண்டியதாக இருக்கும். அப்படியெல்லாம் அவளால் அலைய இயலாது.
மறுநாளும் வேலைக்குப் போகவில்லை என்றால் மேஸ்திரி கண்டபடி ஏசுவார். அதுவுமில்லாமல், பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லாமல் போய், மருத்துவச் செலவுக்காக வாங்கிய முன்பணத்தை வேறு வாரக் கூலியில் பிடித்துக்கொள்வார்கள். மீதமென்று பெரிதாக ஒன்றும் தேறாது.
அவளது நாத்தனாரின் பிள்ளைகளுக்கு மொட்டையடித்து காது குத்தும் சடங்கு வேறு வைத்திருக்கிறார்கள். அதற்கு மொய் செய்ய வேண்டும். போக வரச் செலவு வேறு. அடுத்த மாதம் வரும், அரசு தரும் ஆயிரம் ரூபாயும் அதற்கே போய்விடும். இந்தப் பாவியுடன் ஏதும் சண்டை சச்சரவு என்றால், அவளும் அவளுடைய கணவனும்தான் இவனை அடக்கி வைப்பார்கள். எனவே விட்டுக் கொடுக்க இயலாது.
நான்கையும் நினைக்க நினைக்க, நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. அங்கே ஓரமாகப் போடப்பட்டிருந்த மேடையில் போய் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அங்கிருந்து கிளம்பினாள்.
வெளியில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்த மிதிவண்டியின் முன்புறக் கூடைக்குள் கையில் வைத்திருந்த காலிப் பைகளைத் திணித்துவிட்டு, கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரண்டைக் கடந்திருந்தது.
பளு தூக்க இயலாது என்பதால் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்திருந்தாள். எனவே அதை உருட்டியபடி நடக்கத் தொடங்கினாள். சாதாரணமாக இருந்தால் அரைமணியில் வீட்டுக்குப் போய்விடலாம். வயிற்றுச் சுமையுடன் வேகமாக நடக்க இயலவில்லை. தாகத்தில் தொண்டை வறண்டு போனது.
பள்ளிப் பேருந்துகள் வந்து போய்க்கொண்டிருக்க, அந்த வீதி பரபரப்பாக இருந்தது. மேலும், அங்கே பெரும்பாலும் எல்லாமே தனி வீடுகளாக இருந்தன. தண்ணீர் வேண்டும் என்று யாரிடமாவது கேட்கக்கூட எந்த வழிவகையும் இல்லை. யார் வீட்டுக் கதவையும் தட்டி தண்ணீர் கேட்கவும் அவளுக்கு அதீதத் தயக்கமாக இருந்தது.
மெதுவாக நடந்துகொண்டிருந்தாள். நிமிடங்கள் செல்லச் செல்ல நீர்க்கடுப்பு வேறு உண்டாகிப் போனது.
அங்கே ஒரு மளிகைக் கடை இருக்கவும், தயக்கம் துறந்து அங்கிருந்தவரிடம், “அண்ண, குடிக்க கொஞ்சம் தண்ணி இருந்தா குடு” எனக்கேட்டாள்.
அந்தக் கடைக்காரரோ, விற்பனைக்காக வைத்திருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்து நீட்டினார்.
“இந்த தண்ணி வேணாம்…ண்ணே. நீ குடிக்க வெச்சிருப்பல்ல, அதுல கொஞ்சம் குடு” என்றாள், வெட்கத்தை விட்டு.
“வெயில் கொஞ்சம் ஜாஸ்தி இல்ல, நான் எடுத்துட்டு வந்த தண்ணி காலி ஆயிடுச்சு” என்று சொல்லிவிட்டார்.
“சரிண்ணே, பரவால்ல” என்று, களைப்புடன் தன் நடையைத் தொடர்ந்தாள். சில அடிகள்கூட நடக்க இயலவில்லை. வயிற்றை இழுத்துப் பிடித்து வலிக்கத் தொடங்கியது.
மிதிவண்டியை ஓர் ஓரமாக நிறுத்திப் பூட்டிவிட்டு, ஒரு கட்டடத்தின் வாயிலில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சரிவில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
“யம்மா… யம்மா… இங்கல்லாம் உக்காராத” என அதட்டியபடியே அவளை நோக்கி ஓடி வந்தார் அங்கே பணியிலிருந்த காவலாளி.
அதில் பதறி, கையை ஊன்றி அவள் எழுந்து நிற்க, அவளைப் பார்த்ததும் அந்த முதியவரின் முகம் கனிந்தது.
“ஐயோ… புள்ளதாச்சி பொண்ணா இருக்கியேம்மா, என்ன தப்பா நினைக்காத. அவன்னவன் டூ வீலர வேகமா ஓட்டிட்டு வருவானுங்க. ரெண்டு நாள் முன்னகூட இங்க படுத்திருந்த நாய் மேல ஒருத்தன் வண்டிய விட்டுட்டான்” எனத் தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு, “வாம்மா உள்ள வந்து உக்காரு” எனப் பரிவுடன் அழைத்தார்.
அவர் இவ்வளவு கரிசனையுடன் பேசவும், “குடிக்கக் கொஞ்சம் தண்ணி கெடைக்குமா?” எனத் தயங்கியபடி கேட்டாள்.
“வா கண்ணு, தரேன்” என்றபடி, உள்ளே சென்றார்.
அவரைப் பின்தொடர்ந்து போக, ஒரு நாற்காலியை அவள் வசதியாக அமர ஏதுவாக இழுத்துப் போட்டார். அவளுடைய அசதி, மறுக்காமல் அவளை அமர வைத்தது.
அங்கிருந்த ஒரு நெகிழியாலான தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினார். இருந்த தாகத்துக்கு, மடமடவென ஒரே மூச்சில் தண்ணீரைப் பருகினாள்.
வெயிலில் சூடேறியிருந்தாலும் அந்தத் தண்ணீர் அவளுடைய தாகத்தைத் தணிக்கவே செய்தது. கொஞ்சம் புத்துணர்ச்சியும் உண்டானது. ஆனாலும், உடனே எழுந்து செல்ல உடல் ஒத்துழைக்கவில்லை, அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
அப்பொழுது, நாற்பது வயது மதிக்கத் தக்க ஆள் ஒருவர், -அவரை நோக்கி வரவும், “எதுக்குடா வேல செய்யற எடத்துக்கெல்லாம் வந்து என் மானத்த வாங்கற” எனப் படபடத்தார் அந்தப் பெரியவர். நெஞ்சில் பயம் படர, எழுந்து சற்றுத் தள்ளிப் போய் நின்றாள்.
“எனக்கு அவசரமா பணம் வேணும்” என்றான் அவன் அதிகாரத் தோரணையில்.
“எங்கிட்ட பணமெல்லாம் இல்ல” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “இந்தக் கதையெல்லாம் எங்கிட்ட வுடாத” என்றபடி தாவி அவரது சட்டைப் பையில் வைத்திருந்த பணத்தைக் கொத்தாக எடுத்துக் கொண்டான்.
“அடேய் பாவி, இது உங்கம்மாவ டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக கடன் வாங்கி வெச்சிருக்கேன்டா, குடுடா” என அவனது கையிலிருந்து பிடுங்க முயன்றார். அவரை இழுத்துத் தள்ளிவிட்டு, அங்கிருந்து வேகமாகச் சென்று மறைந்தான் அவன்.
ஓடிவந்து கை தாங்கலாகப் பிடித்து அவரை அமரவைத்தாள் கனகா.
அந்த அந்நியப் பெண்ணின் எதிரில் மானக் கேடாகிப்போனது அவருக்கு. “படுபாவி, கஞ்சா குடிக்கி. இவன பெத்துட்டு நாங்க படுற அவதி இருக்கே! இவனெல்லாம் பூமிக்குப் பாரம். குடும்பம் குட்டிய காப்பாத்த வேண்டிய நல்லவனெல்லாம், கொரோனாவுலயும் அதுலயும் இதுலயும் பொட்டு பொட்டுன்னு போறான். இவனுக்கு ஒரு கேடு வர மாட்டேங்குது” என அழுகையை அடக்கி, தொண்டை அடைக்கச் சொல்லிக்கொண்டே போனார் பெரியவர்.
என்ன பேசுவதென்றே புரியவில்லை கனகாவுக்கு. அந்த பாட்டிலில் மீதமிருந்த தண்ணீரை அவரிடம் கொடுத்துப் பருக வைத்துவிட்டு, ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து வெளியில் வந்து மிதிவண்டியை உருட்டியபடி நடக்கத் தொடங்கினாள்.
தாள்களும் நாணயங்களுமாக பர்சில் அடைத்து ரவிக்கைக்குள் சொருகியிருந்த இருநூற்றுச் சொச்சம் பணம் பாரமாக நெஞ்சை அழுத்தியது.
தனது தாகத்தைத் தணித்த அந்த நல்ல மனிதருக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று தோன்றினாலும், அவளது கை நீளாமல் போனது.
ஆறுதலாக எதையாவது சொல்ல நினைத்தாலும் வார்த்தைகள் வெளிவராமல் தொண்டை அடைத்துக் கொண்டது.
கண்களிலிருந்து கனலாகக் கனன்ற நீர் சூடாக அவளது கன்னத்தில் உருண்டது.
கையில் பிடித்திருந்த மிதிவண்டியின் சக்கரங்கள் மட்டும் உருண்டவண்ணம் இருந்தன.
படைப்பாளர்

கிருஷ்ணப்ரியா நாராயண்
தமிழ் நாவலாசிரியர். சென்னையைச் சேர்ந்தவர். புத்தகங்கள் வாசிப்பில் அதிக ஆர்வம் உண்டு. இவரது 10 நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இளம் வாசகர்களுக்கு ஹெர் ஸ்டோரிஸ் விங்ஸில் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.