ஹாய் தோழமைகளே, நலம். நலம்தானே?
போன அத்தியாயத்தில் சுய நேசத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். அப்போதிலிருந்து என் நினைவில் சுழல்வது விமலா ஆண்ட்டிதான். தினமும் மாலை ஐந்து மணி அளவில் எங்கள் குடியிருப்பில் உள்ள பெண்கள் அவரவர் வயதிற்குத் தகுந்த தோழிகளோடு அங்கே உள்ள பொது பூங்காவில் கூடுவார்கள். முடிந்தவர்கள் நடைப்பயிற்சி, இறகுப் பந்து போன்ற விளையாட்டுகளிலும், சீனியர் சிட்டிசன்கள் குடியிருப்பில் உள்ள கோயில்களிலும், பார்க்கில் உள்ள பெஞ்சில் அமர்ந்து கதை பேசியும் பொழுதுபோக்குவார்கள்.
ஊரை விட்டு மிகத் தள்ளி உள்ள எங்கள் குடியிருப்பில் கேளிக்கைகளுக்கான தனியான விஷயங்கள் எதுவும் அருகில் இல்லாததால் இந்த நேரம் அவர்களுக்கு ஒரு சிறந்த மனச் சோர்வை போக்கும் நேரம் எனத் தோன்றும். அதில் விமலா ஆண்ட்டி எப்போதும் தனித்துத் தெரிவார். ஐந்து மணிக்கு அவர் இறங்கி வரும்போது பளிச்சென்ற தோற்றத்துடன், அப்போதுதான் அலுவலகம் செல்வதுபோல் இறங்கி வருவார். அங்கு அரட்டை அடிக்க வரும் அனைத்துப் பெண்களுமே கொஞ்சம் சீனியர்கள்தாம். எந்த வீட்டுப் பொறுப்பும் பெரிதாக இல்லாத ஓர் இலகுவான வாழ்க்கைதான். ஆனால் வயதின் காரணமாக, சில உபாதையின் காரணமாகப் பெரிதாக எதிலும் ஆர்வமில்லாமல் வீட்டில் எப்படி இருப்பார்களோ அப்படியே இறங்கி வருவார்கள். அவர்களுக்கு நடுவில் விமலா ஆண்ட்டி தனி நட்சத்திரமாக ஜொலிப்பார். எப்போதும் வாடாத புன்னகை, நேர்த்தியான உடை, பளிச்சென்ற முகம் என முதல் பார்வையிலேயே மனதைக் கவர்ந்துவிடுவார். அவரின் தோற்றமே அவருக்கான மரியாதையையும் பெற்றுத்தரும்.
ஒரு முறை மற்றொரு பெண் விமலா ஆண்ட்டி இல்லாதபோது “அவங்களுக்கென்ன, எந்தப் பிக்கல் பிடுங்களும் இல்லை, வீட்டிலேயும் வேலை இல்லை, சாயந்திரமானா நல்லா டிரெஸ் பண்ணிட்டு வர்றாங்க“ என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார். “சாயந்திரம் நீங்க என்ன பண்ணுவீங்க ஆண்ட்டி?“ என்று கேட்டேன். “மதியம் கொஞ்சம் தூங்கி, மாலை காபியைக் குடித்துவிட்டுக் கீழே வருவேன்“ என்றார். “அப்போ நீங்களும் கொஞ்சம் மெனக்கெட்டா விமலா ஆண்ட்டி போல பளிச்சுன்னு வரலாமே“ என்று கேட்டதற்கு, “அட போம்மா, இங்கு நம்மை யாரு பார்க்கப் போறாங்க? அதுக்காக ஒரு புடவை மாத்தணும், அதை வேற துவைக்கணும். ஒரே போர் “ என்றார்.
அப்படியென்றால் வீட்டு வேலையோ மற்ற விஷயங்களோ அவர்கள் பளிச்சென்று இருக்கத் தடையில்லை. தடை அவரவரின் மனதில்தான் உள்ளது.
ஆனால், அவரைக் குற்றம் சொல்லவும் முடியாது. நம் கல்யாண மற்றும் குடும்ப அமைப்பில் இதெற்கெல்லாம் நேரமே இல்லாமல் ஓடி ஓடி, வயதாகி வாழ்க்கைக் கொஞ்சம் லகுவான பிறகும் எதிலேயும் தனிப்பட்ட விருப்பம் இல்லாத, சலிப்பான பெண்களே இங்கு அதிகம். ஆனால் போனதை மாற்ற முடியாது விட்டதைப் பிடிக்க முடியாது, குறைந்தபட்சம் இன்றுள்ள வாழ்க்கையையாவது ரசனையோடு வாழ சுயநேசம் உதவி செய்யும்.
விமலா ஆண்ட்டிக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் உண்டு, அவரும் வயது காலத்தில் இந்தக் குடும்ப அமைப்பு என்கிற இயந்திரத்தில் சிக்கித் தன்னை, தன் ரசனையை, நேரத்தை இழந்தவர்தான். ஆனால், ஒரு கட்டத்தில் நின்று நிதானித்து, தன் வாழ்க்கையைக் கையில் எடுத்துக்கொண்டார்.
ஒரு முறை அனைவரும் கூடியிருந்தபோது விமலா ஆண்ட்டியிடமே கேட்டேன், “எப்பவும் பளிச்சுன்னு இருக்க உங்களால மட்டும் எப்படி முடியுது?“
அவர் சிரித்தவாறே, “இந்த உலகம் என்னை எப்படிப் பாக்கணும்னு நான்தானேடா முடிவு பண்ணணும்? நான் என்னை மதிச்சாதான் மத்தவங்க என்னை மதிப்பாங்க. நான் விரும்புறா போல நான் இருந்தாதான் மத்தவங்க என்னை விரும்புவாங்க“ என்றார். எத்தகைய வலிமையான வரிகள். இதற்கான அர்த்தம் நாம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும், நேர்த்தியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இந்த உலகம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டுமென நாம் முடிவு செய்வதும், அதற்கேற்றாற் போல் நம் சிந்தனைகளை, செயல்களை அமைத்துக்கொள்வது.
நம்மை நாம் விரும்பினால் நம் உடல் நலம் மேம்பட முயற்சி எடுப்போம். எப்பொழுதும் நேர்த்தியாக இருப்போம். நாம் செய்யும் காரியங்களை மிகச்சிறப்பாகச் செய்ய முயல்வோம். பின் இது எதுவுமே செய்யாமல் இந்த உலகம் என்னை மதிப்பதில்லை என்று புலம்புவதில் அர்த்தம் என்ன? இந்த உலகம் உங்களை எப்படிப் பார்க்க வேண்டுமென்பதை முடிவு செய்ய வேண்டியதும் நீங்கள், முதலில் உங்களை நீங்கள் அப்படி உணர வேண்டியதும் நீங்கள்தானே. அதற்கான முதல் படிதான் சுய நேசம்.
நீங்கள் ஒரு மகா ராணியைப் போல உணர வேண்டுமெனில், நம்மை அப்படி மற்றவர்கள் நடத்த வேண்டுமென்பதில்லை. நாம் மனதளவில் அப்படி உணர வேண்டும். மகா ராணியைப் போன்று அனைவரையும் தன் குடிமக்களைப் போல அன்பு காட்டி, அரவணைத்து, ஈகை உள்ளத்தோடு, கருணையோடு நடந்து கொள்வதின் மூலமே மற்றவரின் மனதில் நீங்கள் மகா ராணியாக முடிசூட முடியும். ஆனால், நாம் எப்போதும் நமக்கான அங்கீகாரம் புறத்தில் இருந்து வர வேண்டுமென ஆசைப்படுகிறோம். நமக்கான அங்கீகாரத்தை நாம் தருவதே சுயநேசம்.
(தொடரும்)
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.
ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ’உன்னை அறிந்தால்…’ ‘உணர்வு சூழ் உலகம்’ ஆகிய தொடர்கள், ஹெர் ஸ்டோரிஸில் புத்தகங்களாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளன.
நம்மை நாம் விரும்பினால் நம் உடல் நலம் மேம்பட முயற்சி எடுப்போம். எப்பொழுதும் நேர்த்தியாக இருப்போம். நாம் செய்யும் காரியங்களை மிகச்சிறப்பாகச் செய்ய முயல்வோம்.