ரோமில் உள்ள பல சமூக வகுப்புகளைக் குறிக்க பண்டைய ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட சொல்லிலிருந்து மருவியதே ‘குக்குலம்’ அல்லது ‘பழங்குடி’ என்கிற சொல். இடைக்காலத்தில், இந்தச் சொல் பல மொழிகளிலும் பல பகுதிகளிலும் தோன்றத் தொடங்கியது. குறிப்பாக நமது இந்திய துணைக்கண்டம் மற்றும் நவீன தெற்காசியாவில் அதிகம் புழக்கத்துக்கு வந்தது.
ஆப்பிரிக்க கண்டத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் உள்ளனர். நமது மக்களின் வாழ்க்கையையும் வணிகத்தையும் எளிதாக்கும் வகையில், பிரிட்டிஷ் காலனித்துவ சக்திகள் ‘பழங்குடியினர்’ என்கிற சொல்லை வித்தியாசமான முறையில் பயன்படுத்தினர்.
பழங்குடியினர் சமூக, பொருளாதார, பண்பாட்டு மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் புவியியல் ரீதியாக, தனிமைப்படுத்தப் பட்டவர்கள் ஆவர். பெரும்பாலான பழங்குடியினர் மலைப் பகுதிகளில் வாழ்ந்தனர். அவர்களின் உணவு காடுகளில் இருந்து வந்தது. ஆயுதமற்ற பழங்குடி மக்களுக்கும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கும் இடையே நடந்த நியாயமற்ற மோதலின் சான்றுகள் நீண்ட காலமாக வரலாற்றில் இடம்பெற்றன. நாட்டு விடுதலைக்குப் பிறகு ‘முன்னேற்றத்தை’ நோக்கி நாம் பயணிக்கும்போது, நம் விடுதலையைத் தக்கவைத்துக் கொள்ள, பழங்குடி மக்களைக் மேலும் கட்டுப்படுத்தி, அடக்கும் நிலைப்பாட்டை ‘நாம்’ எடுத்தோம்.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்து சதவீதம் பழங்குடியினர், நாட்டின் 22 சதவீத நிலப்பரப்பில் வாழ்கின்றனர். இந்தியாவில், நூறு வெவ்வேறு மொழிகளைப் பேசும் சுமார் நானூறு பழங்குடியினர் உள்ளனர். சுற்றுச்சூழலுடன் அமைதியாக இணங்கி வாழும் பழங்குடி மக்கள், தங்கள் காடுகளை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை அன்றாடம் எதிர்கொள்கின்றனர்.
அரசின் பல வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வனச் சட்டம் என்கிற போர்வையில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் தினம் தினம் வெளியேற்றப்பட்டு, இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் நகரமயமாக்கல் மற்றும் அதன் வளர்ச்சிக்காக, சுமார் இருபத்தி இரண்டு லட்சம் ஏக்கர் காடுகள் தாரை வார்க்கப்பட்டுள்ளன. ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்கிற பெயரை ‘நாம்’ பழங்குடியின மக்களுக்கு சூட்டியுள்ளோம். சுரங்க நிறுவனமான வேதாந்தா போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக நியம்கிரி மலைவாழ் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தைப் போன்ற வெற்றிக் கதைகள் இங்கு மிக மிகக் குறைவு.
காகிதத்தையேக் கண்டிராதப் பழங்குடியினர், காடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உரிமைப் பத்திரங்கள் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறது நமது அரசு. ‘பழமையானவர்கள், பழங்குடியினர், பூர்வீகவாதிகள்’ என்று எத்தனை விதமாக அவர்கள் குறிப்பிடப்பட்டாலும், அவர்களே ஆழமான பண்பாட்டு வரலாறைக் கொண்டுள்ள இயற்கையின் உண்மையான மனிதர்கள். நல்லிணக்கம், நிலைத்தன்மை மற்றும் எளிய வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகள். பல்லுயிர் பெருக்கத்தின் சிறந்த தூதுவர்கள். வலுவான உணர்ச்சிப் பிணைப்பின் தூண்கள்.
பல்லுயிர் சமநிலையை சீர்குலைக்கும் வகையில் அதிகமான காட்டு உயிரினங்களை அவர்கள் ஒருபோதும் வேட்டையாடவில்லை. அவர்களின் நீர் சேகரிப்பு நுணுக்கங்கள், விவசாயத் தொழில் நுட்ப அறிவு, நீர்ப்பாசன முறைகள், காட்டுயிர் தாவரங்களை மருந்துகளுக்குப் பயன்படுத்துதல், வானிலை மதிப்பீடு ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்து காப்பது இன்றியமையாதது.
காற்று, கடல் மற்றும் பறவைகளின் அசைவை உணர்ந்து கொள்ளும் அந்தமானின் ஓங்கீஸ் பழங்குடியினர், சுனாமி அழிவிலிருந்து தங்களைப் பாதுகாக்க, கரையோரக் குடியிருப்புகளை விட்டுவிட்டு, காட்டுக்குள்ளிருந்த உயர்வான நிலத்திற்கு சென்று தங்களைக் காப்பாற்றி கொண்டனர். ஆர்க்டிக் பழங்குடியினர் தங்கள் நீர்த்தேக்கங்களைப் பாதுகாத்து வறட்சியை முன்னறிவிப்பவர்கள். அங்காமி பழங்குடியினர் வனவிலங்குகளை மீட்பதற்காக வேட்டையாடுவதைக் கைவிட்ட உன்னதமானவர்கள். ஜும்மா பழங்குடியினர் தங்கள் நிலத்தை ‘மாற்றும் சாகுபடி முறை’ பற்றி அறிந்துகொண்டதின் மூலம் தங்கள் நிலத்தை மீட்டுருவாக்கம் செய்தனர். பசிபிக் பகுதியில் உள்ள மீன்பிடி குழுக்கள் கடல் இனங்களைப் பாதுகாக்கின்றன.
பாக்காவின் பழங்குடியினர் சட்டவிரோத வேட்டையாடுபவர்களின் இருப்பைக் கண்டறிந்து தடுக்கின்றனர். டோங்ரியா கோந்த் பழங்குடியினரால் நீரோடைகள் பாதுகாக்கப்படுகின்றன. சோலிகா பழங்குடியினர் புலிகளை தங்கள் குடும்பமாக கருதுவதால், அவர்கள் சேகரித்த தேனில் சிறிதை அந்தப் புலிகளுக்கு உணவாக அளிக்கின்றனர். நூற்றுக்கணக்கான அணுக முடியாத பழங்குடியினரால் அமேசானில் காடழிப்பு தடுக்கப்படுகிறது. வம்பனோக் பழங்குடியினரால் யாத்ரீகர்கள் பட்டினியிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
இந்த கிரகத்தின் பல்லுயிரியலில் எண்பது சதவீதம் இந்தப் பழங்குடி மக்களின் நிலங்களில் உள்ளன. பழங்குடி சமூகம் முற்போக்கான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு சமூகம். பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற அதிநவீனப் பண்பாடுகளின் சிக்கல்களைக்கூட பழங்குடிகள் திறம்படக் கையாண்டுள்ளன.
‘பழங்குடிகள்’ – இவர்களைப் பற்றி சொல்லப்படாத, எழுதப்படாத, கேட்கப்படாதவற்றை வெளிக்கொணர்வதும் வெளிப்படுத்துவதும் அவசியமானது என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு பயணம் தான் இந்தத் தொடர்.
பழவேற்காட்டின் பழங்குடிகள் – ஏனாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள்.
பழமையான அலையாத்தி வேர்களைக் கொண்ட காட்டையே பழவேற்காடு என்று அழைக்கிறோம். காலநிலை சமன்பாட்டைப் பேணும் அலையாத்தி காடுகளின் வேர்கள், நிலத்துக்கு அடியிலும், நீருக்கு வெளியிலும் இருக்கும் சுவாச வேர்கள் ஆகும். பழவேற்காட்டின் ஏனாதிகளும் அப்படித்தான்.
பழவேற்காடு ஏரியில் கழுத்தளவு நீரில் மணிக்கணக்கில் நின்று கொண்டு எந்த அவசரமுமில்லாமல் சிறிய மீன்கள், இறால்கள், மண் நண்டுகளை தங்கள் கைகளால் இயன்றவற்றை பிடித்துக் கொண்டு வீடு சேரும் எளிமையான மனிதர்கள் இந்த ஏனாதிகள். எனில், ஏனாதிகளும் பழவேற்காட்டின் அலையாத்திகளின் பழமையான வேர்கள் தானே?
ஒருவகையில் ஏனாதியும் பழவேற்காடும் இணைச் சொற்களே.
தங்கள் உயிரியல் அறிவைக் கொண்டு, தங்களைச் சுற்றியுள்ள அனைத்து விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களில் உள்ள பயனுள்ள தாவரங்களை நன்கு அறிந்து, பல்லுயிர் சமநிலைக்கு உதவும் ஏனாதிகளை ஆவணப்படுத்துவதே இத் தொடரின் நோக்கம். உரையாடுவோம் ஏனாதிகளுடன்…
படைப்பாளர்

சித்ரா ரங்கராஜன்
கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய தொடர், தற்போது ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் நூலாக வந்திருக்கிறது. அலையாத்தி வேர்கள் – ஏனாதிகள் என்கிற இந்தத் தொடருக்கான ஓவியங்களை இவரே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கியுள்ளார்.