ஒவ்வொரு காலகட்டத்திலும் மருத்துவம் அந்தந்த ஊரின் இயற்கை அமைப்பு, கிடைக்கும் பொருள்கள், மூலிகைகள் சார்ந்ததாக இருந்துள்ளது. வழிபாடு தொடர்பான கடுமையான வழக்கங்களுக்கும் மூடநம்பிக்கைகளும் இருந்து இருக்கின்றன என்றாலும், அவர்களுக்கு அன்று வேறு வழியும் இல்லை என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டி இருக்கிறது. மருத்துவம் இல்லாத நேரத்தில் நோயைத் தீர்க்கும் இடத்தில், உள்ளத்தில் ஏற்படும் நம்பிக்கையும் பெரிய காரணியாக இருந்தது என்பது மறுக்க முடியாதது.
இரட்டையர்கள் சுளுக்குக்குத் தடவினால் சுகமாகும் என நம்பிக்கை இருந்தது. தோல் நோய்க்கு அடுப்புச் சாம்பல் பூசுவார்கள். அதற்கு, கணவன் மனைவி இருவரின் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம் இருந்தது. மஞ்சள் காமாலை மருந்து கொடுப்பது, எலும்பு முறிவிற்குக் கட்டுவது, அக்கிக்கு எழுதுவது…. இப்படி சிலர் சிலவிதமான மருத்துவம் தெரிந்து வைத்து அதை மட்டும் செய்தார்கள். வைத்தியர், பண்டுவர், மருத்துவச்சி இப்படி மருத்துவம் பார்ப்பதற்கென்றேயும் சிலர் ஊரிலிருந்தார்கள்.
எங்களுக்கு வடக்குத் தெருவில் ஞானப்பிரகாசி என்று ஒரு மருத்துவம் பார்க்கும் பாட்டி இருந்தார். அவர்கள்தான் எங்கள் பகுதியின் அனைத்து பேறுகாலங்களையும் பார்த்திருக்கிறார். அவர் எந்த படிப்பும் படிக்காதவர். அனுபவத்தில்தான் அவர் அனைத்தையும் செய்துள்ளார். பணமெல்லாம் பெரிதாகக் கொடுத்திருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. இதெல்லாம் உங்கள் கடமை என்பதாக ஒரு பெரிய இனக்குழுவையே ஒவ்வொரு வேலைக்கும் என நேர்ந்து விட்டிருந்த காலகட்டம். ஏதோ சிறிது அரிசி, பணம், துணி எனக் கொடுத்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
தங்கப்பன் டாக்டர்
இவ்வாறான காலகட்டத்தில் தான் கன்னியாகுமரி மாவட்டம் நாவல்காடு ஊரைச் சார்ந்த தங்கப்பன் டாக்டர், கள்ளிகுளம் வந்து, சிறு மருத்துவமனையைத் தொடங்கினார். வந்தவர், மக்களுக்காக உழைத்தார். அனைவரின் அன்பையும் பெற்றார். ஆனாலும் அவரிடம் மகப்பேறுக்கெனச் சென்றவர்கள் மிகவும் குறைவு. ஆண் என்பதால் இருந்திருக்கலாம். என் அக்கா பிறந்த நேரம், என் அம்மா இறந்துவிட்டதாகப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து விட்டார்களாம். அம்மா ஆசிரியர். தங்கப்பன் டாக்டர் வந்து பார்த்து உயிர் இருக்கிறது எனச் சொல்லி, ஏதோ ஊசி போட்டுக் காப்பாற்றியிருக்கிறார். அதனால் அப்போதே அவர் இருந்திருக்கிறார்; ஆனால் குழந்தைப் பிறப்பிற்கு அவரை அழைக்கவில்லை எனத் தெரிகிறது.
வல்சாக்கா
வல்சாக்கா திருமணமாகி ஊர் வந்தார். ஆண் பெண் என அனைவருக்குமான மருத்துவம் அவர் மூலம் கிடைத்தது. அன்று முதல் அவர்களின் இறப்பு வரை அவ்வளவு ஏன் இன்றுவரை கூட ‘டானி அண்ணன் வல்சாக்கா’ என்றால் ஊரில் பெரும்பாலானோர் அறிவோம். அண்ணன் பெயர் டேனியல். ஆனால் அனைவருக்கும் அவர் டானி தான். மருத்துவமனைக்குக் கூட டேவிஸ் மருத்துவமனை எனப் பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் அதெல்லாம் யாரும் சொன்னதே இல்லை. எல்லோரும் பெயர் சொல்லியே அழைத்தார்கள். ஊரிலிருக்கும் அனைத்துக் குடும்பங்களும் அவர்களுடன் ஏதாவது ஒரு தொடர்பு வைத்திருந்தார்கள்.
அவர்கள் திருமணமாகி வந்த அதே காலகட்டத்தில், அருள்சகோதரிகள், ‘கௌசானல் மருத்துவமனை’ எனச் சிறு மருத்துவமனை ஒன்றை ஊரில் தொடங்கியிருந்தார்கள். அவர்களும் வல்சாக்காவிற்கு இணையாக மக்களுக்காக உழைத்தவர்கள் தான், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் வீடுகளுக்கு வந்து மருத்துவம் பார்க்க மாட்டார்கள்.
வல்சாக்கா அப்படியல்ல. எந்த நேரமானாலும், கதவைத் தட்டினால் உடனே எழுந்து வருவார்கள். கிடைக்கும் வாகனத்தில்; ஒரு வாகனமும் கிடைக்கவில்லையென்றால் நடந்து, ‘அழைத்தவர் குரலுக்கு வருவேன்’ என வந்தவர்கள்.
வல்சாக்கா, கேரளா மாநிலம் கோழிக்கோடு ஊரில் ஏழு குழந்தைகளில் ஒருவராக 8/8/51 அன்று பிறந்தவர். அப்பா எலும்ப முறிவுக்கு பெயர் பெற்றவர் வைத்தியர். உடன்பிறந்தோர் அனைவருமே அந்தக்காலத்திலேயே பட்டப்படிப்பு படித்தவர்கள். இவரும் ஹோமியோபதி மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். ஒரு சகோதரி அருள்சகோதரியாக சேவை புரிந்தவர்.
அவர்கள் வீடும் மருத்துவமனையும் ஒருங்கே தான் அமைந்திருந்தது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற அளவிற்கு அனைவரிடமும் இணக்கமாக வாழ்ந்தவர்கள். வீடு மிக அழகாக நேர்த்தியாக இருக்கும். தண்ணீர்த் தட்டுப்பாடான ஊர் என்றாலும் செடிகள் வைத்துப் பசுமையாக வைத்திருப்பார்கள். நாகரிகமான பொருள்கள் புழக்கத்திலிருக்கும். அப்போதே கிறிஸ்மஸ் மரம் வைப்பார்கள்.
அவர்களின் வீடு இருந்த இடமே தனித்துவமானது. ஒரு பக்கம் இந்துக்கள் வீடென்றால் இன்னொரு பக்கம் கிறிஸ்தவர்கள் வீடு. பின் பக்கம் இஸ்லாமியர் வீடு. அனைவருமே இவர்களைத் தங்களில் ஒருவராகவே பார்த்தார்கள். அதனால் அனைவர் வீட்டின் ‘நல்லது கெட்டது’க்கும் செல்வார்கள். எந்த இடம் சென்றாலும் முதன் மரியாதையைப் பெற்ற குடும்பம் அது. அவர்கள் திருமண வீட்டிற்கு வந்தால், தனி கவனிப்பு இருக்கும். பொதுவாக யாருக்காவது தனிச்சிறப்பு செய்தால், அருகிலிருப்பவர்கள் சிலராவது முணுமுணுப்பார்கள். ஆனால் இவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதை குறித்து யாரும் எதுவும் சொன்னதே இல்லை. இவ்வாறு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒருவராக இருந்திருக்க அவர், எல்லோரிடமும் எவ்வளவு கரிசனையோடு நடந்திருக்க வேண்டுமெனச் சிந்தித்துப் பாருங்கள்.
இளைஞர்கள் உள்ளத்தில் இடம் பிடிப்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. ஆனால் அனைத்து இளைஞர்களும் மிகவும் அன்புடன் நடத்தினார்கள். அவர்கள் நடத்தும் எந்த நிகழ்வு என்றாலும், சிறப்பு விருந்தினராக அழைப்பார்கள். ஊரில் நடக்கும் பல போட்டி விளையாட்டுகளைத் தொடங்கி வைப்பவர்களாக அக்கா, அண்ணன் இருவரும் இருந்தார்கள். இவ்வாறாகப் பணம் எனப் பெரிதும் சம்பாதித்து இருக்கவில்லை என்றாலும் மனிதர்களைச் சம்பாதித்து வைத்து இருந்தார்கள்.
வல்சாக்கா குறித்து தங்கை வாசுகி சொல்வதை அப்படியே தருகிறேன். “கடவுளின் தேசத்திலிருந்து வழி தவறி நம் ஊருக்கு வந்த அழகு தேவதை வல்சாக்கா. எனது அம்மா, பாப்பா அக்கா (மறைந்த மெல்பா அம்மா) வல்சாக்கா மூவரும் தோழிகள். மூவரையும் எந்த புள்ளி இணைத்தது என்பது தெரியவில்லை… அழகிலும், ஆடை அணிவதிலும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். அழகு மட்டுமின்றி தமிழும் கொஞ்சியது அவரிடம். நம் ஊரின் முதல் பெண் மருத்துவர்.
வீடும், மருத்துவமனையும் ஒரே வளாகத்திலிருந்ததால் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். அணுகுவதற்கும், பழகுவதற்கும் எளிமையானவர். எங்கள் சிறுவயதில் எங்களுக்கு ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் எங்கள் பெற்றோரின் துணையின்றி நாங்களாகவே போய்க் கொள்வோம். மருத்துவமனையில் பின்புறம் பெரிய சப்போட்டா மரம் ஒன்று இருந்தது. அதில் ஏறி எப்பொழுது வேண்டுமானாலும் பழம் பறித்து உண்ணும் உரிமை எங்களுக்குத் தரப்பட்டிருந்தது. சுமார் 25 வயதுக்கு மேல் 50 வயது வரை உடையவர்கள் பெரும்பாலும் டேவிஸ் மருத்துவமனையில் பிறந்தவர்களாகத் தான் இருப்பார்கள். கனிவான பேச்சு, கருணையான அணுகுமுறை அவருக்கு நம் மக்கள் மத்தியில் தனி இடத்தை தந்திருந்தது.
ஒரு முறை தனது கணவருடன் பைக்கில் செல்லும் பொழுது தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டு அவரது சேவையில் தடை ஏற்பட்டது. அதன் பிறகு அவர் அதிகம் மருத்துவம் பார்க்கவில்லை. வல்சாக்கா களிகையின் ஒரு சகாப்தம்.”
பிள்ளைகள் வளர்ந்து, வெளியூர் செல்ல, டானி அண்ணன் உலகை விட்டுச் செல்ல, இவர்களும் வயதாகி உடல்நலம் குன்றினார்கள். அப்போதும், யாரும் சென்று கூப்பிட்டால் உடனே வருவார்கள். 2008ஆம் ஆண்டு, என் அம்மா இறக்கும் தறுவாயிலிருந்தார்கள். மருத்துவமனைக்குச் செல்ல அம்மா விரும்பவில்லை. வீட்டிலிருந்து போகிறேன் என அடம் பிடிக்க, வல்சா அக்காதான் வீடு வந்து ட்ரிப் போட்டுச் சென்றார்கள். அவ்வப்போது வந்து பார்த்து விட்டும் சென்றார்கள். அப்போதும் என் அம்மா நன்றாகப் பேசும் தறுவாயில் தான் இருந்தார்கள். இருவரும் அவ்வளவு இனிமையாக, நகைச்சுவையாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அம்மா இறந்தும் விட்டார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்களின் மலையாளத் தமிழ் மட்டும் மாறவேயில்லை என அன்றும் தோன்றியது.
வல்சாக்கா 7/6/14 இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். அன்பான சொற்கள், கனிவான, அழகிய முகம்; பலன் கருதாது உதவும் உள்ளம். எங்கோ பிறந்து வளர்ந்து, ஒரு ஊருக்கு வந்து, ஊரிலுள்ள அனைவருக்கும் உறவாகி, அனைவரையும் உருவாக்கி அனைவர் உள்ளங்களில் உறையும் வல்சாக்கா, ஒரு வரலாறு.
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது
பல இரவுகள் என் அம்மாவின் தீராத தலைவலிக்கு நள்ளிரவு நேரத்தில் கூட வந்து ஊசி போட்டு செல்வார்கள்… மகத்தான மருத்துவர் 🙏