தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது இல்லையா… எனக்குத் தெரிந்த வகையில் இதுதான் தற்போது பெரும்பாலான வீடுகளில் காணக் கிடைக்கும் பெண்களின் நிலை. ஒரு காலகட்டத்தில் மனைவி என பயன்படுத்தப்பட்ட சொல், இல்லத்தரசி, வீட்டை  நிர்வகிப்பவர் போன்ற சொற்களாக பின்னாளில் மாற்றம் பெற்றது.

அவர்கள் வீட்டிலிருந்த எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு,  குழந்தைகள்,  அவர்களின் கல்வி, கணவன் என எல்லோருடைய தேவையும் சமாளித்தனர். சுய சம்பாத்தியம் இல்லாத ஒரு காரணத்தினால் தங்களுக்குள்ளேயே மன இறுக்கத்தையும் அனுபவித்துக் கொண்டு இருந்தனர். அந்த சூழலில் இருந்து வெளிவர, கல்வி அவர்களுக்கு துணையாக இருக்கும் என்ற ஒரு மனப்பான்மை கடந்த இரண்டு தலைமுறைகளாக  பெண்களுக்கு மிக உறுதியாக இருந்தது. பெண் கல்வி அந்தச் சூழலை மாற்றியும்  இருக்கிறது.

ஆனால் எப்படி மாற்றி இருக்கிறது? குடும்பத் தலைவி, வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண் என இரு வேறு விஷயங்களை ஒருங்கே இறுக்கிப் பிடித்துக் கொண்டு, வீட்டிலும், வெளியிலும் தனக்கான அங்கீகாரத்தையும் உருவத்தையும் மாற்றிக் கொள்ளமுடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

சில பல காரணங்களாலும், மனிதர்களாலும் படித்து வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்கள் சமூகத்தில் அதிகரித்து வருகின்றனர். வீட்டு நிர்வாகத்தில், வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஒரு ஆணின் பங்களிப்பை கருத்தில் கொண்டால்,  வேலைக்கு சென்று சம்பாதிக்கும் ஒரு பெண்ணின் பங்களிப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகப்படுகிறது.

வேலைக்குச் செல்லும் ஆண் காலையில் கிளம்பி,  மாலையில் வீடு வருகிறார்.  இரவு உணவு எடுத்துக் கொண்டு உறங்கச் செல்கிறார். சில வீடுகளில் குழந்தைகளை பள்ளியில் விட்டு வருவது போன்றவற்றை அலுவலகம் செல்லும் பொழுது ஆண்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

அதைத் தாண்டி மாலையில் வீட்டிற்கு வரும் ஆண்கள் சமையலறையிலோ, வீட்டை சுத்தப்படுத்துவதிலோ அல்லது குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டுப்பாடம் செய்வதிலோ பெரும்பான்மையான வீடுகளில் ஆண்கள் பங்கு கொள்வதில்லை.  இதைத்தானே ‘சுதந்திரம்’  என்று எண்ணி எங்களிடமிருந்து பெற்றுக் கொண்டாய்? அதனால் உனக்கான சுதந்திரத்தை எடுத்துக் கொள். அதோடு  ஏற்கனவே இருந்த எந்த கட்டுக்களையும்,  நடைமுறைகளையும்  மாற்றாமல், நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்ற எண்ணமே ஆண்களுக்கு மேலிடுகிறது.

ஒன்பது மணிக்கு வேலைக்குச் செல்வதாக வைத்துக் கொண்டோம் என்றால், அதற்கு முன்னதாக காலை உணவு, மதிய உணவு என இரு வேளைக்கான சமையல் வேலைகளை முடிக்கிறோம். வேலைக்குச் செல்லும் கணவனுக்கு காப்பியில் ஆரம்பித்து செல்போன், செய்தித்தாள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்து கையில் கொடுக்கிறோம். குளிப்பதற்கு சுடு தண்ணீர் போட்டு, உடைகளை எடுத்து வைத்து, குளித்து விட்டு வரும் பொழுது சாப்பாடு பரிமாறுகிறோம். சாவி, பணப்பை வரை  எடுத்துக் கொடுத்து,  வெளியில் கிளம்பும் வரை காத்திருந்து,  அடுத்த வேலைக்கு தயார் படுத்திக் கொள்கிறோம்.

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை எழுப்பி,  அவர்களை தயார்படுத்தி உணவு கொடுக்கிறோம். கணவருடன்  அவர்களும் பள்ளிக்குச் செல்வதானால் இரண்டையும் ஒரு சேர கவனித்து, யாருடைய தேவைகளையும் மறந்துவிடாமல் சரியாக செய்து முடிக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாமும் கிளம்பி,  நமக்கான காலை உணவு,  மதிய உணவு, அலுவலகத்திற்கு தேவையான விஷயங்களை தயார்படுத்துவது என முடித்து வீட்டிலிருந்து கிளம்பியாக வேண்டும்.

உண்மையில் அடுத்த நாளைக்கான தயார்படுத்தல் முதல் நாள் மாலையிலேயே ஆரம்பிக்கிறது. அடுத்த நாள் சமையலுக்கான யோசனை செய்வது, பொருள்கள் உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்வது, இல்லாதவற்றை வாங்கி வைப்பது, சில நேரங்களில் அடுத்த நாளைக்கான காய்கறிகளை நறுக்கியும் வைக்கிறோம். வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழையும் பொழுது எடுத்து சொருகிய சேலையும்,  வாரி முடிந்த கொண்டையுமாகவே அன்றைய மாலைப் பொழுது வேலைகள் ஆரம்பிக்கின்றன. பெரும்பாலும் உடை மாற்றுவதற்குக்கூட  நேரம் குறைவாகவே கிடைக்கும். 

கணவருக்கான அடுத்த நாள் உடைகள், குழந்தைகளுக்கான பள்ளி சீருடைகள் என அனைத்தையும் இரவில் தயார்படுத்தி விட்டே உறங்கச் செல்ல வேண்டி இருக்கிறது. இதுபோக வார இறுதி நாள்களில் துணிகளை துவைத்து,  காய வைத்து மடித்து வைப்பது,  வீட்டை சுத்தப்படுத்துவது, பிள்ளைகள் வீட்டு பாடம்,  அடுத்த வார சமையலுக்கான தேவைகளை பட்டியலிடுவது,  மசாலா, கோதுமை, இட்லி மாவு இன்னும் பிற விஷயங்களை செய்து வைப்பது என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதிலும் நண்பர்களோ,  உறவினர்களோ வீட்டுக்கு வருவதாக இருந்தால் “வீட்டை இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாமே?”  என்று சில நேரம் கேட்கும்பொழுது, மனதிற்குள் ‘முடிந்தால் செய்ய மாட்டோமா?’ என்ற கேள்வியும் பதில் தர விரும்பாத மனநிலையும் ஓடத்தான் செய்கிறது.

பெண்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதை ஏதோ சமுதாய கடமை போல நினைக்கும் மனநிலை இங்கு உள்ளது. வீடு சுத்தமாக இருக்க வேண்டும்தான்,  அதற்கான முழு பொறுப்பையும் பெண்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமா?  என்பதே என் கேள்வி.

‘எனக்கு பணத் தேவை இருக்கிறது நீயும் வேலைக்கு சென்று அதில் உதவ முடியுமா’ என்ற கேள்வி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பெண்கள் அந்த தளத்திற்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். ‘எனக்கு வீட்டு வேலையில் உதவி தேவைப்படுகிறது,  நீங்கள் வந்து உதவ முடியுமா?’ என்ற கேள்வியை கேட்பதற்கும்,  கேட்டால் உதவி கிடைக்குமா?  என்ற கேள்வியிலும் பல நேரங்களில் இந்த விஷயம் பேசப்படாமலேயே இருக்கிறது.

காலை இப்படி போகிறது என்றால் மாலை வேறுவிதமாக இருக்கிறது. களைத்து வரும் கணவனுக்கு முன்போ,  பின்போ எப்படி வந்தாலும் மனைவி வந்த பிறகே,  மாலை நேர காபியும்,  சிற்றுண்டி தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கின்றன. அந்த காபியையாவது சூடாக அவள் குடித்து விட முடியுமா என்றால் அதுவும் கனவுதான். அதற்குப் பின்னான இரவு உணவு, ‘அதே இட்லி,  அதே சாம்பார், அதே தோசை, அதே சப்பாத்தி வேறு எதுவும் செய்ய தெரியாதா?  உனக்கு?’ என்ற கேள்வியோடு நகர்கிறது.  இதில் நாம் எந்த பங்களிப்பும் செய்துவிடவில்லை என்ற எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அந்த நாளை கடந்து விடுகின்றனர் பல ஆண்கள். பெரும்பாலும் அந்த நேரத்திற்குப் பிறகு மனதிலோ,  உடலிலோ,  உறக்கத்தை தவிர வேறு எந்த சிந்தனையும் வருவதற்கு வாய்ப்பில்லை. மீண்டும் அடுத்த நாள், அடுத்த நாள், அடுத்த நாள்…

இதற்கு நடுவில் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று உடம்பிற்கு வந்தாலோ, வேறு ஏதாவது பிரச்னைகள் வந்தாலோ, “அதையெல்லாம் கவனிப்பதை விட உனக்கு வேற என்ன முக்கியமாக இருக்கிறது?” என்ற கேள்வியும் பெண்ணிடமே முன் வைக்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்ளாத தந்தைகளுக்கு,  குறை சொல்வதற்கு மட்டும் முன்னேறி வருவதற்கான எந்தத் தகுதியும் இல்லை என்பது என் கருத்து. சில இடங்களில் கருத்துக்களை முன்வைக்கும் பொழுது, சம்பாதிக்கும் காரணத்தினாலே இத்தகைய எதிர் பேச்சு வருகிறது என்ற ஒரு கண்ணோட்டத்தையும்  கடந்து தான் போக வேண்டி இருக்கிறது.

மாற்றங்கள் இல்லாமல் இல்லை,  போதுமானதாக இல்லை என்பது தான் நிதர்சனம். கோபங்களை வெளிப்படுத்தவும்,  தங்களுக்கான விஷயங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்,  கருத்துக்களை பகிரங்கமாக பகிர்ந்து கொள்வதற்கும்,  தனக்கான நேரம்  என்று சொல்லப்படுகின்ற ‘எனக்கான நேரத்தில்’ இதை நான் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதான எதுவுமே பல பெண்களுக்கு இங்கு கிடைப்பதில்லை. இது அடுத்த தலைமுறை குழந்தைகளிடமும் போய்ச் சேர்த்து விடக்கூடாது என்ற எண்ணமும் உண்டு. அவர்களுக்கு இடையில் ஆண்,  பெண் என்ற பாலினப் பாகுபாட்டுடன் வீட்டில் இருக்கும் வேலைகள் பகிரப்படுவது நடைமுறையாகி விடக்கூடாது.

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது – எங்களின் பெரிய பாட்டியின்  வீட்டில் அண்ணன்கள், அப்பா,  சித்தப்பாக்கள் யாரும் காபி குடித்த குவளையைக்கூட கழுவப்போட்டது கிடையாது. சாப்பிட்ட தட்டை கொண்டு போய் அலசி வைத்தது கிடையாது. தங்களுக்கான வேலைகளில் குறைந்தபட்ச பொறுப்பையும்கூட ஏற்றுக் கொண்டது கிடையாது! அப்படி வளர்க்கப்பட்டிருந்தனர் என்று கூடச் சொல்ல முடியும். வேலைக்குச் செல்லும் பெண்களின்  கணவர்கள் மட்டும் இப்படி இருந்தால் போதுமா? வீட்டில் இருக்கும் மனைவிகளுக்கு இப்படியான உதவிகள் தேவையில்லையா என்ற கண்ணோட்டத்தோடு ஒரு கேள்வியை எழுப்பினால், பகிர்ந்து கொண்டு வேலையை செய்யும் பொழுது சுமையாக மட்டுமில்லாமல் இறுக்கமான ஒரு மனநிலையையும் அது தவிர்க்கிறது என்பது எனது பதில்.

அலுவலகத்தில் கூட வேலை செய்யாது,  எல்லா வேலையும் பிறர் தலையில் கட்டி விடும் ஒரு ஆள் எல்லோரின்  அன்பையும் நம்பிக்கையையும்  பெறுவதில்லை. ஒரே குடும்பத்தில் இருந்து எல்லோருக்குமான வேலைகளை ஒரே ஒரு ஆள் செய்ய வேண்டும் என்ற நினைப்பது சில வேளைகளில் நியாயமற்றதாகத் தோன்றுகிறது.

யாரும் 4:00 மணிக்கு எல்லாம் எழும்புவதற்கு எந்த பெண்ணுக்கும் தினமும் ஞாபகப்படுத்துவதில்லை; அன்றைக்கான வேலைகளைச் செய்து முடிப்பதற்கான அட்டவணையை தயார்படுத்திக் கொடுப்பதில்லை. குழந்தைகள், கணவன் என்ற சூழலில் ஒவ்வொருவருக்குமான தேவையைப் புரிந்துகொண்டு செயல்படுத்த தனியாக பயிற்சி கொடுப்பதில்லை… ஆனால் இவை அனைத்தும் தினசரி செயல்பாடுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தினமும் செய்யும் வேலைகள், செய்யாத போது மட்டுமே, ‘எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறாய்’ என்ற ஏச்சும், பேச்சும் காதில் விழுகிறது. அதிகபட்சமாக “அலுவலகத்திற்குச் சென்று சும்மா உட்கார்ந்துவிட்டுத் தானே வருகிறாய்?”  என்று கேட்கும் பொழுது,  வெளியில் சந்திக்கும் பிரச்சினைகளைத் தாண்டி வீட்டிற்கு உள்ளே சமாளித்து,  ஓய்ந்து போன ஒரு குரலில் ஏதும் பேச திராணியற்று ஒரு சிரிப்புடன் கடக்க வேண்டி இருக்கிறது. இவர்களுக்காகவா இவ்வளவையும் செய்து முடித்து இருக்கிறோம் என்ற மனபாரத்துடன்…

யார் வீட்டிலாவது,  எங்காவது இது மாற்றம் கண்டிருந்தால் மிக்க மகிழ்ச்சி. சில வீடுகளில் இவற்றை செய்வதற்கு உதவிக்கு ஆள் வைத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றியது இல்லை இந்த செய்தி. ‘சுதந்திரமாக இருக்கிறோம்’,  ‘சுதந்திரம் கொடுத்து விட்டோம்,  அதனால் இதைச் செய்து விடுங்கள்’ என்ற எண்ணத்திலும் இந்த விஷயங்கள் சுற்றிச் சுழன்றுகொண்டு இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இருவருக்குமான வீடு,  இருவருக்குமான வேலை, இருவருக்குமான செயல்பாடுகள் என்ற தளத்திலிருந்து இது அணுகப்படவே இல்லையா என்ற கேள்வி எப்பொழுதும் எனக்கு இருக்கிறது. பணம் மட்டுமே இங்கு பிரச்சனையா?  என்ற கேள்விக்கு அதைத் தாண்டி புரிதல் பற்றாக்குறையாக இருக்கிறது.

‘அந்த ஆண் சம்பாதித்த அத்தனை பணத்தையும் வீட்டிற்குத் தானே தருகிறார்?’ என்ற கேள்வி எப்பொழுதும் இந்த சமுதாயத்தில் உண்டு. அந்தப் பெண் மட்டும் சம்பாதித்த பணத்தை அவருக்கென செலவு செய்து கொண்டு இருக்கிறாரா என்ன??  அதுவும் குடும்பத்திற்குள்தான் வருகிறது. அப்பொழுது இதற்கான தயாரிப்புகளில், தேவைகளில் பங்கெடுக்க ஏன் அந்தப் பக்கத்திலிருந்து எந்த முயற்சியும் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை..?

  • பெயர் வெளியிட விரும்பாத வேலைக்கு செல்லும் இல்லதரசி…