பெண்கள் எவ்வாறு சமூகமயமாக்கப் படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, அவர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது என்பதைப் புரிந்தகொள்வது அவசியமாகிறது. டைரக்டர் சசி இயக்கத்தில் வெளியான ’பூ’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். வகுப்பறையில் ஆசிரியர், மாணவர்கள் படித்து என்னவாக விரும்புகிறார்கள் என்று கேட்கும்போது மாரி என்னும் சிறுமி மட்டும், “நான் வளர்ந்து என் மாமனைக் கல்யாணம் செய்து கொள்வேன்” என்று கூறுவாள். பெண் குழந்தைகள் ஏன் வளர்கிறோம் என்றுகூடத் தெரியாமல் வளர்கிறார்கள் என்று ஆசிரியர் நொந்துகொள்வார்.  

இந்தியச் சமூகங்களில் பெண்கள் பெரும்பாலும் திருமணச் சந்தையைக் குறிவைத்தே வளர்க்கப்படுகிறார்கள். நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதும் என்பதே ஆண்களின் நிலைப்பாடாக இருந்தது. அதற்கேற்றவாறு எட்டாம் வகுப்புடன் பெண்கள் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டனர். பின்னர் திருமணத்திற்கு ஒரு டிகிரி கட்டாயம் என்று கண்டிஷன் போட்டனர். தனியார் பள்ளிகளில் பெற்றோர் இருவரும் டிகிரி படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை வைத்ததால்தான் பெண்கள் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். படித்த பெண்களைத் திருமணம் செய்தால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். டியூஷன் அனுப்பத் தேவை இல்லை, செலவு மிச்சம் என்கிற தொலைநோக்குப் பார்வையோடு (!) சிந்தித்த ஆண்களின் நோக்கத்திற்காகவும் பெண்கள் டிகிரி படிக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள். பின்னர் அதிகரித்துவிட்ட குடும்பப் பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்கப் பெண்கள் வேலைக்குப் போவது அதிகரித்தது. கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தவுடன், குடும்பம் மட்டுமல்லாது தன்னுடைய நலன் சார்ந்த முடிவுகளையும், பெண்கள் எடுக்க ஆரம்பித்தனர். சமுதாயம் போட்டு வைத்திருக்கும் வட்டத்தைத் தாண்டிப் பெண்கள் செல்வதை உணர்ந்து, வேலைக்குப் போகும் பெண்களுக்கு பல தடைகள் எழுப்பப்பட்டன.

இன்றைய காலக்கட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத்தான் திருமண மார்க்கெட்டில் மவுசு. அதிலும் வீட்டிலிருந்தே பணிபுரியும் ஐடி துறை என்றால் மிகவும் நல்லது. வீட்டுவேலை, குழந்தைப் பராமரிப்பு இப்படி எல்லாவற்றுடன் சேர்த்து அலுவலக வேலையும் செய்துகொள்ளலாம் என்னும் எண்ணம்தான் இதற்குக் காரணம். படிப்பும் வேலையும் பெண்களுக்குத் திருமணச் சந்தையில் மதிப்புக் கூட்டவே பயன்படுகின்றன. குடும்பத்தின் பொருளாதாரப் பங்களிப்புக்குத் தன்னுடைய உழைப்பைக் கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், குடும்பப் பராமரிப்பு வேலைகளையும் சேர்த்து செய்யும் பெண்களால் தங்களுக்கான முன்னேற்றத்திற்கென்று நேரம் ஒதுக்க முடிவதில்லை. குடும்பப் பராமரிப்பு வேலைகளைப் பங்கிட்டுக்கொள்ளும் ஆண்கள் Gen Y தலைமுறையிலேயே (1981-1996க்குள் பிறந்தவர்கள்) வெறும் 31% தான்.

சொந்தத் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கோ, அல்லது வழக்கறிஞராகவோ, சினிமா தொடர்புடைய தொழிலில் நாட்டம் உடையவராகவோ பெண்கள் இருக்கும்போது திருமணச் சந்தை தன் முகத்தைத் திருப்பிக்கொள்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் திருமணத்திற்கான ஆண்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டே பெண்களின் சமூகக் கட்டமைப்பு அமைகிறது.

90’ஸ் கிட்ஸ் ஆண்களில் பலருக்குத் திருமணம் தள்ளிப் போனதும், சிலருக்குத் திருமணம் ஆகாமலே போனதும் பல முக்கியமான கேள்விகளை எழுப்பிச் சென்றன. இந்த 90’ஸ் கிட்ஸ் ஆண்கள் தேடியது எல்லாம் 95க்குப் பிறகு பிறந்த பெண்களைத்தான். ஆனால், அந்தப் பெண்கள் படிப்பு, வேலைவாய்ப்பு என்று முன்னேறிச் சென்று திருமணத்திற்கான தன் கோரிக்கையை அதிகரித்தனர். மேலும் பொருளாதாரச் சுதந்திரம், வீட்டு வேலைகளில் சமமான பங்கெடுப்பு, தனிக் குடும்ப வாழ்க்கை முறை, குழந்தை வளர்ப்பில் சம பங்கு என்று தங்களது நிபந்தனைகளை வைத்தபோது 90’ஸ் கிட்ஸ் ஆண்களில் சிலருக்குத் திருமணம் என்பது கனவாகவும், மீம்ஸ் கன்டென்டாகவும் ஆகிவிட்டது.

சமீபத்தில் தோழிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் அலுவலகப் பணிக்குத் திரும்பியவரிடம் குழந்தைகளின் நலன் பற்றிய விசாரிப்புகள் நடைபெற்றன. தன் முதல் பெண் குழந்தை மிகவும் பொறுப்புணர்வுடன் தன் தம்பியைப் பார்த்துக் கொள்வதாகப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார். அது பெண்களுக்கேயான இயல்பு என்று அனைவரும் அதை ஆமோதித்தனர். பொறுப்புணர்வு என்பதில் எங்கே பாலின வேறுபாடு வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. பெண் குழந்தைத் தன்னை முழுவதுமாக உணர்வதற்கு முன்பே சமூகம் தன்னுடையக் கட்டமைப்பைத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் எப்போதுமே மிகவும் பொறுப்பானவர்கள் என்கிற கிரீடத்தைச் சமூகம் பெருமையாகச் சூட்டி மகிழ்ந்துகொள்கிறது. எங்கே தனக்கு அந்தக் கிரீடம் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற அச்சத்தில் எல்லா வகையிலும் தங்களைப் பொறுப்பானவர்களாகக் காட்டிக்கொள்ள உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். தன் தம்பி, தங்கைகளைப் பார்த்துக்கொள்வதில் தொடங்கி, பேரக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளத் தனியாக விமானம் ஏறும் அளவிற்குப் பெண்களுக்கு அறிவிருந்தால் போதும் என்றுதான் சமூகம் எதிர்பார்க்கிறது.

ஆண் மைய சமூகத்திற்குத் தேவையான உழைப்பைக் கொடுக்க, சமூகப் பாத்திரங்களை நிரப்பப் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். தாங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு முழுதாகத் தங்களை ஒப்படைப்பதை மட்டுமே வாழ்நாள் லட்சியமாகக் கொள்வதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். வேறெதையும் சமூகம் பெண்களிடம் எதிர்பார்ப்பதில்லை.

பெண்களின் இத்தகைய பாரம்பரிய சமூகக் கட்டுமானத்திற்குப் பெரும் பங்கு ஆற்றுவது மதங்கள். பெண்களைச் சமூகப் படிநிலையில் கடை நிலையில் வைப்பதிலும், அவர்கள் ஆண்களைச் சார்ந்தே வாழப் பழக்கப்படுத்துவதிலும் எல்லா மதமும் பாரபட்சம் இன்றி நடந்துகொள்கிறது. புனித நூல்களும், மதத் தலைமைக் கட்டமைப்புகளும், பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய சமூக எதிர்பார்ப்புகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதம் என்னும் நிறுவனமயமாக்கலில் பெண்களின் பங்கு அதைக் கட்டுக் குலையாமல் காப்பாற்றுவது மட்டுமே. இந்த நிறுவனத்தின் மூலமே தான் அடிமைப்படுத்தப்படுகிறோம் என்பதை அறியாமலேயே பின்வரும் சந்ததியினரையும் அதைப் பின்பற்றச் சொல்வது மூடத்தனத்தின் உச்சம். அடிப்படையில் மதக்கோட்பாடுகள் அனைத்தும் ஆணாதிக்க விதிமுறைகளைப் பெண்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவே ஏற்படுத்தபட்டவை.  

இந்தச் சமூக க்கட்டுமானங்களைப் புரிந்துகொண்ட சில பெண்கள் மட்டுமே இதிலிருந்து வெளி வருவதற்கான முன் முயற்சிகளை எடுக்கின்றனர். உதாரணமாக மும்பையைச் சேர்ந்த ஹசீனா கான் 2013ஆம் ஆண்டு பேபாக் கலெக்டிவ் (Bebaak Collective) என்னும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். முஸ்லிம் பெண்கள் உட்பட மதத்தால் ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக வாதிடுவதற்காக இந்த அமைப்பு செயல்படுகிறது. ’பயமற்றவர்களின் குரல்’ என்று அறியப்படும் இந்த அமைப்பு மதரீதியாக ஒடுக்கப்படும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வகுப்புவாத வெறுப்பினால் ஓரங்கட்டப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுதல் ஆகியவற்றில் பணியாற்றுகிறார்கள். பெண்களுக்கு எதிரான சமூகக் கட்டமைப்பு வன்முறைகளை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், கூட்டுப் போராட்டங்களின் முக்கியத்துவத்தையும் பிரச்சாரம் செய்கின்றனர்.

மோனிஷா பெஹல் மற்றும் ரோஷ்மி கோஸ்வாமியினால் 1995ஆம் ஆண்டு பெய்ஜிங் உலகப் பெண்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு பெண்கள் உரிமை அமைப்பு NEN (North East Network). பெரும்பாலும் வடகிழக்கு இந்தியாவில் பெண்களின் மனித உரிமைகளுக்காக இவர்கள் செயல்படுகின்றனர். பெண்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது, அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, பாலின அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவது என்கிற நோக்கங்களின் அடிப்படையில் இவர்கள் செயல்படுகின்றனர்.

பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி சிந்திக்கவும் குடும்பங்களின் உழைப்புச் சுரண்டலைக் கேள்வி கேட்கவும், ஆண் மைய சமூக எதிர்பார்ப்புகளை எதிர்க்கத் துணியும்போதும் நிச்சயம் இந்தச் சமூகத்தின் தவறான பாலின கட்டுமானங்களைத் தகர்க்க முடியும். நம்பிக்கையோடு துணிந்து செயலாற்றுங்கள்!

(தொடரும்)

தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.