ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே?

இந்த அத்தியாயத்தில் சுய நேசத்தின் இரண்டாம் படியான எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது பற்றிப் பார்ப்போம்.

நாம் அனைவருமே எல்லையில்லா காதலை / அன்பை அனுபவித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம், குறைந்தபட்சம் படத்திலாவது பார்த்திருப்போம்.

ஆனால், அது வாழ்க்கை முழுக்க அப்படியே தொடருமா என்றால், கடினம்தான்.

“நீ கொன்னாகூடத் தப்பே இல்ல, நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள“ என்று டூயட் பாடிய கதாநாயகிகூட, அதே நபருடன் கல்யாணம் ஆன பிறகு அப்படியே சொல்லுவாரா என்பது கேள்விக்குறிதான். இந்த உச்ச உணர்ச்சி எல்லாம் ஹார்மோன்களின் விளையாட்டு மட்டுமே.

காலப்போக்கில் சுயம் விழித்துக்கொண்டு நான் ஏன் சாக வேண்டும் என்று கேள்வி கேட்கும்.

ஆரம்ப மயக்கத்தில் அது உறவோ நட்போ நமக்குள் எந்த எல்லையும் இல்லை என்கிற நம்பிக்கையைத் தந்துவிட்டு, பின்னாளில் அதைப் பற்றி வருத்தப்படுவதோ, சண்டை போடுவதோ இல்லாமல் எல்லாவித உறவிலும், நட்பிலும் ஓர் எல்லையில் நாமும் நின்று, அடுத்தவரையும் நிறுத்தும்போது அந்த உறவு ஆயுள் வரை நீடிக்கும்.

எல்லாருக்கும் ஒரே எல்லைக்கோடா என்றால், இல்லை. யாரை எவ்வளவு தூரம் அனுமதிக்கலாம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரம் நாம் நன்கு நெருங்கவிடும் நபருக்கும் அதே எல்லைக்கோடு வரைவதற்கான சுதந்திரம் உண்டு என்பதையும் உணருவது முக்கியம். நான் உன்னை எத்தனை நெருக்கமாக உணர்கிறேன், நீ ஏன் என்னைத் தள்ளி நிற்கச் சொல்கிறாய் என்கிற கேள்வி வரவே கூடாது.

சரி, இப்படி எல்லை வகுப்பதால் என்ன நன்மை? நமது வாழ்க்கை நம் கையில் இருக்கும். நம் முடிவுகள் நமதாக இருக்கும்.

எதிலெல்லாம் எல்லைக்கோட்டை நிர்ணயிக்கலாம்?

நேரம் : நம் நேரம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ஒன்று. ஒருவர் நமக்கு எத்தனை நெருக்கமானவர் என்றாலும், நம் நேரத்தின் உரிமையை நாம் வைத்திருப்பதே ஆரோக்கியமானது. உதாரணமாக என் நெருங்கிய தோழி என் பிறந்த நாளுக்கான ஒரு சர்ப்ரைஸ் பிளான் செய்து, நாள் முழுக்க வேறு வேறு திட்டங்கள் போட்டு, பிறந்த நாளன்று வந்து தெரிவிக்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆனால், அன்றைக்கு எனக்கு வேறு சில திட்டங்களும் இருக்கலாம். ஆனாலும் பிறந்த நாளன்று மகிழ்ச்சியோடு என்னோடு செலவிட வந்த தோழியை வருத்தப்பட வைக்க வேண்டாமென அவரின் திட்டத்திற்கு இசைகிறேன் என வைத்துக்கொள்வோம். தோழி ஹேப்பிதான். ஆனால், நான் அவருக்குத் தரும் செய்தி, என் நேரத்தை என் சம்மதமில்லாமலேயே அவர் திட்டமிடலாம் என்பதை. அதை அவர் அடிக்கடி செய்ய ஆரம்பிக்கும் போது எனக்கு ஒருவித அலுப்பு தோன்றுவது இயற்கையே. இதனால் எங்களின் நட்பின் இறுக்கம் நாளடைவில் குறைய வாய்ப்புள்ளது. அதற்குப் பதிலாக முதல் முதலில் அப்படி நடக்கும் போதே, எனக்கு மற்ற திட்டங்களும் இருக்கிறது, நாள் முழுக்க என்பதைவிட மாலை நேரம் முழுக்கச் சேர்ந்து செலவிடலாம் என்று பக்குவமாக எடுத்துக் கூறலாம். இல்லாவிடில், “இன்று பரவாயில்லை, உன் திட்டப்படி செய்யலாம், ஆனால், அடுத்த முறை என்னையும் கலந்து கொண்டு திட்டம் போடு, என் குடும்பம் மற்றும் மற்ற நண்பர்களோடும் நேரம் செலவிட வேண்டும்“ என்று அவருக்குப் புரிய வைக்கலாம். ஒருவேளை அதைத் தோழி கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தாலும், அவர் அடுத்தமுறை நம்மைக் கலக்காமல் எந்தத் திட்டமும் போட மாட்டார். இதுவே  நட்பு நீண்ட காலம் தொடர வழிவகுக்கும்.

உடல் : என் உடலில் எத்தனை தூரம் இன்னொருவர் உரிமை எடுத்துக்கொள்ளலாம் என்கிற எல்லை. ஒரு சிலருக்குத் தலையில் கை வைத்தால் பிடிக்காது. வீணாகத் தொட்டுப் பேசினால் பிடிக்காது. அது சாதாரணமான விஷயமாக இருந்தாலும், நான் வசதியாக உணராத பட்சத்தில் அதை மறுக்கும் உரிமை எனக்கு உண்டு. முக்கியமாகக் காதல் உறவில் என் இணையருக்கு என் உடல் மேல் உள்ள உரிமை, பொது இடத்தில் அல்லது திருமணத்திற்கு முன்பு எவ்வளவு தூரம் அனுமதிக்கலாம் என்பது என் தனிப்பட்ட முடிவே. இதில் எந்தப் பொது விதியும் இல்லை. காதல் உறவில் மட்டுமல்ல, குடும்பத்தின் மற்ற உறவுகளிடம்கூட இந்த எல்லைக்கோட்டை நிர்ணயிக்கலாம். எது எனக்கு அசௌகரியமாக உள்ளதோ அதை மறுக்கவும், சம்பந்தப்பட்டவரிடம் தெரியப்படுத்தவும் எனக்கு முழு உரிமை உண்டு.

எல்லைக்கோடு இன்னும் விரியும்…

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ’உன்னை அறிந்தால்…’ ‘உணர்வு சூழ் உலகம்’ ஆகிய தொடர்கள், ஹெர் ஸ்டோரிஸில் புத்தகங்களாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளன.