அந்தக் கிராமத்து வீடுகள் இன்னும் துயில் கலைந்திருக்கவில்லை. சிலுசிலுவென்று பனிக்காற்று. மெல்லிய புகை மண்டலமாக சாலைகள்.

ஈஸ்வரி கூந்தலைச் சுருட்டி கட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள்.

எப்போதும் அவள் விழித்துக் கொள்ளும் நேரம். அதுதான். அவள் நேராகப் பின்கட்டில் உள்ள மாட்டுக் கொட்டகைக்குச் சென்றாள். மாடுகளும் அவளது வருகைக்காகவே காத்திருப்பது போல, ‘ம்ம்ம்ம்மா…’ என்று அழைக்க, கூடவே கன்றுக்குட்டியும், ‘ம்ம்மா…’ என்று துள்ளிக் குதித்து ஆட்டம் காட்டியது.

அந்த மூன்று மாடுகளும்தான் அவளின் வாழ்வாதாரம். சொல்லப் போனால் அவள் வாழ்க்கை.  

“தோ வந்துட்டேன்” என்று ஆசையாக அவற்றின் முதுகை எல்லாம் வருடிக் கொடுத்தபோது, சினையாக இருந்த மாட்டின் குரல் மட்டும் உருக்கமாக ஒலித்தது.

 “என்னாச்சு செல்லா உனக்கு?” என்று மீண்டும் வருடிக் கொடுத்தாள். நேற்றிலிருந்து அதே போன்ற முக்கலும் முனகலுமாக ஒரு சத்தம்.

‘இங்கே பெண் இனத்திற்கு தாய்மை என்பது வரமா சாபமா?’ மகள் நிகாவல்லியை பெற்றெடுத்த கணத்தில் ஈஸ்வரிக்கு தோன்றிய கேள்வி இது. இன்று வரையில் அந்த கேள்விக்கு அவளுக்கு பதில் தெரியவில்லை.   

மீண்டும் செல்லாவின் பெருத்த வயிற்றை கவனித்தாள்.  

“சரி சரி… இன்னைக்கு உன்னைய மாட்டாஸ்பத்திரிக்கு கூட்டின்னு போறேன்” என்று ஆறுதலாகப் பேசிவிட்டு நைட்டியைத் தூக்கி இடுப்பில் கட்டிக் கொண்டு, மாட்டுச் சாணத்தை எல்லாம் அள்ளி கூடையில் போட்டாள்.

பின்னர் சுத்தமாகப் பெருக்கி கூட்டிவிட்டு கன்றை அவிழ்த்து விடவும், அது தாய்ப் பசுவிடம் பாய்ந்தோடியது. அது மடியை முட்டி முட்டி பால் குடிக்கும் அழகை சில நொடிகள் அமைதியாகப் பார்த்திருந்தவள், பின்னர் கன்றை அவிழ்த்து ஓரமாகக் கட்டிவிட்டு, பால் பாத்திரத்தை எடுத்துவந்தாள். 

சர் சர் என்று பாலை கறந்து முடித்து மீண்டும் கன்றைத் தாயருகே கட்டி, “குடி குடி… உனக்கும் பால் இருக்கு” என்று அதன் முதுகை வருடி கொடுத்தாள். 

பின்னர் வாசலுக்குக் கோலப் பொடி மற்றும் துடைப்பதைத் தூக்கிக் கொண்டு வந்த ஈஸ்வரி, முன் கண்ணாடியில் ‘மலர்விழி’ என்று கொட்டையாக பெயர் பொறிக்கப்பட்டிருந்த குட்டி யானை வண்டியை பார்த்ததுமே சாமியாடத் தொடங்கிவிட்டாள்.

“த்தா… எப்ப பாரு என் வூட்டு வாசலயே வந்து வண்டியை நிறுத்தி வைச்சுட்டு இருக்கான்? எத்தினிவாட்டி சொன்னாலும் இந்த ஆளுக்கு ஒரைக்கவே ஒரைக்காதா” என்று ஒரே கூவலில் அக்கம் பக்கத்து வீட்டினரின் காலை நேர அமைதியையும் சேர்த்து ஈஸ்வரி நிர்மூலமாக்கினாள்.

வாசலைப் பெருக்க வந்த எதிர் வீட்டுப் பெண், அந்த வண்டி நிற்குமிடத்தை பார்த்தாள். சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஊருக்குப் புதிதாகக் குடி வந்த யோகேஸ்வரனின் வண்டிதான் அது. அவனுடைய கெட்ட நேரம். ஈஸ்வரி வீட்டுப் பக்கத்தில் குடிவந்திருக்கிறான்.  

அந்த வண்டியின் முன்பகுதி கொஞ்சமாக இவள் வீட்டின் முன்னே தள்ளி வந்துவிட்டாலும் போதும். கூப்பாடு போடத் தொடங்கிவிடுவாள். இன்றும் அதே கதைதான்.

இவளைப் பற்றி தெரிந்தும், அவனும் அடிக்கடி இதே தவறைச் செய்கிறான்.  

இறுதியாக, ‘ஹும் நமக்கு எதுக்கு வம்பு’ என்று துடைப்பத்தைத் தட்டி வாசலைப் பெருக்கி நான்கு கம்பியை இழுத்துவிட்டு, அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

ஆனால் ஈஸ்வரி நிறுத்தவில்லை. அவள் குரல் வீட்டிற்குள் படுத்திருந்த குணசேகரனின் ஏகாந்த தூக்கத்தைக் கலைத்துவிட்டது. 

‘இவளுக்கு இதே வேலையா போச்சு’ என்று தலையணையை எடுத்து தலைக்கு மேல் வைத்து காதுகளை பொத்திக் கொண்டான். அப்போதும் அவள் குரல் கேட்டது.

அதற்கு மேல் தூங்க முடியாது என்று எழுந்து அமர்ந்தான். அவனின் எட்டு வயது மகள் நிகா போர்வைக்குள் சுருண்டிருக்கவும், அவளைச் சரியாக இழுத்து படுக்க வைத்து போர்வையைப் போர்த்திவிட்டான்.

பின்னர் எழுந்து வெளியே வந்தவன், “காலங்காத்தால என்னத்துக்குடி இப்படி ஊரு கூட்டினு இருக்கவ… புள்ள தூங்கினு இருக்குது இல்ல” என்றான்.

அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து விட்டு, “குடிச்சுட்டு வந்து நடுசாமத்துல நீ கத்துவியே அதை வுடவா” என்று குத்தவும், அவன் முகம் சுண்டிவிட்டது.

 அவள் துடைப்பத்தை தூக்கி பிடித்து கொண்டு “போய் அந்த ஆளை வண்டியை நவுத்தி வுட  சொல்லு, நான் கடையை துறக்கணும்” என்றாள். 

“இந்த கத்து கத்துற இல்ல, போய் நீயே சொல்றது” என்றதும் அவள் உதட்டைச் சுழித்து, “காலங்கத்தால அவன் மூஞ்சில எல்லாம் போய் என்னால முழிக்க முடியாது” என்றாள்.

கைலியை சரியாக இழுத்து கட்டிக் கொண்ட குணா பக்கத்து வீட்டுக் கதவைத் தட்ட,  வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்து நின்றாள் யோகேசின் மனைவி ரேகா.

“யோகேசு இல்லயாமா” 

“தூங்குறாரு அண்ணா” 

“வண்டியை கொஞ்சம் நவுத்தி வுட சொல்லுமா”

“ஓ… சரிங்க அண்ணே” என்று தலையசைத்து விட்டு உள்ளே சென்றவள், “மாமா… மாமா…” என்று தன் கணவனிடம் குழைவது குணாவின் காதில் விழுந்தது. 

‘இப்படி எல்லாம் ஒரு நாளாச்சும் நம்மள இந்த ஈஸ்வரி, ஆசையா கூப்பிட்டு இருக்குமா’ என்று எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வீட்டிற்கு நடந்தான்.

அதற்குள் ஈஸ்வரி கோலம் போட்டு முடித்திருக்க, “நான் சொல்லிட்டு வந்திருக்கேன்… வந்து நவுத்திடுவான்” என்றான்.

“என்னது சொல்ட்டு வந்தியா… நல்லா நாலு வார்த்தை நாக்கை புடுங்கிக்குற மாதிரி கேட்குறதை வுட்டுட்டு” என்று கடுகடுத்தாள்.

“அவன் பெஞ்சாதிதான் வந்து கதவை துறந்துச்சு… பாவம் புள்ளத்தாச்சி பொண்ணு” என்றதுமே ஈஸ்வரி நொடித்துக் கொண்டு, “ஆமாமா… அடுத்த வூட்டு பொம்பள மேலதாயா ஒனக்கு எல்லாம் அக்கறை பொத்துகின்னு வரும்” என்ற விதத்தில் கப்சிப்பென்று அடங்கி வீட்டிற்குள் புகுந்துவிட்டான்.

அதற்கு பிறகு அவள் தன் வீட்டின் முன்னே இருந்த டீ கடை ஷட்டரைத் திறந்து, பெஞ்சுகளை எல்லாம் அனாயாசமாகத் தூக்கி வந்து வாசலில் போட்டுக் கொண்டிருக்க, யோகேஸ் கொட்டாவி விட்டு கொண்டே தன்னுடைய வண்டியை நகர்த்த வந்தான்.

‘சிலருக்கு எல்லாம் எவ்வளவு சொன்னாலும் ஒரைக்கவே ஒரைக்காது போல… மானங்கெட்ட சென்மங்க’ என்று அவனைப் பார்த்தபடி சொல்லி ஓரமாக ஈஸ்வரி காரி உமிழ, அவனுக்கு தாறுமாறாகக் கோபம் ஏறியது.

ஆனால் அவளைத் திரும்பிக் கூட பார்க்காமல், வண்டியை நகர்த்திவிட்டு வீட்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டான்.

அவளின் அந்தப் பார்வையை மீண்டும் எதிர்கொள்ள அவனுக்குத் திராணியில்லை.

அவன் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்த ரேகா, “ஆமா அந்த அக்காவைப் பத்தி தெரிஞ்சும் நீ எதுக்கு மாமா அந்த பக்கமா வண்டியை வுட்ட” என்று கேட்டாள்.

“அது மோகன் அண்ணா ஆட்டோ நின்னுட்டு இருந்துச்சு. அதான் வண்டியை கொஞ்சம் தள்ளி முன்னே வுட்டேன். காலையில சீக்கிரம் கிளம்பிடலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள” என்று பேசி கொண்டிருக்கும் போதே அவன் முகம் சுணங்கியது.

“என்னவோ… இந்த வூட்டுக்கு நம்ம வந்த முத நாளில இருந்து அந்த அக்கா இப்படிதான் பண்ணுது, அப்படி என்னதான் நம்ம மேல அதுக்கு காண்டோ” என்று ரேகா கேட்க யோகேஸ் முகம் மாறியது.

 “அடுத்த தரம் இப்படி எதுனாச்சும் வம்பு இழுக்கட்டும், நானும் நல்லா கேட்டு வுட்டுறேன்” என்று ரேகா தொடர்ந்தாள்.   

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் லோடு எடுக்க போவணும். போ, போய்… வாச தெளிச்சு கோலத்த போடு” 

ரேகா பரபரவென்று வேலையைத் தொடங்கிவிட, அவனும் குளித்து தயாராகி வந்திருந்தான். 

வேகவேகமாக இட்லி ஊற்றி சட்டினி அரைத்து வைத்தாள்.

அவன் உண்டு முடித்ததும், “உங்க பொண்ணை எழுப்பி சொல்லிட்டு போங்களேன்” என்று மெதுவாக கூற, “நேரமாவுது ரேகா” என்று சாவியை எடுக்க போனான். 

“எம்புட்டு நேரமாவ போது… எழுப்பி சொல்லிட்டு போங்க… பொறவு  காலையிலயும் அப்பாவை பார்க்கலனு அழ ஆரம்பிச்சிருவா” எனவும் அவன் மனம் மாறியது.

படுக்கையிலிருந்த மகள் அருகே சென்றவன், “மலரு… மலரு குட்டி…” என்று கொஞ்சி கெஞ்சி எழுப்பவும், மெதுவாக கண்களை பிரித்தாள் அவன் செல்ல மகள் மலர்விழி.

“பாப்பா ஸ்கூலுக்கு போக வேண்டாமா?”  

“ம்ம்ம் போகணும்” அவள் குட்டி மூக்கை சுருக்கி கூற, “சரி சரி… எழுந்து கிளம்புங்க… அப்பா சாயங்காலம் வரும் போது பாப்பாவுக்கு பிடிச்ச பன் பட்டர் ஜாம் வாங்கிட்டு வரேன்”

“உஹும்… எனக்கு கேக்குதான் வேணும்” அரைத்தூக்கத்திலும் அவள் இதை அழுத்தமாகச் சொல்ல, அவன் முகம் புன்னகை பூத்தது.  

“சரி வாங்கின்னு வரேன்… அப்பாவுக்கு நேரமாச்சு… கிளம்பட்டுமா”

மீண்டும் அவள் முகம் சுருங்க, மகளின் நெற்றி முடியை ஒதுக்கி முத்தமிட்டவன், “எனக்கு” என்று கன்னத்தைத் திருப்பிக் காட்ட, அவளும் முத்தம் பதித்தாள்.

மகிழ்வுடன் இந்த காட்சியைப் பார்த்த ரேகாவிற்கு சட்டென்று இடையில் இலேசாக வலி வெட்டியது.

‘பிரசவ வலியா இருக்குமா… இன்னும் ஒரு மாசம் இருக்கே… அதெல்லாம் இருக்காது’ என்று அவள் யோசிக்கும் போதே, “கிளம்புறேன் ரேகா” என்று விட்டு அவன் வண்டியைக் கிளப்பிச் செல்ல, அவள் தன் வலியை மறந்து கையசைத்தாள்.

அதன் பின் மகளையும் தயார் செய்து அரசுப் பள்ளியில் கொண்டு விட்டு நடந்து வரும் போது மீண்டும் வலிக்கத் தொடங்கியது. மலர்விழி பிறந்த போது ஏற்பட்ட வலி போல இது இல்லையே.  

இது பிரசவ வலிதானா என்று ஊர்ஜிதமாகத் தெரியாமல் கணவனை அழைத்து, அவன் வேலையைக் கெடுக்கக் கூடாது என்று நினைத்தாள். ஆதலால் சூடாகத் தண்ணீர் வைத்து இடுப்பில் ஊற்றிக் கொண்டாள்.

மலர்விழி பிரசவித்த போது அம்மா ஒரு கசாயம் வைத்துத் தந்தாளே?  அது என்னென்ன பொருள் என்று யோசித்து அவளே கசாயம் போட்டுக் குடித்தாள். வலி குறையவில்லை. அதேநேரம் அதிகரிக்கவும் இல்லை.

‘இந்த நம்பரை உன் போன்ல பதிஞ்சு வைச்சுக்கோ… அவசரம்னா உடனே கூப்பிடு’ என்று செவிலியர் தேவிகா கொடுத்த எண்ணைத் தன் பையிலிருந்து துழாவி எடுத்தாள். கூடவே தேவையான துணிகள் பொருள்கள் எல்லாம் எடுத்து பையில் வைத்துக் கொண்டாள்.

மீண்டும் வலித்தால் அழைக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் சட்டென்று வலி நின்றுவிட்டது. ‘இது பொய் வலிதான்’ என்று நினைத்தாள். மதியம் அவளுக்கு மட்டும்தானே என்று கொஞ்சமாகச் சாதம் வைத்து ரசமும் கருவோடும் வறுத்து வைத்து உண்டாள்.

களைப்புடன் கதவெல்லாம் அடைத்துவிட்டு கண்களை மூடி சாயப் போகும் போதுதான் அவசரமாக சிறுநீர் கழிக்கும் உந்துதல் அவளுக்கு உண்டானது. 

தன்னை சமாளித்தபடி எழுந்து போய் சிறுநீர் கழித்து விட்டு வந்தாள். 

மீண்டும் அதே உணர்வு. கூடவே, இடுப்பு எலும்பே பிளவு பட்டுவிடுவது போல வலிக்கவும் தொடங்கியது. உள்ளே இருக்கும் சிசுவின் தலை யோனியில் வந்து முட்டுவதை நன்றாக உணர்ந்தாள்.

தொடரும்…

செயற்கை நுண்ணறிவு படங்கள்: மோனிஷா

படைப்பாளர்

மோனிஷா

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.