அத்தியாயம் 15
“இப்படி ரத்தம் வர அளவுக்கா அடிச்சு வைப்பான், கடவுளே! காயம் வேற நல்லா ஆழமா பட்டிருக்கு” என்று பேசியபடி, தேவிகா, ஈஸ்வரியின் நெற்றி காயத்தைச் சுத்தம் செய்தாள்.
“கட்டு கட்டப் போறேன். கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோ” என்று சொல்ல, ஈஸ்வரியிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. அப்படியே மரக்கட்டைபோல அமர்ந்திருந்தாள். வந்ததிலிருந்தே அவளிடம் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. கோபம், அழுகை இப்படி எதுவும்.
விடியற்காலையில் மகளுடன் ஈஸ்வரி தன் வீட்டு வாசலில் வந்து நின்றதைப் பார்த்ததுமே தேவிகா பதறிப்போனாள். அதுவும் நெற்றியில் ரத்தக்காயம் வேறு!
‘கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?’ ஈஸ்வரி வந்து நின்ற கோலமே தேவிகாவிற்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்துவிட்டது. அவளை உள்ளே அழைத்து மருந்து வைத்துக் கட்டிமுடிக்கும் வரை எதுவும் கேட்கவில்லை. இவளும் எதுவும் சொல்லவில்லை.
“சரி நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று எழுந்து கொண்ட தேவிகா, அப்படியே நின்றுவிட்டு, “எதுவும் ராத்திரி சாப்பிட்டீங்களா இல்லயா?” என்று வினவினாள்.
“சாப்பிட்டு முடிச்சு படுக்கைய எல்லாம் போட்ட பொறவுதான் க்கா இந்த அலப்பறை எல்லாம் நடந்துச்சு” என்றாள் ஈஸ்வரி மெதுவாக.
“சரி நிகாவுக்கு பால் கலக்கட்டுமா, குடிப்பா இல்ல?”
“உங்களுக்கு எதுக்கு க்கா சிரமம்?”
“இதுல என்ன சிரமம்?” என்று தேவிகா எழுந்து செல்ல, ஈஸ்வரியும் பின்தொடர்ந்தாள்.
“நீ எதுக்கு என் பின்னால வர்ற, நீ உட்காரு. நான் போட்டு எடுத்தாரேன்”
“ஆமாக்கா உங்க வூட்டுகாரரு”
“அவரு நைட் ஷிப்ட் போயிருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு” என்றதும், ஈஸ்வரி சங்கடமாகப் பார்த்தாள்.
“அவரு வந்தாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாரு. நீ போய் ஹால்ல இரு. நா டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று அனுப்பிவிட்டாள்.
மீண்டும் அந்தச் சிறிய முகப்பறைக்கு வந்தாள் ஈஸ்வரி. சுகாதார நிலைய வளாகத்திற்குள்ளேயே அமைந்திருந்த வீடு அது. ஒரே ஒரு முறை வந்திருக்கிறாள். ஆனால் உள்ளே வந்தது இல்லை.
மற்றுமொரு அறையில் நிகா, தேவிகாவின் மகன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியைப் பார்த்த ஈஸ்வரிக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
குணா அவளை மூர்க்கமாகத் தள்ளிய கணத்தில், ‘அம்ம்ம்ம்மா’ என்று நிகா அலறிய அந்த அலறல்… இப்போது நினைத்தாலும் ஈஸ்வரிக்கு ஈரக்குலையே நடுங்கியது. தன் வலியையும் மீறி மகளை ஓடிச் சென்று அணைத்துப் பிடித்தாள்.
அதன் பிறகும் குணா அமைதியாகவில்லை. காதால் கேட்க முடியாதளவு நாராசமாகப் பேசினான். மகளின் செவியை அழுந்த மூடி மடியில் சரித்துக் கொண்டாள்.
போதையில் உளறி முடித்து அவன் படுத்துவிட, “ஏன்ம்மா அப்பா உன்னை அடிச்சாரு? நேத்து எல்லாம் நல்லாதானமா இருந்தாரு. நம்மள சினிமாவுக்கு எல்லாம் கூட்டிட்டி போனாரு. போன மாசம்கூட கடைக்கு கூட்டிட்டு போய் புதுத்துணி எல்லாம் வாங்கி கொடுத்தாரு. திரும்ப ஏன்மா இப்படி ஆயிட்டாரு?” என்று வேதனையுடன் மகள் கேட்ட கேள்விகளுக்கு என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.
‘பொம்பள ஜென்மமா பொறந்துட்டாலே இப்படித்தான்’ என்று சொல்ல நினைத்த வார்த்தைகளைத் தனக்குள்ளாக விழுங்கிக் கொண்டவள், “எல்லாம் குடி… குடிச்சுட்டு வந்தாலே உங்க அப்பனுக்கு மூளை கெட்டு போயிடுது” என்று சொல்லி மகளைச் சமாதானம் செய்த மடியில் சரித்து உறங்கவைத்தாள். அப்படியே அவளும் சுவரில் சாய்ந்து உறங்கவிட்டாள்.
எப்போதும் போல விடிவதற்கு முன்பாகவே அவளுக்கு விழிப்பு வந்தது. குணாவை ஒரு நொடி கொலைவெறியுடன் பார்த்தவள், அதன்பின் தாமதிக்கவில்லை. தன் பர்ஸில் காசை நிரப்பினாள். புடவையைச் சரி செய்து கட்டினாள்.
மகளைச் சத்தமில்லாமல் எழுப்பி அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட, கண்களை நிமிட்டியபடி, “ஆயா வூட்டுக்குப் போறோமாம்மா?” என்று கேட்டாள் நிகா.
“இல்ல, ஆஸ்பத்தரிக்கு போறோம்”
“உனக்குத்தானே ம்மா அடிப்பட்டு இருக்கு. நான் எதுக்கு?”
“அம்மாகூட துணைக்கு வரமாட்டியா?” என்று கேட்டதுமே, “வருவேன் ம்மா” என்ற பதிலுடன் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் மகள்.

அந்தப் பிடிதான் அவள் வாழ்வின் ஒரே பற்றுக்கோல். இவளும் இல்லையென்றால் அவள் வாழ்க்கையில என்ன இருக்கிறது. ஏன்? இன்று வரையில் அவள் உயிருடன் இருந்திருப்பாளா என்பதுகூட சந்தேகம்தான்.
ஆனால் கணவன் மாறிவிட்டான் என்று அறிந்த கணம் வாழவேண்டுமென்ற ஆசை துளிர்விட்டது. மனதில் மட்டுமில்லை. அவளுக்குள்ளும்!
ஈஸ்வரி வயிற்றில் கையை வைத்துப் பார்த்தாள். அப்போது தேவிகா சமையலறையிலிருந்து வெளியே வர, இவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
குழந்தைகளுக்குப் பாலை கொடுத்துவிட்டு அவளிடம் வந்த தேவிகா, “இந்தா ஈஸ்வரி நீயும் எடுத்துக்கோ” என்றாள். அதனை வாங்கும் போது எங்கேயோ தூரமாக, ‘ம்ம்ம்ம்ம்மா’ என்று மாட்டின் சத்தம் கேட்டது.
‘ஐயோ! இந்த கலவரத்துல என் மாடுங்கள பார்க்க மறந்துட்டேன்” என்று ஈஸ்வரி அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள்.
அத்தனை நேரம் கல்லாக அமர்ந்திருந்த ஈஸ்வரி அப்படிக் கதறி அழுவதைப் பார்த்து தேவிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
டம்ளரை ஓரமாக வைத்து விட்டு அவள் தோளைப் பற்றி, “அழாத ஈஸ்வரி” என்று தடவிக் கொடுக்க, சில நிமிடங்களில் அழுது ஓய்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“சரி டீயைக் குடி” என்று மீண்டும் டம்ளரை எடுத்துக் கொடுத்தாள் தேவிகா.
அவள் அதனை அமைதியாக வாங்கிப் பருகி முடிக்க, “என்னாச்சு?” என்று தேவிகா மெதுவாக விசாரித்தாள்.
“புதுசா எதுவும் நடக்கல க்கா. எல்லாம் அதே பழைய கதைதான்”
“நீ கர்ப்பமா இருக்கேன்னு சொன்னதாலயா?”
“நான் அந்த ஆளுகிட்ட சொல்லவே இல்லயே”
“அடிப்பாவி… ஏன் சொல்லல?”
“நேத்து ராத்திரி அந்த ஆளு வந்து நின்ன கோலத்துக்கு…” என்று நிறுத்தி கெட்ட வார்த்தைகளாக நிந்தித்தவள் சட்டென்று, “நான் சொல்லல, இனிமே சொல்லவும் போறதில்ல” என்றாள். அவள் குரல் உறுதியுடன் ஒலித்தது.
தேவிகா அதிர்ந்தாள். அதுவும் நேற்று கருத்தரிப்பு சோதனை செய்ய வந்த போது, “என்ன இரண்டு மாசம் முடிஞ்சிருக்கு. இப்பதான் வர” என்று கேட்டதற்கு, “வைச்சுச்கலாமா வேணாமானு குழப்பத்துல இருந்தேன் க்கா” என்றாள்.
“அது சரி, இப்போ என்ன முடிவு பண்ணி இருக்க?”
“வைச்சுக்கலாம்னுதான்” என்று சொல்லி முகம் மலர்ந்தாள். லேசாக வெட்கப்பட்டாள். “அவரு ரொம்ப மாறிட்டாருக்கா” என்று மனமகிழ்வுடன் சொன்னபோது அவள் முகத்தில் அத்தனை தேஜஸ்.
ஈஸ்வரியா அது என்று ஆச்சரியிக்கும் விதத்தில் நடந்து கொண்டாள். ஆனால் அத்தனையும் ஒரே இரவில் தொலைந்து போயிருந்தன.
“எனக்கு அகல்யா டாக்டரை பார்த்து பேசணும்” என அவள் சொல்ல, தேவிகாவின் முகம் மிரட்சியாக மாறியது.

அன்று அகல்யா அவர்கள் சுகாதார நிலையத்திற்கு வந்ததுமே தேவிகா அவசர அவசரமாக ஈஸ்வரி கதையெல்லாம் ஒப்புவித்து முடித்து,
“ஈஸ்வரி சொன்னான்னு நீங்க கலைக்குறேனு எதுவும் ஒத்துக்காதீங்க. ஏதாவது பேசி கீசி சமாளிச்சு அனுப்பிடுங்க மேடம்” என்றாள்.
கடுப்பான அகல்யா, “நீ அவளுக்காக முடிவு எடுக்காத, அவதான் அவளுக்கான முடிவை எடுக்கணும்” என்றாள்.
“அது இல்ல மேடம். இரண்டு மாசம் முன்னாடி அந்த சகுந்தலா பொண்ணு வூட்டுக்கு தெரியாம அபார்ஷன் பண்றேன்னு வந்து நின்னுச்சு. நீங்களும் பண்ணிட்டீங்க. அப்புறம் அவ சொந்தபந்தமெல்லாம் நம்மகிட்ட வந்து ஏறுனானுங்க. அதுவும் அவ புருஷன்காரன் என் புருசனை அடிக்கவே அடிச்சுட்டான். அது ஊருக்குள்ள எம்புட்டு பெரிய கலவரமாச்சுனு உங்களுக்கே தெரியும்… அதான் வேண்டாம்… திரும்பவும் அதே மாதிரி வம்புல மாட்டிக்க வேண்டாம்” என்று தேவிகா எச்சரிக்க, அகல்யாவின் நினைவிலும் அப்போது நடந்த சம்பவங்கள் ஓடின.
துணை இயக்குநர் வரை அந்தப் பிரச்னை சென்றதும் அவர் இவளை நன்கு காய்ச்சிய எடுத்ததையும் அவள் மறக்கவில்லை.
“சரி நீ ஈஸ்வரியை வர சொல்லு, நான் பேசுறேன்” என்றாள்.
ஈஸ்வரியை உள்ளே விட்டு, தேவிகா வெளியே நின்று கொண்டாள். எங்கே ஈஸ்வரி தன்னையே வக்காலத்திற்கு அழைத்து கொள்ள போகிறாள் என்று பயந்து!
சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் பேசி முடித்துவிட்டிருப்பார்கள் என்று எண்ணி தேவிகா நுழையவும், “சிக்ஸ்டி டேஸ் மேல ஆகிடுச்சு. இனிமே மாத்திரைல கலைக்க முடியாது. டி என் சி தான் பண்ணனும். ஒண்ணும் பிரச்னை இல்ல… இன்னைக்கே பண்ணிடலாம்” என்று அகல்யா சொல்லவும் சரியாக இருந்தது. அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“மேடம்”
“ஈஸ்வரியை அழைச்சிட்டு போய் ரெடி பண்ணு” தேவிகா வேண்டாமென்று ஜாடை செய்ய, அகல்யா மறுபக்கமாகத் தலையசைத்தாள்.
எவ்வளவோ அவளும் முயன்று பார்த்தாள். ஆனால் ஈஸ்வரி மசியவில்லை.
“நீ உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்குற ஈஸ்வரி”
“எது உணர்ச்சிவசப்படுறேனா… நேத்து ராத்திரி நான் இருந்த நிலைமைல நீங்க இருந்திருந்தா உங்களுக்கு என் கஷ்டம் புரிஞ்சிருக்கும் டாக்டர்… ஆனா உங்களுக்கு எல்லாம் ஏன் அந்த மாரியான நிலைமை வர போவுது” என்று ஈஸ்வரி விரக்தியாகப் பேசினாள்.
“எனக்கு உன் பிரச்னை புரியுது ஈஸ்வரி”
“இல்ல டாக்டர்… உங்களுக்குப் புரியாது… புரியவே புரியாது…. அப்பா செத்துப்போன பொறவு நாலு பொம்பள புள்ளைங்கள வளர்க்க எங்க அம்மா எம்புட்டு போராடுச்சுன்னு உங்களுக்கு நான் சொன்னாலும் புரியாது. சொந்த அண்ணன் தம்பிங்ககிட்டயே அசிங்கப்பட்டுச்சு எங்க ம்மா…
அதெல்லாம் பார்த்து வளர்ந்தவ நான். தங்கச்சிங்கள நல்லபடியா கரை சேர்க்க நம்ம அம்மாவுக்கு துணையா இருக்கணும்னுதான், நான் வைராக்கியமா படிச்சேன்.
ஆனா என் நேரமோ என்ன எழவோ, என் பின்னாடி ஒரு பொறம்போக்கு சுத்துனதை என் மாமன்காரன் பார்த்து தொலைச்சு… நான் எங்க அவனை இழுத்துன்னு ஓடிட போறேன்னு இவங்களா ஒரு கற்பனையை பண்ணிட்டு என் படிப்பை நிறுத்திட்டாங்க…
அதோட விட்டாங்களா, இந்த குடிகாரப் பயலுக்கு என்னைய வம்படியா கட்டி வைச்சுட்டாங்க…
நிகாவ மட்டும் நான் பெத்துக்காம இருந்திருந்தனா… இந்த ஆளை எல்லாம் அப்பவே வுட்டுட்டு போயிருந்திருப்பேன்.
தலையெழுத்து, திரும்பியும் அதே மாதிரி தப்பை செய்ய கூடாதுன்னு நான் ரொம்ப சாக்கிரதையா இருந்தேன்.
இப்போ இரண்டு மாசமா இந்த ஆளு ஒழுங்கா இருக்கான்னு… நம்பி… ஏமாந்து தொலைச்சுட்டேன். படுபாவி” என்றபடி தலையயிலடித்துக் கொண்டாள்.
“ஏ ஈஸ்வரி… என்ன பண்ற தலையில் அடிப்பட்டு இருக்கு” என்று எழுந்து வந்து அவள் கையை பிடித்துத் தடுத்தாள் .
தொண்டைய செருமிக் கொண்டு மீண்டும் ஈஸ்வரி தொடர்ந்தாள்.
“நேத்திக்கு அந்த ஆளு திரும்பவும் குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்ணதோ, அடிச்சதோ எதுவுமே என்னை பெருசா பாதிக்கல. ஆனா அவன் அடிச்ச அடில ஏடாகூடமா போய் விழுந்து கிழுந்து அடிப்பட்டு நான் ஒருவேளை போய் சேர்ந்திருந்தா…”
“ஈஸ்வரி, ஏன் இப்படி எல்லாம் பேசுற”
“நான் ஒன்னும் நடக்காததை சொல்லலயே டாக்டர்… யாருக்கு எப்போ எப்படி சாவு வரும்னு நம்ம யாருக்கும் தெரியாது… சாவு வர்றது பத்தி இல்ல. ஆனா நான் இல்லாம என் புள்ள கெதி என்ன ஆகுமோனு நினைச்சாதான் கெதக்குனு இருக்கு. எப்படியாச்சும் அதை நல்லபடியா வளர்த்து உங்கள மாதிரி நல்ல படிப்பு படிக்க வைச்சு, சொந்தக் காலுல நிற்க வைச்சுட்டா போதும்…
இன்னொண்ணு எல்லாம் வேணாம், அதை பெத்துக்கவோ வளர்க்கவோ இனிமே என் உடம்புலயும் சரி, மனசுலயும் சரி தெம்பும் இல்ல, தகிரியமும் இல்ல” என்று முடிக்க, அகல்யாவிற்கு அதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
தேவிகாவிடம், “ஈஸ்வரி அவசரத்துல எல்லாம் முடிவு எடுக்கல, நிதானமா யோசிச்சுதான் முடிவு செஞ்சிருக்கா” என்றாள்.
“அப்படினா ஈஸ்வரியை மெடிக்கல் காலேஜ் அனுப்பி விட்டுருவோம். நம்ம எதுக்கு..?” என்று அப்போதும் தேவிகா அதே பதற்றத்துடன் பேச, அகல்யா கடுப்பானாள்.
“என்ன பேசுற..? அங்கே ட்ராவல் பண்ணி போயிட்டு வரவே ஒரு நாளாகிடும். அப்புறம் அவங்க அட்மிட் பண்ணி, டேட் பிக்ஸ் பண்ணி… அதெல்லாம் வேண்டாம். நானே பண்றேன்” என்றாள்.
“இல்ல மேடம்… இது பெரிய பிரச்னைல கொண்டு போய் விட்டுடும்”
“பதினெட்டு வயசுக்கு மேல இருக்க பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய அந்த பெண்களோட சம்மதம் இருந்தாலே போதும்னு சட்டமே சொல்லுது. ஆனாலும் நம்ம அந்த ரூல்ஸ் பாலோ பண்றதே இல்ல… போய் உங்க அம்மாவை கூட்டிட்டு வா, புருசனை கூட்டிட்டு வானு அந்த பெண்களை மன உளைச்சலுக்கு தள்ளறது இல்லாம எவ்வளவு முடியுமே அவ்வளவு அலைகழிக்குறோம்” என்று அகல்யா ஆதங்கமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது அவளின் செல்பேசி சத்தமிட்டது. அதில் ‘சந்துரு’வின் பெயர் ஒளிர்ந்தது.
“எனக்கு அட்வைஸ் பண்றதை நிறுத்திட்டு போய் நான் சொன்னதை செய்” என்ற அதிகாரமாகச் சொல்ல, தேவிகா முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.
அதன்பின் அகல்யா செல்பேசி அழைப்பை ஏற்க, “ஏ அகல்… உனக்கு நாளைக்கு ஆஃப் தானே?” என்று வினவினான்.
“ம்ம்ம்… ஆமா ஏன்?”
“நாளைக்கு நான் ஒரு வேலையா சென்னை போறேன். நீயும் வந்தா உங்க வீட்டுலயும் எங்க வீட்டுலயும் ஒண்ணா வரவழைச்சு பேசிடலாம்” என்றான்.
“அப்படிலாம் வர முடியாது, ஏதாவது எமர்ஜென்சினா நான் போக வேண்டி இருக்கும்”
“ஒரு சின்ன பி எச் சி க்கு இவ்வளவு சீனா, சும்மா ஏதாவது சொல்லிட்டு இருக்காத, கிளம்பி வா… இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் எப்பவும் கிடைக்காது”
“சாரி சந்துரு”
“ப்ச்… அகல்”
“இல்ல நம்ம கல்யாணம் பண்ணிக்க வேணாம்” என்றாள்.
“என்ன சொன்ன?”

“எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல… உங்களனு இல்ல. பொதுவாவே எனக்கு இந்த கல்யாணம்கிற கமிட்மென்டல இஷ்டம் இல்ல. ஐ எம் சாரி” என்று அவள் சொல்ல சில நொடிகள் எதிர்புறத்தில் எந்த சத்தமும் இல்லை.
“சந்துரு”
“அன்னைக்கும் இதே போலத்தான் என்னை நீ அவமானப்படுத்துன” என்ற அவன் குரல் கறாராக ஒலித்தது.
“சந்துரு… ஐ எம்” என்ற அவள் முடிப்பதற்கு முன்பாக அவன் அழைப்பைத் துண்டித்துவிட, அவள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். மூன்று மாதமாகச் சொல்ல நினைத்த விஷயத்தை ஒரு வழியாக இன்று சொல்லிவிட்டாள்.
(தொடரும்)
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.




