கேள்வி:

எங்கள் சுட்டிப் பையனுக்கு 9 மாதம் ஆகப்போகிறது. என்ன உணவுகள் தரலாம்? கேட்க ஆவலாக உள்ளோம்!

பதில்:

குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது ஒரு கலை. இதன் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு விட்டால் மிக எளிதில் பழகிவிடலாம்! குழந்தைக்கு பசி வரும் போது அதை புரிந்து கொண்டு அவனுக்கு வேண்டிய அளவு நாம் ஊட்ட வேண்டும். இதை  Responsive Feeding என்கிறோம். குழந்தைக்கு ஒரு வாய்கூட அதிகமாக நம்மால் ஊட்ட முடியாது. ஒருவாய் குறைவாகவும் இருக்கக்கூடாது.  இதை செய்கையால், உடல் மொழியால் அவன் வெளிப்படுத்தி விடுவான்.

இணை உணவுகள் ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டியவை:

F – Frequency   – எத்தனை முறை

A -Amount       – எவ்வளவு

V –  Varieties  -பலவிதமாக

Thickness – எவ்வளவு மசித்து

A  – Active Responsive Feeding – குழந்தையின் பசியை புரிந்து

H – Hygiene – சுத்தமாக.

9 மாதங்கள் முடியும் நேரம் குழந்தை கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பயன்படுத்தி சிறு சிறு பொருள்களைப் பிடிக்க ஆரம்பிக்கும். Pincer Grasp என்று இதை சொல்வோம். குழந்தை தானாகவே எடுத்து சாப்பிட பழகுவதற்கு மிகச் சரியான காலகட்டம் இதுதான்! பொரி, பொடியாக நறுக்கி வேக வைத்த கேரட், உருளைக்கிழங்கு, பருக்கைகளாகச் சாதம் போன்றவற்றை தட்டில் போட்டு வைத்து எடுத்துச் சாப்பிட பழக்க வேண்டும்.

ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன் தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மை ஆகிய நோய்களுக்கான MMR தடுப்பு ஊசி போடப்பட வேண்டும். அதன் பிறகு முட்டை ஊட்டி விட ஆரம்பிக்கலாம். முட்டையை அவித்து தர வேண்டும். முழுவதும் வேக வைக்காத முட்டை குழந்தைக்கு நல்லதல்ல.ஆஃப் பாயில் போன்றவற்றைக்கூட ஒரு வருடத்துக்குப் பிற தர வேண்டும் சமைப்பதால் முட்டையில் உள்ள கொழுப்புகள் மற்றும் புரதங்கள் ஓரளவு மாற்றப்பட்டு குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆகும் நிலையை அடைகின்றன.  அதனால் வளர்ச்சியும், முதிர்ச்சியும் அடையாத குழந்தையின் செரிமானப் பாதை அதை எளிதில் ஜீரணிக்கிறது. எந்த நுண்ணூட்டச் சத்தும் வீணாகாமல் குழந்தைக்கு கிடைக்கிறது.

வேக வைக்கும் வெப்பத்தால் முட்டையில் உள்ள சில நோய் கிருமிகள் (உதாரணம் Salmonella) அழிகின்றன. முட்டையில் பயோடின், விட்டமின் B7 அதிகமாக இருக்கிறது. அவிடின் என்ற ஒரு பறவையினப் புரதமும் இருக்கிறது. இதில் நமக்கு பயோடின் அவசியம், அவிடின் தேவையற்றது. வேகாத முட்டையில் இவை இரண்டும் இணைந்து இருக்கின்றன. வேக வைக்காமல் முட்டையை சாப்பிட்டால் அவிடினுடன் சேர்ந்து பயோடினும் செரிமானமாகாமலேயே வெளியேறிவிடும். முட்டையை வேக வைக்கும் போது அவை பிரிகின்றன. நமது உடலுக்கு தேவையான பயோடின் குடலில் உறிஞ்சப்படுகிறது. அவிடின் கழிவாக வெளியேற்றப்படுகிறது. பயோடின் நமது தோல், முடி ஆகியவற்றின் நலத்தையும், பொதுவாக உடல் நலத்தையும் பேணுகிறது.

குழந்தைக்கு முதலில் சிறிது  சிறிதாக மஞ்சள் கரு தான் பழக்க வேண்டும். இதில் ஆல்புமின் என்ற புரதம் அதிகமாக உள்ளது. கொழுப்பு சத்தும் அதிகம் தான். ஆனால் ஒவ்வாமை உண்டாக்கும் குளோடிலின் புரதம் குறைவு. எனவே மெதுவாக மஞ்சள் கருவை பழகிவிட்டு பிறகு வெள்ளைக் கரு தரலாம். 15 -20 நாட்கள் மஞ்சள் கருவை சாதத்துடன் பிசைந்து ஊட்டிப் பழக்கலாம். அதிக புரதத்தையும், கொழுப்பையும் செரிக்க தேவையான நொதிகள் (Pancreatin, Lipase, Proteases) 9- மாதங்களில் தேவைக்கேற்ப சுரக்கவும், நன்கு தன் செயல்பாடுகளை செய்யவும் ஆரம்பிக்கின்றன. இருப்பினும் முதலில் முட்டை ஊட்டி விடும் போது வயிறு உப்புசம், எதுக்களிப்பு, வாந்தி, லேசான வயிற்றுப்போக்கு, பசியின்மை ஆகியவை ஏற்படலாம். இவையெல்லாம் போகப் போக சரியாகிவிடும். இதற்கு பயந்து முட்டையை நிறுத்த தேவையில்லை. அளவைக் குறைத்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்றெல்லாம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து கொடுக்கவேண்டும். 2-3 வாரங்களுக்குப் பிறகு வெள்ளைக் கருவும் சேர்த்து ஊட்ட ஆரம்பிக்கலாம். முட்டை பழக்குவதற்கு 6-8 வாரங்கள் கூட ஆகலாம். அசைவத்தில் வரும் வாசனை புது ருசி அல்லவா! அதனால் அதிகமாகத் துப்பக் கூடும். முயன்றால் வெற்றி நிச்சயம். எடுத்தவுடன் ஒரு முட்டையை ஊட்டி விட வேண்டும் என்பதெல்லாம் இல்லை. குழந்தை வாங்கிக் கொள்ளும் அளவுதான் தர வேண்டும். உணவு பொருள்களை கட்டாயப்படுத்தினால் உள்ளதும் போச்சு என்ற நிலை தான் ஏற்படும்.

Photo by Buddy AN on Unsplash

சமைக்கப்பட்ட முட்டை பழகின பிறகு ஈரல், மீனின் சதைப்பகுதி, கோழி இறைச்சி, அசைவ சூப் வகைகள் போன்றவற்றை ஒவ்வொன்றாக உணவுடன் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும். காரம், மசாலா அதிகம் இல்லாமல் ஊட்டவேண்டும்.

இறைச்சிகளில் கரையாத நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதால் குழந்தைக்கு செரிமானம் சிறிது சிரமப்படும். அதனால் 2- வயதிற்கு பிறகு, அதாவது கடைவாய் பற்களும் முளைத்த பிறகு சாப்பிட வைக்கலாம். நன்றாக மென்று நிதானமாக சாப்பிட பழக்க வேண்டும். இறைச்சி தவிர அசைவ உணவுகளில் வரும் வாசனையையும், ருசியையும் ஒரு வயதிற்குள் ஓரளவு பழக்கி விட வேண்டும். 2- வயதிற்கு மேல் பழக்குவது சிரமம். அதன் பின் 5-6 வயதிற்கு மேல் குழந்தை தானாகவே ருசி பார்த்து ஆசைப்பட்டு சாப்பிட்டால் தான் உண்டு. எனவே வாரத்தில் 2-3 நாட்களாவது முட்டை, வாரத்தில் ஒருமுறை அசைவ உணவுகள்,  3-4 நாட்கள் சூப் என்று குழந்தையின் விருப்பத்திற்கும் செரிமானத்திற்கும் ஏற்ப பழக்கி விடுங்கள்.

Getting her first spoon-ful of Rice. This is very soft boiled rice, some sugar and ghee. Notice the custom made silver spoon – spiffy eh!

சைவ உணவு வகைகளில் எல்லா காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரைகள் ஆகியவற்றை பழகிவிடலாம். முழுப்பழமாகவோ சாறாகவோ பழங்களைத் தரலாம். சாறு எடுத்து சம அளவு சுத்தமான குடிநீர் கலந்து ஒரு கல் உப்பு மற்றும் சர்க்கரை (ஜீனி அல்லது நாட்டுச் சக்கரை) கலந்து தரலாம். ஐஸ்கட்டி போடக்கூடாது. இளநீர், தயிர், காரம் மற்றும் மசாலாப்பொருள்கள் குறைவாக சேர்த்த காய்கறி சூப்கள், நீர் மோர் தர வேண்டும்.உப்புமா, பொங்கல், கிச்சடி வகைகள் ஆகியவற்றைத் தரலாம். சப்பாத்தி, பூரி போன்றவற்றை காய்கறிகள் சேர்த்த தொடுக்கறியில் ஊறவைத்து ஊட்டலாம். பொரியை எடுத்துச் சாப்பிட பழக்கி விட்டால், இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றை சிறு துண்டுகளாகப் பிய்த்துப் போட்டு எடுத்து சாப்பிட வைக்கலாம்.

எந்த அளவுக்கு நாம் குழந்தையை உணவுப் பொருள்களை கையாள பழக்குகிறோமோ, அந்த அளவிற்கு குழந்தைக்கு தானாக சாப்பிடவும், பல உணவுப் பொருள்களை எடுத்து ருசி பார்க்கவும் ஆர்வம் காட்டும். நீளமாக நறுக்கி வேக வைத்த கேரட், உருளை, ஆப்பிள் ஆகியவற்றையும், மாம்பழ துண்டுகளையும் குழந்தையின் கையில் கொடுக்கலாம். இப்படித் தரும் பொருள்களுக்கு Finger Foods என்ற பெயர். கையில் பிடித்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே விளையாடும், ஓடும். இதை கீழே போட்டு எடுத்துச் சாப்பிட்டால் அசுத்தமாகி நோய்த் தொற்று ஏற்படலாம்.  ஆகவே குழந்தையைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


ஒரு சுவாரஸ்யமான அறிவியல் உண்மை சொல்லட்டுமா? ஒரு வயதில் குழந்தை அம்மா சாப்பிடுவதில் பாதி அளவு சாப்பிட வேண்டும். அம்மாவுக்கு தினமும் 1800 கலோரியும் 50 கிராம் புரதமும் தேவை. ஒரு வயது குழந்தைக்கு 1000 கலோரியும் 25 கிராம் புரதமும் தேவை. அதாவது அம்மா காலையில் 4 இட்லி சாப்பிட்டால், குழந்தை 2 இட்லி சாப்பிட வேண்டும். நாம் சரியான முறையில் பழக்கினால் இது சாத்தியமே!

இந்த உணவு முறையைத்தான் உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் கூட்டமைப்பும் அறிவுறுத்துகின்றன. நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப ,குடும்ப பின்னணிக்கு தகுந்தாற்போல் உணவுகளை பழக்க வேண்டும். இந்த உணவுமுறையில் கடைகளில் விற்கப்படும் உணவுகள், பேக்கரி உணவுகள், மாவு வகைகள் எதற்கும் இடமே இல்லை. இரண்டு வருடம் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பாலும் கொடுத்து வீட்டு உணவுகளும் தர வேண்டும்.

முக்கியமான ஒரு செய்தி மறந்து விட்டேனே! ஒரு வயது முடிந்தவுடன் அம்மா ஊட்டுவதை நிறுத்தி குழந்தையைத் தானாக சாப்பிட செய்ய வேண்டும். நிதானமாக இதை செய்தால் இரண்டு வயது முடிவதற்குள் 3 வேளை உணவும் குழந்தை தானே சாப்பிட பழகிவிடும். இது தான் மருத்துவர்களின் அறிவுரை.

காபி, டீ, மற்ற பானங்கள், குளிர்பானங்கள் எதுவும் 5 வயது  வரை தரக்கூடாது. கட்டாயம் தரக்கூடாது. கடைகளில் கிடைக்கும் பால் பவுடர்களையும் வாங்கி பாலில் கலந்து தரக்கூடாது. விளம்பரங்களில் வருவது போல் உயரம், விளையாட்டுத் திறன், படிப்புத் திறன் எதுவும் மாவுகளால் அதிகரிக்காது.

கேழ்வரகு, கம்பு போன்ற சிறு தானியங்களை கொண்டு சத்துமாவு வீட்டிலேயே செய்து, கஞ்சி போல் செய்து பால் சேர்த்து தரலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து பாயாசங்கள் ,கொழுக்கட்டைகள்  குழந்தைகளுக்கு அருமையான தின்பண்டங்கள் ஆகும். இதைத் தவிர நமது வீடுகளில் வரும் பண்டிகைகளுக்காக நாம் தயாரிக்கும் இனிப்பு, கார வகைகள் அனைத்தும் குழந்தைகளுக்கும் தரலாம்.

வெள்ளைக் கொண்டைக்கடலை, கறுப்புக் கொண்டை கடலை, பச்சை மற்றும் வெள்ளைப் பட்டாணி, நிலக்கடலை, காராமணி வகைகள் ஆகியவற்றை ஊற வைத்து, வேகவைத்து சுண்டல் போல் செய்து தரலாம். கடைவாய்ப் பற்கள் முளைக்கும் வரை சாதத்துடன் மசித்து ஊட்டி விடலாம். மென்று சாப்பிடத் தெரிந்து கொண்ட பிறகு சுண்டலாகவே தரலாம். இவற்றில் புரதச் சத்துக்களும், மற்ற  நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. குழந்தை மேலும் சிறிது வளர்ந்த பிறகு வறுத்த நிலக்கடலை, பட்டாணி, தோல் நீக்கிய உப்புக்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தீனியாகத் தரலாம். இவைகளை குழந்தைகள் அவசர அவசரமாகப் பாதி மென்று, அப்படியே விழுங்கி விடுவார்கள். அதனால் அவை அப்படியே மலத்தில் வெளிவரும். லேசான வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இவற்றுக்கு பயப்படத் தேவையில்லை. தானாக சரியாகிவிடும்.

நன்றாக மென்று சாப்பிடத் தொடங்கிய பின் காய்கறி மற்றும் பழத் துண்டுகளை முந்திரி, பாதாம் ,திராட்சை போன்ற உலர் பழங்களுடன் கலந்து சாலட் போல் சாப்பிட பழக்க வேண்டும்.

 சாக்லேட் வகைகள், க்ரீம் பிஸ்கட், இனிப்பு வகைகள், வறுத்த -பொரித்த சிப்ஸ், மிக்சர் போன்ற கார வகைகள் வண்ணமயமான மென்பானங்கள் ஜங்க் உணவுகளாகும். JUNK என்றால் என்ன தெரியுமா? குப்பை! ஆமாம்! நாம் குப்பையை வளரும் செல்லக் குட்டிகளுக்கு தருவோமா? மாட்டோம் அல்லவா? ஏன் குப்பை உணவுகளைத் தர வேண்டும்?

 திரைகளில் வரும் விளம்பரங்கள் நடிகர்களால் நடிக்கப்பட்ட நிழல் தோற்றங்கள். மாயத்திரையில் அறிவியலுக்கு பொருந்தாத செய்திகளை பெரிதுபடுத்திக் காட்டி விளம்பர தந்திரங்கள் செய்கிறார்கள். நாம்தான் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அவற்றைத் தவிர்க்க வேண்டும்!

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.