கேள்வி:
விடுமுறை முடிந்து என் குழந்தை பள்ளிக்குச் செல்கிறாள். பெற்றோர் என்ற முறையில் செய்யவேண்டியது என்ன?
பதில்:
என்னம்மா! பள்ளிக்கூடம் நடைமுறைகளுக்கு ரெடியாகிவிட்டீர்களா? குழந்தை தானே பள்ளிக்கு போகணும்? அப்பா அம்மாவுக்கு என்ன என்று கேட்கிறீர்களா? குழந்தை மட்டும் தயாரானால் போதுமா? அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பெரிய குழந்தை, சின்ன குழந்தை என்று வீட்டில் உள்ள அத்தனை பேரும் ஒத்துழைத்து அனுசரித்துப் போனால்தான், ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்ல முடியும். என் குழந்தை வளர்ப்பு அனுபவம்தான் இதை சொல்கிறது.
சீருடை, புத்தகப்பை, சாப்பாட்டு பாத்திரம், லஞ்ச் பை, நோட், பேனா, பென்சில் எல்லாம் நீங்களே ரெடி பண்ணி இருப்பீர்கள்… குழந்தையை கடைக்குக் கூட்டிப் போய் அவர்களுக்கு பிடித்த விதத்தில் எல்லாம் வாங்கித் தந்திருப்பீர்கள் அப்படித்தானே? அதுவும் ஒரு வாண்டு இப்போது தான் புதுசா பள்ளிக்கூடம் சேரப் போகிறது என்றால் ராஜமரியாதைதான்! கேட்டதெல்லாம் கிடைக்குமே!
தயாராகி விட்டீர்களா என்று கேட்டது குழந்தையின் தினசரி செயல்பாடுகளை ஒரு சரியான பழக்கத்திற்கு கொண்டுவர வேண்டுமல்லவா? புதுசா ஸ்கூலுக்குப் போற குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும். ஏற்கனவே பள்ளிக்கூடம் செல்லும் குழந்தை அலுத்துக் கொள்ளும், பெரிய கிளாசுக்குப் போகும் குழந்தை பயப்படும், மலைத்துப் போகும். இப்படி பல! பல! இதைப் பற்றியும் பேசுவோம்.
ஸ்கூல் பையைப் பற்றி சில வார்த்தைகள். புத்தகத்துடன் சேர்த்து ஒரு பையின் எடை அதிகப்படியாக குழந்தையின் எடையில் 15 % தான் இருக்க வேண்டும். அதாவது 10 வயது குழந்தை 30 கிலோ எடை இருந்தால் அந்த குழந்தையின் புத்தகத்தை எடை 1.5 கிலோ முதல் 2 கிலோ தான் இருக்க வேண்டும். இதற்கு மேல் எடை இருந்தால் முதுகு வலி, பின் கழுத்து- தோள்பட்டை வலி, கால் வலி ஏற்படும். நாட்பட்டு அதிக எடையை தூக்கும் போது முதுகு கூன் விழும். அழகாக இருக்கிறதே என்று பையே 1-2 கிலோ எடை கொண்டதாக வாங்கிவிடக்கூடாது.
பென்சில் பாக்ஸ்,பென்சில் ரப்பர்,பென்சில் சீவும் கருவி போன்றவை குழந்தைக்கு உபயோகிக்க பாதுகாப்பானவையாக காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.வாயில் வைத்தாலும் பாதிக்காத நிறத்தில் இருந்தால் மிகவும் நல்லது.பராமரிப்பது சிரமமாக இருந்தாலும் பருத்தி உடை தான் நல்லது. உள்ளாடைகள் முழுவதும் பருத்தியாலானவையாக இருக்க வேண்டும். தினசரி சீருடைகளைத் துவைக்க வேண்டும். இப்போது அடிக்கிற, எதிர்காலத்தில் அடிக்கப் போகும் வெய்யிலுக்கு ஒளவை பாட்டியின் அறிவுரைதான் சிறப்பான தீர்வு. Uniform ஆனாலும் கசக்கிக் கட்டு!
காலுறைகள் (Socks) மற்றும் காலணிகள் கால்களைக் கவ்வி பிடிக்கும் அளவுக்கு இறுக்கமாக இருக்கக் கூடாது. காலுறைகளும் பருத்தியாக இருந்தால் நல்லது. அவற்றையும் தினமும் துவைக்க வேண்டும். காலையில் காலணிகள் நன்றாக உதறி வெளிச்சத்தில் பார்த்து உள்ளே பூச்சிகள் இல்லையே என்று கவனித்தபிறகே அணிந்துகொள்ளவேண்டும்.
உணவுப் பாத்திரம், எடுத்து சாப்பிட ஸ்பூன் முதலியவை எவர்சில்வராக இருப்பது தான் சிறந்தது. பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூட்டுடன் உணவு பொருட்களை போட்டு அனுப்புவது உடல் நலத்திற்கு கேடு. தாய்ப்பாலிலும் மைக்ரோ பிளாஸ்டிக் வந்துவிட்டது தெரியுமா? லஞ்ச் கொடுக்கும் பையையும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். முடிந்தால் இரண்டு பைகள் வைத்துக் கொள்ளலாம். உணவு வெளியே சிந்தி வழிந்திருக்கலாம். சாப்பிட்ட ஸ்பூன் அப்படியே குழந்தை பையில் போட்டு இருக்கும். பைக்குள் உணவு ஒட்டியிருக்கும். ஈரமான உணவுப் பொருட்கள் இருக்கும் இடத்தில் பாக்டீரியக்கள், பூஞ்சைகள் எளிதில் வளரும். இதனால் குழந்தைக்கு வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம்.
குடி தண்ணீர் பாட்டிலும் பிளாஸ்டிக்காக இல்லாமல் இருந்தால் நல்லது. சிறு குழந்தைகள் உறிஞ்சி குடிக்கும் குழாயை தனிப்பட்ட முறையில் உள்ளும் வெளியும் சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் பாட்டிலை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை லேசான சூட்டுடன் வெந்நீர், சிறிது உப்பு, சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி; ஊற வைத்து நன்கு குலுக்கி கழுவி உபயோகிக்க வேண்டும். இரண்டு பாட்டில் வைத்துக் கொள்ளலாம். மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம்.
தினசரி எத்தனை மணிக்குக் காலையில் விழித்துக் கொண்டால் பிள்ளைகளை அவசரமின்றி கிளப்ப முடியும் என்பதை முடிவு செய்து, அதற்கேற்ப இரவு முன்னதாகவே தூங்க வைக்க வேண்டும். அதற்கு தோதாக வீட்டுப் பாடங்களை முடித்து, இரவு உணவு சாப்பிடுவது போன்றவற்றை திட்டமிட வேண்டும். குழந்தையிடம் இதை விளக்கிச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

இரவே வீட்டு பாடங்களை முடித்து, பள்ளிக்கு எடுத்து போக வேண்டிய நோட் புக், புத்தகம், பென்சில் பாக்ஸ் போன்றவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பழக்கத்தை குழந்தைக்கு மெது மெதுவாகப் பழக்க வேண்டும். காலணிகளுக்கு பாலீஷ் போடுவது, காலணியில் இருக்கும் நாடாக்களை சரி செய்வது, சாக்ஸ் எடுத்து வைப்பது போன்ற வேலைகளில் குடும்பத்தினர் அனைவரும் பங்கெடுக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வைத்து (நீங்கள் துலக்கி விட வேண்டாம் பெற்றோர்களே!) பாலை குடித்து, காலைக் கடன்களை கழிக்க குழந்தையைப் பழக்க வேண்டும். குழந்தைக்கு சுத்தமாக குளிக்கத் தெரியாது என்கிறீர்களா? சொல்லிக் கொடுங்கள், பழக்குங்கள். 4 வயதிலிருந்து பழக்க வேண்டும். தானாகவே குளித்து, சீருடை போட்டுக் கொண்டு விட வேண்டும், இதற்கு நீங்கள் தான் மெது மெதுவாக பழக்க வேண்டும். எப்படி முடியும் என்று யோசிக்கிறீர்களா? முயற்சி செய்தால் முடியும். அவன்/அவள் குழந்தை என்று சொல்லி எத்தனை வருடங்களைக் கடப்பது? பெண் குழந்தைகளுக்கு பின்னல் போட்டு ரிப்பன் கட்டுவது, 5-6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டை கட்டிக் கொள்வது, (இந்த கழுத்துப்பட்டை வெப்ப நாடான நமக்கு தேவைதானா?) காலுக்குக் காலுறை போடுவது, காலணி அணிந்துகொள்வது, இடது வலது மாறாமல் இவற்றை அணிந்துகொள்வது, நாடா கட்டுவது எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து பழக்க வேண்டும்.
தானாக பல் துலக்கி, தானாக குளித்து உடையணிந்து குழந்தை தானாகத் தான் சாப்பிட வேண்டும். எதற்கு ஊட்டணும்? சாப்பிட கற்றுக் கொடுங்கள் பெற்றோர்களே!
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை தெரியுமா? 9 மாதத்தில் இருந்து உணவை கைகளால் துழாவி எடுத்து வாயில் வைக்க, ருசி பார்க்க, குழந்தையை அனுமதிக்க வேண்டும். தானாக எடுத்துச் சாப்பிடும் குழந்தைக்கு நல்ல உணவுப் பழக்கங்கள் ஏற்படுகிறது என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள். ஒரு வயது வரை உணவு ஊட்டலாம். அதன் பிறகு அருகில் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சம் நாம் ஊட்டி மீதியை அவர்களாக சாப்பிட பழக்க வேண்டும். இரண்டு வயதிற்குப் பிறகு ஊட்டவே தேவையில்லை. கொடுத்த உணவை சாப்பிட்டு முடித்தானா என்று கண்காணிக்க வேண்டும். தானாக எடுத்து சாப்பிடும் குழந்தைக்கு பலவித ருசிகள்,உணவின் தன்மை நன்கு புரியும். தனக்குப் பசி இன்னும் அடங்கவில்லை,இன்னும் கொஞ்சம் சாப்பிடணும், வயிறு நிறைந்து விட்டது என்பதெல்லாம் புரிகிறது. தனக்கு வேண்டியதைச் சாப்பிட்டோம் என்ற உணர்வில் அவனுக்கு சுய மதிப்பு, தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. எவ்வளவு பெரிய நன்மை!

‘எல்லாம் சரிதான் டாக்டர்! நீங்கள் சொன்னபடி இதெல்லாம் நடந்தால் எவ்வளவு டென்ஷன் குறையும்’ என்று யோசிக்கிறீர்களா? ஒரு வயதிலிருந்து எல்லாவற்றுக்கும் பழக்குங்கள். இந்தக் கனவு நனவாகும்! காலை உணவுடன் தினமும் ஒரு முட்டை கொடுத்து விடுங்கள். பாலுடன் காலையில் பிஸ்கட், ரஸ்க் எதுவும் கொடுக்கக் கூடாது. மற்றபடி இட்லி, இடியாப்பம், தோசை, சட்னி, சாம்பார் ஏதாவது; அசைவம் சேர்க்காதவர்கள் ஏதாவது ஒரு சுண்டல், கருப்பு /வெள்ளைக் கொண்டைக்கடலை, காராமணி, பச்சைப் பயிறு இப்படி வேகவைத்து, அதையும் சேர்த்து கொடுக்கலாம். காலை உணவில் போதிய அளவு மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், நுண்ணூட்ட சத்துக்கள் ஆகிய எல்லாம் தேவை.

மதிய உணவைப் பற்றி ரொம்ப முக்கியத்துவம் தர வேண்டாம். ஒரு கலந்த சாதம் அல்லது இட்லி, ஆப்பத்தோடு உணவு தந்தால் போதும். பள்ளி இடைவெளி நேரத்தில் சாப்பிடுவதற்கு கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி உருண்டை, நறுக்கிய பழங்கள், வீட்டில் செய்யப்படும் இனிப்பு கார வகைகள், அவ்வப்போது உலர் பழங்கள் நல்லது. கடையில் வாங்கும் கார வகைகளைத் தவிர்ப்பது நல்லது. துரித உணவு வகைகள் வேண்டவே வேண்டாம். பிஸ்கட், கேக் வகைகள் வேண்டாம். குழந்தைகளுக்கு தேவையின்றி தினம் பணம் கொடுத்து அனுப்புவது சரியல்ல. சுகாதாரமற்ற உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட இது வழி வகுக்கும்.
வயதிற்கு ஏற்ப 1/2 லிட்டர் அல்லது 1 லிட்டர் பாதுகாப்பான குடிநீர் பாட்டிலில் கொடுத்து அனுப்புவது நல்லது. அவர்கள் திரும்பி வருவதற்குள் அதை குடித்து முடித்திருக்க வேண்டும். பழக்குங்கள்! மாலை பள்ளியில் இருந்து கிளம்பும் முன் தன்னுடைய ஸ்கூல் பை, டப்பாக்கள், உணவுப்பை ,இரண்டு காலணிகள், சாக்ஸ் போன்ற எல்லா பொருட்களும் இருக்கின்றனவா என்று சரி பார்த்து கிளம்ப வேண்டும் என்று சொல்லி, புரிய வைக்க வேண்டும். இவையெல்லாம் ஆசிரியர் மற்றும் உதவியாளர்களின் வேலை என்று சொல்லி குழந்தையின் பொறுப்பை குறைத்து விடக்கூடாது.
மாலை திரும்பி வந்தவுடன் களைப்பிற்கு ஏற்பட செயல்பட வேண்டும். உடனே உள்ளாடை உள்பட சீருடைகளைக் கழற்றி, குளித்து, மிருதுவான தளர்வான உடைக்கு மாற்றிக் கொண்டு, பிறகு சாப்பிட வைக்க வேண்டும். சிறு பிள்ளை போல் அப்புறம் குளிக்கிறேன் என்று அடம் பிடித்தால் விட்டுப் பிடிக்க வேண்டும். மதியம் நாம் சூடாக சமைத்த கீரை, காய்கறிகள், புரதங்கள் நிறைந்த உணவு, தயிர், பழங்கள், பழச்சாறு ஆகியவற்றைச் சாப்பிட வைக்க வேண்டும். பசியுடன் வந்ததும் பிஸ்கட், கேக், கார வகைகள், பால், காபி, டீ, மற்ற பானங்கள் எதுவும் தரக்கூடாது. மாலையில் நம் கண் பார்வையில் சாப்பிடுவது சிறந்தது அல்லவா? அதனால் தான் மதிய உணவிற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மாலை அருமையாக சாப்பிட்ட பிறகு, இரவு உணவைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஒரு டம்ளர் பால், சத்து மாவு கஞ்சி, பழங்கள் மட்டும் சாப்பிட்டால் கூட போதுமே? ‘பள்ளிக்கூடத்தில் சாப்பிடவே மாட்டேங்கிறான்’ ‘மிஸ் கிட்ட சொன்னாலும் கவனிக்க மாட்டேங்கிறாங்க’ என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. நமது 1-2 பிள்ளைகளை சாப்பிட வைப்பது எவ்வளவு சிரமம் என்று நமக்கு தெரியும். டீச்சரால் 30 -40 பிள்ளைகளை எப்படிச் சமாளிக்க முடியும்? கோலெடுத்து மிரட்டி உருட்டிப் பார்த்து சாப்பிட வைப்பது என்றெல்லாம் நல்லதல்ல. குழந்தை தனக்குப் பிடித்து உணவு சாப்பிட வேண்டும். டீச்சருக்கு பயந்து அல்ல.
பள்ளியிலிருந்து வந்து சாப்பிட்டு, பிறகு சிறிது நேரம் குழந்தைகளை ஓடி ஆடி மனதுக்குப் பிடித்த விளையாட்டை விளையாட விடுங்கள். வெளியில் மற்ற குழந்தைகளுடன் விளையாட விடுங்கள் அல்லது நீங்களும் சேர்ந்து விளையாடுங்கள். ஆடுங்கள், ஆட விடுங்கள், பாடுங்கள் அல்லது பாட விடுங்கள். பேசுங்கள், பேச விடுங்கள். ‘உன் ப்ரென்ட் கிஷோர் என்ன சாப்பாடு கொண்டு வந்தான்?’ ‘நேற்று குமுதினி எதற்கோ அழுதாள் என்று சொன்னாயே இன்றைக்கு ஸ்கூலுக்கு வந்தாளா?’ என்றெல்லாம் பொதுப்படையாக விசாரித்துவிட்டு, பள்ளியில் முதல் பீரியட் தொடங்கி ஒவ்வொன்றாக விசாரியுங்கள். என்ன டெஸ்ட், என்ன மார்க், என்ன ஒப்புவித்தான், எந்த கணக்கு போடத் தெரியவில்லை, எதற்கு டீச்சர் வெரி குட் சொன்னார்கள், எதற்கு டீச்சர் திட்டினார்கள் என்று எல்லாம் தெரிந்துவிடும். குழந்தைக்கு நமது அக்கறை புரியும். ‘நாளைக்கு கணக்கு கரெக்ட்டா போட்டால் வெரி குட் வாங்கலாம்’ என்று ஊக்குவியுங்கள்.
டைரியில் ஆசிரியர் எழுதிக் கொடுத்து இருப்பதை தினமும் பார்த்து அதற்கு ஏற்ப செயல் புரிய வேண்டும். ஆசிரியருடன் நல்ல முறையில் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களைக் குறை சொல்லாத வகையில் அவர்களுடன் உரையாடி குழந்தையின் நடவடிக்கைகள், பிற குழந்தைகளுடன் ஒத்துப்போகும் தன்மை, விளையாட்டு, எழுத்துத்திறன், தைரியமாகப் பேசுவது, சந்தேகம் கேட்கும் தன்மை ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் வாழ்வியல் திறன்கள்.
பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் தவறாமல் இரண்டு பெற்றோரும், குறைந்தபட்சம் ஒருவராவது கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். முடியவில்லையானால் அதைப் பற்றிய விபரங்களை ஆசிரியரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தையின் நண்பர்களின் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள். பள்ளிக்குச் செல்லும் போது சந்தித்து பேசுங்கள். அவர்கள் பெற்றோருடன் தொடர்பில் இருங்கள். ஆனால் குழந்தைகளை ஒருபோதும் இன்னொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். குழந்தைக்கு கல்வியும் மற்ற திறன்களும் நீங்கள் எதிர்பார்த்த அளவு (உங்களிடமே அதீத எதிர்பார்ப்புகளும் இருக்கலாம் அல்லவா?) இல்லை எனில் உடனே ஆசிரியரைக் குறை சொல்லாதீர்கள். இவ்வளவு செலவு செய்கிறோம்; என்ன பிரயோஜனம் என்று அங்கலாய்க்காமல் பொறுமையாக செயல்படுங்கள். தவறு குழந்தையிடமா ஆசிரியரிடமா மற்ற ஏதேனுமா என்ற கேள்விக்கு முதலில் பதில் தேட வேண்டும்.
ஒரு சில உதாரணம் சொல்லட்டுமா? குழந்தை வளர வளரத்தான் கிட்டப் பார்வை (Myopia) என்ற நோய் வெளிப்பட ஆரம்பிக்கும். கரும்பலகையில் எழுதுவது பளிச்சென்று தெரியாத குழந்தை, அதிலும் உயரத்தால் பின்பெஞ்சுகளில் உட்கார வைக்கப்பட்டு இருந்தால் எப்படி மதிப்பெண் வாங்க முடியும்? வீட்டில் உள்ள பிரச்சனைகளால் மனம் சோர்ந்த குழந்தையால் பாடத்தில் எப்படி கவனம் செலுத்த முடியும்? பெரிய குழந்தைகளால் உருவக் கேலி செய்யப்படும் குழந்தை எப்படி பாடத்தை கவனிக்கும்? Bad Touch மூலம் சிரமப்பட்டு கொண்டிருக்கும் குழந்தை பள்ளியையே வெறுக்கும். இப்படி பலப் பல காரணங்கள் இருக்கலாம். நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாக பிரச்சனையை ஆராய்ந்தால் தெளிவான விடை கிடைக்கும்.
சிறு குழந்தைகளுக்கு பள்ளிக்கு சென்று ஊட்டி விடாதீர்கள். சமைத்த மதிய உணவு நீங்கள் எடுத்துச் சென்றாலும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து உட்கார்ந்து அவனாக/அவளாக சாப்பிடட்டும்.
புதிதாகப் பள்ளி செல்லும் குழந்தை சில நாட்கள் அழும். சில நாட்கள் மற்ற குழந்தைகளுடனும், ஆசிரியருடனும் பழகினால் சில நாட்களில் சரியாகிவிடும். அவர்களுடன் ஒட்டிக் கொள்ளும். அதற்கு நாம் அவகாசம் கொடுக்க வேண்டும். சரியான காரணமில்லாமல் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்பதால் மட்டுமே பள்ளியை மாற்றி விடக்கூடாது. புது சூழல், புது ஆசிரியர், புது நண்பர்கள் என்று குழந்தை புது பள்ளியில் சமாளிக்க ஆரம்பத்தில் சிரமப்படும்.
குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் மருந்து மாத்திரை கொடுத்து பள்ளிக்கு அனுப்பாதீர்கள். மதியம் மாத்திரை கொடுக்கும் பொறுப்பைஅ ஆசிரியரின் தலையில் கட்டி, அவர்கள் வேலைப் பளுவில் அதை மறந்து… இதெல்லாம் தேவையா? உடல் நலமில்லாத குழந்தை 1-2 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கலாமே!
குழந்தை கேட்கிறான் அவனுக்கு அதுதான் பிடிக்கும், செய்வது எளிது என்று பல வீடுகளில் தினமும் லெமன் சாதம் உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் வறுவல் மட்டுமே தரப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்?! எத்தனை காய்கறிகள் உள்ளன? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சுவையுடன் வானவில் போன்ற வண்ணங்களில் தொடுகறி செய்யலாமல்லவா? கேரட், கீரை, பீட்ரூட், புடலங்காய் என்றெல்லாம் எத்தனை சத்து நிறைந்த காய்கறிகள் உள்ளன!
நீங்கள் ரெடியா?
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.