- போபால் அரசு (Bhopal State)
போபால் அரசு 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இஸ்லாமிய நவாப்புகளால் ஆளப்பட்ட அரசு. இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. முதலில் பார்மர் ராஜபுத்திர மகாராஜாவால் (Maharaja of Parmar Rajputs) நிறுவப்பட்டது. ஆப்கானிய முகலாய படையெடுப்பிற்குப் பிறகு, முகலாய இராணுவத்தில் ஒரு சிப்பாயான தோஸ்த் முகமது கான் 1707-ம் ஆண்டு போபால் அரசை கைப்பற்றி, போபால் நவாப் ஆகியிருக்கிறார்.
தோஸ்த் முகமது கான் சில ஆண்டுகளில் இறக்க, அவரது மனைவி மாமோலா பாய் (Mamola Bai) ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இப்படி அரசு உருவான சில ஆண்டுகளிலேயே அது பெண்ணால் ஆளப்பட்டுள்ளது.
போபால் போர் (Battle of Bhopal) மூலம் மராத்திய அரசிற்குக் கப்பம் கட்டும் அரசாக மாறியிருக்கிறது. மூன்றாவது ஆங்கிலோ-மராட்டியப் போரில் 1817-19 போபால் ஆங்கிலேயரின் பக்கம் நின்றது. துணைப்படைத் திட்டத்தின் கீழ், 1818-ம் ஆண்டு முதல், இது மன்னராட்சி அரசாக (British protectorate) மாறியது.
1819 முதல் 1926 முடிய போபால் அரசை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நான்கு பெண்கள் ஆண்டனர் என்பது இதன் சிறப்பு. குத்சியா பேகம், முதல் பெண் ஆட்சியாளராக இருந்தார், அவருக்குப் பிறகு அவரது ஒரே மகள் சிக்கந்தர் பேகம், அவருக்குப் பிறகு அவரது ஒரே மகள் ஷாஜகான் பேகம் என ஆட்சி செய்துள்ளனர். அதன்பின் அரசாண்ட சுல்தான் ஷாஜகான் பேகம், இருபத்தைந்து ஆண்டுகாலம் ஆட்சிசெய்தபின் தனது மகனுக்குப் பதவி அளித்திருக்கிறார்.
1870-ம் ஆண்டு, ஏற்கனவே கணவனை இழந்த ஷாஜகான் பேகத்தை மணந்த பிறகு, சித்திக் ஹசன் கான் அரசின் பல முடிவுகளை எடுத்திருக்கிறார். அவை சீர்த்திருத்த முடிவுகளாகவே இருந்திருக்கின்றன. அப்போதே கைம்பெண் திருமணம் ஒரு அரசி செய்திருக்கிறார் என்பது வியப்பாக இருந்தது.
மொத்தத்தில் இந்த பேகம்களின் ஆட்சியில் இஸ்லாமியம், கலாச்சாரம் போன்றவற்றில் பல சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன. கல்வி வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. என அரசு பெரும் மாற்றத்தைக் கண்டிருக்கிறது.
குத்சியா பேகம் (Qudusiya Begum) கணவர் கொல்லப்பட்டதால் போபாலின் அரசுப் பொறுப்பை ஏற்றார். அப்போது அவரின் வயது பதினெட்டு. 1819 முதல் 1837-ம் ஆண்டு பதவி விலகும் வரை இவரே ஆட்சி செய்திருக்கிறார். 1837-ம் ஆண்டு, தனது மருமகனுக்கு ஆதரவாக பதவி விலகினார். ஆனாலும் தனது மருமகன், அவரது மகள் மற்றும் அவரது பேத்தியின் ஆட்சியின் போது போபாலில் மாநில விவகாரங்களில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியிருக்கிறார்.
இதற்கிடையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் ஆங்கிலேயர்களிடம் விண்ணப்பித்தனர். ஆனால், 1855-ம் ஆண்டில், அரசப் பெண்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு, கிழக்கிந்திய அரசு, சமஸ்தானத்தை நேரடியாக பெண்களால் ஆள அனுமதித்தது என்கிறது இந்த தளம். இந்தக் காலக்கட்டத்தில் இங்கிலாந்தின் அரச பீடத்திலும் விக்டோரியா அரசிதான் (பெண்) இருந்துள்ளார். இதே காலக்கட்டத்தில்தான் ஜான்சியின் ராணி லட்சுமிபாய் தனது உரிமைக்காகப் போராடினார் என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இரண்டு ஊர்களுக்கும் 300 கிலோமீட்டர்தான் இடைவெளி. ஆனால் அரசியலில் மாபெரும் இடைவெளி இருந்திருக்கிறது.
1857-ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியில் அரசி சிக்கந்தர் ஜெஹான் பேகம் (Sikander Jehan Begum) (குத்சியா பேகத்தின் மகள்), ஆங்கிலேயர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்திருக்கிறார். சப்பாத்தி இயக்கம் (Chapati Movement) என ஒன்று சிப்பாய்ப் புரட்சி காலத்தில் நடந்திருக்கிறது. அதாவது ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு சப்பாத்தி போட்டு மக்கள் அனுப்புவார்களாம். அதில் தகவல் எதுவும் பரிமாறப் படவுமில்லையாம். அது ஏன் நடந்தது என தெரியாதாம். இந்த சப்பாத்தி இயக்கத்தை இவர் தடை செய்திருக்கிறார்.
கான்பூரின் கிளர்ச்சியாளர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத உணர்வுகளில் ஆங்கிலேயர்கள் தலையிடுவதாகத் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட, சிக்கந்தர் பேகம், குற்றச்சாட்டுகளை மறுத்து, துண்டுப்பிரசுரம் வெளியிட்டிருக்கிறார். இப்படி சிப்பாய் புரட்சி முழுவதுமே இவரின் செயல்பாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றன.
சிக்கந்தர் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். அதில் எட்டு ஆண்டுகள் அவரே உரிமையுடன் ஆட்சி செய்திருக்கிறார் (Sikandar ruled for sixteen years, eight in her own right). கலை அவரது ஆட்சியில் செழித்து வளர்ந்தது. சிக்கந்தர் பேகம் அடிமைத்தனத்தை ஒழித்து இருக்கிறார். பெண்களுக்கான முற்போக்கான செயல்களை செய்திருக்கிறார். பல கட்டடங்களைக் காட்டியிருக்கிறார்.
1901-ம் ஆண்டு அவர் இறந்த பின், அவரின் மகள் சுல்தான் ஷா ஜஹான் பதவியேற்றார். அவர் புர்காவை ஏற்றுக் கொண்டாலும் (இதைக் குறிப்பிடுவதால், இவரது அன்னை அரசி சிக்கந்தர் பேகம் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்திருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு) பல பணிகளை வெளியுலகில் எடுத்துச் செய்துள்ளார்.
ஷா ஜகான் பாக் என்ற இடத்தை (டில்லியில் உள்ளது அல்ல) போபாலில் தன் பெயரில் ஏற்படுத்தியிருக்கிறார். பல கட்டடங்கள் கட்டியிருக்கிறார். நிர்வாகம், சட்டங்கள் மற்றும் நிதி ஆகியவற்றிலும் சீர்திருத்தம் செய்திருக்கிறார். பெண் கல்வி மற்றும் பெண் உரிமைகளுக்காக உழைத்திருக்கிறார். பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
1926-ம் ஆண்டில், ஷா ஜகான் பேகம், தனது மகனுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கினார். பேகம்களின் வரலாறு என்பது வாசிக்க வாசிக்க நீண்டு கொண்டே போகிறது. ‘வடிவேலு’ சொல்வது போல ‘லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு’!
போபால் அரசு, அந்தக் காலக்கட்டத்தில், இஸ்லாமியத் தலைமையைக் கொண்ட மிகப்பெரிய அரசுகளுள் ஒன்றாக இருந்திருக்கிறது. போபால் அரசின் இறுதி நவாப் ஹமிதுல்லா கான். இவரது மகள்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவாப் பட்டோடி அவர்களின் தாயார். பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், நவாப் பட்டோடியின் மகன்.
இந்திய ஒருங்கிணைப்புத் திட்டத்தின்படி 30 ஏப்ரல் 1949 அன்று போபால் அரசு, இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. இன்று இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம். முன்னாள் ஆளும் குடும்பத்தின் புகழ் இன்றும் அங்கு தொடர்கிறது.
இது 1940-ம் ஆண்டு போபால் அரசு அதன் முத்திரையுடன் வெளியிட்ட அஞ்சல்தலை.
இவை 1930-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல்தலைகள்.
1947-ம் ஆண்டு போபால் மோதி மசூதியின் படத்துடன் அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.
போபாலில் உள்ள மோதி மசூதி (Moti Masjid in Bhopal), 1860-ம் ஆண்டு சிக்கந்தர் ஜெஹான் பேகம் (Sikander Jehan Begum) கட்டிய புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னம். இது டெல்லியில் உள்ள ஜமா மசூதியை மாதிரியாக வைத்து அதைவிட சிறிதாகக் கட்டப்பட்ட மசூதி.
2. சம்பா அரசு (Chamba State)
சம்பா என்பது இமயமலையில் ராவி ஆறு பாயும் இடம். இராஜபுத்திரர் ஒருவர், பொ.ஆ. 550 காலகட்டத்தில் சம்பா அரசை நிறுவினார். மராத்தியப் பேரரசின் சிற்றரசாக இருந்த இப்பகுதி, மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், 1859-ம் ஆண்டில் துணைப்படைத் திட்டத்தை ஏற்றது. விடுதலைக்குப் பின், 15 ஏப்ரல் 1948 அன்று பட்டியாலா ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, 1 நவம்பர் 1956 அன்று, இமாச்சலப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
3. சர்க்காரி அரசு
ராஜா குமான் சிங் (Raja Khuman Singh) என்பவர் 1765-ம் ஆண்டு சர்க்காரி அரசை உருவாக்கினார். அது உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மகோபா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. குமானின் மகன், ராஜா விஜய் பகதூர் சிங் (ஆட்சி 1782-1829), 1804-ம் ஆண்டு Protectorate of the East India Company ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். விடுதலைக்குப்பின், சர்க்காரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1931-ம் ஆண்டு சர்க்காரி அரசு வெளியிடப்பட்ட இமிலியா அரண்மனை (Imlia Palace) அஞ்சல் தலை
1936-ம் ஆண்டு சர்க்காரி அரசு வெளியிட்ட Guest House அஞ்சல் தலை
1920-30 காலகட்டத்தில் சர்க்காரி அரசு வெளியிட்ட அஞ்சல் தலைகள்.
4. குவாலியர் அரசு (Gwalior State)
பத்தாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட குவாலியர் அரசை பொ.ஆ. 1398-ம் ஆண்டு, தில்லி சுல்தான்கள் கைப்பற்றினர். பின் இந்த அரசு, 1528 -1731 காலகட்டத்தில், முகலாயர் பேரரசிற்கு உட்பட்டிருந்தது. 1707-ம் ஆண்டு ஔரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர், மாமன்னர் சிவாஜியின் பேரன் சாகுஜியின் தலைமையில், மராத்தியப் படைத் தலைவர்கள் கொண்ட மராத்தியக் கூட்டமைப்பை பேஷ்வா பாஜிராவ் உருவாக்கினார். 1749-ம் ஆண்டு சாகுஜியின் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் பேரரசின் அதிகாரம் பேஷ்வாக்களிடம் வந்தது. 1772-ம் ஆண்டு, மராத்தியக் கூட்டமைப்பின் பேஷ்வாவாக இருந்த முதலாம் மாதவராவ் மறைய, மராத்திய அரசு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பேஷ்வாவால் நியமிக்கப்பட்ட மராத்தியப் படைத்தலைவர்களின் கைவசம் வந்தது. அவ்வாறு ரானோஜி சிந்தியா என்பவரால் குவாலியர் அரசு நிறுவப்பட்டது.
குவாலியர் அரசு, ஆங்கிலேய இந்திய ஆட்சியில், துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. அஞ்சல்தலைகள், நாணயங்கள் வெளியிட்ட அரசாக அது இருந்தது. செப்டம்பர் பதிமூன்று 1948 அன்று இந்தியாவுடன் இணைந்தது. மத்திய பாரத் (Madhya Bharat) என்று அழைக்கப்பட்ட அந்த மாநிலத்திற்கு, மன்னர் ஜிவாஜிராவ் சிந்தியா (Jivajirao Sindhia) மே இருபத்தெட்டு 1948 அன்று ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். 1956 நவம்பர் முதல் நாள் ஏற்பட்ட மாநில சீரமைப்பினால், மாநிலம் மத்தியப் பிரதேசத்தில் இணைக்கப்பட, 1956 அக்டோபர் முப்பத்தொன்று அன்று பதவி விலகினார். இன்றும் இந்தக் குடும்பம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் ஆதிக்க சக்தியாக உள்ளது.
5. இந்தோர் அரசு / ஹோல்கர் அரசு (Indore State /Holkar State)
மராத்தியப் படைத்தலைவர் மல்ஹர் ராவ் ஹோல்கர், மராத்தியப் பேரரசின் பேஷ்வா வழங்கிய இந்தோர் நிலப்பரப்பைக் கொண்டு 1732-ம் ஆண்டு இந்தோர் அரசை நிறுவினார். முதல் தலைநகராக மஹேஷ்வர் நகரம் விளங்கியது.
1767காலக்கட்டத்தில் மன்னரின் மருமகள் அகில்யாபாய் ஹோல்கர் (Ahilyabai Holkar) ஆட்சியாளரானார். 1795-ம் ஆண்டு வரை, அவர் படைகளை வழிநடத்தினார். பல கட்டமைப்புகளை உருவாக்கினார். ஜவுளித் தொழிலை ஊக்குவித்தார். இந்தோரை ஒரு செழிப்பான நகரமாக உருவாக்கினார்.
அகில்யாபாய் ஹோல்கர்

இவர், மகாராஷ்டிரா அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சண்டி கிராமத்தில் பிறந்தார். மல்ஹர் ராவ் ஹோல்கர், புனேவுக்குச் செல்லும் வழியில் சண்டியில் கோவிலில் தொண்டு செய்து கொண்டிருந்த ஏழு வயது சிறுமி அகில்யாபாயைப் பார்த்து, தன் பத்து வயது மகனுக்குத் திருமணம் முடித்து வைத்தார்.
அகல்யாவிற்கு ஏறக்குறைய முப்பது வயது இருக்கும்போது, கணவர் பீரங்கியால் கொல்லப்பட்டார். இவர் உடன்கட்டை ஏற ஆயத்தமானார். ஆனால் மாமனார் விருப்பத்திற்கேற்ப தனது எண்ணத்தை மாற்றி, மாமனாரிடம் போர்ப்பயிற்சி பெற்றார். மாமனார் இறக்க, தொடர்ந்து ஒரே மகனும் இறந்துபோக, அகல்யா பாய் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
இந்தூரை முற்போக்கான நகரமாக மாற்றினார். தொழில்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். பல கோவில்கள், படித்துறைகளை உருவாக்கினார்.
இந்திய அரசாங்கம் 25 ஆகஸ்ட் 1996 அன்று 200வது அவரது ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடும் வகையில் ஒரு அஞ்சல்தலை வெளியிட்டது. இந்தூர் விமான நிலையம் (Devi Ahilyabai Holkar International Airport, Indore), இந்தூர் பல்கலைக்கழகம் (Devi Ahilya Vishwavidyalaya, Indore) போன்றவற்றிக்கு இவர் பெயரைச் சூட்டியுள்ளார்கள்.
மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போருக்குப் பின் இந்தூர் அரசு ஜனவரி ஆறு 1818-ம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, சுதேச சமஸ்தானமாக மாறியது. தலைநகர் மஹேஷ்வர் நகரத்திலிருந்து இந்தோர் நகரத்திற்கு நவம்பர் மூன்று 1818-ம் ஆண்டு மாற்றப்பட்டது. விடுதலைக்குப் பின் இந்தோர் அரசு, 1 ஜனவரி, 1950 அன்று இந்தியாவுடன் இணைந்தது.
இந்தோர் அரசு 1904-1920 ஆண்டுகளுக்கிடையே மூன்றாம் துக்கோஜி ராவ் ஹோல்கரின் (Tukoji Rao Holkar III) உருவப்படம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகளை வெளியிட்டது .
இவர், 1911-ம் ஆண்டு தனது 21-ம் வயதில் பதவியேற்றார். அதே ஆண்டு இவர் இலண்டனில் நடந்த இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இந்தோர் அரசு, 1927-37-ம் ஆண்டுவாக்கில் இரண்டாம் யஷ்வந்த் ராவ் ஹோல்கரின் (Yeshwant Rao Holkar II) உருவப்படம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகளை வெளியிட்டது.
இவர், 1926-ம் ஆண்டு அரியணையில் அமர்ந்தார். 1947 ஆகஸ்ட் 11 அன்று இவர் இந்தியாவுடன் இணையும் ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்தோர் 1948-ம் ஆண்டு மே 28 அன்று இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மத்திய பாரத் இரண்டாவது ‘ராஜ்பிரமுக்’காக இவர் பணியாற்றினார்.பின் ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றினார்.
இந்தோர் அரசு, 1904-06-ம் ஆண்டுகளில், துக்கோஜி ராவ் ஹோல்கர் III இன் உருவப்படம் பொறிக்கப்பட்ட SERVICE அஞ்சல் தலைகள் வெளியிட்டது
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.