ஹலோ தோழமைகளே, நலம். நலம் தானே?

போன அத்தியாயத்தில் சுய தேடலைப் பற்றிப் பார்த்தோம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் திறமையும், அதனால் இந்த உலகுக்கு ஆற்ற வேண்டிய கடமையும் நிச்சயம் உண்டு. பலர் அது என்னவென்று புரியாமலேயே வாழ்ந்து மடிகின்றனர். அவர்களும் அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்துதான் முடித்திருப்பார்கள். ஆனால், தன்னுள் தேடி, தன்னைக் கண்டறிந்த ஒருவரே உயிர்ப்புடன் வாழ்வர். நீங்களே பல நேரம் உணர்ந்திருப்பீர்கள். சிலருடன் பேசும் போது ஏன் அவர்களுடன் பேசினோம் என தோன்றும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அங்கிருந்து விலகத் தோன்றும்.

வேறு சிலருடன் பேசும் போது மனம் நிறைந்து இருக்கும், அவர்களுடன் நட்பு கொண்டாடத் தோன்றும். அவர்களுடன் இருக்கும் போது அந்த உற்சாகம் நம்மையும் பற்றிக் கொள்ளும். ஏன் இந்த வித்தியாசம்?

முதலாமவரிடம் சுய நேசமில்லை, அவரிடம் சுயத் தேடலில்லை. ஏதோ வேலை செய்கிறோம், உண்கிறோம், உடுத்துகிறோம், குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம், விதி வந்தால் போகிறோம் என்கிற மனநிலை. திருப்தியற்ற வாழ்க்கை. ஏன் வாழ்கிறோம் என்று குழப்பமான மனநிலையிலேயே இருப்பர். இவர்களுக்கு எப்போதும் அன்பும் அங்கீகாரமும் மற்றவரிடம் இருந்து வர வேண்டும். வராத பட்சத்தில் மனம் உடைவதும், மற்றவரிடம் அதிருப்தியை வெளிபடுத்துவதும் இவர்கள் நிலையை இன்னும் மோசமாக்கும். உறவும் நட்பும் அதிகமாக விலகுவர்.

தன்னை விரும்பும் இரண்டாமவர், தன் நேரத்தை ரசனையைத் தனக்காகச் செலவிடுவர். வாழ்வை சுவாரசியமாக வாழ்வர். அன்பும் அங்கீகாரமும் இயல்பாக இவர்கள் மற்றவர்களுக்கு அளிப்பர். மற்றவரிடம் அது கிடைக்காத போதும் அது குறித்த எந்தப் புகாரும் இல்லாமல் தன் வேலையில் கவனத்தைச் செலுத்துவர்.

அது திரும்பி வரும்போது வெகு இயல்பாக அதை அனுபவிப்பர். உண்பது, உடுத்துவது, குடும்பத்திற்காக மெனக்கெடுவது என்று எல்லாம் செய்தாலும் அதில் ஒரு ரசனையும் லாவகமும இருக்கும். இவர்களுடன் பழகுவது இயல்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். விளக்கைச் சுற்றி வரும் விட்டில் பூச்சிகள் போல மக்கள் இவர்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவர். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகறீர்கள் தோழமைகளே நீங்களே முடிவு செய்யுங்கள்!

ஆகவே தோழமைகளே, உங்கள் நேரத்தில் ஒரு சிறிய பகுதியாவது உங்களுக்காக ஒதுக்குங்கள். உங்களைப் பற்றிய தேடலைத் தொடங்குங்கள். அதற்காகக் கொஞ்சம் மெனக்கெடுங்கள். உங்கள் வாழ்வு எப்படி மலர்ந்து மணம் வீசுகின்றது என்பதைக் காணத் தயாராகுங்கள்.

அடுத்த அத்தியாயத்தில் சுய நேசத்தின் கடைசி அம்சமான மனநலம் காப்பது பற்றிப் பேசுவோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.